(மெளன யோக நிலையால் வரும் பேரின்ப அன்பெனப் படுஞ் சிவலோகந் தருவதான சிறப்புக்களை எடுத்துக் கூறிற்று).
உரகமும் இதழியும் உதகமும் உடுபதி யும்புனை யும்பஞ் சாட்சரர் பங்கின் கொடிதாளினில் ...... 1
உலகமு மலைகளும் உததியும் உயிரும டங்கவொ டுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன் ...... 2
உபநிட முடிவினும் இடபம தனிலுமு யங்கிவ யங்குஞ் சீர்ப்பதி யொன்றென் றவிதாஎன ...... 3
உறைவிடு படையினன் அடலுடை நிசிசரர் தண்டமு டைந்தங் கார்ப்பெழ வங்கம் பொருசேவகன் ...... 4
வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள் கந்தன் கார்த்திகெ யன்செங் கழுநீர்மலர் ...... 5
மழுவிய குருபரன் வனசரி பதயுக கஞ்சம்வ ணங்கும் பாக்யக தம்பன் கருணாகரன் ...... 6
வடதரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தனெ னுஞ்செஞ் சேக்கையி லுங்கண் துயில்மால்திரு ...... 7
மருமகன் இமையவர் வழிபடு மணியணி கிங்கிணி பண்கொண் டார்த்திசை கொஞ்சும் பதசூடிகை ...... 8
அருவுரு ஒழியஓ ரபிநவ வடிவரு ளுந்தனி யந்தந் தீக்ஷையெ னுங்குண் டலபூஷணம் ...... 9
அணிமய மெனுமொரு சிவிகையொ டதிகுண மஞ்சினு மஞ்சொன் றாக்கிய தென்பொங் கரியாசனம் ...... 10
அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும் அம்பொன் சேர்த்தக லிங்கஞ் சயசாரமும் ...... 11
அவனவள் அதுஎன மொழியவும் இலதொரு வன்பிணி யுங்கொண் டாக்கமும் இன்பங் களுமேதரும் ...... 12
இரவலர் மிடிகெட உதவிய விதரண கங்கணம் இங்கங் காப்பில் எனுஞ்சுந் தரகாகளம் ...... 13
எனதறு துறவினும் உயர்கொடை யவிரத சங்குல கெங்குங் கேட்டுவ ழங்கும் பொறைமாமுர ...... 14
சிமையவர் கணமுனி கணமுடன் இனிதுப்ர பஞ்சம் றைஞ்சுங் கீர்த்திது ரங்கந் திறல்வாரணம் ...... 15
இருவினை கெடஒரு நிரமய பரமவு னந்தரும் இன்பந் தேக்கிய அன்பின் சிவலோகமே. ...... 16
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
உரகமும் இதழியும் உதகமும் உடுபதி யும்புனை யும்பஞ் சாட்சரர் பங்கின் கொடிதாளினில் ...... 1
......... பதவுரை ......... 
உரகமும் இதழியும் உதகமும் உடுபதியும் புனையும் = பாம்பையும் கொன்றையும் கங்கா ஜலத்தையும் நட்சத்திர நாயகனான சந்திரனையும் தரித்துள்ளவரும்,
பஞ்சாட்சரர் பங்கின் கொடி தாளினில் = ஐந்தெழுத்துத் தலைவரான சிவனாரின் இடது பாகத்தில் விளங்கும், கொடி போன்ற பார்வதியின் திருவடிகளில்,
உலகமு மலைகளும் உததியும் உயிரும டங்கவொ டுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன் ...... 2
......... பதவுரை ......... 
உலகமும் மலைகளும் உததியும் உயிரும் = உலகங்களும், மலைகளும், கடல்களும், சகல உயிர் வர்க்கங்களும்,
அடங்க ஒடுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன் = முழுவதும் ஊழி காலத்தில் ஒடுங்கி நிற்கின்ற பார்வதி தேவியின் புதல்வன், (உதர கமலத்தினிடை முதிய புவனத்திரயமும் யுகமுடிவில் வைக்கும் உமையாள்), தாமரைப் படுக்கையில் வீற்றிருப்பவன்,
உபநிட முடிவினும் இடபம தனிலுமு யங்கிவ யங்குஞ் சீர்ப்பதி யொன்றென் றவிதாஎன ...... 3
......... பதவுரை ......... 
உபநிட முடிவினும் இடபம் அதனிலும் முயங்கி = வேதங்களின் முடிந்த முடிவாகவும் ரிசப வாகனத்தினும் பொருந்தி
வயங்கும் சீர்ப்பதி ஒன்று என்ற அவிதா என = விளங்கும் சிறந்த தலைவராகிய சிவபெருமான் மதித்து வணங்கும் 'ஒப்பற்ற பொருளே' என்று அழைத்து, 'தேவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்று' என்று கூற, (அவிதா = காப்பாற்று) (விண்ணோர் தென் காவல் நம் முனைய வேல் பணி எனும் சேய் - அந்தாதி)
உறைவிடு படையினன் அடலுடை நிசிசரர் தண்டமு டைந்தங் கார்ப்பெழ வங்கம் பொருசேவகன் ...... 4
......... பதவுரை ......... 
உறை விடு படையினன் = உறையிலிருந்து உருவப்பட்ட வேலை உடையவன்
(வேலுக்கு உறை உண்டு:
'வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா'
... ஆரம் முலை காட்டி - வயலூர் திருப்புகழ்).
அடலுடை நிசிசரர் தண்டமும் உடைந்து = மிகுத்த பலம் கொண்ட அரக்கர்களின் சேனை சிதறிப் போக
அங்கு ஆர்ப்பெழ அங்கம் பொரு சேவகன் = அந்த யுத்த பூமியில் பேரொலி எழ போர் புரிந்த வீரன்,
வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள் கந்தன் கார்த்திகெ யன்செங் கழுநீர்மலர் ...... 5
மழுவிய குருபரன் வனசரி பதயுக கஞ்சம்வ ணங்கும் பாக்யக தம்பன் கருணாகரன் ...... 6
......... பதவுரை ......... 
வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள் கந்தன் = வரங்களைக் கொடுப்பவன், தேவர்களின் தலைவன், சரவணப் பொய்கையில் உதித்த அருள் நிறைந்த கந்த ஸ்வாமி,
வரதா மணி நீ - பழநி திருப்புகழ்,
மந்தாகிணி தந்த வரோதய - கந்தர் அநுபூதி 33 - சிந்தா ஆகுல ).
கார்த்திகெயன் = கிருத்திகை மாதர்களின் மைந்தன்,
செங்கழுநீர்மலர் மழுவிய குருபரன் = செங்கழுநீர் மலர் மாலை சூடிய குருமூர்த்தி (சருகிலாத செங்கழுநீர் புனையும் மார்பா),
வனசரி பத யுக கஞ்சம் வணங்கும் பாக்ய கதம்பன் = வள்ளி மலைக்காட்டில் வசித்த வள்ளியாரின் இரு திருவடிகளாகிய தாமரை மலர்களை வணங்கிய கதம்ப மாலை பூண்ட பாக்கிய மூர்த்தி,
கருணாகரன் = கருணை உருவன்,
வடதரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தனெ னுஞ்செஞ் சேக்கையி லுங்கண் துயில்மால்திரு ...... 7
மருமகன் இமையவர் வழிபடு மணியணி கிங்கிணி பண்கொண் டார்த்திசை கொஞ்சும் பதசூடிகை ...... 8
......... பதவுரை ......... 
வட தரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தன் எனும் = ஆலிலையிலும், ஆயிரம் பணாமுடி உடைய ஆதிசேடனாகிய,
செஞ் சேக்கையிலும் கண் துயில் மால் திரு மருமகன் = சிறந்த படுக்கையிலும் (துத்தி தத்தி தா - அந்தாதி) துயில் கொள்ளும் திருமாலுக்கும் இலக்குமிக்கும் மருமகனாகிய கந்தப் பெருமானின்,
இமையவர் வழிபடு மணி அணி கிங்கிணி = தேவர்கள் தொழும் ரத்தினங்கள் பதிக்கப் பட்ட சதங்கை
பண் கொண்டு ஆர்த்து இசை கொஞ்சும் பத சூடிகை (1) = பல மணிகளுடன் சப்தித்து (கீத கிணகிணி பாதா) ராக வகைக் காட்டும் திருவடியாகிய மணி முடியையும்,
அருவுரு ஒழியஓ ரபிநவ வடிவரு ளுந்தனி யந்தந் தீக்ஷையெ னுங்குண் டலபூஷணம் ...... 9
......... பதவுரை ......... 
அருவுரு ஒழிய = நிகலம் சகடம் என்ற இரண்ட நெறிகளுக்கு அப்பாலதாய் (உருவமில்லாமை உருவமுடைமை எனும் இரண்டும் அற்றதாய்)
ஓர் அபிநவ வடிவு அருளும் = ஒப்பற்ற அதிசயத்தக்க புதுமையான நிலையை தந்தருளும்,
தனி அந்தந் தீக்ஷை எனும் குண்டல பூஷணம் (2) = நிகரில்லாத முடிவான அழகான உபதேவமான காதணியாம் குண்டலத்தையும்
(பேரின்பமாகிய சிவலோகத்தின் பயன் முருகப்பெருமான் நம் காதில் செய்யும் உபதேசம் நம் காதிற்கு குண்டலம் போலத் திகழும்).
அணிமய மெனுமொரு சிவிகையொ டதிகுண மஞ்சினு மஞ்சொன் றாக்கிய தென்பொங் கரியாசனம் ...... 10
......... பதவுரை ......... 
அணிமயம் எனும் ஒரு சிவிகை (3) யொடு = அழகு மயம் என்று வியக்கத்தக்க ஒப்பற்ற ஒரு பல்லக்கையும்,
அதிகுண மஞ்சினும் மஞ்சு = அத்துடன் மிக மேன்மையானதும் அழகிற்கு அழகு மெருகு ஊட்டி
ஒன்று ஆக்கிய தென்பொங்கு அரியாசனம் (4) = பொருந்துகின்ற அமைப்பை உடையது என்று சொல்லும்படி விளங்குகின்ற சிம்மாசனமும்
(புவிராஜருக்கு பல்லக்கு சிம்மாசனம் போன்ற விருதுகள் கிடைப்பது போல தவராஜர்களுக்கு அத்துவித பேரின்பம், மனசமாதி முதலிய விருதுகள் கிடைக்கின்றன. கொங்கணகிரி திருப்புகழில் தனக்கு 'தண்டிகை கனப்பவுசு' என கேட்பது இதுதான் போலும் - ஐங்கரனை யொத்த )
அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும் அம்பொன் சேர்த்தக லிங்கஞ் சயசாரமும் ...... 11
......... பதவுரை ......... 
அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும் = தரும நெறி ஒழுக்கத்தில் நிலவிய நற்குணத்திற்கு அடையாளச் சின்னமாக
அம்பொன் சேர்த்த கலிங்கம் (5) = அழகிய பொன் வேயப்பட்ட ஆடையையும்,
சயசாரமும் (6) = விஜய ஸ்தம்பத்தையும்
அவனவள் அதுஎன மொழியவும் இலதொரு வன்பிணி யுங்கொண் டாக்கமும் இன்பங் களுமேதரும் ...... 12
......... பதவுரை ......... 
அவன் அவள் அது என மொழியவும் இலது ஒரு வன்பிணியும் = அவன், அவள், அது என்று சுட்டறிவு காட்டுதற்கு இல்லாததான ஒரு வலிமை வாய்ந்த பிடிப்பையும்,
கொண்டு ஆக்கமும் (7) இன்பங்களுமே (8) தரும் = மேற்கொண்டு செல்வமும் சுகமும் தந்து உதவும்
இரவலர் மிடிகெட உதவிய விதரண கங்கணம் இங்கங் காப்பில் எனுஞ்சுந் தரகாகளம் ...... 13
......... பதவுரை ......... 
இரவலர் மிடி கெட உதவிய விதரண கங்கணம் = யாசகர்களின் வறுமை அகல உதவி செய்யும் கொடை தன்மையையே விரதமாகப் பூண்டுள்ள நிலை,
இங்கு அம் காப்பில் எனும் சுந்தர காகளம் (9) = தங்கும் அழகிய பாதுகாவலுக்கு இதுவே என ஓதும் அழகிய எக்காளத்தையும்
எனதறு துறவினும் உயர்கொடை யவிரத சங்குல கெங்குங் கேட்டுவ ழங்கும் பொறைமாமுரசு ...... 14
......... பதவுரை ......... 
எனதறு துறவினும் உயர் கொடை அவிரத சங்கு (10) = மமகாரம் அற்றுப் போன வைராக்கிய நிலையிலும் உயர்ந்த கொடையாகிய எப்போதும் முழங்கும் சங்கினையும்
உலகெங்கும் கேட்டு வழங்கும் பொறை மா முரசு (11) = உலகின் எவ்விடத்திலும் பேசப்படும் பொறுமையாகிய சிறந்த பறை வாத்தியத்தையும்
இமையவர் கணமுனி கணமுடன் இனிதுப்ர பஞ்சம் றைஞ்சுங் கீர்த்திது ரங்கந் திறல்வாரணம் ...... 15
......... பதவுரை ......... 
இமையவர் கணம் முனி கணமுடன் இனிது ப்ரபஞ்சம் இறைஞ்சும் கீர்த்தி துரங்கம் (12) = தேவர் கூட்டம் ரிஷி கூட்டத்துடன் களிப்புடன் உலக மக்கள் போற்றி வணங்கும் புகழ் என்ற குதிரையையும்
திறல் வாரணம் (13) = பராக்ரமாகிய யானையையும்
(அரசர்களுக்குரிய தசாங்கம் போல கொடை எனும் எக்காளத்தையும், சங்கையும், பொறையாகிய பேரிகையையும், கீர்த்தி எனும் குதிரையையும், வீரமாகிய யானையையும், மெளன ஞான நிலையையும் உருப்புகளாக அன்பின் சிவலோகம் தரும். அதாவது பெரு நிலையையும் பெரும் புகழையும் தரும் என்றபடி,)
இருவினை கெடஒரு நிரமய பரமவு னந்தரும் இன்பந் தேக்கிய அன்பின் சிவலோகமே. ...... 16
......... பதவுரை ......... 
இருவினை கெட ஒரு நிரமய பரம மவுனம் தரும் = நல்வினை தீவினை இரண்டும் ஒழித்து ஒப்பற்றதும் நோய்கள் அற்றதுமான மேலான ஞான நிலையைத் தரும்
இன்பம் தேக்கிய அன்பின் சிவலோகமே = பேரின்ப வெள்ளம் பாயும் அன்பாகிய சிவ லோகமே.
இவ்வகுப்பு அன்பின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
அன்பே சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார். |