![]() | ![]() முருகனின் அருள்பெற்றோர் (குமாரகோவில் விசாக புஷ்பம்) Great persons endowed with Murugan's Grace | ![]() |
முருகனின் அருள்பெற்றோர் முருகன் அருள் பெற்றவர்களே முருகனை நமக்குக் கண்டு காட்டுகிறவர்கள். இலக்கியங்களாலும், இனிய உபதேசங்களாலும் நம்மை முருகன் திருவடிக்கு அழைத்துச்செல்வதால் அவர்களே நமக்கு நல்லாசிரியர்கள். அவர்களில் சிலரைப்பற்றி இங்கே அறிந்துகொள்வோம். |
அகத்தியர் இவர் செந்தமிழ் முனிவர். ஸ்ரீ கந்தமூர்த்தி செந்தமிழ் நாட்டை அகத்தியருக்குக் கொடுக்க, அகத்தியர் பாண்டியனுக்குக் கொடுத்தார் என்று திருநெல்வேலித் தலபுராணம் கூறுகிறது. ஒரு காலத்து நைமிசாரணிய முனிவர்கட்கும் அகத்தியருக்கும் கருத்து மாறுபாடு விளைந்தது. அதனால் நைமிசாரணிய வனத்தைவிட்டு அகத்தியர் பொதியமலையை அடைந்தார். அங்கு ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு கந்தமூர்த்தியை வழிபட்டு வந்தார். ஒருநாள் மாலைக்காலத்தில் தெய்வமணம் வீசியது. அது எதன் மணம் என்று அறியாத அகத்தியர் அறுமுகப்பண்ணவனைப் (முருகனை) பிரார்த்தித்தார். அவனருளால் அது தெய்வத்தமிழ் மணம் என்று சிந்தை தெளிந்து அறுமுகப் பெருமானையே ஆசானாகக்கொண்டு ஓதியுணர்ந்து இலக்கணமும் தந்து எழில்பெறத் தமிழை வளர்த்தார். சிவபெருமான் .. திருக்கல்யாணத்தின்போது தெற்கு (தமிழ் நாடு) நோக்கி வந்த அகத்தியர், கிரவுஞ்ச மலையின் மாயையில் சிக்குண்டு தவித்தார். பிறகு சிவபெருமான் திருவருளால் தெளிந்து "ஏ கிரவுஞ்சமே, அரண் அடிமையைகிய என்னை மயக்கியமையால் நீ குமாரக்கடவுளின் வேலாயுதத்தால் பிளப்புண்ணுக" என்று சாபங்கொடுத்தார். அங்ஙனமே குமாரக்கடவுள் கிரவுஞ்ச மலையைப் பிளந்தார் என்பது காசிகாண்ட வரலாறு. கொல்லாபுரத்தில் அகத்தியர், திருமகளை 'எல்லாச் செல்வமும் தந்தருளுக' என வேண்டிப் பூசித்தார். திருமகள் அவர்முன் எழுந்தருளி உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் குமரவேளே கொடுப்பார் எனக் கூறி மறைந்தனள். அகத்தியர் அங்ஙனமே குமரவேளை வழிபட்டு எல்லாச் செல்வமும் எய்தினர். |
நக்கீரர் கடைச்சங்கப் புலவராய் வீற்றிருந்து இறையனாரகப் பொருளுரை முதலியன கண்டு, தமிழுக்குப் பெரும் பணி புரிந்தவர். சிவபூசை செய்யும்போது சிந்தை சிறிது புறம்போக, அதனால் சிறைப்பட்டு, திருமுருகாற்றுப்படை பாடி, முருகன் அருளால் விடுதலை பெற்றார். இதுவே சிறைவீடு செய்த பாட்டாக இம்மை மறுமை இன்பங்களைப் பயக்கும் எளிய சாதனமாக இயங்குவதை இன்றைய உலகம் அறிந்து பயன்படுத்தி வருகிறது. இவர் வரலாற்றின் விரிவைத் திருவிளையாடற்புராணத்தில் கீரனைக் கரையேற்றிய படலத்தும், சீககாளத்திப் புராணத்தும் நன்கு அறியலாம். திருமுருகாற்றுப்படை |
பாரதம் பாடிய பெருந்தேவனார் குறுந்தொகையில் கடவுள் வாழ்த்தாக முருகனைப் புகழ்ந்துபாடி இருமையின்பமும் எய்தினர். |
ஒளவையார் முருகனால் சுட்டப்பழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா என்று நகையாடி வினவப்பெற்று நல்ல பயனைப் பெற்றார். |
பொய்யாமொழிப் புலவர் முருகனாகிய முட்டையைப் பாடி அவர் பேரருளில் திளைத்தமையைத் தொண்டை மண்டலசதகம் விளக்கும். |
அருணகிரி நாதர் திருவண்ணாமலையில் வடக்குக் கோபுரத்துக்கு அருகில் உள்ள முருகன் கோயிலில் பன்னெடுநாட்கள் பாடு கிடந்து, முருகன் எழுந்தருளியுள்ள தலங்கள் அவ்வளவுக்கும் சந்தப்பாமாலை சாத்தி நாட்டை உய்வித்தார். ஸ்ரீ அருணகிரிநாதர் அருளியவை: திருப்புகழ் (1327 பாடல்கள்) ![]() கந்தர் அநுபூதி ![]() கந்தர் அந்தாதி ![]() வேல் விருத்தம் ![]() மயில் விருத்தம் ![]() சேவல் விருத்தம் ![]() கந்தர் அலங்காரம் ![]() திருவகுப்பு ![]() திருவெழுகூற்றிருக்கை ![]() மங்கள ஆரத்தி ![]() |
