Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

previous padalam   2 - பார்ப்பதிப் படலம்   next padalampArppathip padalam

Ms Revathi Sankaran (3.57mb)




(அன்னுழி உமை)

அன்னுழி உமையவ ளகத்து ளோர்செயல்
     உன்னினள் துணுக்கமுற் றொல்லைதா னெழீஇத்
          தன்னிக ரில்லவன் தாளி றைஞ்சியே
               முன்னுற நின்றிவை மொழிதல் மேயினாள். ......    1

(கற்பனை முதலிய கட - 1)

கற்பனை முதலிய கடந்த கண்ணுதல்
     தற்பர நினையிகழ் தக்கன் தன்னிடைப்
          பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச்
               சொற்படு நாமமுஞ் சுமந்து ளேனியான். ......    2

(ஆங்கதோர் பெயரை)

ஆங்கதோர் பெயரையு மவன்க ணெய்தியே
     ஓங்கிநான் வளர்ந்தவிவ் வுடலந் தன்னையுந்
          தாங்கினன் மேலவை தரித்தற் கஞ்சினேன்
               நீங்குவ னவ்வகை பணித்தி நீயென்றாள். ......    3

(மன்னுயிராகிய மரபு)

மன்னுயி ராகிய மரபு முற்றவும்
     முன்னுற அருளிய முதல்வி யன்பினால்
          இன்னண மியம்பலு மிதனைத் தேர்ந்திடாத்
               தன்னிக ரில்லதோர் தலைவன் கூறுவான். ......    4

(பத்திமை யெம் வயிற்)

பத்திமை யெம்வயிற் பழுத்த பண்பினாற்
     சத்தியே நின்னிகர் சகத்தி னில்லைநீ
          இத்திறம் முயலுத லெல்லை தீர்ந்தநின்
               புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால். ......    5

(நற்றிற மேயிது)

நற்றிற மேயிது நங்கை சிந்தனை
     முற்றிய வேண்டுமேல் மொழிதும் மேருவின்
          சுற்றம தாகிய இமையத் தொல்வரைக்
               கொற்றவன் புரிவனாற் கொடிய மாதவம். ......    6

(ஏதவன் பெறத்தவ)

ஏதவன் பெறத்தவ மியற்று மென்றியேன்
     மாதுனை மகண்மையா மரபிற் போற்றியே
          காதலொ டெமக்கருள் கருத்த தாகுமால்
               ஆதலிற் குழவியாய் அவன்க ணெய்துநீ. ......    7

(தளர்ந்துடல் மெலி)

தளர்ந்துடல் மெலிவுறத் தவஞ்செய் வெற்பினான்
     இளஞ்சிறு குழவியா யெய்தி மற்றவன்
          உளங்களி கூரவாண் டோரைந் தின்றுணை
               வளர்ந்தனை புரிதிமேல் மாசில் மாதவம். ......    8

(அணங்குநீ நோற்று)

அணங்குநீ நோற்றுழி யகிலத் துள்ளதோர்
     கணங்களுந் தலைவருங் கணிப்பில் தேவரும்
          இணங்கினர் சூழ்தர வெய்தி நின்னையாம்
               மணம்புரிந் தேகொடு வருது மீண்டெனா. ......    9

(கடல்விட முண்டிடு)

கடல்விட முண்டிடு கடவு ளித்திறம்
     நடைமுறை யருளலும் நன்றெ னாமகிழ்ந்
          தடியிணை வணங்கிநின் றன்பிற் போற்றியே
               விடையது பெற்றனள் விமலை யேகினாள். ......    10

(அல்லலு முவகை)

அல்லலு முவகையு மன்பு மெம்பிரான்
     எல்லையி லருளுமா யீண்டி முன்செல
          மெல்லியல் உமையவள் வெள்ளி வெற்பொரீஇ
               வல்லையின் இமையமால் வரையிற் போயினாள். ......    11

(வள்ளியன் கடகரி)

வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு
     துள்ளியம் பனிமழைச் சோனை சூழ்தலால்
          எள்ளருந் தன்மைசேர் இமைய மால்வரை
               வெள்ளியங் கிரியென விளங்கு கின்றதே. ......    12

(எண்டகு மிமையமு)

எண்டகு மிமையமு மிமைய மேலுறு
     கொண்டலு மொன்றியே குலவு காட்சிய
          தெண்டிரை மிசையெழு நஞ்சுந் தீயநஞ்
               சுண்டிடு மணிமிடற் றிறையு மொக்குமால். ......    13

