Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

previous padalam   3 - மேருப்படலம்   next padalammErup padalam

Ms Revathi Sankaran (7.96mb)




(பன்னருஞ் சிறப்பின்)

பன்னருஞ் சிறப்பின் மிக்க பனிவரை யரசன் றன்பாற்
     கன்னியம் புதல்வி யாகிக் கௌரிநோற் றிருந்த காலைத்
          துன்னிய வவுணர் சூழச் சூரபன் மாவாம் வெய்யோன்
               இந்நில வரைப்பின் அண்டத் திறைவனே யாகி யுற்றான். ......    1

(மற்றது போழ்திற் றொல்)

மற்றது போழ்திற் றொல்லை மறைப்பொருள் வடத்தின் பாங்கர்ப்
     பெற்றிடு சனக னாதி முனிவரர் பின்னும் பன்னாள்
          அற்றமில் தவஞ்செய் தெந்தை யருளினாற் கயிலை நண்ணி
               முற்றுணர் நந்தி போற்று முதனிலை வாயில் புக்கார். ......    2

(நோன்மையின் முனி)

நோன்மையின் முனிவ ரானோர் நுவலருங் காட்சி நந்தி
     கான்முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை தன்னால்
          வான்மலி கடவுட் கோயின் மந்திரங் கொண்டு செல்ல
               நான்முகன் முதலோர்க் கெய்தா ஞானநா யகனைக் கண்டார். ......    3

(மொழியது தவறல்)

மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள
     விழிபுனல் பெருகத் தீசேர் மெழுகென வுள்ளம் விள்ள
          அழகிய மறைக்கு மெட்டா ஆதிநா யகனை நோக்கித்
               தொழுதன ருவகை பூத்துத் துள்ளினர் துளக்க முற்றார். ......    4

(மண்ணவ ரமரர்)

மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைக ளெல்லாம்
     நண்ணிய பரமன் றாளி னாற்பெருந் தவத்தி னோருந்
          தண்ணளி நெறியிற் பல்காற் றாழ்ந்தன ரெழுந்து நின்று
               பண்ணிசை மறைக டம்மால் துதித்திவை பகர்த லுற்றார். ......    5

(இருட்பெருங் கடலு)

இருட்பெருங் கடலுள் யாமத் தெறிமருத் திடைப்பட் டாங்குப்
     பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு மலைப்ப விந்நாள்
          அருட்பெருங் கடலே எய்த்தே மமைந்தில துணர்வி யாங்கண்
               மருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணமொன் றருடி யென்றார். ......    6

(நவையறு தவங்க)

நவையறு தவங்க ளாற்றி நல்லருள் படைத்த தொல்லோர்
     இவைபுகன் றிடலு மன்பர்க் கெளிவருங் கருணை வள்ளல்
          அவர்முகந் தெரிந்து நுங்கள் அறிவமைந் தடங்கு மாறு
               தவலருஞ் சிறப்பின் நன்னூல் சாற்றுது மிருத்தி ரென்றான். ......    7

(என்றிவை யருள)

என்றிவை யருள எந்தை யிணையடி தனாது முன்னர்
     நன்றுணர் காட்சி கொள்ளும் நால்வரு மிருந்தார் அங்கட்
          சென்றிடு நந்திப் புத்தேள் சிறப்புடை வதன நோக்கிக்
               கொன்றையந் தொடையல் வேய்ந்த குழகனொன் றியம்பு கின்றான். ......    8

(பூங்கணைக் கிழவ)

பூங்கணைக் கிழவ னன்றிப் புங்கவர் யார்போந் தாலும்
     ஈங்குறத் தருதி யல்லை யீதுனக் கடைத்த தென்ன
          ஆங்கது புரிவ னென்னா வமலனை யிறைஞ்சி யங்கண்
               நீங்கியக் கணத்தின் நந்தி நெறிமுதல் போற்றல் செய்தான். ......    9