திருச்செந்தூர் வென்றிமாலைக் கவிராயர் இவர் திருச்செந்தூரில் தோன்றி, முருகன் அருளால் 'வென்றிமாலைக் கவிராயர்' என்ற பட்டமும் தாங்கி, திருச்செந்தூர்ப் புராணமும் இயற்றி வன்மையைச் செந்தமிழ்நாடு தெள்ளிதின் அறியும். |
கச்சியப்ப சிவாச்சாரியர் காஞ்சி குமரகோட்ட காளத்தியப்ப சிவாச்சாரியருடைய குமாரர். முருகனால் கந்தபுராணம் பாடுக என ஆணையிடப்பட்டவர். இவருடைய புராணத்துக்கு முருகனே 'திகடசக்கர' என அடியெடுத்துக் கொடுத்தார். கந்தப்புராணத்தை அரங்கேற்றும் பொழுது 'திகழ் தசக்கரம்' எனப் பிரித்து உரை விளக்கினார். அவையில் இருந்த புலவர் 'இதற்குப் புணர்ச்சி விதி யாது' என வினவ, முருகனே புலவராக எழுந்தருளி வீரசோழிய விதியைக்கொண்டு அமைதி வகுத்தனர் என்ப. கந்த புராணம் |
குமரகுருபரர் ஸ்ரீ வைகுண்டத்தில் சண்முகசிகாமணிக் கவிராயருக்கு அருமை மகவாகத் தோன்றியவர். ஐந்தாண்டு வரையில் ஊமையாக இருந்து முருகனருளால் ஊமை நீங்கப்பெற்று, கந்தர் கலிவெண்பா இன்னும் சாத்திர தோத்திர நூலை இயற்றியவர். பல செந்தமிழ்ச் சிறுநூல்களை ஆக்கித் தந்தவர். இடமிடங்கள் தோறும் கந்தக் கடவுள் கருணையை விளக்கும் கவிதைநலம் சிறக்கப்பெற்றவர். ஸ்ரீ காசி மடத்து முதல்வர். கந்தர் கலி வெண்பா ![]() |
தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டிக் கவசம் என்ற பாராயண நூலைப் பகர்ந்தவர். மக்களுக்கு இன்றியமையாத நலங்கள் பலவற்றையும் முருகன் நல்லருள் கொடுக்குமென்று இந்நூல் கூறுகிறது. முருகனுடைய ஆறெழுத்தருமறை இந்நூலுள் பலவிடங்களிலும் பலமுறைகளிள் மாற்றி அமைக்கப்பெற்றுள்ளது. கந்தர் சஷ்டிக் கவசம் ![]() |
ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் திருவருட்பா வாயிலாக செந்தமிழ் நாடு இவரை நன்கு அறியும். எங்கெல்லாம் அன்புவெள்ளமும் அருள் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அங்கெல்லாம் இராமலிங்க சுவாமிகளுடைய அருட்பா முழங்கிக் கொண்டிருக்கும். இவர்கள் பிள்ளைமைப் பருவத்து, நிலைக்கண்ணாடியிலே முருகன் உருவம் முழுவதையும் தரிசித்தார்கள் என்பது வரலாறு. இவர்களுடைய கந்தக்கோட்டப் பதிகம் முருகன் அருள் பெறுவார்க்குச் சிறந்த துணை. |
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் யாழ்ப்பாணத்திலே தோன்றியவர். பாம்பனிலே வசித்தமையால் பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பெற்றார். இவருடைய இயற்பெயர் குமரகுருநாத சுவாமிகள் என்பது. சிறந்த முருகனடியவர். இவர் செய்த அற்புதங்கள் மிகப்பல. முருகனைப் பற்றி ஆயிரக்கணக்கான பாடல்களை அருளிச் செய்துள்ளார். சண்முகக் கவசம் சிறந்த பாராயாண நூல். மயூரபந்தம் இவர் எடுத்துக்கொடுத்த புதுமையான சித்திரக்கவி. இவருடைய மொழிகள் ஒவ்வொன்றிலும் முருகப்பெருமானுடைய திருவருட்பொலிவு இன்றும் இருப்பதைக் காணலாம். ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் சரித்திர சுருக்கம் சண்முகக் கவசம் குமாரஸ்தவம் ![]() பகை கடிதல் ![]() பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் திருவடித் துதி ![]() திருவலங்கற்றிரட்டு ![]() ஸ்ரீ சண்முக நாமாவளி சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1 சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2 |
தண்டபாணி சுவாமிகள் திருவாமாத்தூரில் தோன்றியவர். முருகனருளால் பல்லாயிரக்கணக்கான பாடல்களைச் செய்தவர். புலவர் புராணம், திருவலங்கல்திரட்டு முதலிய சிறந்த நூல்கள் இவரால் செய்யப்பெற்றவை. |
இவ்வண்ணம் இஞ்ஞான்றும் முருகக் கடவுளை வழிபட்டு இருமையின்பங்களையும் எய்தினோர் பலராவர். செவ்வாய்க் கிரகத்தின் ஆட்சித்தானமாகிய செந்தமிழ்நாட்டில் செவ்வேள் என்றும் கண்கண்ட தெய்வமாக விளங்குவதைக் கண்டு காட்டுபவர்கள் இவர்களே. (நன்றி ... குமாரகோவில் விசாக புஷ்பம்). |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |