![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 28 ஆனா அமுதே |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 28 ... ஆனா அமுதே (நீயும் நானுமாய் இருந்த நிலை) ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே, நவிலத் தகுமோ? யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே. ......... பதவுரை ......... ஆனா அமுதே ... கெடுதலும் அழிவுமில்லாத அமுதம் போன்றவனே, அயில் வேல் அரசே ... கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய மன்னவனே, ஞான ஆகரனே ... ஞானத்திற்கு இருப்பிடமானவனே, யான் ஆகிய என்னை விழுங்கி ... நான் என்னும் ஆணவ முனைப்பில் அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி, வெறும் தானாய் ... வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய், நிலை நின்றது ... நிலைத்திருப்பதான, தற்பரமே ... மேலான நிலையை (அனுபவித்து அனுபவத்தில் காண்பதே அல்லாது பிறருக்கு இந்த அனுபவம் இத்தன்மையது என்று), நவிலத் தகுமோ ... சொல்லத் தக்கதோ? (சொல்ல முடியாது). ......... பொழிப்புரை ......... என்றும் அழியாத அமுதத்தை ஒத்தவனே, கூரிய வேலாயுதத்தை கையில் கொண்ட இறைவனே, சித்ரூபனே, (embodiment of pure intelligence), என் உடலில் நான் நான் என்று கூறும் ஆணவத்தை, வேறு ஆதாரமில்லாததாயும், என்றும் சாஸ்வதமாயுமுள்ள முருகப் பிரம்மம் என்னை விழுங்கி தானாக நின்றது. இந்த அனுபவத்தை வாயினால் சொல்ல முடியுமோ? முடியாது. ......... விளக்கவுரை ......... சித்தாந்த சாயுச்சியத்திற்கும் வேதாந்த முத்திக்கும் சிறிது வேறுபாடு உண்டு. சித்தாந்தத்தின்படி மூன்று கிரம முத்திகளும் ஒரு பரமுத்தியும் சொல்லப்படுகிறது. சரியை செய்யும் அடியார்கள், முருகனுடைய கந்த லோகத்தில் வாழ்வது சாலோகம். கிரியை செய்பவர்கள் முருகனின் திருச்சபையில் வாழ்வார்கள். இது சாமீபம். யோகம் பயிலும் அடியார்கள் முருகனுடைய சொரூபத்தை அடைந்து, சாரூபத்தை அடைவார்கள். இம்மூன்று கதி அடைந்தவர்கள், சிருஷ்டி முடிந்து பிரபஞ்சமெல்லாம் ஒடுங்கும் மகா சங்காரகாலத்தில் தான் வழிபடும் தெய்வத்துடன் ஒன்றாக சேர்ந்து சாயுச்சியப் பதவியை அடைவார்கள். ஞானத்தால் வாழ்பவர்கள் நேரடியாகவே இறைவனுடன் ஒன்றாக சேர்வார்கள். இதுவே சாயுச்சியம். இதை மனதில் வைத்துத்தான் அருணகிரியார், ஊனேறெலும்பு' - (பாடல் 1221) பொதுப்பாடல்கள் திருப்புகழில், சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் பெருமாளே. ... எனக் கூறுகிறார். ஏன் சாயுச்சியத்தைக் குறிக்கவில்லை? இந்த நிலையில் அடியவர் வேறு ஆண்டவன் வேறு என்கிற பாகுபாடு இல்லை. வேதாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நான்கு நிலைக்கும் மேலாக கைவல்யம்' என்கிற நிலையை இயம்பி உள்ளார்கள். அவர்களின் கொள்கைப்படி, ஆன்மா என்கிற தனிப் பொருளே கிடையாது. யாவுமே பிரம்மம்தான். மாயை எனப்படும் அவித்தையினால் ஜீவான்மா பரமான்மா என இரண்டாகத் தோற்றமளிக்கிறது. அவித்தை நீங்கி மெய்ஞானம் உதிக்கும் பொழுது ஜீவான்மா எந்த உலகத்திற்கும் போக வேண்டியதில்லை. குடத்தில் இருக்கும் காற்று குடம் உடைந்தவுடன் வெளி ஆகாசத்தில் சேர்ந்து விடுவதுபோல், சுவானுபூதி கிடைத்தவுடன் ஆன்மா என்று சொல்லப்படும் ஜீவனும், பிரம்மமும் ஏகீ பாவமாக ஒன்றாகி விடுகிறது. .. ஏக போகமாய் நீயும் நானுமாய் இறுகும் வகை பரம சுகம் .. ... என்று 'அறுகுநுனி பனி' - திருவிடைமருதூர் திருப்புகழில் குறிப்பிடுவார் (பாடல் 858). நாம் சாதாரண வகையில் கூறுகின்ற இரண்டற கலத்தல் என்கிற சொல்லுக்கே இடமில்லை. ஏன்? இரண்டாக இருந்தால்தானே இரண்டற கலப்பது? இதுவே அத்வைத