(நந்திமுற் கடையை)

நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனா மண்ணல்
     முந்துறை சனக னாதி முனிவரர் தொழுது கேட்ப
          அந்தமில் ஆக மத்தின் அரும்பதம் மூன்றுங் கூறப்
               புந்திய தொடுங்கும் ஞான போதகம் போதி யென்றார். ......    10

(என்னலும் நகைத்தி)

என்னலும் நகைத்தி யாது மெதிர்மொழி புரிந்தா னல்லன்
     பன்னுவ தன்றால் மற்றிப் பரிசினா லிருத்தல் கண்டீர்
          அந்நெறி யாகு மென்றே அனையவர்க் குணர்த்து மாற்றால்
               உன்னரும் பரத்தின் மேலோ னொருசெயல் புரித லுற்றான். ......    11

(இருவரு முணரா)

இருவரு முணரா அண்ணல் ஏனவெள் ளெயிறி யாமை
     சிரநிரை யநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள்
          கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி
               ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான். ......    12

(இனையதோர் தன்மை)

இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா னுணர்த்தக் கண்டு
     சனகனே முதலா வுள்ளோர் தவலரும் ஞான போதம்
          பனுவலின் அளவன் றென்னும் பான்மையைத் தெரிந்து முக்கட்
               புனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம் பெற்றார். ......    13

(தத்தமுள் ளொடு)

தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும்
     முத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண் மூர்த்தி
          மெய்த்தவ வடிவ முன்னி மேவினர் சூழ்ச்சி மேலோன்
               சித்திரம் புணர்த்த பாவை செயலற இருக்கு மாபோல். ......    14

(தற்பரன் இனைய)

தற்பரன் இனைய வாற்றாற் றாபத ருணருந் தன்மை
     அற்புத ஞான போத மளித்திடுங் கணம தொன்றின்
          முற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க் கெல்லாம்
               பற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ தென்னோ. ......    15

(இத்திற ஞானபோத)

இத்திற ஞானபோத மென்றுதொன் முனிவர்க் கெந்தை
     கைத்தலங் கொண்டு காட்டுங் கணத்தினில் அமரர்க் கெல்லாம்
          மெத்துபல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி தன்னில்
               அத்தன்மெய் குழைத்த நங்கை அவன்விழி புதைத்த நாட்போல். ......    16

(காரண முதல்வன்)

காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர ரெல்லாஞ்
     சூரர மகளிர் தங்க டுணைமுலைப் போக மின்றி
          ஆரிடர் நிலைமை தன்னை யடைந்தனர் அளக்கர் சூழ்ந்த
               பாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த வன்றே. ......    17

(ஆரணன் றனது)

ஆரணன் றனது மைந்தர்க் கரும்பெறல் ஞான போதம்
     ஓரிறை காட்டு முன்னர் உலகெலா மொருப்பா டொன்றி
          ஈருடன் முயங்கு மார்வ மின்றியே யிருந்த யார்க்குங்
               காரணன் சிவனே யென்கை கழறவும் வேண்டற் பாற்றோ. ......    18

(பிணைவிழைச் சூழ்)

பிணைவிழைச் சூழ்தந் துய்ப்பப் பெருமறை விதிவ ழாமல்
     அணைவிழச் சடங்கிற் கொண்ட அரிவைய ரோடு தேவர்
          இணைவிழைச் சியற்கை கூடா திரங்கினர் கவற்சி யெய்திப்
               புணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொள் மாக்க ளேபோல். ......    19

(வன்முலை யணங்கி)

வன்முலை யணங்கி னோரும் வானவர் யாருங் காமத்
     தன்மையும் புணர்ப்பு மின்றித் தளர்ந்தனர் வறிஞர் தம்பால்
          இன்மைகொண் டோர்கள் செல்ல ஈவது கூடா வெல்லைப்
               புன்மையொ டிருவர் தாமும் புலம்புறு தன்மை யேபோல். ......    20

