Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

 முதல் காண்டத்திற்கு   next kandam

previous padalam   7 - பாயிரப் படலம்   next padalampAyirap padalam

Ms Revathi Sankaran (8.42mb)




(முந்தொரு கால)

முந்தொரு காலத்தின் மூவுல கந்தன்னில்
     வந்திடு முயிர்செய்த வல்வினை யதனாலே
          அந்தமின் மறையெல்லா மடிதலை தடுமாறிச்
               சிந்திட முனிவோருந் தேவரு மருளுற்றார். ......    1

(நெற்றியில் விழிகொண்ட)

நெற்றியில் விழிகொண்ட நிமலன தருளாலே
     அற்றமில் மறையெல்லா மாதியின் வரலாலே
          மற்றத னியல்பெல்லாம் மயலற வேநாடித்
               தெற்றென வெவராலுஞ் செப்புவ தரிதாமால். ......    2

(ஆனதொர் பொழுதின்)

ஆனதொர் பொழுதின்க ணமரரும் முனிவோரும்
     மாநில மிசைவைகும் மாக்களு மிறையுள்ள
          ஞானம திலராகி நவின்மறை நெறிமாற்றித்
               தீநெறி பலவாற்றிப் பனுவல்கள் சிலசெய்தார். ......    3

(அவனியி லறமெல்)

அவனியி லறமெல்லா மருவினை யெனநீக்கிப்
     பவநெறி யறமென்றே பற்பல ருஞ்செய்யப்
          புவனம துண்டோனும் போதனு மதுகாணாச்
               சிவனரு ளாலன்றித் தீர்கில திதுவென்றார். ......    4

வேறு

(இன்ன பான்மையை)

இன்ன பான்மையை யெண்ணி யிருவரும்
     பொன்னி னாடு புரந்திடும் மன்னனுந்
          துன்னு தேவருஞ் சுற்றினர் வந்திடக்
               கன்னி பாகன் கயிலையி லேகினார். ......    5

(அந்தில் செம்பொ)

அந்தில் செம்பொ னணிமணிக் கோயிலின்
     முந்து கோபுர முற்கடை யிற்புகா
          நந்தி தேவரை நண்பொடு கண்டுநீர்
               எந்தை யார்க்கெம் வரவிசைப் பீரென்றார். ......    6

(தேவ தேவன்)

தேவ தேவன் திருமுன்ன ரேகியே
     காவல் நந்திக் கடவுள்பணிந் தெழீஇப்
          பூவை வண்ணனும் போதனும் புங்கவர்
               ஏவ ருஞ்செறிந் தெய்தின ரீண்டென்றான். ......    7

(என்ற காலையின் யாரை)

என்ற காலையின் யாரையு மிவ்விடைக்
     கொன்றை சூடி கொணர்கெனச் செப்பலும்
          நன்ற தேயென நந்தி வணங்கியே
               சென்று மான்முதற் றேவரை யெய்தினான். ......    8

(செம்மை போகிய)

செம்மை போகிய சிந்தைய ரைக்கெழீஇ
     எம்மை யாளுடை யானரு ளெய்தினான்
          உம்மை யங்கு வரநுவன் றானினி
               வம்மி னீரென வல்லையிற் கூவினான். ......    9

(விளித்த காலை)

விளித்த காலை விழிவழி போதநீர்
     துளிக்க நின்று தொழுது கவலொரீஇக்
          களிக்கு நெஞ்சினர் கண்ணுத லெந்தைமுன்
               அளித்தி யாலென் றவனுட னேகினார். ......    10

(புடை கடந்திடு)

புடைக டந்திடு பூதர்கள் போற்றுமத்
     தடைக டந்து தடுப்பரும் வேனிலான்
          படைக டந்தவர் பாற்படு மெண்ணிலாக்
               கடைக டந்துபின் அண்ணலைக் கண்டனர். ......    11

(முன்னரெய்தித்)

முன்ன ரெய்தித் தொழுது முறைமுறை
     சென்னி தாழ விறைஞ்சினர் சேணிடைத்
          துன்னு மாதரந் தூண்டவந் தண்மினார்
               உன்னு மன்பின் உததியி னாழந்துளார். ......    12

(ஈர்க்கும் பாசத்)

ஈர்க்கும் பாசத் திருவினை யின்றொடே
     தீர்க்கின் றாமிவ ணென்னுஞ் செருக்கினால்
          தூர்க்கின் றார்மலர் சோதிபொற் றாண்மிசை
               போர்க்கின் றார்மெய்ப் பொடிப்பெனும் போர்வையே. ......    13

(நேயமுந்த நெடும்)

நேய முந்த நெடும்பகல் நீங்கிய
     தாயெ திர்ந்திடு கன்றின் தகைமையாய்த்
          தூய வந்தனை யோடு தொழுமவர்
               வாயின் வந்தன வந்தன போற்றினார். ......    14

(அண்ண லீசன்)

அண்ண லீசன் வடிவை யகந்தனில்
     எண்ணி னெல்லையி லின்பம் பயக்குமால்
          கண்ணி னேர்வரு காட்சிய ராயிடின்
               ஒண்ணு மோவவர் தஞ்செய லோதவே. ......    15

(மேலை வானவர் வேந்)

மேலை வானவர் வேந்தொடு மெம்பிரான்
     சீல மேய திருமுன்பு மேவினார்
          மாலு நான்முகத் தண்ணலும் வந்திரு
               பாலு மாகிப் பரவின ரென்பவே. ......    16

வேறு

(அம்புயா சனமுடை)

அம்புயா சனமுடை யண்ண லாழியான்
     உம்பரோ டித்திற முற்றுப் போற்றுழிச்
          செம்பொனேர் முடிமிசைத் திங்கள் சேர்த்திய
               எம்பிரா னருள்புரிந் தினைய கூறுவான். ......    17

(ஒன்றொரு குறை)

ஒன்றொரு குறைகளு முறாத பான்மையால்
     நன்றுநும் மரசியல் நடந்த வோவெனாக்
          குன்றவில் லுடையவோர் குழகன் செப்பலும்
               நின்றமால் தொழுதிவை நெறியிற் கூறுவான். ......    18

(ஆதியி லயன்படை)

ஆதியி லயன்படைப் பல்ல தென்னருண்
     மேதியன் அடுதொழி லேனை விண்ணவர்
          ஏதமில் செயன்முறை யாவுங் கண்ணுதல்
               நாதநின் னருளினால் நடந்த நன்றரோ. ......    19

(கருமணி மிடறுடை)

கருமணி மிடறுடைக் கடவு ளின்னுநீ
     அருளுவ தொன்றுள ததனைக் கூறுவன்
          இருநில மேலவர் யாரும் நின்றனைப்
               பரமென வுணர்கிலர் மாயைப் பான்மையால். ......    20

(நின்றன துரிமை)

நின்றன துரிமையை நிகழ்த்தி மேன்மையா
     என்றனை யயன்றனை யெண்ணு வார்சிலர்
          அன்றியும் நின்னுடன் அநேகர் தம்மையும்
               ஒன்றென வேநினைந் துரைக்கின் றார்சிலர். ......    21

(காலமுங் கருமமுங்)

காலமுங் கருமமுங் கடந்த தோர்பொருள்
     மூலமுண் டோவென மொழிகின் றார்சிலர்
          மேலுமுண் டோசில விளம்ப விஞ்சையின்
               பாலுறு முணர்ச்சியே பரமென் பார்சிலர். ......    22

(ஆற்றுறு புனல்படி)

ஆற்றுறு புனல்படிந் தழுக்கு நீக்கலார்
     சேற்றிடை வீழ்ந்தென மறைகள் செப்பிய
          நீற்றோடு கண்டிகை நீக்கி வன்மையால்
               வீற்றொரு குறிகொடு மேவு வார்சிலர். ......    23

(காமமோடு வகை)

காமமோ டுவகையுங் களிப்பு நல்கலால்
     வாமமே பொருளென மதிக்கின் றார்சிலர்
          தோமிலா மூவகைத் தொழிலும் வேள்வியும்
               ஏமமார் பொருளென இயம்பு வார்சிலர். ......    24

(உரையிசை யாதியா)

உரையிசை யாதியா மொலிகள் யாவையும்
     பிரமம தேயெனப் பேசு வார்சிலர்
          அரிதுசெய் நோன்பினா லடைந்த சித்திகள்
               பொருள்பிறி திலையெனப் புகல்கின் றார்சிலர். ......    25

(பெருமைகொள்)

பெருமைகொள் குலந்தொறும் பிறந்து செய்திடும்
     விரதமுஞ் சீலமும் வினைகண் மாற்றிட
          வருகலும் பிறவுமா யங்கம் விட்டுயிர்
               பரவுதல் வீடெனப் பகரு வார்சிலர். ......    26

(அறிந்தறிந் துயிர்)

அறிந்தறிந் துயிர்தொறு மதுவ தாகியே
     பிறந்திறந் துணர்வெலாம் பெற்று நோன்பொடு
          துறந்துகொன் றிட்டன துய்த்துக் கந்தமற்
               றிறந்திடல் முத்தியா மென்கின் றார்சிலர். ......    27

(நன்னல மாதரை)

நன்னல மாதரை நண்ணு மின்பமே
     உன்னரு முத்தியென் றுட்கொள் வார்சிலர்
          இன்னன துறைதொறு மெய்தி யாவருந்
               துன்னரும் பிறவியுட் டுன்ப நீங்கலார். ......    28

(இறந்தன வாம்புல)

இறந்தன வரம்புல கெவரும் வேதநூல்
     மறந்தனர் பவநெறி மல்கி நாடொறுஞ்
          சிறந்தன வவையுயிர் செய்த தொல்வினை
               அறிந்தரு ளையநீ யமைத்த வாயினும். ......    29

(அங்கவர் போதமுற்)

அங்கவர் போதமுற் றாசொ ரீஇமனச்
     சங்கையு மகன்றுநின் சரண மேயுறப்
          புங்கவ சிறிதருள் புரிய வேண்டுமால்
               எங்கடம் பொருட்டென இறைவன் கூறுவான். ......    30

(இனிதொரு திறமத)

இனிதொரு திறமதற் கிசைத்து மாருயிர்
     அனையவும் புரப்பவ னாத லாலவர்
          வினையறு நெறிமையால் வேண்டு கிற்றிநின்
               மனனுறு மெண்ணினை மறுத்தி மாசிலாய். ......    31

(காதலி னருளுமுன்)

காதலி னருளுமுன் கலையின் பன்மையிற்
     கோதறு மோர்கலை கொண்டு நேமிசூழ்
          மேதினி யதனிடை வியாதன் என்றிடு
               போதக முனியெனப் போந்து வைகுதி. ......    32

(போந்தவ ணிருந்த)

போந்தவ ணிருந்தபின் புகரி லாமறை
     ஆய்ந்திடின் வந்திடு மவற்றை நால்வகை
          வாய்ந்திட நல்கியே மரபி னோர்க்கெலாம்
               ஈந்தனை யவரகத் திருளை நீத்தியால். ......    33

(அன்னதோர் மறை)

அன்னதோர் மறையினை யறிந்து மையமா
     உன்னிய நிலையினர் உள்ளந் தேறவும்
          மன்னவ ரல்லவர் மரபிற் றேரவும்
               இன்னமோர் மறையுள திதுவுங் கேண்மதி. ......    34

(ஏற்றம தாகிய)

ஏற்றம தாகிய மறைக்கும் யாமுனஞ்
     சாற்றிய வாகமந் தனக்கு மாங்கது
          வீற்றுற வருவது மன்று மேன்மையால்
               ஆற்றவும் நமதிய லறையும் நீரதே. ......    35

(என்பெய ரதற்கெனி)

என்பெய ரதற்கெனி லினிது தேர்ந்துளோர்
     துன்பம தகற்றிடுந் தொல்பு ராணமாம்
          ஒன்பதிற் றிருவகை உண்ட வற்றினை
               அன்புடை நந்திமுன் னறியக் கூறினேம். ......    36

(ஆதியில் நந்திபா)

ஆதியில் நந்திபா லளித்த தொன்மைசேர்
     காதைகள் யாவையுங் கருணை யாலவன்
          கோதற வுணர்சனற் குமாரற் கீந்தனன்
               நீதியொ டவனிடை நிலத்திற் கேட்டியால். ......    37

(என்னலும் நன்றென)

என்னலும் நன்றென இசைந்து தாழ்ந்தெழீஇ
     முன்னவன் விடைகொடு முளரி யான்முதல்
          துன்னிய வானவர் தொகையொ டேகியே
               தன்னுல கத்தின்மால் சார்தல் மேயினான். ......    38

(சார்தலு மயன்றனை)

சார்தலு மயன்றனைச் சதம கத்தனை
     ஆர்தரு மமரரை யருளி னவ்வவர்
          சேர்தரு புரந்தொறுஞ் செல்லற் கேவியே
               கார்தரு மெய்யுடைக் கடவுள் வைகினான். ......    39

(திருவொடு மருவி)

திருவொடு மருவியோன் செறிவுற் றெங்கணும்
     பரவுறு மியல்பெறு பகவ னாதலால்
          தரணியி லருளினாற் றனது சத்தியில்
               ஒருகலை தன்னுட னுதிக்க வுன்னியே. ......    40

(பங்கயத் தயன்வழி)

பங்கயத் தயன்வழிப் பராச ரப்பெயர்த்
     துங்கநன் முனிபனித் தூவ லெல்லையிற்
          கங்கையி லியோசன கந்தி யோடுற
               அங்கவர் தம்மிடை அவத ரித்தனன். ......    41

(மற்றவன் வதரிகா)

மற்றவன் வதரிகா வனத்தில் வைகியே
     அற்றமில் வாதரா யணன்எ னும்பெயர்
          பெற்றன னாகியெம் பிரான்ற னாணையாற்
               கற்றிடா துணர்ந்தனன் கரையில் வேதமே. ......    42

(மோனக முற்றிய)

மோனக முற்றிய முனிவர் மேலவன்
     தானுணர் மறையெனுந் தரங்க வேலையில்
          ஆனதோர் பொருளினை யறிஞர் பெற்றிடத்
               தூநெறி கொண்டநாற் றுறைசெய் தானரோ. ......    43

(கரையறு வேதமா)

கரையறு வேதமாங் கடலை நான்கவாய்ப்
     பிரிநிலை யாக்கியே நிறுவு பெற்றியாற்
          புரைதவிர் முனிவரன் புகழ்வி யாதன் என்
               றொருபெயர் பெற்றனன் உலகம் போற்றவே. ......    44

(விரவிய மறைதெரி)

விரவிய மறைதெரி வியாத னாமவன்
     குரவனே யாஞ்சனற் குமாரன் றன்னிடை
          இருவகை யொன்பதா யியல்பு ராணமும்
               மரபொடு கேட்டவை மனத்துட் கொண்டபின். ......    45

(ஏத்திடு சுருதிக)

ஏத்திடு சுருதிக ளிசைக்கு மாண்பொருள்
     மாத்திரைப் படாவெனா மாசில் காட்சியர்
          பார்த்துணர் பான்மையாற் பலவ கைப்படச்
               சூத்திர மானவுஞ் சொற்று வைகினான். ......    46

(மயலறு பயிலரே)

மயலறு பயிலரே வைசம் பாயனர்
     சயிமினி சுமந்துவாந் தவத்தர் நால்வர்க்கும்
          வியலிருக் காதியாம் வேத நான்கையும்
               உயர்வுறு தவத்தினான் முறையி னோதினான். ......    47

(தோல்வரு மறை)

தோல்வரு மறைகளின் சூத்தி ரத்தையும்
     மேல்வரு சயிமினி முதல மேதையர்
          நால்வரு முணரிய நவின்று நல்கினான்
               ஆல்வரு கடவுளை யனைய தன்மையான். ......    48

(மெய்ம்முனி யனைய)

மெய்ம்முனி யனையரை விளித்து நீரினி
     இம்மறை யியல்பினோ ரெவர்க்கு மீமென
          அம்முறை நால்வரு மனைய வேதநூல்
               செம்மையொ டளித்தனர் சிறந்து ளோர்க்கெலாம். ......    49

(அன்னதோர் முனிவ)

அன்னதோர் முனிவர னதற்குப் பின்னரே
     பன்னருந் தொகையினாற் பதினெண் பான்மையாய்
          முன்னுறு புராணநூல் முழுது முற்றிய
               இன்னருள் நிலைமையா லெனக்கு நல்கினான். ......    50

(வேதம துணர்தரு)

வேதம துணர்தரு வியாத மாமுனி
     காதல னாமெனைக் கருணை செய்திவை
          ஓதுதி யாவரு முணர வென்றனன்
               ஆதலி னுலகினி லவற்றைக் கூறினேன். ......    51

(காமரு தண்டுழாய்)

காமரு தண்டுழாய்க் கண்ண னாகிய
     மாமுனி யருளினால் மறைகள் யாவையுந்
          தோமறு புராண நூற் றொகுதி யாவையும்
               நேமிகொ ளுலகெலா நிலவி யுற்றவே. ......    52

(நம்பனார் கொரு)

நம்பனார்க் கொருபது நார ணற்குநான்
     கம்புயத் தவற்கிரண் டலரி யங்கியாம்
          உம்பர்வான் சுடர்களுக் கோரொன் றென்பரால்
               இம்பரி லிசைக்கும்அப் புராணத் தெல்லையே. ......    53

வேறு

(எதிரில் சைவமே)

எதிரில் சைவமே பவிடியம் மார்க்கண்ட மிலிங்கம்
     மதிகொள் காந்தநல் வராகமே வாமனம் மற்சம்
          புதிய கூர்மமே பிரமாண்டம் இவைசிவ புராணம்
               பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம். ......    54

(கருது காருடம்)

கருது காருடம் நாரதம் விண்டுபா கவதம்
     அரிக தைப்பெயர் ஆக்கினே யம்மழற் கதையாம்
          இரவி தன்கதை பிரமகை வர்த்தமாம் இவைதாம்
               தெரியும் ஒன்பதிற் றிருவகைப் புராணமாந் திறனே. ......    55

(இத்தி றத்தவாம்)

இத்தி றத்தவாம் புராணங்கள் ஒன்பதிற் றிரண்டின்
     அத்த னுக்குள புராணமீ ரைந்தினில் அடல்வேற்
          கைத்த லத்தவன் காந்தத்துள் அன்னவன் கதையை
               மெய்த்தொ கைப்பட வுரைப்பனென் றேமுனி விளம்பும். ......    56

(பூமிசை யிருந்த)

பூமிசை யிருந்த புத்தேள் புரிந்திடு புதல்வர் தம்முள்
     ஏமுறு தக்க னீன்ற விருந்தனிக் குமரி யான
          தீமையை யகற்ற அம்மை சிந்தைசெய் திமைய மன்னன்
               மாமக ளாகி நோற்று வைகினாள் வைகு நாளில். ......    57

(அவுணர்க ளோடு)

அவுணர்க ளோடு சூர னவனிமேற் றோன்றி நோற்றுச்
     சிவன்வர மளிக்கப் பெற்றுத் தேவர்யா வரையும் வென்று
          புவிதனி லுவரி தன்னிற் புங்கவர் புனைவன் செய்த
               தவலரு மகேந்தி ரத்தில் வைகினான் தானை சூழ. ......    58

(அனையதோர் காலை வெள்)

அனையதோர் காலை வெள்ளி யடுக்கலிற் சனக னாதி
     முனிவரர் தமக்குத் தொல்லை மூவகைப் பதமுங் கூறி
          இனியதோர் ஞான போதம் இத்திற மென்று மோனத்
               தனிநிலை யதனைக் காட்டித் தற்பர னிருந்தா னன்றே. ......    59

(வீற்றிருந் தருளு மெல்லை - 2)

வீற்றிருந் தருளு மெல்லை வெய்யசூர் முதலா வுள்ளோர்
     ஆற்றவுந் தீங்கு செய்தே யமரர்கள் சிலரைப் பற்றிப்
          போற்றிடுஞ் சிறையி லுய்ப்பப் புரந்தரன் முதலா வுள்ளோர்
               மாற்றருந் துயரின் மூழ்கி மறைந்தன ராகி வைகி. ......    60

(சங்கரன் மோன)

சங்கரன் மோனத் தன்மை சதுர்முகற் குரைப்ப வன்னான்
     வெங்கணை வேளை யுய்ப்ப விழித்தவன் புரநீ றாக்கிப்
          பங்கயன் முதலா வுள்ளோர் பலரும்வந் திரங்கிப் போற்ற
               அங்குறை மோனம் நீங்கி யவர்க்கருள் செய்தா னையன். ......    61

(ஓரெழு முனிவர்தம்)

ஓரெழு முனிவர் தம்மை யோங்கலுக் கிறைவன் றன்பாற்
     பேரருண் முறையாற் றூண்டிப் பெருமணம் பேசுவித்துப்
          பாரறு நோன்பின் மிக்க பராபரை யன்பு தேர்ந்து
               காரணி கண்டத் தெந்தை கணங்களோ டிமையம் புக்கான். ......    62

(புடைய கலிமை)

புடையக லிமையந் தன்னிற் புவனங்கள் முழுது மீண்ட
     வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் மலயந் தன்னிற்
          கடமுனி தன்னை யேவிக் கவுரியை மணந்து பின்னர்
               அடன்மத வேளை நல்கி அநங்கனே யாகச் செய்தான். ......    63

(மண்புனை கயிலை)

மன்புனை கயிலை தன்னில மலைமக ளோடு மீண்டு
     முன்பென வமர்ந்து நாதன் முழுதுல குயிர்கட் கெல்லாம்
          இன்பமும் புணர்ப்பும் நல்கி யிமையவர் யாரும் வேண்டத்
               தன்பெரு நுதற்கட் டீயாற் சரவண பவனைத் தந்தான். ......    64

(அந்தமில் விளை)

அந்தமில் விளையாட் டுள்ள அறுமுகக் கடவு டன்னைத்
     தந்திடு மெல்லை யன்னோன் தானையந் தலைவ ராக
          முந்திய விறல்சேர் மொய்ம்பன் முதலிய விலக்கத் தொன்பான்
               நந்திதன் கணத்தி னோரை நங்கைபா லுதிப்பச் செய்தான். ......    65

(அண்ணலங் குமரப் புத்)

அண்ணலங் குமரப் புத்தேள் அலகிலா வாடல் செய்து
     மண்ணுறு கடலும் வெற்பும் வானமுந் திரிபு செய்து
          துண்ணெனக் குழவி யேபோற் றோன்றிட வதனை நோக்கி
               விண்ணவர் யாருஞ் சூழ்ந்து வெஞ்சமர் புரிந்து நின்றார். ......    66

(ஆரமர் செய்துளா)

ஆரமர் செய்து ளாரை யட்டுட னுயிரும் நல்கிப்
     பேருரு நிலைமை காட்டிப் பெறலருங் காட்சி நல்கி
          நாரதன் மகத்திற் றோன்றி நடந்ததோர் செச்சை தன்னை
               ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்தன னொப்பி லாதான். ......    67

(மறைமுதற் குடிலை)

மறைமுதற் குடிலை*1 தன்னின் மாண்பொருள் முறைக டாவி
     வெறிகமழ் கமலப் புத்தேள் விடைகொடான் மயங்கக் கண்டு
          சிறையிடை யவனை வைத்துச் செகமெலா மளித்துத் தாதை
               குறையிரந் திடவே விட்டுக் குறுமுனிக் கதனை யீந்தான். ......    68

(ஆவதோர் காலை யீச)

ஆவதோர் காலை யீச னறுமுகப் பரனை நோக்கி
     ஏவரு முடிக்க வொண்ணா திருந்தசூர் முதலோர் தம்பால்
          மேவினை பொருது வென்று விரிஞ்சனே முதலா வுள்ள
               தேவர்த மின்னல் நீக்கிச் செல்லுதி குமர வென்றான். ......    69

(விராவிய விலக்க)

விராவிய விலக்கத் தொன்பான் வீரரை வெய்ய பூதர்
     இராயிர வெள்ளத் தோரை யிகற்படை மான்றே ரோடு
          பராபர னுதவித் தூண்டப் பன்னிரு புயத்த னேகித்
               தராதலம் புக்கு வெற்பைத் தாரக னோடு செற்றான். ......    70

(பூவினன் முதலா)

பூவினன் முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்தத்
     தேவர்தங் கிரியின் வைகித் தென்றிசை நடந்து தாதை
          மேவரு மிடங்கள் போற்றி மேதகு சேய்ஞல்*2 நண்ணி
               மூவிரு முகத்தன் முக்கண் முன்னவன் படையைப் பெற்றான். ......    71

(பரனருள் படையை)

பரனருள் படையைப் பெற்றுப் பராசரன் சிறார்*3 வந் தேத்தத்
     திருவருள் புரிந்து சென்று செந்திலின் மேவிச் சூரன்
          வரமொடு திருவுஞ் சீரும் வாசவன் குறையும் வானோர்
               குரவனை வினவி யன்னான் கூறவே குமரன் தேர்ந்தான். ......    72

(அறத்தினை யுன்னி)

அறத்தினை யுன்னி யைய னாடல்சேர் மொய்ம்பன்*4 றன்னை
     உறத்தகு மரபிற் றூண்டி யொன்னலன் கருத்தை யோர்ந்து
          மறத்தொடு கடலுள் வீர மகேந்திரம் அணுகி யேதன்
               புறத்துள தானை யோராற் சூர்கிளை பொன்றச் செற்று. ......    73

(சீயமா முகத்தனெ)

சீயமா முகத்த னென்னுஞ் செருவலான் றனையு மட்டு
     மாயையுந் திருவுஞ் சீரும் வரங்களும் பிறவு மாற்றி
          ஆயிர விருநா லண்டத் தரசனாஞ் சூரன் றன்னை
               ஏயெனு மளவில் வேலா லிருதுணி படுத்து நின்றான். ......    74

(துணிபடு சூரனோர்)

துணிபடு சூர னோர்பால் சூட்டுவா ரணமா யோர்பால்
     பிணிமுக மாகி நிற்பப் பெருந்தகை அவற்றை யூர்தி
          அணிபடு துவச மாக்கி அப்பகல் செந்தில் வந்து
               மணிசொரி யருவி தூங்கும் வான்பரங் குன்றஞ் சேர்ந்தான். ......    75

(தெய்வத யானை யென்)

தெய்வத யானை யென்னுஞ் சீர்கெழு மடந்தை தன்னை
     அவ்விடை வதுவை யாற்றி அங்ஙனஞ் சிலநாள் வைகி
          மெய்விய னுலகிற் சென்று விண்ணவர்க் கரச னாக்கி
               எவ்வமில் மகுடஞ் சூட்டி இந்திரன் றன்னை வைத்தான். ......    76

(சில்பக லங்கண்)

சில்பக லங்கண் மேவிச் சேனையோ டணங்குந் தானும்
     மல்லலங் கயிலை யேகி மங்கைபங் குடைய வண்ணல்
          மெல்லடி வணங்கிக் கந்த வெற்புறை நகரி*5 னேகி
               எல்லையி லருளால் வைகித் தணிகையில் எந்தை வந்தான். ......    77

(சாரலி னோங்கு)

சாரலி னோங்கு தெய்வத் தணிகைமால் வரையின்மீது
     வீரம துடைய வேலோன் வீற்றிருந் திடலு மங்கண்
          நாரதன் வந்து தாழ்ந்து நவைதவி ரெயின மாதின்
               சீரெழில் நலத்தைக் கூற அவள்வயிற் சிந்தை வைத்தான். ......    78

(வள்ளிமால் வரை)

வள்ளிமால் வரையிற் போந்து மானி*6 டைப் பிறந்த தெய்வக்
     கிள்ளையை யடைந்து போற்றிக் கேடில்பல் லுருவங் காட்டிக்
          கள்ளமோ டொழுகிப் பன்னாட் கவர்ந்தனன் கொணர்ந்து பின்னர்த்
               தெள்ளுசீர் வேடர் நல்கத் திருமணஞ் செய்து சேர்ந்தான். ......    79

(செருத்தணி வரை)

செருத்தணி வரை*7 யில் வந்து சிலபகல் வள்ளி தன்னோ
     டருத்தியின் மேவிப் பின்னர் அவளொடுங் கந்த வெற்பின்
          வரைத்தனிக் கோயில் புக்கு வானமின் பிரிவு நீக்கிக்
               கருத்துற இருவ ரோடுங் கலந்துவீற் றிருந்தான் கந்தன். ......    80

(என்றிவை யனைத்து)

என்றிவை யனைத்துஞ் சூதன் இயம்பலும் முனிவர் கேளாத்
     துன்றிய மகிழ்வாற் சென்னி துளக்கியிங் கிதனைப் போல
          ஒன்றொரு கதையுங் கேளேம் உரைத்தனை சுருக்கி யாங்கள்
               நன்றிதன் அகலங் கேட்க நனிபெருங் காதல் கொண்டேம். ......    81

(என்னவே முனிவரா)

என்னவே முனிவ ரானோர் யாவரு மெடுத்துக் கூற
     மன்னிய வருள்சேர் சூதன் மற்றவ ரார்வம் நோக்கி
          அன்னவை சுருக்க மின்றி அறைந்தனன் அவ்வா றோர்ந்து
               தொன்னெறி வழாதி யானும் வல்லவா தொகுத்துச் சொல்வேன். ......    82

ஆகத் திருவிருத்தம் - 352




*1 மறைமுதற் குடிலை - வேதத்தின் முதற் பொருளாயுள்ள பிரணவம்.
*2 சேய்ஞல் - சேய்ஞலூர்.
*3 பராசரன் சிறார் - தத்தன், அனந்தன், நந்தி, சதுர்முகன், பருதிப்பாணி, தவமாலி என்ற ஆறு புதல்வர்கள்.
*4 ஆடல் சேர் மொய்ம்பன் - வீரவாகு தேவர் (ஆடல்=வீரம்).
*5 கந்த வெற்புறை நகர் - கந்தகிரியிலிருக்கும் குமார லோகமுமாம்.
*6 மான் - சிவமுனிவராகிய மான்.
*7 செருத்தணி வரை - திருத்தணிகைமலை.



previous padalam   7 - பாயிரப் படலம்   next padalampAyirap padalam

 முதல் காண்டத்திற்கு   next kandam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]