Sri SendhilAndavanKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees
ஸ்ரீ குமர குருபரர்
திருச்செந்தூர்
கந்தர் கலி வெண்பா


Sri Kumaraguruparar
ThiruchchendhUr
Kandhar Kali VenpA
Murugan with Valli and Devayanai
 முகப்பு   PDF   தேடல் 
home English version search
      இப்பாடலின் ஒலிப்பதிவு   audio recording for this song      
L. Vasanthakumar M.A. பாடலைப் பதிவிறக்க 

 to download page 


Anandhi Rathinavelu பாடலைப் பதிவிறக்க 

 to download page 


ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய   'திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா'

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் .. தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் .. ஆதிநடு ...... 1

அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் .. வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் .. அறிவுக்கு ...... 2

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் .. தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் .. எஞ்சாத ...... 3

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் .. தாரணியில்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் .. முந்தும் ...... 4

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் .. திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால் இலய
போகஅதி காரப் பொருளாகி .. ஏகத்து ...... 5

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் .. இருள்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் .. தேகமுறத் ...... 6

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து .. மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து .. மாறிவரும் ...... 7

ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் .. தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்
சென்மித்து உழலத் திரோதித்து .. வெந்நிரய ...... 8

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் .. தர்க்கமிடும்
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து .. முன்னூல் ...... 9

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாயோகம் சார்வித்து .. அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து .. நால்வகையாம் ...... 10

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் .. பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி .. உலவாது ...... 11

அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் .. பிரியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு .. திருநோக்கால் ...... 12

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் .. பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் .. பூணும் ...... 13

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி .. முடியாது
தேக்குபர மானந்தம் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் .. போக்கும் ...... 14

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்துலவா இன்பம் .. மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் .. மின்னிடத்துப் ...... 15

பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி .. மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் .. பெருகியெழு ...... 16

மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் .. தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்தம் முடியாக .. ஞானம் ...... 17

திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா .. இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே .. மின்னுருவம் ...... 18

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் .. தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் .. விண்ட ...... 19

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் .. பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் .. நிலவுமிழும் ...... 20

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் .. வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் .. எவ்வுயிர்க்கும் ...... 21

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் .. சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் .. விடுத்தகலாப் ...... 22

பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் .. நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் .. தாகமுடன் ...... 23

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் .. கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் .. ஆரமுதம் ...... 24

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும் .. ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் .. மார்பகத்தில் ...... 25

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் .. மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் .. தெறுபோர்...... 26

அதிர்கே டகம் சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் .. முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட் டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் .. பைம்பொன் ...... 27

புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் .. திருவரையும்
நாதக்கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் .. சோதி ...... 28

இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் .. உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே .. ஓதியஐந்து ...... 29

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே .. தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் .. பந்தனையால் ...... 30

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா .. வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் .. பலகோடி ...... 31

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் .. தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே .. மேவ ...... 32

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே .. பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் .. சுகலளிதப் ...... 33

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் .. பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் .. தொல்லுலகில் ...... 34

ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்து ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் .. ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் .. வாய்ந்தசிவ ...... 35

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் .. காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் .. சந்ததமும் ...... 36

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைத்தருளும் ஆணையும் .. தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே .. தேசுதிகழ் ...... 37

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி .. ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் .. தந்து ...... 38

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப .. விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் .. அங்கண் ...... 39

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் .. அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் .. போதொருசற்று ...... 40

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் .. முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் .. குறுமுறுவல் ...... 41

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் .. தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் .. செய்ய ...... 42

முகத்தில் அணைத்துச் சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் .. சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே .. கிள்ளைமொழி ...... 43

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து .. தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு .. நெருப்பிலுதித்து ...... 44

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கடா அதனைச் சென்று கொணர்ந்து .. எங்கோன்
விடுக்குதி என்று உய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்டிக்கும்
நடத்தி விளையாடும் நாதா .. படைப்போன் ...... 45

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தொன்று
உகந்த பிரணவத்தின் உண்மை .. புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்கன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே .. மட்டவிழும் ...... 46

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே .. கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே .. சீரலைவாய்த் ...... 47

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து .. வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் .. சயேந்திரனாம் ...... 48

சூரனைச் சோதித்துவரு கென்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே .. காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் .. பானு ...... 49

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் .. சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் .. போரவுணன் ...... 50

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் .. அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே .. மாறிவரு ...... 51

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மேலோனே .. மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே .. மறைமுடிவாம் ...... 52

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே .. பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் .. பூமருவு ...... 53

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து .. மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே .. உள்ளம் உவந்து ...... 54

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே .. நாறுமலர்க்
கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்தில் பதிபுரக்கும் செவ்வேளே .. சந்ததமும் ...... 55

பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் .. பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமும் தீ நீரும் பொருபடையும் .. தீது அகலா ...... 56

வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் .. அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் .. கச்சைத் ...... 57

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் .. விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற .. வந்திடுக்கண் ...... 58

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து .. பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் .. ஓசை ...... 59

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து .. ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் .. தம்மைவிடுத்து ...... 60

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் .. சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள். ...... 61

        திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று.

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல்   பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 

ThiruchchendhUr Kandhar Kali VenpA by Sri Kumaraguruparar


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.
Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY.

[fbk]   [xhtml] . [css]