(பொற்புருக் குறை)

பொற்புருக் குறைவின் றுற்றும் புவனமேல் மகளிர் மைந்தர்
     அற்பொடு கலந்து காமத் தரும்பயன் கோட றேற்றார்
          தற்பர வடுக னாணைத் தன்மையால் அலகை யீட்டம்
               நற்புன னீழல் பெற்று நணுகருந் தன்மை யேபோல். ......    21

(மாடக வெழாலை)

மாடக வெழாலை யன்ன பணிமொழி மகளிர் மைந்தர்
     கூடின ரிருந்து மின்பங் கொண்டிலர் சிறார்கு ழாமும்
          ஆடவர் குழாமும் வாட்கண் அரிவையர் குழாமு மேனைப்
               பேடியர் குழாமும் வெவ்வே றுற்றிடு பெற்றி யேபோல். ......    22

(இருந்திட விரிஞ்ச)

இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரு மீசன் றன்பாற்
     பொருந்திடு முணர்ச்சி கொண்டு முத்தியிற் புக்க சேயுந்
          திருந்துசீர் வசிட்டன் சொல்லாற் சிலையெனப் பன்னாள் நின்ற
               அருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளி ரெல்லாம். ......    23

(ஏமரு புவன மூன்று)

ஏமரு புவன மூன்று மினிதருள் கமலக் கண்ணர்
     பூமட மாதர் தம்பாற் புணர்கிலர் பொருவில் வேளுங்
          காமரு மகளிர் கூட்டங் கருதலன் இவர்போற் சிந்தை
               ஆமையி னொடுங்கல் பெற்றார் ஆசையுள் ளோர்களெல்லாம். ......    24

(மண்ணகத் துயிர்கண்)

மண்ணகத் துயிர்கண் முற்று மாதிரத் துயிர்கண் முற்றும்
     விண்ணகத் துயிர்கண் முற்றும் வேற்றகத் துயிர்கண் முற்றும்
          பெண்ணகத் தாண்மை கூடுஞ் சிறுநலம் பிழைத்த ஞானக்
               கண்ணகத் திறைவற் கண்டு கடைநின்ற காட்சி யார்போல். ......    25

(நாகமார் சடிலத்)

நாகமார் சடிலத் தண்ணல் நாற்பெருந் தவரு முய்ய
     யோகுசேர் நிலைமை காட்டு மொருகணத் துயிரின் பொம்மல்
          வாகைவே டானு நிற்க மையலும் புணர்ப்பு மற்ற
               ஆகையால் அகில மெல்லா மவனென்கை தெரிந்த தன்றே. ......    26

(சிலையொடு பகழி)

சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைசீர் குன்ற
     வலிதளர் வெய்தத் தென்றல் மறிகடற் சுறவு தூங்க
          அலைபுரி யாணை நீங்கி ஆடன்மா மதனு மாதின்
               கலவிய தொழிந்தா னென்னிற் பிறர்செயல் கழறற் பாற்றோ. ......    27

(சாலிகள் வளரு)

சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக
     வாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல்
          மேலவ னருளாற் போகம் வெறுத்தலிற் கருமல் கின்றி
               ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே. ......    28

(முள்ளரை முளரி)

முள்ளரை முளரிப் புத்தேள் முதற்புரி துணையே யன்றித்
     தள்ளரு முயிர்கள் பின்னுந் தலைத்தலை மல்கா துற்ற
          தெள்ளிதி னுலக மீன்ற தேவியின் றாகி ஈசன்
               வெள்ளியங் கயிலை தன்னில் மேவிய மேலை நாட்போல். ......    29

(இம்முறை நிகழ)

இம்முறை நிகழ நாதன் ஈரிரு தவத்தி னோர்க்கும்
     மெய்ம்மைகொ ளுணர்ச்சி காட்டி வீற்றிருந் தருளு மெல்லை
          தெம்முயல் சூரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர்
               தம்மொடுந் துறக்கம் விட்டுச் சசியொடுந் தரணி புக்கான். ......    30

(மேகமூர் கடவுள்)

மேகமூர் கடவுள் வெள்ளி வெற்பினி லேகி முக்கண்
     ஏகநா யகனைக் காணு மெல்லையின் றாக மீண்டு
          சோகமோ டம்பொன் மேருத் துன்னியே சூரன் மைந்தன்
               மாகநா டழித்துச் சேயைச் சிறைசெய்த வண்ணந் தேர்ந்தான். ......    31

(தமனிய மேரு வெற்)

தமனிய மேரு வெற்பிற் றன்னுள மொருப்பா டெய்த
     நிமலனை யுன்னிப் பன்னாள் நெடுந்தவ முழத்த லோடும்
          இமில்விடை மிசைக்கொண் டங்கண் எம்பிரா னேகக் காணூஉ
               அமரர்கோன் வணங்கிப் போற்ற அனையவ னருளிச் செய்வான். ......    32

(நொந்தனை யள)

நொந்தனை யளப்பில் கால நோற்றனை யாற்றல் தீர்ந்தாய்
     இந்திர நினக்கு வேண்டிற் றென்னைய தியம்பு கென்னா
          அந்தமி லறிவின் மேலோன் அறிகிலன் போலக் கேட்ப
               வந்தனை புரிந்து போற்றி மகபதி புகல லுற்றான். ......    33

(பன்னரும் பழிசேர்)

பன்னரும் பழிசேர் சூரன் பருவரற் படுத்திப் பின்னர்
     என்னொரு புதல்வன் றன்னை இமையவர் பலரை வாட்டித்
          தன்னகர்ச் சிறையிட் டெம்மூர் தழல்கொளீஇத் தவறு செய்தான்
               அன்னவன் றன்னை யட்டே அளித்தியா லெம்மை யென்ன. ......    34

(மெய்ம்மைய தகன்ற)

மெய்ம்மைய தகன்ற தக்கன் வேள்வியி னிருந்த பாவம்
     நும்மிடை யிருந்த தற்றால் நோதக வுழந்தீர் மேனாள்
          நம்மிடை யொருசேய் வந்து நணுகிவெஞ் சூரைக் காதி
               இம்மென வும்மைக் காப்ப னெனப்புகன் றிறைவன் போனான். ......    35

(மறைந்தனன் இறை)

மறைந்தனன் இறைவ னேக மகபதி யிரக்க மெய்திக்
     குறைந்தனன் உணர்வு துன்பங் கூர்ந்தனன் குமர னங்கட்
          பிறந்துமைக் காப்ப னென்றே பிரானருள் புரிந்த பெற்றி
               சிறந்ததன் மனத்தி லுன்னித் தேறினன் உவகை செய்தான். ......    36

(மாசறு காட்சி)

மாசறு காட்சி கொண்ட மாதவர்க் கருளி யெங்கோன்
     தேசுறு கயிலை யுற்றான் உமையவ ளிமையஞ் சேர்ந்தாள்
          ஆசறு குமரன் அன்னார்க் கடைவதெத் தன்மை யென்னா
               வாசவ னிருந்து நாடி மனமிசைக் கவலை கூர்ந்தான். ......    37

(மயர்வொடு துறக்க)

மயர்வொடு துறக்க மன்னன் மனோவதி யென்னு மாண்டை
     வியனக ரெய்தி யாங்கண் வீற்றிருந் தருளும் பொன்னின்
          இயன்முறை மனைவி தன்பால் இல்லினை யிருத்தல் செய்தாங்
               கயனுறு கடிமாண் கோயி லடைந்தனன் அமர ரோடும். ......    38

(இனையதோர் காலை)

