(புற்றிடங் கொண்ட)
புற்றிடங் கொண்ட புத்தேள் புரந்தரற் கருள்செய் திட்ட
நற்றலந் தன்னைச் சேர்ந்த நகரமுள் ளனவுங் காணூஉக்
கொற்றவெங் கதிர்வேல் அண்ணல் கொல்லுலை அழலிற் செக்கர்
பற்றிய இரும்பு போலும் பாலையங் கானத் துற்றான். ......
1வேறு(ஏழு நேமியும்)
ஏழு நேமியும் பெரும்புறக் கடலுமெண் டிசையுஞ்
சூழ அன்னதால் அழிவின்றித் தொன்மைபோ லாகி
ஆழி யுள்ளுறும் வடவையின் அவற்றினைப் பருகி
ஊழி தன்னினும் இருப்பதவ் வுயர்பெரும் பாலை. ......
2(அண்டர் நாயகன் உலக)
அண்டர் நாயகன் உலகடும் மகந்தனக் காகும்
பண்ட மேசெறி பல்வளம் ஆருயிர் பசுக்கள்
மண்டு நேமிநெய் நிலங்கல மாயுற மலர்தீக்
குண்ட மாயது கள்ளிசூழ் கொடியவெம் பாலை. ......
3(வண்ண ஒண்சுதை)
வண்ண ஒண்சுதை மெய்யுடை வரநதி கேள்வன்
நண்ணு தொல்லுல காகியே நரலையுற் றென்னத்
தண்ணி லாவெழு நாத்தலை இரண்டுடைத் தழலின்
பண்ண வற்குல காயது முதுபெரும் பாலை. ......
4(உடைய தொல்)
உடைய தொல்குலக் கேண்மையால் அவ்வனத் துறையுங்
கொடிய வன்னிபாற் சென்றதோ வெப்பமேல் கொண்டு
நடுந டுங்கிவெம் புகையுமிழ்ந் தரற்றிநா வுலர்ந்து
கடல்ப டிந்துநீர் பருகுமால் வடவையங் கனலே. ......
5(கற்றை யங்கதிர்)
கற்றை யங்கதிர்ப் பரிதியும் மதியுமக் கானஞ்
சுற்றி யேகுவ தல்லது மிசைபுகார் சுரரும்
மற்று ளார்களும் அனையரே எழிலியும் மருத்தும்
எற்றை வைகலும் அதன்புடை போகவும் இசையா. ......
6(சேனம் வெம்பணி)
சேனம் வெம்பணி ஒண்புறா விரலைமான் செந்நாய்
ஆனை யாதிகள் அவ்வனத்திருக்கவும் ஆவி
போன தில்லையால் அங்கியிற் றோங்கிய பொருள்கள்
மேனி கன்றுவ தன்றியே விளியுமோ அதனால். ......
7(எண்ணி னுஞ்சுடும்)
எண்ணி னுஞ்சுடும் பாலையங் கானிடை எழுந்த
கண்ண கன்புகை அழல்படு கின்றகாட் சியவே
விண்ணின் நீலமுஞ் செக்கரும் அவற்றினால் வெடித்த
புண்ணும் மொக்குளுங் கதிர்களும் உடுக்களும் போலாம். ......
8(வேக வெய்யவன்)
வேக வெய்யவன் புடையுறா தவ்வன மிசையே
போக வோரிறை எழுந்தழல் சுட்டது போலும்
ஏகு தேரொரு காலிலா திழந்ததால் இருகால்
பாகி ழந்தனன் அவன்கதிர் அங்கிபட் டனவே. ......
9(தங்கள் தொல்பவம்)
தங்கள் தொல்பவம் அகன்றிலா விண்ணவர் தம்மைத்
துங்க முத்தியின் பொருட்டினால் அடைபவர் தொகைபோல்
அங்கம் நொந்துதம் போலவே வெப்பமுற் றயருங்
கங்கம் நாடியே நீழலுக் கடைவன கலைகள். ......
10(கோல வெங்கதிர்)
கோல வெங்கதிர் மதியிவர் வைகலுங் கொடிய
பாலை வெஞ்சுரத் தாரழல் வெம்மைபட் டனரோ
காலை தன்னினும் மாலையம் பொழுதினுங் கங்குல்
வேலை தன்னிலும் பிறவினும் வேலைநீர் படிவார். ......
11(தொடரும் வானவர்)
தொடரும் வானவர் யாவரும் ஐயைதாள் தொழுவார்
கொடிய பாலைமுன் னுணர்கிலா தணுகினர் கொல்லோ
அடிசி வந்தகம் வெம்பியே அமுதமுண் டதற்காப்
படியின் மேலென்றுஞ் செல்கிலர் விண்மிசைப் படர்வார். ......
12(ஒள்ளி தாகிய)
ஒள்ளி தாகிய தலைமையிற் பிறந்துளோர் உலகம்
எள்ளும் நல்குர வெய்தலால் இழிந்தவர் கண்ணுங்
கொள்ளு மாறொரு பயன்குறித் தேகல் போற்கொடிய
கள்ளி தன்புடை நீழலுக் கொதுங்குவ கரிகள். ......
13(இரவி கம்மியன்)
இரவி கம்மியன் சுட்டுறு கோல்கதிர் எரிதீ
மருவு செந்தரை பொறிமணி கொள்கலம் வறுங்கான்
கரிக ளேகரி காற்குழல் துதிக்கைநீர் கானல்
புரித ரும்பணி வெந்திடும் பணிக்குலம் போலும். ......
14(ஆன்ற வான்புவி)
ஆன்ற வான்புவி நதிப்புனல் பாதலம் அதன்கண்
தோன்று நீத்தநீர் யாவையும் ஒருங்குறத் துற்றுச்
சான்ற பாலையஞ் செந்தழல் அப்புனல் தன்னைக்
கான்ற வாறெனக் கிளர்வன அந்நிலக் கானல். ......
15(விஞ்சு கானல்)
விஞ்சு கானல்வெண் டேரினை யாறென விரும்பி
நெஞ்சில் உன்னியே இரலைமான் மடப்பிடி நெடுந்தாட்
குஞ்ச ரந்திரிந் துலைவன கொடியவெம் பணிகால்
நஞ்சு தன்னையும் அருந்துவ ஞமலிநீர் நசையால். ......
16(செய்ய மண்மகள்)
செய்ய மண்மகள் உலப்புறா உந்தியந் தீயாய்
வெய்ய வன்செலற் கரியவப் பாலைமே வுதலான்
மொயயில் வெம்பணி புகையழல் உமிழ்வன முரணும்
மையு றுங்கொடு நஞ்சொடு கான்றசெம் மணிகள். ......
17(முளையின் அஞ்சொரி)
முளையின் அஞ்சொரி முத்தமும் முந்துசெம் பரலும்
அளவில் பாந்தளின் மணிகளும் ஈண்டியே அமர்தல்
விளிவில் அவ்வனத் தீச்சுடத் தனதுமெய் வெடித்தே
உளையும் மண்மகள் மொக்குளுற் றிடுதிறன் ஒக்கும். ......
18(கள்ளி பட்டன)
கள்ளி பட்டன பாலையுந் தீந்தன கரிந்து
முள்ளி பட்டன எரிந்தன குராமரம் முளிந்து
கொள்ளி பட்டன காரகில் அன்னதாற் கொடுந்தீப்
புள்ளி பட்டது போன்றது பாலையம் புவியே. ......
19(இன்ன தாகிய பாலை)
இன்ன தாகிய பாலையஞ் சுரத்திடை இறைவன்
தன்ன தாகிய தானைக ளொடுந்தலைப் படலும்
மின்னு மாமுகில் பொழிந்தபின் தண்ணளி மிக்கு
மன்னு கின்றபூங் குறிஞ்சிபோ லாயதவ் வனமே. ......
20(ஆற்ற ருந்திறல்)
ஆற்ற ருந்திறல் அங்கிதன் அரசியல் முறையை
மாற்றி எம்பிரான் வருணற்கு வழங்கினா னென்ன
ஏற்ற மாகிய வெம்மைபோய் நீங்கியே எவரும்
போற்று நீரொடு தண்ணளி பெற்றதப் புவியே. ......
21(காதல் நீங்கலா)
காதல் நீங்கலா தலமரும் ஆருயிர்க் கரணம்
ஆதி ஈசன தருளினால் அவனதா கியபோல்
ஏது நீரிலா தழல்படு வெய்யகான் இளையோன்
போத லாற்குளிர் கொண்டது நறுமலர்ப் பொழிலாய். ......
22(புறநெ றிக்கணே)
புறநெ றிக்கணே வீழ்ந்துளோர் சிவனருள் புகுங்கால்
அறிவும் ஆற்றலுங் குறிகளும் வேறுபட் டனபோல்
வறிய செந்தழல் வெவ்வனம் வேலவன் வரலால்
நறிய தண்மலர்ச் சோலையாய் உவகைநல் கியதே. ......
23வேறு(நீரறு முரம்பின்)
நீரறு முரம்பின் றன்மை நீங்குமச் சுரத்தின் தன்பால்
ஈரறு புயத்தன் செல்ல எழில்கெழு பரங்குன் றத்தில்
பாரறு தவம்பூண் டுள்ள பராசரன் சிறார்க ளாய
ஓரறு வகைமை யோரும் ஓதியால் அதனைக் கண்டார். ......
24(தத்தனே அனந்தன்)
தத்தனே அனந்தன் நந்தி சதுர்முகன் பரிதிப் பாணி
மெய்த்தவ மாலி என்ன மேவுமூ விருவர் தாமும்
அத்தன தருளை முன்னி அடுக்கலின் இருக்கை நீங்கி
உத்தர நடவை யெய்தி ஒய்யெனப் படர்த லுற்றார். ......
25(ஆர்வல ராகும்)
ஆர்வல ராகும் மைந்தர் அறுவரும் அளகை நேடிப்
பார்வல்வந் தணையு மாபோல் பாலையென் றுரைக்கு மெல்லை
நேர்வரு கின்ற காலை நெடும்படை நீத்தஞ் சூழச்
சூர்வினை முடிப்பான் செல்லுந் தோன்றல்வந் தணிய னானான். ......
26(அணிமையிற் சேயோ)
அணிமையிற் சேயோன் நண்ண ஆறுமா முகமும் பன்னீர்
இணைதவிர் புயமுங் கையும் ஏந்தெழிற் படையின் சீரும்
மணியணி மார்புஞ் செங்கேழ் வான்றுகின் மருங்கும் பாதத்
துணையுமத் துணையிற் கண்டு தொழுதுகண் களிப்புக் கொண்டார். ......
27(மூவிரு திறத்தி)
மூவிரு திறத்தி னோரும் முற்றொருங் குணர்ந்த வள்ளல்
பூவடி வணங்கித் தேனீப் புதுநறா அருந்தி யார்த்து
மேவருந் தன்மைத் தென்ன வியப்பொடு வழுத்தி நின்று
தேவர்கள் தேவ எம்பால் திருவருள் செய்தி யென்றார். ......
28(என்றிவை இரு)
என்றிவை இருமூ வோரும் இசைத்துழி உயிர்கட் கெல்லாம்
ஒன்றிய உயிரு மாகி உணர்வுமாய் இருந்த மூர்த்தி
தன்றிரு மலர்த்தாள் முன்னந் தலையளி யோடு தாழ்ந்து
நின்றுகை தொழுதிட் டன்னோர் நிலைமையை மகவான் கூறும். ......
