| சொல்லரிய சின்மயமாச் சொல்லவுள்ள பூரணமாம் வல்லவனை நான் கூடி வாழ்வேனோ பொன் மயிலே! ... ... ... ... 1
வேதமுதலா விளங்கும் அருளிறை என் காதறணிக்க வரக்காண்பேனோ பொன் மயிலே! ... ... ... ... 2
உருவருவ மென்னும் உவளகமுமில்லா ஒருவனையே கூடி இனி உய்வேனோ பொன் மயிலே! ... ... ... ... 3
பேரூர் பிறப்பு நசை பெற்றார் பிறந்தாரும் தாரமுமிலாதவனை சார்வேனோ பொன் மயிலே! ... ... ... ... 4
மட்டுப்படாதவருள் வள்ளலெனவே இருந்தும் தட்டுப்படாதவனைச் சார்வேனோ பொன் மயிலே! ... ... ... ... 5
ஈரமிக வைத்துலகமெங்கும் உயிர்க்குயிராய்த் தாரகமாய் நிற்போனை சார்வேனோ பொன் மயிலே! ... ... ... ... 6
ஏசற்ற சின்மயத்தை யெய்தக் குமரகுரு தாசர்க் கருள்பவனைச் சார்வேனோ பொன் மயிலே! ... ... ... ... 7
அயிலைப்பிடித்தானை யம்பரமாள் கோனைக் கயிலைப்பதியானைக் காண்பேனோ பொன் மயிலே! ... ... ... ... 8
என்னையறியாமல் என்னைதிருடி இன்பு தன்னைக்கொடுப்பவனைச் சார்வேனோ பொன் மயிலே! ... ... ... ... 9
நாபியுடை எவ்வுயிர்க்கு நாயகனாயாதியில்லா நாபியுள்ள வெம்மிறையை நண்ணுவனோ பொன் மயிலே! ... ... ... ... 10
உள்ளத்தில் உள்ளுநரை யோர்ந்தணைந் திங்கு ஆளுமிறை தள்ளாதெனைக்கொளுமோ சாற்றாய் நீ பொன் மயிலே! ... ... ... ... 11
நேசமுளோரெவ்வருக்கு நித்த சுகங்கொடுக்கும் தேசுடையானிங்கெனக்குஞ் சிக்குவனோ பொன் மயிலே! ... ... ... ... 12
தேடக்கிடையாத செல்வமுடையானை இனிக் கூடி நனி வாழ்வனோ கூறாய் நீ பொன் மயிலே! ... ... ... ... 13
தேடுவார்க்கின்பம் தெவிட்டப்பகுப்பவனை கூடுவதெக்காலம் குயில்வாய் நீ பொன் மயிலே! ... ... ... ... 14
எந்தலைவனாமிறைவன் எல்லார்க்கும் தாமிறைவன் வந்தருள்வ தெந்நாள் வழுத்தாய் நீ பொன் மயிலே! ... ... ... ... 15
சித்திரத்தினும் பொறிக்கவொண்ணாத் திருவழகை சித்தத்தினாலணைந்தால் தீருமோ பொன் மயிலே! ... ... ... ... 16
கண்டுகளித்தெம்மிறையை காதலறவே கூடிக் கொண்டிருந்தாலன்றோ கொடுக்குமின்பம் பொன் மயிலே! ... ... ... ... 17
நீடுஞ் சிரகிரிமே நிற்கும் மணிமண்டபத்தின் மேடைதனி லெம்மிறையை மேவுவனோ பொன் மயிலே! ... ... ... ... 18
வருவானோ வாரானோ வென்னுமோ ரையம் கருகவொரு நிச்சயந்தான் காட்டாயோ பொன் மயிலே! ... ... ... ... 19
தேம்பெருகு சந்தமத்தர் தேடியிட மார்க்கமின்றிச் சாம்பலிட்டு மையறந்த சாமியெங்கே பொன் மயிலே! ... ... ... ... 20
என்னை மறவாது இருத்தியெனக் கைம்மருந்து தன்னையிட்ட சாமி சதி செய்வானோ பொன் மயிலே! ... ... ... ... 21
நாட்டமிருக்கவென்று மாயத்தூள்போட்ட துரை யென்னைவிட்டுப்போனதென்னை பொன் மயிலே! ... ... ... ... 22
பூமணத்தை நாடாமற் போட்ட பொடிக்காரனின்னந் தாமதந்தான் செய்தாற் சகிப்பேனோ பொன் மயிலே! ... ... ... ... 23
கட்டிக்கொள்வேன் எனவே கைப்பரிசமிட்ட துரை எட்டிப்பாரா திருப்ப தென்னேயோ பொன் மயிலே! ... ... ... ... 24
மந்திரங்கார்மையில் வசப்படானைப்பிடிக்கத் தந்திரமதொன்றெனக்குச் சாற்றாய் நீ பொன் மயிலே! ... ... ... ... 25
கட்டழகன் எங்கோன் கமல சரணானை எட்டிப்பிடிக்க வகையில்லையோ பொன் மயிலே! ... ... ... ... 26
தன்னந்தனிப் பெரியசாமி வசப்படுமாறு என்ன மருந்திடலாமீண்டுரையாய் பொன் மயிலே! ... ... ... ... 27
தேவாதி தேவன் சிவஞான தேசிகனை வாவென்றழைத்து வரமாட்டாயோ பொன் மயிலே! ... ... ... ... 28
இரவுபகலாகவிங்கே யெண்ணியுழல் பாங்கைத் துரைமகனாரிடம் போய் நீ சொல்லாயோ பொன் மயிலே! ... ... ... ... 29
அத்தனரு மறையோ னண்ட நிரையெல்லாமாள் வித்தகனுக்குக் கென்னை நீ விளம்பாயோ பொன் மயிலே! ... ... ... ... 30
திக்கனைத்தும் போற்றவுள்ள சித்தாந்த முத்தையற்குப் பக்குவப்பட்டேனென நீ பன்னாயோ பொன் மயிலே! ... ... ... ... 31
வேலைபிடித்த செங்கை வேந்தையழைக்க வுன்றன் காலைப்பிடித்தேனென் காதலால் பொன் மயிலே! ... ... ... ... 32
அம்பரமதான வெங்கள்அண்ணல்திருவடியைக் கும்பிட்டேனென்று சொல்லிக்கூட்டிவா பொன் மயிலே! ... ... ... ... 33
வீட்டுக்குட் தங்கி வெளிப்படா மன்னவனைக் கூட்டிக் கொடுப்பலென்று கூட்டிவா பொன் மயிலே! ... ... ... ... 34
பொன்னாசை, பெண்ணாசை பூவாசை நாடேனீ என்னாசை நாதற்கியம்பிடாய் பொன் மயிலே! ... ... ... ... 35
சாவு பிறப்பென்னுந் தடங்கடலில் வீழ்ந்தேனான் காவலனுக்கோதாய் கரையேற்றப் பொன் மயிலே! ... ... ... ... 36
சித்தமிக வழுங்கிச்சீர்மை குலைந்திடுமுன், முத்திகொடு வென்றே மொழியவற்குப் பொன் மயிலே! ... ... ... ... 37
ஆராய வொண்ணா வகண்ட சிவனுக்கெனது பூராய மெல்லா நீ போதிப்பாய் பொன் மயிலே! ... ... ... ... 38
ஒப்பில் பரவெளியிலுள்ள பரசிவத்தைத் துப்பு நவின் றிங்கழைக்கத் தூதுபோ பொன் மயிலே! ... ... ... ... 39
இன்பக்கடல் படிந்த வெந்தை யருணகிரி அன்புக்கிசைந்தவனை யாளவுரை பொன் மயிலே! ... ... ... ... 40
| |
|