(நீலுறு மழைமுகில்)

நீலுறு மழைமுகில் நிலவு மின்னொடு
     மேலுற விளங்கிய இமைய வெற்பது
          மாலவன் றிருவொடு மருவிக் கண்டுயில்
               பாலுறு பன்னகப் பாயல் போன்றதே. ......    14

(கரும்புய லார்த்துறு)

கரும்புய லார்த்துறு காட்சித் தாகியே
     இரும்பனி யிடையறா விமையப் பொன்வரை
          சுரும்பின மிசையொடு துவன்றிச் சுற்றிட
               அரும்பவி ழாதவெண் கமல மன்னதே. ......    15

(நீடிய மண்மகள்)

நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப்
     பாடுறு தண்ணிலாப் படாம தொன்றினான்
          மூடினள் வைத்திடு முறைய தேயெனக்
               கோடுயர் பனிகொள்பொற் குன்றம் நின்றதே. ......    16

(பொன்னெடுங் கிரியென)

பொன்னெடுங் கிரியென வீண்டும் புங்கவர்
     துன்னினர் சூழ்வரென் றுன்னித் தொன்மனு
          அன்னதை மறைத்தனன் இரதத் தாவியால்
               என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை. ......    17

(குடகடல் குணகடல்)

குடகடல் குணகடல் கூடு றாவகை
     இடையொரு வாலிதாம் ஏன மெய்தியே
          தடைபுரி சிறப்பென இமையத் தாழ்வரை
               நெடுநில வளவையும் நிமிர்ந்து போயதே. ......    18

(விண்ணவர் ததி)

விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள்
     அண்ணலம் பாற்கட லமுதம் வைத்தெனக்
          கண்ணகன் பெரும்பனி கவைஇய வெற்பின்மேல்
               உண்ணிறை புனற்றட மொன்று வைகிற்றே. ......    19

(அன்னதோர் தட)

அன்னதோர் தடத்திடை அசல மன்னவன்
     மன்னிய கௌரிதன் மகண்மை யாகவுந்
          தன்னிக ரிலாவரன் றனக்கு நல்கவும்
               முன்னுற வருந்தவம் முயன்று வைகினான். ......    20

(மெய்த்தவ மியற்றிய)

மெய்த்தவ மியற்றிய வெற்பன் காணிய
     அத்தட மலருமோ ரரவிந் தத்தின்மேற்
          பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள்
               எத்திறத் துயிரையு மீன்ற தொன்மையாள். ......    21

வேறு

(ஆங்கவட் கண்டு)

ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டா லம்மை
     நீங்கினள் போலும் முக்க ணிருமலன் றன்னை யென்னா
          ஏங்கினன் றனது நோன்புக் கிரங்கின னிவைக ளீசன்
               ஓங்குபே ரருளே யென்னா வுவகையங் கடலுட் பட்டான். ......    22

(கண்ணுறு போத)

கண்ணுறு போத வாரி கான்றிட வுரோம ராசி
     உண்ணிக ழன்பு மிக்குப் புறந்தனி லொழுகிற் றென்ன
          வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனே னுய்ந்தே னென்னாத்
               துண்ணெனப் பாடி யாடி யமலையைத் தொழுது நின்றான். ......    23

(பங்கயத் தவிசின்)

பங்கயத் தவிசின் வைகும் பராபரை தனைத்த னாது
     செங்கையி னெடுத்து வல்லே சென்னிமேற் றாங்கி யேகித்
          துங்கநல் லிமையத் தண்ணல் தொன்முறை யிருக்கை புக்கு
               மங்கல மேனை யென்னு மனைவிகைக் கொடுத்தான் மாதோ. ......    24

(கொடுத்தலுந் தொழுது)

கொடுத்தலுந் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின் பாங்கர்
     அடுத்ததங் கெவனோ வென்ன அரசனும் நிகழ்ந்த வெல்லாம்
          எடுத்துரை செய்யக் கேளா வீசன தருளோ வென்னா
               வடுத்தவிர் கற்பின் மேனை மனமுற மகிழ்ச்சி கொண்டாள். ......    25

(சுரந்தன கொங்கை)