இனையதோர் காலை முக்க ணெம்பிரான் ஞானபோதம்
     முனிவரர்க் குணர்த்தி வைகும் முறையினாற் படைப்பின் றாகித்
          துனியொடு வேதா வைகுந் தொன்முறை யவையை நண்ணி
               அனையவன் கழன்முன் றாழூஉ அளப்பில வழுத்தி நின்றான். ......    39

(நிற்றலும் மகவான்)

நிற்றலும் மகவான் றன்னை நீடருள் புரிந்து நோக்கிப்
     பொற்றனிக் கமல மேய புங்கவர் முதல்வன் வானோர்
          கொற்றவ வந்த தென்னை கூறுதி யென்ன லோடுஞ்
               சொற்றனன் சூர பன்மன் செய்திடுந் துன்ப மெல்லாம். ......    40

(வெய்யதோர் சூரன்)

வெய்யதோர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க் கீசன்
     ஐயமி லுணர்வு காட்டி யமர்வது முரைத்துத் தான்பின்
          செய்யுறு தவங்கண் டன்னான் அருளிய திறனுஞ் செப்பி
               உய்வதோர் பரிச தென்னோ உம்பரும் யானு மென்றான். ......    41

(என்றலும் மலரோன்)

என்றலும் மலரோன் கேளா எவர்க்குமே லாகு மீசன்
     ஒன்றிய வருளி னோனும் உற்றவர்க் குதவு வோனும்
          அன்றியும் முறைசெய் வோனு மாதலின் முனிபோல் வெள்ளிக்
               குன்றிடை யெம்மை யாளுங் குறிப்பின்வீற் றிருந்தா னன்றே. ......    42

(செங்கண்மா றானும்)

செங்கண்மா றானும் நானுந் தேடுதற் கரிதாய் நின்ற
     எங்கடம் பிராற்கு மேலா எண்ணவோர் தேவு முண்டோ
          அங்கவன் ஞான போதம் அறிவருக் குணர்த்தி வைகல்
               நங்குறை முழுது மாற்றும் நல்லரு ளாகு மன்றே. ......    43

(படர்மதி மிலைச்சு)

படர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பகவனா ருயிர்க ளெல்லாம்
     அடுவதும் வருத்தந் தீர்க்கு மாரரு ளான வாபோல்
          கொடியவெஞ் சூரன் றன்னைக் கொண்டெமக் கலக்கண் செய்கை
               விடலரும் பவப்பே றார்த்தி வீடருள் கருணை யன்றே. ......    44

(பெற்றிடுங் குரவ)

பெற்றிடுங் குரவ ரானோர் பிள்ளைகள் தம்பால் நோயொன்
     றுற்றிடிற் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார்
          மற்றவர் தம்பா லன்போ வன்கணோ அதுபோல் நம்பாற்
               பற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனு மிவைகள் செய்தான். ......    45

(தெருமரு கின்ற)

தெருமரு கின்ற நம்பாற் றீங்கெலாம் நீங்கு மெல்லை
     ஒருசிறி தணுகிற் றாகு மாதலால் உணர்வின் மேலோன்
          பரிவொடு நின்பால் வந்து பரிசிவை யருளிப் போனான்
               இருவினைப் பௌவ வேலை ஏறினம் போலு மன்றே. ......    46

(ஆதலின் இறைவ)

ஆதலின் இறைவ னேமே லருள்செயும் அதற்கி யாமுந்
     தீதற முயலு மாறு சிறிதுள திவற்றை மாயோற்
          கோதினம் வேண்டுஞ் செய்கை யொல்லையிற் செய்து மென்னா
               ஏதமில் கமலப் புத்தேள் இருக்கைவிட் டெழுந்தா னன்றே. ......    47

வேறு

(அன்ன காலை யது)

அன்ன காலை யதுநன்று நன்றெனாத்
     துன்னு வானவர் சூழலொ டிந்திரன்
          பின்ன ராகப் பெயர்ந்துடன் வந்திடச்
               சென்னி நான்கினன் செல்லுதல் மேயினான். ......    48

(ஞாலம் யாவையும்)

ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன்
     வாலி தாந்தன் மனோவதி நீங்குறா
          மேலை வைகுந்த மென்னும் வியனகர்
               ஆல யத்தின் அகன்கடை யேகினான். ......    49

(அங்க வெல்லை யது)

அங்க வெல்லை யதுகண்டு நேமியுஞ்
     சங்கு மேந்திய தானையங் காவலன்
          செங்கண் மாயன்முன் சென்றுவிண் ணோருடன்
               பங்க யத்தன் படர்ந்தது செப்பினான். ......    50

(பணில மேந்திய)

பணில மேந்திய பண்ணவன் அன்னரைக்
     கொணர்தி யாலெனக் கூறி விடுத்துழி
          இணையில் காவல னுய்த்திட இந்திரன்
               கணமொ டேகினன் காசினி நல்கியோன். ......    51

(பொருவில் மாமுனி)

பொருவில் மாமுனி புங்கவர் போற்றுதன்
     னுருவு கொண்ட வுலப்பறு கண்ணர்கள்
          மரபி னேத்த மணிப்பணிப் பீடமேல்
               அரியி ருந்த அவைக்களம் நண்ணினான். ......    52

(அன்ன மூர்தி)

அன்ன மூர்தி அமருல காளுறும்
     மன்ன னோடுமவ் வானவர் தம்மொடும்
          பன்ன காசனப் பங்கயக் கண்ணவன்
               பொன்னின் மாணடி போற்றி வணங்கினான். ......    53

(தரைய ளந்திடு)

தரைய ளந்திடு தாளினன் அவ்வழிக்
     கருணை செய்துதன் காதல னாகிய
          பிரம னுக்கொரு பீடிகை பெற்றியால்
               அருளி யங்கண் அவனை இருத்தினான். ......    54

(குல்லை மாமுடி)

குல்லை மாமுடிக் கொண்டவன் அத்துணை
     அல்லி மாம லரண்ணலை நோக்குறீஇ
          ஒல்லும் நின்விதி யூறில தாகியே
               செல்லு கின்றகொல் என்றலுஞ் செப்புவான். ......    55

(கனகன் அச்சுற)

கனகன் அச்சுறக் கந்திடை வந்தெழும்
     அனக இத்திறங் கேட்க அறிவுடைச்
          சனகன் முற்படு தாபதர் நால்வரும்
               எனக ருத்திடை முற்பக லெய்தினார். ......    56

(அறிவின் மிக்க அனை)

அறிவின் மிக்க அனையரை நோக்கியான்
     பெறுவ தாமிப் பெருந்தொழி லாற்றியீண்
          டுறுதி ரென்ன உளத்தது கொண்டிலர்
               முறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை. ......    57

(பாச வன்சிறை)

பாச வன்சிறைப் பட்டுப் படைப்பெனப்
     பேச லுற்ற பெருந்தளை பூணலம்
          ஈசன் மாணடி யெய்துதும் யாமெனா
               மாசில் காட்சியர் வல்விரைந் தேகினார். ......    58

(மாத வத்தினை)

மாத வத்தினை மைந்தர்க ளாற்றலும்
     ஆதி நாயகன் அவ்வுழி வந்துமக்
          கேது வேண்டிய தென்றலு மெண்ணிலா
               வேத வுண்மை விளம்புதி யாலென்றார். ......    59

(என்ற லோடும் இறைய)

என்ற லோடும் இறையவன் வெள்ளியங்
     குன்ற மீதுதென் கோட்டிடை நிற்புறும்
          ஒன்றொ ரானிழல் உற்று மறையெலாம்
               நன்று ணர்த்திட நால்வருந் தேர்ந்தனர். ......    60

