| பாகம் 4 - சர்க்கரை (பட்டியலுக்கு)
நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம். அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.
4 - 1
மாதமும் தின வாரமும் திதி யோகமும் பல நாள்களும் படர் மாதிரம் திரி கோள்களும் கழல் பேணும் அன்பர்கள் பால் நலம் தர
வற்சலம் அதுசெயும் அருட்குணா சிறந்த விற்பனர் அகக்கணா மற்புய அசுரரை ஒழித்தவா அனந்த சித்துரு எடுத்தவா
மால் அயன் சுரர்கோனும் உம்பர் எலாரும் வந்தனமே புரிந்திடு வானவன் சுடர் வேலவன் குரு ஞான கந்தபிரான் எனும்படி
மத்தக மிசைமுடி தரித்தவா குளிர்ந்த கத்திகை பரித்தவா மட்டறும் இகல் அயில் பிடித்தவா சிவந்த அக்கினி நுதற்கணா . . . . . . சிவகுரு எனும் நாதா.
......... பதவுரை .........
மாதமும் தினம் வாரமும் திதி யோகமும் - மாதம், நாள், வாரம், திதி மற்றும் யோகம்
பலநாள்களும் படர்மாதிரம் திரி கோள்களும் - பல நட்சத்திரங்களும் வானத்தில் உலவுகின்ற கிரகங்களும்,
கழல் பேணும் அன்பர்கள் பால் நலம் தர - உன் திருவடியை சரணாகதி அடைந்த அன்பர்கட்கு இவை யெல்லாம் நன்மை செய்ய
வற்சலம் அது செயும் அருட்குணா - பேரன்பு புரியும் அருள் உடையவனே
சிறந்த விற்பனர் அகக்கணா - கற்றறிந்த பெரியோரின் உள்ளத்தில் உலவுகின்றவனே
மற்புய அசுரரை ஒழித்தவா - வலிமைகொண்ட தோள்களுடைய அரக்கரை அழித்தவனே
அனந்த சித்துரு எடுத்தவா - அளவில்லா ஞானத் திருமேனி எடுத்தவனே
மால் அயன் சுரர்கோனும் உம்பர் - திருமால், பிரமன், இந்திரன் மற்றும் தேவர்கள்
எலாரும் வந்தனமே புரிந்திடு வானவன் - யாவரும் வணங்கும் தேவாதிதேவன்
சுடர்வேலவன் குரு ஞான கந்தபிரான் எனும்படி - ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, குருவே, கந்தப் பெருமானே எனும்படி
மத்தகமிசை முடி தரித்தவா - கிரீடத்தை சூட்டிக் கொண்டவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா - சில்லென்ற கடம்ப மாலைகளை (மார்பினில்) சுமந்தவனே (கத்திகை - கடம்பு, பரித்தல் - சுமத்தல்)
மட்டு அறும் இகல் அயில் பிடித்தவா - எல்லையில்லாத பெருமையை உடைய வேலைப் பிடித்தவனே
சிவந்த அக்கினி நுதற் கணா - செந்தழலை கண்ணாக நெற்றியில் உடையவனே
சிவகுருஎனும் நாதா - பரமசிவனுக்கும் குருவான தலைவனே
4 - 2
நாத இங்கித வேதமும் பல் புராணமும் கலைஆகமங்களும் நாத உன் தனி வாயில் வந்தனவே எனுந்துணிபே அறிந்தபின்
நச்சுவது இவண்எது கணித்தையோ செறிந்த ஷட்பகை கெடுத்துமே நட்புடை அருளமிழ்து உணில் சதா சிறந்த துத்தியை அளிக்குமே
நாளும் இன்புஉயர் தேனினும் சுவை ஈயும் விண்டலமே வரும் சுரர் நாடியுண்டிடு போஜனம் தனி லேயும் விஞ்சிடுமே கரும்பொடு
நட்டம் இன் முப்பழ முவர்க்குமே விளைந்த சர்க்கரை கசக்குமே நற்சுசி முற்றிய பயத்தொடே கலந்த புத்தமு தினிக்குமோ . . . . . . அதை இனி அருளாயோ.