சுரந்தன கொங்கை பாலுந் துண்ணென வொழுகிற் றெங்கும்
     பரந்தன பொடிப்பின் போர்வை பரைதன தருளே யுள்ளம்
          நிரந்தன கவலை யாவும் நீங்கின பவமுன் னுள்ள
               கரந்தன விமையத் தண்ணல் காதலி தனக்கு மாதோ. ......    26

(பரிபுரந் தண்டையம்)

பரிபுரந் தண்டை யம்பொற் பாடகம் பாத சாலம்
     விரவிய தொடியே சங்கு வியன்மணிச் சுட்டி யாரம்
          அரிகெழு மதாணி பொற்றோ டங்கதம் பிறவுஞ் சாத்தி
               வரையுறழ் தனப்பா லார்த்தி வரம்பெறு காப்பு நேர்ந்தாள். ......    27

(வனைதரு பவள)

வனைதரு பவளங் காலா வயிரமே மருங்கிற் கோலாப்
     புனையிரும் பலகை நீலாப் புரிந்தபொற் றொட்டின் மேலா
          அனையவ டன்னை யுய்த்து மங்கையிற் கொண்டுந் தன்கோன்
               மனமகிழ் திறனாற் போற்றி மதியென வளர்க்க லுற்றாள். ......    28

(மன்னுயிர் புவன)

மன்னுயிர் புவன மேனை மற்றுள பொருளுக் கெல்லாம்
     அன்னையா யுதவி நாளு மவற்றினை வளர்த்து நிற்பாள்
          தன்னையும் வளர்ப்பா ருண்டோ வளர்ந்தது சழக்கே யந்தக்
               கன்னிதன் னருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே. ......    29

(இந்தவா றினையர்)

இந்தவா றினையர் பாலா யெம்பெரு மாட்டி வைகி
     ஐந்தியாண் டகன்ற பின்றை யயன்முதற் றேவர் யார்க்குந்
          தந்தையா ரருளை யுன்னித் தவமினிப் புரிவ னென்னாச்
               சிந்தியா விமையத் தோங்கற் செம்மலுக் குரைக்க லுற்றாள். ......    30

(நாற்பெருந் தடந்)

நாற்பெருந் தடந்தோ ளண்ணல் நலத்தக வரைந்து கொள்வான்
     நோற்பனா லினைய வெற்பி னுவலரு மொருசார் வைப்பின்
          ஏற்பதோர் கன்னி மாரோ டெனைவிடுத் தருண்மோ வென்னாப்
               பார்ப்பதி இயம்ப லோடும் பனிவரை யரசன் சொல்வான். ......    31

(அன்னைகே ளெம்)

அன்னைகே ளெம்மின் நீங்கி யருந்தவ மாற்றற் கொத்த
     தின்னதோர் பருவ மன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற
          நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி யென்னக்
               கன்னிகை நகைத்துக் கேண்மோ இஃதெனக் கழற லுற்றாள். ......    32

(ஈசனே கர்ப்பனல்)

ஈசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்மால்
     ஆசறப் போற்ற லாகா ததுதுணி வாகு மீண்டுப்
          பேசிய திறனு மன்னோன் பேரருள் மறாதி யென்ன
               நேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றான். ......    33

(மன்னனு மியைந்து)

மன்னனு மியைந்து பின்னர் மால்வரை யொருசார் தன்னில்
     அன்னமென் னடையி னாளுக் கருந்தவச் சாலை யாற்றித்
          தன்னுறு கிளைஞர் தம்பாற் றவத்தினால் வந்த பான்மைக்
               கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபா லாகச் செய்தான். ......    34

(நீலுறு மணிதோய்)

நீலுறு மணிதோய் மேனி நிமலையங் கிமையத் துச்சி
     மேலுறு மரசன் றேவி விடையினால் மடவார் பல்லோர்
          பாலுறு பணியிற் சூழப் பரமனை யுன்னி யந்தச்
               சாலையை யடைந்து மிக்க தவத்தினை யிழைக்க லுற்றாள். ......    35

(தங்கிய வைக றோறு)

தங்கிய வைக றோறுந் தாதையுந் தாவில் கற்பின்
     மங்கையும் போற்றி யேக மாதுநோற் றிருந்தா ளிப்பால்
          அங்கவட் பிரிந்த பின்றை அரும்பெருங் கயிலை மேய
               வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்ப லுற்றேன். ......    36

ஆகத் திருவிருத்தம் - 410



previous padalam   2 - பார்ப்பதிப் படலம்   next padalampArppathip padalam

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]