சாஸ்திரத்தில் காணப்படும் முத்தி. சித்தாந்தக் கொள்கைப்படி சாயுச்யம் என்றால் சேருதல். ஆன்மா அழியாமல் சிவத்தோடு ஒன்றாவதே சிவ சாயுச்சியம் என்னும் கொள்கை. முத்தி நிலையில் ஆன்மா சிவ அறிவைப் பெற்று, தானும் சிவமாகி விடுகிறது. இக்கருத்தின்படி இந்த அநுபூதிக்கு பொருள் கொண்டால், .. யானாகி என்னை விழுங்கி .. ... என்பதின் பொருள் ஆன்மா அழியவில்லை. அது பிரமத்தில் ஒன்றி விட்டது என்கிற பொருள் சித்திக்கிறது. இந்த சித்தாந்த நிலையைப்பற்றி பல்வேறு முடிவுகள் சொல்லப்படுகிறது. 1. முன் சொன்னதுபோல் மகா ஆகாசத்துடன் சேர்வது போன்றதா? 2. சிப்பியில் வெள்ளி தோன்றியதாக நினைத்து அந்தக் காட்சியில் ஒருமைப்படுவதா? 3. மண்ணிலிருந்து செய்யப்பட்டதே குடம் என்பது போல், பரமாத்மாவாவிலிருந்து உருப்பெற்று வந்தது ஜீவாத்மா என்ற கொள்கையா? 4. இரும்பில் நெருப்பு பரவி இருத்தல்போல ஒன்றை ஒன்று சூழ்ந்திருக்கும் தன்மையா? 5. பாலும் நீரும்போல இரண்டறக் கலப்பதா? 6. தலைவனும் தலைவியும்போல இன்ப நுகர்ச்சியில் ஒற்றுமைப் படுவதா? இவற்றில் சாயுச்சியம் எத்தன்மையைக் கொண்டது? ஆன்மா அழியாமல் சிவத்தோடு ஒன்றுபடுவதே சிவ சாயுச்சியம் என்றால் மகா பிரளய காலத்தில் எல்லாம் ஒடுங்கி பிரம்மமே தனித்திருக்கும் என்ற போது ஆன்மாவுக்கு அழிவில்லையா? என்ற கேள்வி வரும். மழை இன்மையால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் போகிறது. பின் மழை பெய்தவுடன் அங்கு தண்ணீர் வந்து தாமரைபோன்ற நீர் வாழ் செடிகள் தோன்றுவதைப் பார்க்கிறோம். இச் செடிகள் இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தன? விதை ரூபத்தில் ஆன்ம நிலையில் இருந்தன. இதுவே திரும்ப மரமானது. புணர் சிருஷ்டிக்கு வேண்டிய ஆற்றல் பிரம்மத்திலிருந்து சலன ரூபமாக இருந்துகொண்டே வருகிறது. ஆக அழிந்து போனதாகக் கருதப்பட்ட ஆன்மாவும், மற்ற உலகங்களும் பிரம்மத்தில் ஒன்றி சூட்சும ரூபமாக, சூட்சும நிலையில் இருந்து பிரம்மத்தில் சலன ஆற்றல் வெளிப்படும் பொழுது மீண்டும் புலனாகின்றன. ஆக, மேற்ச் சொன்ன சேர்க்கைகளில் தலைவன் தலைவி இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்டு ஒன்றுபடுவதுபோலவேதான் இந்த நிலை. இதைக் கருத்தில் வைத்துத்தான் நம்முடைய நூல்களில் அகத்துறை பாடல்கள் இயற்றப்பட்டன. தலைவனும் தலைவியும் கலக்கும் பொழுது இருவரும் அழியாமல் ஆனால் ஒரே விதமான இன்ப நிலையில் தம்மை மறந்து ஒன்றுபடுவதே பேரின்ப நிலையான சாயுச்ய நிலையாகும். விழுங்கிய' என்ற சொல்லுக்கு 'ஒரு மிருகம் மனிதனை விழுங்கிவிட்டது' என்று பொருள் கொள்ளக்கூடாது. இங்கே விழுங்கக்கூடியது என்ன எனில் அது ஆணவ மலம். ஆணவம் அழிந்தவுடன் நீறு விலகி நெருப்பு பிரகாசிப்பதுபோல், ஆணவம் நீங்கி எல்லாம் அவனே என்கிற அறிவு வரும். அவனே அறிவாய் ஆன்மாவாய் நம்மை அவனுடன் சேர்த்து இறுக வைக்கும் பேரின்பப் புணர்ச்சியே சிவ சாயுச்யம். இந்நிலையை திருப்புகழில் 'சிவபோகம்' என்பார். இதை அளிக்க வல்லவன் முருகன். இந்த அனுபவத்தை உணர்ந்தால் ஒழிய அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது சொல்லொணாதது, இது ஆனந்தமே என்பர். இப்பேரின்பச் சுவையை உணர்ந்த அருளாளர்களுக்கு இவ்வுலக சிற்றின்ப நுகர்ச்சி கசந்து விடும் என்பதை 6ம் கந்தர் அலங்காரத்தில், .. அரும்பும் தனிப் பரமானந்தம் அறிந்த அன்றே கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே .. ... என்கிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.667 pg 4.668 WIKI_urai Song number: 28 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.48mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |