Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

 முதல் காண்டத்திற்கு   next kandam

previous padalam   6 - திருநகரப் படலம்   next padalamthirunagarap padalam

Ms Revathi Sankaran (6.55mb)
(1 - 63)



Ms Revathi Sankaran (8.81mb)
(64 - 128)




(மாவுல கெங்கு)

மாவுல கெங்கு மலர்த்தட மாகத்
     தாவறு சீர்புனை தண்டக நாடே
          மேவிய கஞ்சம தாவதின் மேவுந்
               தேவினை யொத்தது சீர்பெறு காஞ்சி. ......    1

(பூக்கம லத்துறை)

பூக்கம லத்துறை புங்கவன் மாயோன்
     பாங்குறை தேவர்பல் லாண்டிசை பரவ
          ஓங்கிய புள்ளின மூர்ந்தவ ணுறலால்
               ஆங்கவர் மேவு மரும்பத மாமே. ......    2

(இன்னிய றேர்தரு)

இன்னிய றேர்தரு மிந்திரன் முதலா
     மன்னிய வானவர் மற்றுளர் யாருந்
          துன்னின ராயிடை சூழ்ந்துறை செயலாற்
               பொன்னக ரென்று புகன்றிட லாமால். ......    3

(கின்னரர் சித்தர்)

கின்னரர் சித்தர் கெழீஇயத னாலத்
     தந்நிக ரில்லவர் தம்பதி போலும்
          பன்னக வேந்தர் பராயின ருறலால்
               அன்னவர் தம்பதி யாகிய தன்றே. ......    4

(எண்டிசை காவலர்)

எண்டிசை காவலர் யாவரு மீண்டப்
     பண்டவர் பெற்ற பதங்களை மானும்
          மண்டல மார்சுடர் மற்றைய வுறலால்
               அண்டமு மாகிய தப்பதி யென்பார். ......    5

(இப்படி யாவரு)

இப்படி யாவரு மெய்திய திறனால்
     ஒப்பன போல வுரைத்திட லொப்போ
          அப்பதி யேயத னுக்கிணை யன்றிச்
               செப்பரி தாற்பிற சீர்கெழு காஞ்சி. ......    6

(மறை முதலோர்)

மறைமுத லோர்தனி மாவி னிழற்கீழ்
     உறைதரு காஞ்சி தனக்குல கெல்லாம்
          பெறுமய னாதியர் பெற்றிட வன்னான்
               நிறுவிய தொன்னக ரோநிக ராமே. ......    7

(மேயதொல் லூழி)

மேயதொல் லூழியில் வேலைக ளேழுந்
     தூயத னெல்லை சுலாவுற நிற்றல்
          ஆய பரஞ்சுட ராங்குள தாயும்
               மாயைகள் சுற்றிய மன்னுயி ரொக்கும். ......    8

வேறு

(பாழி மால்வரை)

பாழி மால்வரை யெறிதிரை வையகம் பலவும்
     வாழு மண்டங்கள் சிற்றுரு வமைந்துவந் தென்னச்
          சூழு நேமியம் புள்ளின முதலிய சுருங்கும்
               ஆழி நீத்தம தொத்தது மதிற்புறத் தகழி. ......    9

(மண்டலப் பொறை)

மண்ட லப்பொறை யாற்றுவான் பற்பல வகுத்து
     முண்ட காசன மீமிசை யிருந்திடு முதல்வன்
          அண்ட கோளகை தாங்கவோர் சுவர்த்தல மதுவும்
               பண்டு செய்தென வோங்கிய நெடுமதிற் பரப்பு. ......    10

(சென்று மூவெயி)

சென்று மூவெயி லழலெழ நகைத்தவன் செழும்பொற்
     குன்று தோளுற வாங்கலு முலகெலாங் குலைந்த
          அன்று நான்முக னனைத்தையுந் தாங்குகென் றருள
               நின்ற தென்னவும் பாதலம் புகுந்துமேல் நீண்ட. ......    11

(மேக நாட்டிற்கும்)

மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர்
     மாக நாட்டிற்கும் மலரய னாட்டிற்கும் மற்றை
          நாக நாட்டிற்கும் பாதல நாட்டிற்கும் நணுகிப்
               போக நாட்டிய பொன்மதில் ஆனதப் புரிசை. ......    12

(முதிரை வண்ணமா)

முதிரை வண்ணமா நவமணிக் குவையும்வான் முளைக்குங்
     கதிரி னெல்லெனும் பொருளுட னேனவுங் காட்டிப்
          பொதிவ தாகியே முழுவதும் நிரம்புதல் பொருந்தா
               நிதிய மேயகூ டொத்தது நெடியமா மதிலே. ......    13

(நிறையும் வார்கடல்)

நிறையும் வார்கடல் சுற்றிய நேமியும் நேமிக்
     குறையு ளாகிய கணிப்பிலா வண்டமு மொப்ப
          சிறையில் வான்கிரி நிரையெனச் செவ்விதிற் கிளர்ந்து
               மறுகெ லாந்திகழ் மாளிகைப் பத்திசூழ் மதிலே. ......    14

(தடுக்கு மாற்றலர்)

தடுக்கு மாற்றலர் நால்வகைப் படையொடுஞ் சாய
     முடுக்கும் வாள்கொடு விதிர்த்திடு மெழுவினான் முருக்கும்
          எடுக்கு மெற்றிடு மெறிந்திடும் விழுங்கிடு மீர்க்கும்
               படுக்குங் கன்மழை சொரிந்திடும் விற்படை பயிலும். ......    15

(உருக்குஞ் செம்பினை)

உருக்குஞ் செம்பினை வங்கத்தை யிழுதொடு மோச்சும்
     வெருக்கொ ணேமிக ளெறிந்திடும் வச்சிரம் வீசி
          இருக்கும் நின்றிடுங் குப்புறுஞ் செறுநரை யிகலி
               நெருக்குந் தாழ்ந்திடும் உலகளந் தோனென நிமிரும். ......    16

(பீடு தங்கிய)

பீடு தங்கிய பணைமுர சியம்பிடும் பிடிக்குங்
     கோடு மார்த்திடுந் துடிகளு மொலித்திடுங் கொட்புற்
          றாடும் மீயுயர் புள்ளையு மெறிந்திடு மரண்மேல்
               ஓடும் மீளுமக் கதிரையுந் தடுப்பபோல் உந்தும். ......    17

(சூலம் வீசிடுந்)

சூலம் வீசிடுந் தோமரம் வீசிடுஞ் சுடர்வேல்
     ஆலம் வீசிடுஞ் சுடுமணல் வீசிடு மளப்பில்
          சாலம் வீசிநின் றீர்த்திடு மகழியிற் றள்ளுஞ்
               சீலம் வீசிய பாரிட மாமெனத் திரியும். ......    18

(திகழும் வெங்கன)

திகழும் வெங்கன லுமிழ்ந்திடு மொன்னலர் செலுத்தும்
     பகழி மாரியை விழுங்கிடும் பறவையிற் படரும்
          இகழு நாவையும் மனத்தையு மெறிந்திடு மென்னாற்
               புகழும் நீரவன் றம்மதின் மேலுறும் பொறிகள். ......    19

(பூணி னேர்தரும்)

பூணி னேர்தரும் பொன்னவாம் புரிசைமேற் புனைந்த
     வாணி லாநெடுந் துகிலிகை பெயர்வன மலரோன்
          சேணு லாயதீஞ் சுடரெனுங் கோபுர சிகரங்
               காண வேபல வெகினமாய்த் தேடல்போற் கவினும். ......    20

(ஈர்த்த மாமதி)

ஈர்த்த மாமதி சசியென்ப துலகுளோ ரிட்ட
     வார்த்தை யல்லது சரதமோ கடிமதின் மருங்கில்
          தூர்த்த கேதன மவன்மணி மேனியிற் றுடக்கப்
               போர்த்த வெண்ணிலாக் கஞ்சுகம் பீறியபோலாம். ......    21

(காட்சி மேயவ)

காட்சி மேயவக் கடிமதிற் கதலிகை காணூஉச்
     சூட்சி நாடிய பரிதியுங் கீழுறத் தொடர்ந்தான்
          மாட்சி தேய்ந்திலன் வரன்முறை மனப்படு மதியோர்
               தாட்சி செய்யினு மனையர்பா லணுகுமோ தவறு. ......    22

(புடை பரப்பிய)

புடைப ரப்பிய புரிசையி னாற்றிசைப் புறத்துந்
     தடநி லைப்பெருங் கோபுர முளதழ னிறத்துக்
          கடவு ளுச்சியின் வதனமொன் றின்றியே காண்பான்
               அடைத லுற்றிடு திசைமுகம் பொருவின அவையே. ......    23

(என்று மாமதி)

என்று மாமதிக் கடவுளும் பிறருமீ ரியல்பாங்
     குன்ற மேயெனக் கீழ்த்திசை யதனொடுங் குடபால்
          நின்ற கோபுரங் கடக்கலர் வாய்தலி னெறியே
               சென்று சென்றுபோ யப்புறத் தேகினர் திரிவார். ......    24

(தீபு ரத்திடை)

தீபு ரத்திடை மடுத்தவ னாணையாற் சிறந்த
     மாபு ரத்திடை வான்றொடுங் கடிமதில் வரைப்பில்
          ஆபு ரத்தவாய்க் கிளர்ந்தவே யமைத்தவன் றென்னக்
               கோபு ரத்திடைக் கொழுந்துபோ லோங்கிய கொடிகள். ......    25

(மாட மாளிகை மண்டபங்)

மாட மாளிகை மண்டபங் கோபுர மறுகிற்
     கோடி கோடியின் மேலுமுண் டன்னதார் குணிப்பார்
          ஆடு கேதனத் தளவையு மன்னதே அகல்வா
               னூடு போகலா தலமரும் பறவைக ளொப்ப. ......    26

(சிகர மால்வரை)

சிகர மால்வரை யன்னமா ளிகைதொறுஞ் சிவணும்
     மகர தோரண மாடிகள் பலவுற வயங்கல்
          இகலும் வெய்யகோ ளிரண்டுமா யொருவடி வெய்தி
               அகல்வி சும்பிடைக் கதிர்களின் புறமறைத் தனைய. ......    27

(செம்பொனிற் புரி)

செம்பொ னிற்புரி நிலையுடைத் திகிரியந் தேர்கள்
     அம்ப ரத்திடை வசியுற வீற்றுவீற் றாகுந்
          தம்ப முற்றல மருவன செய்யகோற் றலையிற்
               பம்ப ரத்துருத் திரிப்புறக் கறங்கிய படிய. ......    28

(பளிங்கினாற் செய்த)

பளிங்கி னாற்செய்த தெற்றியின் றலைமிசைப் பனிதோய்
     வளங்கொ ணித்திலஞ் செம்மணி குயிற்றிய வைப்பில்
          துளங்க நாற்றிய பொன்மணிப் பாலிகை தொகுவ
               குளங்கொ டாமரை மலர்ப்பொகுட் டாயின குறிக்கின். ......    29

(ஓவியத்தியன் மரகத)

ஓவி யத்தியன் மரகதத் தலத்தின தும்பர்த்
     தாவி லாடகத் தலமிசை நித்திலத் தலமேற்
          கோவை பட்டசெம் மணித்தலம் பொலிதலாற் கொண்மூ
               மூவ கைக்கதிர் வியலிடந் தெரிப்பதம் மூதூர். ......    30

(கன்னல் வேளெனும்)

கன்னல் வேளெனும் மைந்தரும் மாதருங் கலந்து
     மன்னு நித்தில மாளிகைப் பத்தியின் மாடே
          பொன்ன வாஞ்சிறை மணிமயிற் குழாத்தொடும் போகும்
               அன்னம் மாமதி முகிலிடை நுழைந்துபோ யனைய. ......    31

(தண்ட மாகியே)

தண்ட மாகியே புவியுறு பணியெலாந் தழுவி
     அண்ட மீமிசை யிரவியும் மதியமு மடைதல்
          கண்டு மாளிகைச் சூளிகை மருங்குபோய்க் கவர்வான்
               கொண்ட சீற்றத்தின் நாவெறிந் தன்னபூங் கொடிகள். ......    32

(தேனை வென்ற)

தேனை வென்றசொல் லாரொடு மைந்தருந் திளைக்கும்
     மீன வாவிபோல் வியன்படி கத்தினால் விளங்குந்
          தான மீமிசைத் தயங்கிய முழுமணித் தலந்தான்
               வான நின்றிடு தெய்வத மானமே மானும். ......    33

(தேவர் தானவர்)

தேவர் தானவர் முனிவரர் சித்தரோ டியக்கர்
     வாவு கின்னர ருவணர்கந் தருவர்மற் றுள்ளோர்
          ஏவ ருந்தம தகன்பதி யிகந்தவ ணெய்தா
               மேவு கின்றன தனித்தனி யிருக்கைகண் மிகுமால். ......    34

(தூங்கு குண்டிகை)

தூங்கு குண்டிகை யருகுறக் காலெதிர் தூண்டி
     ஓங்கு நாசிமேல் விதிமுறை நயனங்க ளுறுத்தி
          ஆங்கொ ராசனத் திருந்தர னடியகத் தடக்கிப்
               பாங்கர் மாதவம் புரிகுநர் சாலைகள் பலவால். ......    35

(பாடு நான்மறை)

பாடு நான்மறை யந்தணர் வேள்விகள் பயில
     மூடு தண்புகை யண்டமுங் கடந்தன முன்னந்
          தேடு கின்றதோர் பரஞ்சுடர் மீட்டுமித் திறத்தால்
               நீடு கின்றதோ வென்றுநான் முகத்தனும் நினைய. ......    36

(நான்மறைக் குல)

நான்ம றைக்குலத் தந்தணர் நவையறு காட்சி
     ஊன்ம றைத்திடு முயிரென வோம்பிய வொழுக்கார்
          மேன்மு றைக்கணோ ரைம்புலப் படிற்றினை வென்றோர்
               வான்ம றைத்திடு மாளிகை வீதியும் மலிந்த. ......    37

(ஏவு பல்படை)

ஏவு பல்படை வலியினர் வெஞ்சம மிகந்தோர்
     நாவி னான்மறை பயில்பவர் நணுகுறு நலத்தாற்
          கோவு நீணகர் மறுகெலாங் குருமணிச் சிகரத்
               தேவு நீணகர் நிலைமையே போல்வது தெரியின். ......    38

(அணி யினோங்கலும்)

அணியி னோங்கலும் பன்மணிக் குவால்களு மார்வந்
     தணிவி லாடகக் குவைகளும் பிறவுமுன் றழைப்பக்
          கணிக ணாணுறு கற்பக மனையன காட்சி
               வணிக ராவணத் தெற்றிகள் வயின்றொறும் வயங்கும். ......    39

(கங்கை மாமகள்)

கங்கை மாமகள் தொல்பெருங் குலத்தர்கா சினியின்
     மங்கை யாளருள் புரிதரு மகாரெனும் வழக்கோர்
          செங்கண் மானிகர் வெறுக்கையர் அயன்பதஞ் சேர்ந்தோர்
               துங்க வீதியு மேனையர் மறுகொடுந் தொகுமே. ......    40

(கண்டு கேட்டவை)

கண்டு கேட்டவை யுண்டுயிர்த் துற்றறி கருவி
     கொண்ட வைம்புல னொருங்குற நடாத்திய கொள்கைத்
          தொண்டர் கூட்டமும் விழிவழிப் புனலுகத் தொழுங்கை
               அண்டர் கூட்டமும் ஆலயந் தொறுந்தொறு மறாவால். ......    41

(ஆதி நான்முகன்)

ஆதி நான்முகன் எகினத்தி னடிகளு மமலன்
     பாதி யாளன்றன் உவணத்தி னடிகளும் பனிக்கார்
          நாத னூர்தரு தந்தியி னடிகளும் நாளும்
               வீதி வீதிக டொறுந்தொறுங் காண்வர விளங்கும். ......    42

(மாவி னோதையுங்)

மாவி னோதையுங் களிற்றின தோதையும் மருங்கின்
     மேவு தேர்களி னோதையுங் கவிகையாய் விரிந்த
          காவு சூழ்தரு மன்னர்சீ ரோதையுங் கறங்குந்
               தேவ துந்துபி யோதையு மிறுத்தில தெருவு. ......    43

(நாட்டியச் செயல்)

நாட்டி யச்செயல் யாவையுஞ் சிவனது நடனம்
     பாட்டி சைத்திறம் யாவையு மன்னதே பதியோர்
          கேட்டி ருப்பன யாவையு மவனிசைக் கேள்வி
               கூட்டம் யாவையு மன்னவன் றொண்டுசெய் கூட்டம். ......    44

(பாலு றுந்ததி)

பாலு றுந்ததி யிழுதுதே னிருக்கைகள் பலவுங்
     கோல மாகுமந் நகரிடை யவையுறை கூவல்
          போலு மாயிடை மாதவத் தவளறம் புரியுஞ்
               சாலை யாயின வரம்பிலா அடிசிலஞ் சாலை. ......    45

(அளவில் பற்பகல்)

அளவில் பற்பகல் தம்மினும் நீங்கியோ ரடுத்த
     கிளைஞர் வந்துழி யெதிர்தழீஇ நன்னயங் கிளத்தி
          உளம கிழ்ந்தவர்க் கூட்டுமின் னடிசில்போ லுறுவோர்
               எளிதி னுங்கிட வழங்குமால் ஓதன விருக்கை. ......    46

வேறு

(மாட மாளிகை வாயி)

மாட மாளிகை வாயி றொறுந்தொறும்
     நீடு கண்ணுள ராமென நின்றுநின்
          றாடு சித்திரப் பத்தி யமரரும்
               நாடி நோக்கி நயந்திடப் பட்டதே. ......    47

(எல்லை தீர்ந்த)

எல்லை தீர்ந்த விரவிக டூண்டிய
     சில்லி யாழித் திகிரிகண் மானுமால்
          மல்லன் மாநகர் மைந்தர்க ளூர்தரும்
               பல்வ கைச்சுடர்ப் பண்ணுறு தேர்களே. ......    48

(வெள்ளை யாதி)

வெள்ளை யாதி வியன்கவி யாவையுந்
     தெள்ளி தின்மொழி தென்கலை யேமுதல்
          உள்ள பல்கலை யோதுகின் றார்களும்
               வள்ளி யோர்களும் மன்றுதொ றீண்டுவார். ......    49

(இகலும் வேழ)

இகலும் வேழத் தெயிற்றினை யேய்ந்திடும்
     நகிலி னார்க ணறுங்குழன் மேலிடும்
          அகிலி னாவியு மாய்மணி மாடமேல்
               முகிலும் வேற்றுமை யின்றி முயங்குமே. ......    50

(பண்ணி னோசையும்)

பண்ணி னோசையும் பானலை வென்றிடுங்
     கண்ணி னார்கள் களிநட வோசையுந்
          தண்ண ரம்பிய றந்திரி யோசையும்
               விண்ணு ளோர்க்கும் விருந்தென லாயவே. ......    51

(அணிகுலாவு மரம்)

அணிகு லாவு மரம்பையர் காளையர்
     நணிய தோளை நயப்புற நாகருங்
          கணிகை மாதரைக் காமுற மேவலான்
               மணிகொள் காஞ்சி மதனர சாயதே. ......    52

(கூற்றிற் செல்லுங்)

கூற்றிற் செல்லுங் கொலைக்கரித் தானமும்
     ஏற்றிற் செல்லு மிடையர்தஞ் சேரியின்
          ஊற்றிற் செல்லு மொண்பாலு முடனுறா
               ஆற்றிற் செல்லுமவ் வாவணந் தோறுமே. ......    53

வேறு

(பண்ணுளர் நரம்பி)

பண்ணுளர் நரம்பியல் பாணிக் கேற்றிட
     எண்ணுள கணிகைய ரினத்தொ டாடலுங்
          கண்ணுள ராடலுங் காம னாடலும்
               விண்ணுள ராடலும் வெறுப்ப மேவுமே. ......    54

(அரிவையர் மைந்தர்)

அரிவையர் மைந்தர்க ளணிந்து நீத்ததே
     திருமகள் காமுறுஞ் செல்வ மாகுமேற்
          கருதரு நான்முகக் கடவுட் காயினும்
               பொருவரு நகர்வளம் புகலற் பாலதோ. ......    55

வேறு

(மாறாய்ச் சிறார்)

மாறாய்ச் சிறார்க ளெறிந்தாடிய மான்ம தத்தாற்
     சேறாய்ப் பொற்சுண்ணத் துலர்வாய்ப்பனி நீர்கள் சிந்த
          ஆறாய்ப் பளிதத் தினில்வா லுகத் தாறு மாகி
               வேறாய்ப் புவியோ ருணர்வாமென மேய வீதி. ......    56

(தண்டாமரை யேந்திய)

தண்டாமரை யேந்திய வானவன் றன்னை யொத்தான்
     எண்டாவிய மாமத னேந்திழை யாரி லஞ்சி
          வண்டாமரை பூத்தன வொத்தனர் வந்து செந்தேன்
               உண்டாடிய தேன்களை யொத்தனர் ஓங்கல் மைந்தர். ......    57

(ஏமங் குலவு)

ஏமங் குலவு முரசங்க ளிரட்ட வாசத்
     தாமங் கமழ்பந் தரினூடு தமக்கி யன்ற
          ஓமங் களின்மா மணஞ்செய் தனரூர் குலாவும்
               மாமங் கலமே யுலப்பின்றி மலிந்த தன்றே. ......    58

(மாகந் திகழு)

மாகந் திகழு மகிலாவிகொள் மாட மீதிற்
     பாகின் மொழியா ரிளமைந்தர்தம் பாலி னோச்சப்
          போகுஞ் சிவிறிப் பனிநீர்புறஞ் சிந்த வென்று
               மேகஞ் சிதறும் பெயலென்ன விளங்கும் வீதி. ......    59

(வன்மா முலையே)

வன்மா முலையேந் தியமங்கையர் மைந்த ரானோர்
     தொன்மாட மீதி லெறிந்தாடுபொற் சுண்ண மோடு
          நன்மா மலர்த்தாது விசும்புற நண்ண மேகம்
               பொன்மா முகிலாய்ப் பனிநீரிற் பொழியு மன்றே. ......    60

(தாராற் பொலிபொற்)

தாராற் பொலிபொற் புயவீரர் தவாது செல்லுந்
     தேரார்ப்பு நால்வாய்க் கரியார்ப்பும்வெஞ் சேனை யார்ப்பும்
          ஏரார்ப்பு மிக்க பதிமானவ ரீண்டு மார்ப்புங்
               காரார்ப்பும் வேலைக் கடலார்ப்புங் கடுத்த வன்றே. ......    61

(வானோக்கி நிற்கு)

வானோக்கி நிற்கு முலகென்னவு மன்ன வன்செங்
     கோனோக்கி நிற்குங் குடியென்னவுங் கோதி லும்பர்
          ஆனோர்க்கு நாக ருலகோர்க்கு மவனி யோர்க்கும்
               ஏனோர்க்கும் நாடும் நகராகி யிருந்த தவ்வூர். ......    62

(கோடு நெறியு)

கோடு நெறியு மிகலும்மனக் கோட்ட மாய
     கேடும் பிணியு முதலாகிய கேதம் யாவும்
          நீடும் பரிவோ டுறைவா ரிடைநீங்க லாலே
               வீடந் நகரே யெனிலென்னின் விளம்ப வற்றோ. ......    63

வேறு

(ஏமமே தருவாச்)

ஏமமே தருவாச் சினைகளு மனைத்தா விலைதளிர் செய்யபூந் துகிராக்
     காமர்பூ மணியா வுதித்தொரு காஞ்சி கண்ணரோ ரைவர்முன் கண்டு
          தாமினி தருளும் பொய்கையின் மருங்கே தன்னிழல் பிரிகிலா துறலாற்
               பூமியெண் காஞ்சி மாபுர மெனும்பேர் புனைந்ததப் பொருவிலா நகரம். ......    64

(சுருதியா னுறங்கு)

சுருதியா னுறங்கு மிராத்தொறு முடிவிற் றுஞ்சிய வூழிக டோறும்
     விரையவந் துலக மழித்திடுங் கடலவ் வியன்பதி யெல்லையுட் சிறிதும்
          வருவதை யஞ்சிப் புறந்தனிற் சூழ வந்தொரு சத்திகாத் திடலாற்
               பிரளய சித்தென் றொருதிரு நாமம் பெற்றதக் காஞ்சியம் பேரூர். ......    65

(கயிலையி லரனை)

கயிலையி லரனை யம்மைபூங் காவிற் கண்களை மூடலு முலகிற்
     பயிலுறு கொடிய வினையிரு ளகலும் பான்மையால் வந்துமா நிழற்கீழ்
          இயலொடும் பரமன் பூசனை யியற்றி யிரைத்தெழு கம்பைகண் டஞ்சிச்
               செயன்முறை தழுவக் குழைந்தருள் செய்யச் சிவபுர மானதச் சீரூர். ......    66

(விண்ணுறை மகவான்)

விண்ணுறை மகவான் கரிபுரி தவத்தால் வெற்பதாய்த் தன்னைமுன் றாங்கு
     புண்ணிய கோடி யிபகிரி மிசையே பொருவிலா வேதியுத் தரத்தில்
          அண்ணலங் கமலத் திசைமுகன் வேள்வி யாற்றலு மவற்கருள் செய்வான்
               கண்ணன்வந் திடலால் விண்டுமா புரமாங் கட்டுரை பெற்றதக் காஞ்சி. ......    67

(கார்த்திரு மேனி)

கார்த்திரு மேனித் தண்டுழாய் மௌலிக் கண்ணனுங் கமலமே லயனும்
     ஆர்த்திடுந் தரங்கப் பகீரதி மிலைந்த வவிர்சடை யமலனு மாகும்
          மூர்த்திக டத்த முலகமே போல முன்னியப் பதியமர் செயலாற்
               சீர்த்திரி மூர்த்தி வாசமா கியபேர் சிறந்ததக் கச்சிமா நகரம். ......    68

(தரணிகண் முழுதும்)

தரணிகண் முழுதும் புரிதரும் விரிஞ்சன் றன்மனம் புனிதமாம் பொருட்டால்
     திருமகள் கணவன் கமடமாய்ப் பூசை செய்திடு கச்சபா லயத்தில்
          அரனடி பரவி யருச்சனை யியற்றி யங்கண்வீற் றிருந்திடு நெறியால்
               வரமிகு பிரம புரமென வொருபேர் மன்னிய தன்னதோர் நகரம். ......    69

(வீடுறு முத்தி)

வீடுறு முத்தி போகமென் றவற்றில் வெஃகிய வெஃகியாங் கென்றுங்
     கூடுறு தவத்தால் வழிபடு வோர்க்குக் கொடுத்திடுந் தன்மையாற் காம
          பீடமென் றொருபேர் பெற்றது மலர்மேற் பிரமனே முதலினோர் தவத்தை
               நாடினர் செயலால் தபோமய மெனும்பேர் நணியது கச்சிமா நகரம். ......    70

(சகங்களோர் மூன்றி)

சகங்களோர் மூன்றி லறம்பெரி துளதித் தரணியித் தரணிமா நகர்க்குள்
     மிகுந்தரு மத்தின் பலத்தினைத் தரலால் வியன்சகற் சாரமென் றொருபேர்
          புகும்பரி சுடைய தட்டசித் திகளும் பொருவின்மா தவர்க்கரு டிறத்தாற்
               பகர்ந்திடுஞ் சகல சித்தியென் றொருபேர் படைத்தது கச்சியம் பதியே. ......    71

(உன்னருங் கயிலை)

உன்னருங் கயிலை நாயக னுமையை யொருபக னீலியென் றுரைப்ப
     அன்னவ டனது காளிமங் கழிப்ப வங்கதி லையைவந் தெழலும்
          முன்னவ னவளை யிந்நக ரிருந்து முறைபுரிந் தருளென விடுப்பக்
               கன்னிகாத் திடலாற் கன்னிகாப் பென்னுங் கவின்பெய ருடையது கச்சி. ......    72

(அரியதோர்க் கயிலை)

அரியதோர் கயிலைக் கணங்களி லொருவ னானதுண் டீரன்மா லதிபால்
     பெருமயல் கொள்ளச் சிவனிவ ளொடுநீ பிறந்திருந் தின்பமுற் றெம்பால்
          வருகென நிலமேன் மன்னர்பாற் றோன்றி மற்றவ ளோடுசேர்ந் தரசு
               புரிதரு செயலாற் காஞ்சிதுண் டீர புரமெனப் புகலநின் றதுவே. ......    73

(தன்னையே யருச்சி)

தன்னையே யருச்சித் திடமலர்க் கேகித் தடந்தனிற் கராவின்வாய்ப் பட்டுத்
     தன்னையே நினைந்து தன்னையே யழைத்த தந்தியைக் காத்தவொண் புயமால்
          தன்னையே வேண்டித் தழன்மகஞ் செய்யத் தண்டகற் கெண்டிசை யரசு
               தன்னையீந் திடலால் தண்டக புரமாந் தனிப்பெயர் பெற்றதத் தனியூர். ......    74

(அழகிய வயோத்தி)

அழகிய வயோத்தி மதுரையே மாயை யவந்திகை காசிநற் காஞ்சி
     விழுமிய துவரை யெனப்புவி தன்னின் மேலவாய் வீடருள் கின்ற
          எழுநக ரத்துட் சிறந்தது காஞ்சி யென்றுமுன் னெம்பிரா னுமைக்கு
               மொழிதரு நகரந் நகரெனி லதற்கு மூவுல கத்துநே ருளதோ. ......    75

(பங்கமில் வசிட்டன்)

பங்கமில் வசிட்டன் பசுப்பொழி பாலி படர்ந்திடு முத்தரஞ் சேயைச்
     செங்கம லத்தோன் முதலினோ ராட்டுந் திருநதி தென்றிசைச் செல்லும்
          அங்கவற் றிடையே கம்பமே முதலா மாலயத் தந்தரு வேதி
               கங்கைகா ளிந்தி யிடைப்படுந் தலத்தின் முற்படுங் காஞ்சிமா நகரம். ......    76

(தொல்லையோர்)

தொல்லையோர் பிரமன் றுஞ்சிய காலைத் தோன்றிய நீத்தமே லரிபோல்
     செல்லுமார்க் கண்டன் கரத்தினிற் கம்பை சேர்ந்ததோர் தனிப்பெருஞ் சூதம்
          எல்லைநீ ரிகந்து வளர்தலு மருப்பொன் றெய்தவக் கொம்பர்தொட் டிழிந்து
               நல்லுமை குறிக்கொண் முதல்வனை வணங்கி நயந்தவ னிருந்ததந் நகரம். ......    77

(சமைய மாறினை)

சமையமா றினையுந் தாயென வளர்த்துச் சராசர வணுக்களுய்ந் திடுவான்
     அமைதரு மெண்ணான் கறத்தினைப் போற்றி யாதிபீ டத்தில்வீற் றிருக்கும்
          உமையமர் காமக் கோட்டியைக் கதிரோ னுடுபதி கணங்கள்சூழ் தரலால்
               இமையவர் தமக்குந் திசைமயக் கறாத வியல்புடைத் தந்நக ரென்றும். ......    78

(பாவமோர் கோடி)

பாவமோர் கோடி புரியினு மொன்றாம் பரிவினிற் றருமமொன் றியற்றின்
     ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கு மின்னதோர் பெற்றியை நாடித்
          தேவர்கண் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவனருச் சனைபுரிந் தங்கண்
               மேவினர் தவஞ்செய் திருத்தலாற் காஞ்சி வியனகர்ப் பெருமையார் விரிப்பார். ......    79

(கங்கைதன் சிறுவ)

கங்கைதன் சிறுவ னருள்பெறு வேதாக் கண்படை கொண்டகா லையினும்
     அங்கவன் றுஞ்சும் பொழுதினுங் காஞ்சி யழிவுறா திருந்தபான் மையினால்
          துங்கவெண் பிறையு மிதழியு மரவுஞ் சுராதிபர் முடிகளு மணிந்த
               மங்கையோர் பங்கன் படைத்ததே யன்றி மலரயன் படைத்ததன் றதுவே. ......    80

(அரிய பல்லிசையும்)

அரியபல் லிசையும் மறைபுனல் கங்கை யருஞ்சிலை யிலிங்கமங் குறைவோர்
     சுரர்தரு வனைத்துங் கற்பக மின்பந் துய்ப்பது வேள்வியூண் பூசை
          உரைசெப நடத்தல் வலம்வருந் தன்மை யுன்னலே தியானம்வீழ்ந் திடுதல்
               பரனடி வணக்க மாவது காஞ்சிப் பதிக்கலால் எந்நகர்க் குளதே. ......    81

(கணமுகில் செக்கர்)

கணமுகில் செக்கர் போர்த்தெனுங் கரிய கஞ்சுகச் செந்நிறக் கடவுள்
     மணிசுடர் வயிரக் கிம்புரி மருப்பு மால்கரி முகத்தவன் வருசூர்
          துணிபட வெறிந்த வேலவ னயன்போற் றோன்றிய சாத்தன்மால் விசயை
               இணையில்சீர்க் காளி முதலினோ ரென்று மினிதுகாத் திடுவதந் நகரம். ......    82

(அறு சமயத்திற்)

அறுசம யத்திற் கடந்தசை வத்தின் அன்றிவீ டிலதெனத் தெளிந்து
     பிறரறி யாது தொன்மைபோ லிருந்து பிஞ்சகன் மீதுகன் மலரால்
          எறிதரு தேரர் அன்பர்தங் கலிங்க மெழிலிகள் நனைத்தலுஞ் சிரத்தை
               முறைபுரி சிலைமேல் மோதினோர் முதலோர் முத்திபெற் றுடையதம் மூதூர். ......    83

(ஈசன தருளாற்)

ஈசன தருளாற் கயிலையை நீங்கி யிமையமா மயிலறம் புரிவான்
     காசியி லிருந்து முடிவுறா தேகிக் கனகமா நீழலிற் பரனைப்
          பூசனை புரிந்து கம்பைகண் டஞ்சிப் பூண்முலை வளைக்குறிப் படுத்தி
               ஆசிலா வருள்பெற் றின்னுநோற் றிடலா லனையகாஞ் சிக்குநே ரதுவே. ......    84

(ஆருயிர் முழுதும்)

ஆருயிர் முழுதும் வீடுபெற் றுய்வான் அறம்புரி சாலைய தணித்தாப்
     பேரர விறைவன் றவத்தின்மு னிருந்த பிலத்திடைக் கோயில் கொண் டென்றும்
          பூரணி நோற்றுவழிபட வனையாள் பூசனை கொண்டியா வர்க்குங்
               காரண மான பரசிவ னனந்த கலையொடு நிலையதக் காஞ்சி. ......    85

(இன்னமு முமையாள்)

இன்னமு முமையாள் நோற்றிடு மாங்கே யிறப்பினும் பிறப்பினும் நிலையாய்
     மன்னியே யுறினு மொருகண மேனும் வைகினும் மறைகளாந் தனிமா
          நன்னிழ லிருந்த பரஞ்சுடர் புரியும் நடந்தரி சிக்கினு மதனை
               உன்னினும் முத்தி வழங்குகாஞ் சியைப்போ லுலகில்வே றொருநக ருளதோ. ......    86

(கண்ணுதற் பரனுந்)

கண்ணுதற் பரனுந் தண்டுழாய் மவுலிக் கடவுளுங் கமலமே லயனும்
     விண்ணவர்க் கிறையுங் கொற்றமா லினியும் மேலைநாட் பிறந்ததொன் மனுவுந்
          தண்ணளி புரிதுண் டீரனும் நள்ளார் சமர்த் தொழில் கடந்ததண் டகனும்
               அண்ணலங் கரிகால் வளவனும் பிறரு மரசுசெய் தளித்ததந் நகரம். ......    87

(வேலை சூழுலகி)

வேலைசூ ழுலகி னெங்கணு மிருபால் வீட்டினை வெஃகினோர்க் குதவும்
     ஆலய நூற்றெட் டுள்ளமற் றவற்றுள் ஐம்முகப் பரஞ்சுட ரமருங்
          கோலமார் நிலய மிருபது மாயோன் கோநக ரெட்டுமாக் குழுமி
               நாலெழு தான முள்ளவந் நகர்போல் நாம்புகழ் நகரமற் றெவனோ. ......    88

(கச்சபா லயமே)

கச்சபா லயமே கம்பமே மயானங் கவின்கொள்கா ரோணமா காளம்
     பச்சிமா லயநல் லநேகபங் கடம்பை பணாதர மணீச்சரம் வராகம்
          மெய்ச்சுர கரமுன் னிராமம்வீ ரட்டம் வேதநூ புரமுருத் திரர்கா
               வச்சிர னகரம் பிரமமாற் பேறு மறைசையாஞ் சிவாலய மிருபான். ......    89

(கரிகிரி யட்டபுய)

கரிகிரி யட்ட புயந்திரு வெஃகாக் கருதுமூ ரகஞ்சகா ளாங்கஞ்
     சுரர்புகழ் நிராகா ரந்நிலாத் திங்கட் டுண்டநற் பாடக மினைய
          அரிதிரு முற்ற மெட்டவை யன்றி அறுபதி னாயிர நிலயம்
               பரசிவன் சத்தி குமரர்மால் புறத்தோர் பலரும்வீற் றிருப்பதப் பதியே. ......    90

(ஒன்றுதீ விளக்க)

ஒன்றுதீ விளக்க மீரிட மொருமூன் றுற்றிடு தெற்றிநான் கரணம்
     நின்றிடு தருவைந் தாறுபுள் ளேழு நெடுநதி யெண்பொது வொன்பான்
          மன்றலம் பொய்கை வியன்சிலை யொருபான் மன்றவை பத்தின்மே லொன்று
               நின்றமர்ந் தொழுகு நெறியில்அற் புதமாய் நிகரிலா துறையுமந் நகரம். ......    91

(சிறந்திடு மதியு)

சிறந்திடு மதியு மிரவியு மாழ்கச் செகமெலாந் தனதொளி பரப்பி
     அறம்புரி காமக் கோட்டிமந் திரத்து ளம்மைவாழ் பிலத்தினு ளழியா
          துறைந்திடு தூண்டா விளக்கமொன் றுதித்த வுயிர்த்தொகை யிறந்திடா விடமொன்
               றிறந்திடு முயிர்கள் பிறந்திடா விடமொன் றெம்பிரா னிருந்தவீ ரிடமே. ......    92

(தோற்றுயிர்க் குண)

தோற்றுயிர்க் குணவு நல்குமோர் தெற்றி சொற்றவை யுதவுமோர் தெற்றி
     தேற்றுசொன் மூகர்க் களிக்குமோர் தெற்றி தெற்றிமூன் றிவைநக ரெல்லை
          ஈற்றினிற் கீழ்பா லளக்கருந் தென்பா லியற்பெரும் பெண்ணைநன் னதியும்
               மேற்றிசைப் பவள சயிலமும் வடபால் வேங்கட வெற்புநான் கரணே. ......    93

(மறைகளி னுருவாய்)

மறைகளி னுருவாய்ப் பொன்மலர் தனிமா மலரொடு காயிலா தென்றுஞ்
     செறிதரு பலங்க ளுதவிநுங் கினர்க்குச் சித்திகள் வழங்குறு மெகினம்
          வெறிமலர் பலவும் மலர்ந்திடு மதூகம் விண்ணினை நோக்குமோ ரத்தி
               நறுநிழல் பிரியா திருந்ததோர் காஞ்சி நன்னகர் தன்னில்ஐந் தருவே. ......    94

(உம்பரூண் பகிருஞ்)

உம்பரூண் பகிருஞ் சாதக மணிக ளுதவிடு மன்னநூ லுரைத்துக்
     கொம்புறு கிள்ளை யலகுசொல் லாந்தை குறைபெறிற் கூவுறாக் கோழி
          இம்பரிற் பாவந் துடைத்திடு நேமி இவையறு புள்ளெழு நதிதான்
               கம்பைநற் பம்பை மஞ்சனீர் பிச்சி கலிச்சிபொன் மண்ணிவெஃகாவே. ......    95

(குரைபுனல் வேட்டோர்)

குரைபுனல் வேட்டோர்க் குதவியே திரியுங் கூவலம் பொதுக்குறு முயல்போய்க்
     கரிதொடர் பொதுவே ழிசையுறு பொதுமால் கண்டுயின் றிடுபொது வேறோர்
          உருவுசெய் பொதுவோர் புற்றின்மா முழவ மொலித்திடும் பொதுத்திசை மயக்கம்
               புரிதரு பொதுவென் னம்மைநோற் றருளும் பொற்பொது விவைகள் எண்பொதுவே. ......    96

(முன்னுறு பிணிகள்)

முன்னுறு பிணிகள் மாற்றிடும் பொய்கை முதல்வர்கள் முடிவுறுங் காலைச்
     செந்நிற மாகும் பொய்கைமுக் காலந் தெரித்திடும் பொய்கைகண் ணுதலோன்
          தன்னடி காட்டும் பொய்கைவேண் டியது தந்திடும் பொய்கைமெய்ஞ் ஞானம்
               பொன்னிறஞ் செல்வம் வசீகரந் தருநாற் பொய்கையோ டொன்பதாம் பொய்கை. ......    97

(விடந்தனை யகற்று)

விடந்தனை யகற்று மொருகலா ருயிர்கள் மெய்ப்பிணி மாற்றிடு மொருகல்
     அடைந்தவ ரெல்லா மிமையவ ராக வளித்திடு மொருகல்வெம் படையால்
          தடிந்திட வேறாய்த் துணிபடு முடலஞ் சந்துசெய் வித்திடு மொருகல்
               நெடும்படை வரினு மவையிரிந் தோட நிலைபெறீஇ நிற்குமாங் கொருகல். ......    98

(துஞ்சினர் தம்மை)

துஞ்சினர் தம்மை யெழுப்புமாங் கொருகல் தொல்வழக் கறுத்திடு மொருகல்
     எஞ்சலி னிதியங் கெடுத்துளோர் வினவி லீதெனக் காட்டிடு மொருகல்
          விஞ்சிய வினைக டீர்த்திடு மொருகல் வேந்தருக் கரசிய லுதவித்
               தஞ்சம தாக நின்றிடு மொருகல் தக்ககல் லையிரண் டவையே. ......    99

(அயன்மனைச் சென்றோர்)

அயன்மனைச் சென்றோர் கணவரைப் பிழைத்தோர் அடிகளை யிகழ்ந்துளோர் அணுகில்
     துயருறு மூகை யாக்குமோர் மன்றஞ் சோரர்முன் சுழலுமோர் மன்றம்
          வியனிறம் பலவாத் தோன்றுமோர் மன்றம் விஞ்சைகள் வழங்குமோர் மன்றம்
               மயல்புரி கின்ற பொழுதொடு திசையின் மயக்கறத் தெளிக்குமோர் மன்றம். ......    100

(நாகரூ ருய்க்கும்)

நாகரூ ருய்க்கும் பிலத்ததோர் மன்றம் நவமணி யுதவுமோர் மன்றம்
     மாகர்பே ரமிர்த மிருக்குமோர் மன்றம் வடிவினை மறைப்பதோர் மன்றம்
          மேகநின் றறாது பொழியுமோர் மன்றம் வியன்பகல் கங்குலாக் கங்குல்
               ஆகிய பகலா விருப்பதோர் மன்றம் ஐயிரண் டொன்றுமன் றவையே. ......    101

(ஈங்கிவை யன்றி)

ஈங்கிவை யன்றிச் சிலைகளுந் தருவு மிடங்களுங் கூவலும் நதியும்
     பாங்குறு குளனுந் தீர்த்தமும் பிலமும் பழனமுஞ் சோலையும் பிறவும்
          ஆங்கவை யனந்த கோடியுண் டோரொன் றளவில்அற் புதத்தன அவற்றைப்
               பூங்கம லத்தோன் சுருக்கற விரித்துப் புகலினு முலப்புற வற்றோ. ......    102

(தோட்டலர் வனச)

தோட்டலர் வனசத் திசைமுகன் முன்னஞ் சொற்றன னவனடி வணங்கிக்
     கேட்டருள் சனகன் வியாதனுக் குரைப்பக் கேடில்சீர் வியாதனங் குணர்ந்து
          மாட்டுறு சூதன் றனக்கியம் புதலும் மற்றவன் முனிவரர்க் கிசைத்த
               பாட்டினில் அடங்காக் காஞ்சியின் பெருமை பகர்ந்திடத் தமியனுக் கெளிதோ. ......    103

வேறு

(சொற்படு மினைய)

சொற்படு மினைய காஞ்சித் தொன்னக ரதற்கு நாப்பண்
     கற்புறு மிமைய வல்லி கருணையால் வைகி நோற்கும்
          பொற்புறு காமக் கோட்டம் போலவே அதற்கோர் சாரில்
               எற்படு குமரகோட்டம் என்றொரா லயமுண் டன்றே. ......    104

(ஆவதோர் குமர)

ஆவதோர் குமர கோட்ட மதனிடை யரன்கண் வந்து
     தூவுடை யெஃக மொன்றாற் சூர்முத றொலையச் செற்றுத்
          தேவர்வெஞ் சிறையை மாற்றிச் சேண்மக பதிக்கு நல்கி
               மேவிய குமர மூர்த்தி வியத்தக வுறையும் மாதோ. ......    105

(மேவருங் கூடல்)

மேவருங் கூடல் மேலை வெற்பினில் அலைவாய் தன்னில்
     ஆவினன் குடியி னல்லே ரகந்தனிற் றணிகை யாதிப்
          பூவுல குள்ள வெற்பிற் பொற்புறும் ஏனை வைப்பிற்
               கோவில்கொண் டருளி வைகுங் குமரகோட்டத்து மேயோன். ......    106

(வச்சிர மெடுத்த)

வச்சிர மெடுத்த செம்மல் வைகிய துறக்கந் தன்னில்
     அச்சுதன் பதத்துக் கப்பா லானதன் பதத்தில் விண்ணோர்
          மெச்சுறு கந்த வெற்பில் வீற்றிருந் தருளு மாபோல்
               கச்சியிற் குமர கோட்டங் காதலித் தமருங் கந்தன். ......    107

(ஈண்டுள தரணி)

ஈண்டுள தரணி முற்று மெல்லைதீர் வான வைப்பும்
     ஆண்டகை மகவான் சீரு மம்புயன் முதலோர் வாழ்வும்
          மாண்டிடல் பிறத்த லின்றி மன்னிய வீடும் போற்றி
               வேண்டினர் வேண்டி யாங்கு வேலவன் புரிந்து மேவும். ......    108

(கொண்டலை யளக்கு)

கொண்டலை யளக்கு நொச்சிக் குமரகோட் டத்துச் செவ்வேள்
     கண்டிகை வடமுந் தூநீர்க் கரகமுங் கரத்தி லேந்திப்
          பண்டையி லயனை மாற்றிப் படைத்தருள் வேடந் தாங்கி
               அண்டர்க ளெவரும் போற்ற வருள்புரிந் தமர்ந்தா னன்றே. ......    109

(ஆயதோர் காஞ்சி)

ஆயதோர் காஞ்சி மூதூ ரதனிடை யம்பு யத்தின்
     மேயவன் றனது புந்தி விமலமாம் பொருட்டான் மேனாள்
          மாயவன் கமட மாகி வழிபடு தலத்தின்*1 முக்கண்
               நாயகன் றனையர்ச் சித்து நாமக ளுடனாங் குற்றான். ......    110

(உற்றிடு கின்ற)

உற்றிடு கின்ற நாளி லுலகிலில் லறத்தை யாற்றி
     நற்றவம் பலவும் போற்றி நண்ணிய முனிவ ரெல்லாம்
          மற்றவ ணேகிக் கஞ்ச மலர்மிசை யிருந்த வையன்
               பொற்றிரு வடியைத் தாழ்ந்து போற்றினர் புகல லுற்றார். ......    111

(அத்தகே ளிந்நாள்)

அத்தகே ளிந்நாள் காறும் அடியமில் லறத்தை யாற்றி*2
     இத்தல நகர மெங்கு மிருந்தன மினிமேல் நாங்கள்
          சித்தம தொருங்க நோற்றுச் செய்கட னியற்றி வைக
               மெய்த்தவ வனம தொன்றை விளம்பியே விடுத்தி யென்றார். ......    112

(என்றலுந் தருப்பை)

என்றலுந் தருப்பை யொன்றை யேழுல களித்தோன் வாங்கி
     ஒன்றொரு திகிரி யாக்கி யொய்யென வுருட்டிப் பாரில்
          இன்றிதன் பின்ன ராகி யெல்லிரு மேகி யீது
               நின்றிடும் வனத்தி னூடே நிலைப்பட விருத்தி ரென்றான். ......    113

(திருப்பது மத்துவள்)

திருப்பது மத்து வள்ளல் சேவடிக் கமலந் தாழா
     விருப்பொடு விடைகொண் டேக விரைவினி லன்னான் விட்ட
          தருப்பையின் நேமி சென்றோர் தனிவனத் திறுத்த லோடும்
               இருப்பிட மெமக்கீ தென்னா இருந்தவ ரிருந்தா ரங்ஙன். ......    114

(தாமரை யண்ணலுய்)

தாமரை யண்ண லுய்த்த தருப்பையின் நேமி தன்னால்
     நாமம தொன்று பெற்ற நைமிசா ரணியம் வைகுந்
          தூமுனி வரர்க ளெல்லாஞ் சொல்லருந் தவத்தை யாற்றி
               மாமறை நெறியி னின்று மகமொன்று புரித லுற்றார். ......    115

(அகனமர் புலனோர்)

அகனமர் புலனோர் நான்கு மான்றமை பொருட்டா லாங்கோர்
     மகவினை செய்து முற்றி வாலிதா முணர்ச்சி யெய்தி
          இகலறு முளத்த ராகி யிருந்தன ரிதனை நாடிச்
               சுகனென வுணர்வு சான்ற சூதமா முனிவன் போந்தான். ......    116

(முழுதுணர் சூதன்)

முழுதுணர் சூதன் றன்னை முனிவரர் கண்டு நேர்போய்த்
     தொழுதனர் பெரியோய் எம்பாற் றுன்னலா லின்ன வைகல்
          விழுமிது சிறந்த தென்னா வியத்தகு முகமன் கூறித்
               தழையொடு தருப்பை வேய்ந்த தம்பெருஞ் சாலை யுய்த்தார். ......    117

(திருக்கிளர் பீட)

திருக்கிளர் பீட மொன்று திகழ்தர நடுவ ணிட்டுச்
     சுருக்கமில் கேள்வி சான்ற சூதனை யிருத்தி யாங்கே
          அருக்கிய முதல நல்கி யவனது பாங்க ராகப்
               பொருக்கென யாரும் வைகி யிஃதொன்று புகல லுற்றார். ......    118

(முந்தொரு ஞான்று தன்னில் - 2)

முந்தொரு ஞான்று தன்னில் முளரியந் தேவன் சொல்லால்
     வந்திவ ணிருந்தே மாக மற்றியாம் புரிந்த நோன்பு
          தந்தது நின்னை யற்றாற் றவப்பயன் யாங்கள் பெற்றேஞ்
               சிந்தையி னுவகை பூத்தேஞ் சிறந்ததிப் பிறவி யென்றார். ......    119

(அன்னது சூதன்)

அன்னது சூதன் கேளா ஆதியம் பரனை யேத்தி
     மன்னிய வேள்வி யாற்றி வாலறி வதனை யெய்தித்
          துன்னிய முனிவிர் காணுந் தொல்குழு வடைத லன்றோ
               என்னிக ராயி னோருக் கிம்மையிற் பெறும்பே றென்றான். ......    120

(அவ்வழி முனிவர்)

அவ்வழி முனிவர் சொல்வார் அருமறை கண்ட வண்ணல்
     செவ்விய மாணாக் கர்க்குட் சிறந்துளோய் திறற்சூ ராவி
          வவ்விய நெடுவே லண்ணல் மாண்கதை தேர்வான் பன்னாள்
               இவ்வொரு நசைகொண் டுள்ளே மியம்புதி யெமக்க தென்றார். ......    121

(அம்மொழி சூதன்)

அம்மொழி சூதன் கேளா அழல்படு மெழுகே யென்னக்
     கொம்மென வுருக வுள்ளங் குதூகலித் தவச மாகி
          மெய்ம்மயிர் பொடிப்பத் தூநீர் விழித்துணை யரும்ப வாசான்
               பொய்ம்மையில் படிவ முன்னித் தொழுதிவை புகலலுற்றான். ......    122

(மன்னவன் மதலை)

மன்னவன் மதலை யாசான் மாமகன் றனது மைந்தன்
     பன்னுசொற் கொள்வோன் ஈவோன் வழிபடு பண்பின் மிக்கோன்
          என்னுமிங் கிவருக் கீவ தேனைநூல் உங்கள் போலச்
               செந்நெறி யொழுகு வார்க்கே செப்புவன் புராணம் முற்றும். ......    123

(தனைநிகர் பிறரின்)

தனைநிகர் பிறரின் றாய சண்முகற் கன்பு சான்ற
     முனிவிர்காள் உரைப்போர் கேட்போர் முத்திசேர் காந்தத் துண்மை
          வினவினீ ரதனை யின்னே விளம்புவன் புலன்வே றின்றி
               இனிதுகேண் மின்க ளென்னா எடுத்திவை இயம்ப லுற்றான். ......    124

ஆகத் திருவிருத்தம் - 270




*1. மாயவன் கமடமாகி வழிபடுதலம் - கச்சபாலயம்.

*2. இல்லறத்தை ஆற்றல் - தென்புலத்தார் தெய்வம், விருந்து, சுற்றம் முதலியோரை உபசரித்தல்.



previous padalam   6 - திருநகரப் படலம்   next padalamthirunagarap padalam

 முதல் காண்டத்திற்கு   next kandam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]