(வீர வாகுநின்ற)
வீர வாகுநின் றவ்வதி வீரனை வீட்டித்
தாரை வாளுறை செலுத்தியே வெஞ்சமர் தணித்து
நேரில் வீரமா மகேந்திரம் போவது நினைந்தே
ஏரு லாவரும் இலங்கையின் எல்லைநீத் தெழுந்தான். ......
1(எழுந்து வான்வழி)
எழுந்து வான்வழிச் சேறலும் ஆர்கலி யிடையே
விழுந்து கீழுறும் இலங்கைமீண் டெழுந்தது விரைவிற்
கழிந்த தொல்பர நீங்கிய காலையிற் கடலூ
டழுந்து கின்றபொன் தோணிமீச் சென்றிடு மதுபோல். ......
2(வார்த்த யங்கிய)
வார்த்த யங்கிய கழலவன் வான்வழிக் கொளலும்
ஈர்த்த தெண்கடல் நீத்தமேல் எழுதரும் இலங்கை
சீர்த்த நான்முகன் உறங்குழிச் சிந்துவூ டழுந்திப்
பேர்த்து ஞாலம்விட் டெழுதரு மேருவிற் பிறழும். ......
3(எள்ளு நீரரை)
எள்ளு நீரரைப் பற்பகல் ஆற்றலின் இலங்கை
கொள்ளை வெம்பவம் மாசிருள் அடைந்தது குறைதீர்
வள்ளல் தாள்பட நீத்தது பவந்துகள் மாற்றத்
தெள்ளு நீர்க்கடல் படிந்தெழுந் தாலெனத் திகழும். ......
4(கந்த ரந்தவழ்)
கந்த ரந்தவழ் தெண்புனற் கருங்கடல் நடுவட்
சுந்த ரஞ்செறி பொன்சுடர் இலங்கைதோன் றியது
முந்து காலையில் எம்பிரான் அருள்வழி முராரி
உந்தி நின்றெழு பிரமன்மூ தண்டமொத் துளதால். ......
5(இன்ன தாகிய இலங்கை)
இன்ன தாகிய இலங்கைமா புரத்தைநீத் தெழுந்து
பின்னு மாயிரம் யோசனை வானிடைப் பெயர்ந்து
பொன்னு லாவுறு வாகையம் புயத்தவன் புலவோர்
ஒன்ன லானுறை மகேந்திர வரைப்பின்முன் னுற்றான். ......
6(நெற்றி நாட்டத்து)
நெற்றி நாட்டத்து நந்திதன் கணத்தவன் நேமிப்
பொற்றை யாமெனச் சூழ்ந்துயர் மகேந்திரப் புரிசைச்
சுற்று ஞாயிலும் வாயில்க டொறுந்தொறும் தோன்றுங்
கற்றை மாமணிச் சிகரியும் நுனித்துமுன் கண்டான். ......
7(சேர லாரமர் மகே)
சேர லாரமர் மகேந்திர நகர்வட திசையில்
வாரி வாய்தலுட் கோபுரத் தெற்றியின் மாடே
கோர னேயதி கோரனே எனப்படுங் கொடிய
வீரர் தானையோ டிருந்தனர் காவல்கொள் வினையால். ......
8(கரிக ளாயிரம்)
கரிக ளாயிரம் வெள்ளமே தேருமக் கணிதம்
பரிக ளாங்கதற் கிருதொகை யத்தொகை பதாதி
உரிய வப்பெருந் தானையம் பெருங்கடல் உலவா
விரவி மேவர இருந்தனர் காத்திடும் வீரர். ......
9(பகுதி கொண்டிடு தானை)
பகுதி கொண்டிடு தானையஞ் சூழலாம் பரவைத்
தொகுதி கண்டனன் விம்மிதங் கொண்டனன் துன்னார்
மிகுதி கொண்டுறை காவலுங் கண்டனன் வியனூர்
புகுதி கொண்டிடும் உணர்வினான் இனையன புகல்வான். ......
10(ஈண்டு செல்லினி)
ஈண்டு செல்லினித் தானைசூழ்ந் தமர்செயும் யானும்
மூண்டு நேரினும் முடிப்பவோர் பகலெலா முடியும்
மாண்ட தென்னினும் உலவுமோ மாநக ரிடத்து
மீண்டும் வந்திடுங் கரிபரி பதாதிதேர் வெள்ளம். ......
11(வந்த வந்ததோர்)
வந்த வந்ததோர் தானவப் படையொடே மலைவுற்
றெந்தை கந்தவேள் அருளினால் யானொரு வேனுஞ்
சிந்தி நிற்பனேல் இந்நகர்த் தானைகள் சிதைய
அந்த மில்பகல் சென்றிடும் அளியரோ அவுணர். ......
12(எல்லை யில்பகல்)
எல்லை யில்பகல் செல்லினுஞ் செல்லுக இனைய
மல்லன் மாநகர் அவுணர்மாப் பெருங்கடல் வறப்ப
ஒல்லு நீர்மையால் யான்அடல் செய்வனேல் உருத்துத்
தொல்லை மைந்தரைத் துணைவரை உய்க்குவன் சூரன். ......
13(உய்த்த மைந்தர்கள்)
உய்த்த மைந்தர்கள் சூழ்ச்சியின் துணைவர்கள் ஒழிந்தோர்
அத்தி றத்துளோர் யாரையும் வெலற்கரி தயில்வேற்
கைத்த லத்தவன் வலிகொடே பற்பகல் காறும்
இத்த லைச்சமர் ஆற்றியே முடிக்குவன் எனினும். ......
14(ஏவ ரும்வெல)
ஏவ ரும்வெலற் கரியசூர் பின்னர்வந் தெதிர்க்கும்
ஓவில் வெஞ்சமர் பற்பகல் ஆற்றியான் உறினும்
வீவ தில்லையால் அங்கவன் மேலைநாள் தவத்தால்
தேவ தேவன்முன் அருளிய வரங்களின் சீரால். ......
15(அன்ன வன்றனை மால)
அன்ன வன்றனை மாலயன் றனக்கும்வெல் லரிதால்
இன்னு மாங்கவன் ஆணைக்கும் வெருவியே இருந்தார்
பின்னை யாரவன் தன்னைவென் றிடுவர்கள் பெருநாள்
துன்னி யான்சமர் ஆற்றினுந் தொலைகிலன் சிறிதும். ......
16(தொலைந்து போகி)
தொலைந்து போகிலன் சூரமர் இயற்றிடில் துன்னிக்
கலந்த யான்விறல் இன்றிமீண் டேகுதல் கடனோ
மலைந்து நிற்கவே வேண்டுமா லாயினும் வறிது
மலைந்த லைப்படுஞ் சுரர்சிறை அகன்றிட வற்றோ. ......
17(மற்றிந் நீர்மையிற் பற்பக)
மற்றிந் நீர்மையிற் பற்பக லவனொடு மலைந்து
வெற்றி கொண்டிலன் இன்னுமென் றமரினை வீட்டி
ஒற்றின் நீர்மையை உணர்த்துதல் ஒல்லுமோ உலவா
தெற்றை வைகலும் அமர்செய வேண்டுமால் எனக்கே. ......
18(போத நாயகன்)
போத நாயகன் பரம்பொருள் நாயகன் பொருவில்
வேத நாயகன் சிவனருள் நாயகன் விண்ணோர்க்
காதி நாயகன் அறுமுக நாயகன் அமலச்
சோதி நாயகன் அன்றியார் சூரனைத் தொலைப்பார். ......
19(இம்பர் சூரொடு)
இம்பர் சூரொடு பொருதுநின் றிடுவனே என்னின்
நம்பி ரான்அறு மாமுகன் பின்னரே நண்ணி
வெம்பு சூரனை வேலினால் தடிந்துவெஞ் சிறையில்
உம்பர் யாரையும் மீட்டிட வேண்டுமேல் ஒருநாள். ......
20(ஆத லால்அம)
ஆத லால்அம ராற்றுதல் முறையதோ அஃதான்
றீது நம்பெரு மான்றன தருளுமன் றினைய
தூதர் செய்கட னாங்கொலோ அமர்பெறாத் தொடர்பாற்
போத லேகடன் என்றனன் பொருவில்சீர் அறிஞன். ......
21வேறு(இப்பால் வாய்தலின்)
இப்பால் வாய்தலின் எல்லை நீங்கிய
துப்பார் தானைகள் துற்று நின்றவால்
அப்பால் எய்தரி தாம ருங்குபோய்
வைப்பார் கீழ்த்திசை வாயில் நண்ணுவேன். ......
22(என்னா உன்னி)
என்னா உன்னி இயன்ற வுத்தரப்
பொன்னார் வேலி புகாது பாங்கர்போய்க்
கொன்னார் கின்ற குணக்கு வாய்தலின்
முன்னா ஏகினன் மொய்ம்பின் வீரனே. ......
23(மேதிக் கண்ணவன்)
மேதிக் கண்ணவன் வீர பானுவென்
றாதிக் கத்தவு ணர்க்கு நாயகர்
ஏதிக் கையர் இரண்டு வீரரும்
ஆதிக் கன்னதன் வாயில் போற்றினார். ......
24(திருவுந் தும்வட)
திருவுந் தும்வட திக்கு வாய்தலின்
விரவுந் தானையின் வெள்ளம் மெய்த்தொகை
பரவுஞ் சூரர் பயிற்று பல்பவத்
துருவஞ் சூழ்ந்தென ஒத்து நின்றவே. ......
25(வண்டார் செற்றிய)
வண்டார் செற்றிய வாகை மொய்ம்பினான்
கண்டான் அன்ன கடிக்கொள் காவலும்
தண்டா துற்றிடு தானை நீத்தமும்
அண்டா அற்புத நீரன் ஆயினான். ......
26(ஆண்டங் குற்ற)
ஆண்டங் குற்றவ ளப்பில் சேனையைக்
காண்டும் மிவ்வுழி காவல் போற்றியே
சேண்டுன் றும்புவி செற்றும் ஆதலால்
ஈண்டுஞ் செல்லரி தென்று முன்னினான். ......
27(நின்றிப் பாற்படல்)
நின்றிப் பாற்படல் நீர்மை அன்றரோ
தென்றிக் கின்வழி சென்று நாடுவன்
என்றுட் கொண்டவண் நீங்கி ஏகினான்
குன்றின் தொன்மிடல் கொண்ட தோளினான். ......
28ஆகத் திருவிருத்தம் - 3894