......... பதவுரை .........
நாத இங்கித வேதமும் பல் புராணமும் - இனிமையான இசையுடைய வேதமும், பலவகை புராணங்களும்
கலை ஆகமங்களும் நாத உன் தனி வாயில் வந்தனவே - மற்ற கலைகளும் ஆகமங்களும் உன் திருமுகத்திலிருந்து தோன்றியவையே
எனும் துணிபே அறிந்த பின் - என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்ட பின்னர்
நச்சுவது இவண் எது கணித்தையோ - எப்பொருளை மதித்து பெருமையாகக் கூறுவது
செறிந்த ஷட்பகை கெடுக்குமே - ஆறு துர்க்குணங்களை அழித்து
நட்புடை அருள் அமிழ்து உணில் - நீ அன்புடன் கொடுக்கும் அமுதத்தை உண்டால்
சதா சிறந்த துத்தியை அளிக்குமே - அனவரதமும் ஆனந்தத்தை கொடுக்குமே
நாளும் இன்பு உயர் தேனினும் - தினமும் தேனினும் சிறந்த
சுவை ஈயும் விண்டலமே வரும் - சுவையைத் தரும் விண்ணுலகில் வாழும்
சுரர் நாடி உண்டிடு - தேவர்கள் விரும்பி உண்ணும்
போஜனம் தனிலேயும் விஞ்சிடுமே - உணவாகிய அமுதத்தையும் மிஞ்சிவிடும்;
கரும்பொடு விளைந்த சர்க்கரை கசக்குமே - கரும்பிலிருந்து வந்த சர்க்கரை கூட கசப்பாகும்
நட்டமின் முப்பழம் உவர்க்குமே - மேலும் குற்றமில்லாத முக்கனிகளும் சுவை தாரா
நற்சுசி முற்றிய - தூய நல்ல
பயத்தோடே கலந்த புத்தமுது இனிக்குமோ - பாலில் ஆக்கிய சோறும் தான் தித்திக்குமோ
அதை இனி அருளாயோ - அந்த மேலான அமுதத்தை நீ எனக்குத் தர மாட்டாயோ ?
4 - 3
பூதலம் தனிலேயு (ம்) நன்கு உடை மீதலம் தனி லேயும் வண்டு அறு பூ மலர்ந்தவு னாத வம்பத நேயம் என்பதுவே தினம் திகழ்
பொற்புறும் அழகது கொடுக்குமே உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே பொய்த்திட வினைகளை அறுக்குமே மிகுந்த சித்திகள் பெருக்குமே
பூரணம் தருமே நிரம்பு எழில் ஆதனம் தருமேஅணிந்திடு பூடணம் தருமே இகந்தனில் வாழ்வதும் தருமே உடம்பொடு
பொக்கறு புகழினை அளிக்குமே பிறந்து செத்திடல் தொலைக்குமே புத்தியில் அறிவினை விளக்குமே நிறைந்த முத்தியும் இசைக்குமே . . . . . . இதைநிதம் உதவாயோ.
......... பதவுரை .........
பூ தலம் தனிலேயும் - பூமியிலும், நன்கு உடை மீ தலம் தனிலேயும் - மேன்மை தங்கிய விண்ணுலகிலும்
வண்டுஅறு பூ மலர்ந்தவு நாத வம் பத - வண்டு மொய்க்காத மலர்கள் போன்றதும், அணிகளினால் ஒலி செய்வதுமான திருவடிகள் மீது
நேயமென்பதுவே தினம் திகழ் - ஏற்படும் அன்பு அனவரதமும் விளங்கும்
பொற்புறும் அழகது கொடுக்குமே - பொலிவுறும் அழகைக் கொடுக்கும்
உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே - ஓங்கிய புகழைக் கொடுக்கும்
பொய்த்திட வினைகளை அறுக்குமே - இரு வினைகளைக் களையும்
மிகுந்த சித்திகள் பெருக்குமே - உயர்ந்த சித்திகள் அளிக்குமே
பூரணம் தருமே நிரம்பு எழில் - முழுமையைத் தரும் அழகுடன்
ஆதனம் தருமே அணிந்திடு பூடணம் தருமே - செல்வமும் தரும், ஆபரணங்களையும் தரும்
இகந்தனில் வாழ்வதும் தரும் உடம்பொடு - இந்த உலகத்தினில் இந்த உடலிலேயே நல்ல வாழ்வைத் தரும்
பொக்கு அறுபுகழினை அளிக்குமே - நல்ல புகழைக் கொடுக்கும்
பிறந்து செத்திடல் தொலைக்குமே - ஜனன மரணத்தை அழிக்கும்
நிறைந்த முக்தியை இசைக்கும் - அதனால் கூடிவரும் முக்தியை கொடுக்கும்
இதை நிதம் உதவாயோ - இதை நீ தினமும் அளித்து உதவி புரிய மாட்டாயா?
4 - 4
சீதளம் சொரி கோதில் பங்கயமே மலர்ந்திடு வாவி தங்கிய சீர் அடர்ந்தவிர் ஆவினன்குடி ஏரகம் பரபூத ரம்சிவ
சித்தரும் முனிவரும் வசித்த சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய் செற்கணம் உலவிடு பொருப்பெலாம் இருந்து அளித்தருள் அயில் கையா
தேன் உறைந்திடு கான கந்தனில் மானிளம் சுதையால் இரும் சரை சேர் உடம்பு தளாட வந்த சன்யாச சுந்தரரூப அம்பர
சிற்பர வெளிதனில் நடிக்குமா அகண்ட தத்துவ பரத்துவா செப்பரும் ரகசிய நிலைக்குளே விளங்கு தற்பர திரித்துவா . . . . . . திருவளர் முருகோனே.
......... பதவுரை .........
சீதளம் சொரி கோது இல் பங்கயமே - குளிர்ந்த குற்றமற்ற தாமரை
மலர்ந்திடு வாவி தங்கிய சீர் அடர்ந்தவிர் - மலர்ந்திடும் குளங்கள் மிகுந்துள்ள
ஆவினன்குடி, ஏரகம், பரபூதரம், - திருவாவினன்குடி, திருவேரகம், திருப்பரங்குன்றம் மற்றும்
சிவ சித்தரும் முனிவரும் வசித்த - சிவ சித்தர்களும் முனிவர்களும் உறையும்
சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய் - பழமுதிர்சோலையும், கடல் அலைகள் பொங்கும் சீரலைவாயும்
செற்கணம் உலவிடு பொருப்பெலாம் - மேகங்கள் உலாவருகின்ற குன்றுதோராடலிலும்
இருந்தளித்தருள் அயில் கையா - எழுந்தருளி அருள்செய்யும், கையில் வேல் ஏந்தியவனே
தேன் உறைந்திடு கானகந்தனில் - தேன்நிறைந்த மலர்கள் உள்ள காட்டினில்
மான் இளம் சுதையால் - மான் ஈன்ற பெண்ணாகிய வள்ளியை மணக்க
இரும் சரை சேர் உடம்பு தள்ளாட - நரை விழுந்த உடம்பு தள்ளாடி
வந்த சன்யாச சுந்தர ரூப அம்பர - வந்த அழகான துறவியே
அம்பர சிற்பர வெளி தனில் நடிக்கும் மா - வானமாகிய ஞானப் பெருவெளியில் நாடகமாடும் பெரிய
அகண்ட தத்துவ பரத்துவா - முழுமையான தத்துவ பரமாத்மனே
செப்பரும் ரகசிய நிலைக்குள்ளே - கூறுவதற்கு அரிதான தகராலயத்திலே உள்ள குகையில்
விளங்கு தற்பர திரித்துவா - நிலை கொண்டவனே
திருவளர் முருகோனே - உன் அருளை வளரச் செய்பவனே முருகனே.
| |
|