(முந்தை வேத முழுது)

முந்தை வேத முழுது முணர்த்தியே
     எந்தை யேக இருநிலம் போந்துதஞ்
          சிந்தை யொன்றும் திறனரி தாதலின்
               நொந்து பின்னரும் நோற்றலை மேயினார். ......    61

(பின்னும் மைந்தர்)

பின்னும் மைந்தர் பெருந்தவ மாற்றியே
     தொன்ன லம்பெறு தூய வுளத்தராய்
          என்னை யாளுடை யீச னருளினால்
               மன்னும் வெள்ளி வரையிடை யேகினார். ......    62

(ஏகல் பெற்றிடு)

ஏகல் பெற்றிடு மக்கட் கினிதுளம்
     பாக முற்ற பரிசுணர்ந் தெம்பிரான்
          ஆக மத்தின் அரும்பதம் மூன்றையும்
               ஓகை பற்றி யுணர்வகை கூறியே. ......    63

(கூனன் மாமதி)

கூனன் மாமதிக் கோடு மிலைச்சிய
     வான நாயகன் மற்றவர் காண்டக
          ஞான போதம் நவிலருந் தன்மையால்
               மோன மேய முதற்குறி காட்டினான். ......    64

(அந்த வெல்லை யரன)

அந்த வெல்லை யரனருள் கண்டுதம்
     புந்தி யொன்றியப் புங்கவன் தாள்மலர்
          சிந்தை செய்து செயலற்று வைகினார்
               முந்தி யாப்புறு முத்தளை மூட்டற. ......    65

(வேத நாயகன் மெய்)

வேத நாயகன் மெய்த்தவர்க் கோர்கணம்
     போத யோகின் பொருண்மையைக் காட்டுழி
          ஓத லாகும் உகம்பல சென்றன
               சீத வானதி சேர்ந்ததொன் னாளினே. ......    66

(அன்னை தன்னை)

அன்னை தன்னை அகன்றரன் யோகிபோல்
     என்ன துஞ்செய லின்றி யிருத்தலான்
          முன்னை ஆண்பெண் முயக்கம தின்மையாய்
               மன்னு யிர்த்தொகை மல்கலின் றாயதே. ......    67

(நவிறல் என்னினி)

நவிறல் என்னினி ஞாலம் விசும்புளார்
     இவறு காமப் புணர்ச்சிய தின்றியே
          கவறல் கொண்டு கலங்கஞ ரெய்தினார்
               தவறல் கொண்டது நல்குந் தனிச்செயல். ......    68

(நல்கல் பெற்ற)

நல்கல் பெற்ற தமியனும் நாமகட்
     புல்கல் பெற்ற புணர்ச்சியின் றாகியே
          அல்கல் பெற்ற அருந்தவ யோகரின்
               ஒல்கல் பெற்றனன் உண்மையி தாகுமால். ......    69

(நிற்க இங்கிது)

நிற்க இங்கிது நித்தன்வ ரத்தினால்
     ஒற்க மில்வள னுண்டிடு வெய்யசூர்
          எற்கும் நித்தலு மேவலொன் றிட்டனன்
               சொற்க நாட்டில் துயரினை நாட்டினான். ......    70

(தேசு நீங்குறு)

தேசு நீங்குறு தேவரை ஈண்டுள
     வாச வன்றனை மாதிரத் தோர்களைப்
          பாச னத்தொடு பற்றினன் நித்தலுங்
               கூச லின்றிக்குற் றேவல்கொண் டானரோ. ......    71

(நிறைபு ரிந்த நில)

நிறைபு ரிந்த நிலவினை வாளரா
     மறைபு ரிந்தென வானகத் தோருடன்
          இறைபு ரிந்தவிவ் விந்திரன் மைந்தனைச்
               சிறைபு ரிந்தனன் தீத்தொழி லாற்றியே. ......    72

(நிரந்த பல்லுயிர்)

நிரந்த பல்லுயிர் தங்கட்கு நித்தலும்
     அரந்தை மல்க அறிகிலன் போலவே
          இருந்த னன்சிவன் என்னினிச் செய்வது
               விரைந்து கூறுதி யென்று விளம்பினான். ......    73

(அரிய தத்துவம்)

அரிய தத்துவம் ஐயைந்தின் பேதமும்
     மரபின் நாடினர் வாலுணர் வெய்திய
          திருவி னாயகன் செங்கம லந்திகழ்
               பிரமன் மாமுகம் நோக்கினன் பேசுவான். ......    74

வேறு

(ஆவிக ளனைத்து)

ஆவிக ளனைத்து மாகி அருவமா யுருவ மாகி
     மூவகை யியற்கைத் தான மூலகா ரணம தாகுந்
          தேவர்க டேவன் யோகின் செயல்முறை காட்டு மென்னில்
               ஏவர்கள் காமங் கன்றித் தொன்மைபோ லிருக்கும் நீரார். ......    75

(ஊழ்வினை நெறியால்)

ஊழ்வினை நெறியால் முன்ன மொருபெரு வேள்வி யாற்றித்
     தாழ்வினை யடைந்த தக்கன் றன்புடை யிருந்தோர் தம்பாற்
          சூழ்வினை யெச்ச முற்றும் அருத்தியே தொலைத்துத் தொல்லை
               வாழ்வினை யருள நாதன் மனத்திடை நினைந்தா னன்றே. ......    76

(சூரெனு மவுண)

சூரெனு மவுணற் காற்றல் புரிந்ததுஞ் சுரர்கள் யாருஞ்
     சார்வருந் திறத்தால் ஈசன் தவத்தருக் குணர்வு காட்டி
          ஆருயிர் எவைக்கு மின்ன லாக்கிய வாறுந் தூக்கிற்
               பேரருள் முறையே யன்றிப் பிறிதொரு செயலு மன்றால். ......    77

(முனிவருக் குணர்வு)

முனிவருக் குணர்வு காட்டும் மோனத்தை முதல்வன் நீங்கிப்
     பனிவரை அணங்கை மேவில் படைப்பயன் முற்றும் அன்னார்க்
          கினியொரு குமரன் தோன்றில் சூர்கிளை யெனைத்தும் பொன்றுந்
               துனியுறும் உலக மெல்லாந் தொன்மைபோ லுய்யு மாதோ. ......    78

(அத்திற முற்று)

அத்திற முற்று மாறொன் றறைகுவன் அகிலந் தன்னில்
     எத்திறத் தருமால் கொள்ள வெய்திடுங் காமன் றன்னை
          உய்த்திடின் முனிவர் தங்கட் குணர்வுசெய் மோனம் நீங்கிச்
               சத்தியை மணந்து சேயைத் தந்திடு மெந்தை யென்றான். ......    79

(பதுமபீ டிகையோ)

பதுமபீ டிகையோ னன்ன பரிசுதேர்ந் துவகை யெய்தி
     இதுசெயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றா யென்ன
          அதுபொழு தவனை நோக்கி அச்சுதன் அமலன் றன்பால்
               மதனனை விளித்து வேண்டி விடுத்திநீ வல்லை யென்றான். ......    80

(என்னலும் மலரோ)

என்னலும் மலரோ னுள்ளத் திசைவுகொண் டெழுந்து மாயன்
     பொன்னடி வணக்கஞ் செய்து விடைகொடு புலவ ரோடும்
          மன்னொடு மங்கண் நீங்கி மனோவதி அதன்பாற் சென்று
               தன்னக ரடைந்து கஞ்சத் தவிசின்வீற் றிருந்தா னன்றே. ......    81

ஆகத் திருவிருத்தம் - 491



previous padalam   3 - மேருப்படலம்   next padalammErup padalam

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]