29(மறுவறு பராச)
மறுவறு பராச ரன்றன் மதலைக ளாகு மின்னோர்
அறுவருஞ் சிறாரே யாகி ஆடுறு செவ்வி தன்னில்
நிறைதரு சரவ ணத்து நெடுந்தடம் புனலிற் பாய்ந்து
முறைமுறை புக்கு மூழ்கி முகேரென அலைக்க லுற்றார். ......
30(உலைத்தலை உணர்)
உலைத்தலை உணர்ச்சி கொள்ள உள்ளுயிர் திரியுமாபோல்
நிலைத்தலை யின்றி யார்க்கும் நீந்தல்செய் குண்டு நீத்தம்
அலைத்தலை யடையும் எல்லை ஆயிடை வதிந்த மீன்கள்
தலைத்தலை யிரிய இன்னோர் தன்மையங் கதனைக் கண்டார். ......
31(அங்கது தெரிந்து)
அங்கது தெரிந்து நின்றோர் ஆண்டுறு மீன்கள் பற்றித்
துங்கம துடைய கோட்டின் சூழலுய்த் துலவு மெல்லைச்
செங்கதி ருச்சி வேலைச் செய்கடன் நிரப்ப உன்னிப்
பங்கமில் நோன்மை பூண்ட பராசரன் அங்கண் வந்தான். ......
32(வள்ளுறை கொண்ட)
வள்ளுறை கொண்ட தெய்வ வான்சர வணத்து வந்தோன்
பிள்ளைக ளாகும் இன்னோர் பிடித்தபுன் றொழிலை நோக்கித்
தள்ளருஞ் சினமேல் கொண்டு தனயர்காள் நீவிர் ஈண்டே
துள்ளுறு மீன மாகிச் சுலவுதி ரென்று சொற்றான். ......
33(அவ்வுரை இறுக்கு)
அவ்வுரை இறுக்கு முன்னர் அறுவரும் மேனாள் ஆற்றும்
வெவ்வினை யூழின் பாலால் மீனுரு வாகி அஞ்சி
எவ்வமி தகலு கின்ற தெப்பகல் உரைத்தி யென்னச்
செவ்விதின் உணர்ந்து மேலைத் திருமுனி புகலல் உற்றான். ......
34(இத்தடந் தன்னில்)
இத்தடந் தன்னில் மேனாள் இராறுதோ ளுடைய அண்ணல்
அத்தன தருளால் வைக அனையனை யெடுக்கும் அம்மை
மெய்த்தனம் உகுக்குந் தீம்பால் வெள்ளமாம் அதனை நீவிர்
துய்த்திடும் எல்லை தன்னில் தொல்லுரு வாதி ரென்றான். ......
35(என்றிவை முனிவன்)
என்றிவை முனிவன் கூறி இரும்பகற் கடனை யாற்றிச்
சென்றனன் அதற்பின் மீனின் திருவுரு அமைந்த இன்னோர்
அன்றுதொட் டளப்பில் காலம் அலமரும் உணர்ச்சி யெய்தி
மன்றலஞ் சரவ ணத்து மாண்பெருந் தடாகத் துற்றார். ......
36(ஐயநீ யனைய)
ஐயநீ யனைய பொய்கை அமர்தலும் அவ்வை கண்டாங்
கொய்யென எடுப்பக் கொங்கை உகளநின் றிழிந்த தீம்பால்
துய்யதோர் நீத்த மாகித் துறுமலும் அதனைத் துய்த்து
மையல்நீங் குற்றுத் தொல்லை வாலிய வடிவம் பெற்றார். ......
37(தொல்லுரு வடைந்த)
தொல்லுரு வடைந்த இன்னோர் தூமதி வேணி யண்ணல்
நல்லருள் அதனால் வந்து நவையகல் பரங்குன் றத்தின்
எல்லையில் விரதம் பூண்டாங் கிருந்தனர் எந்தை ஈண்டுச்
செல்லுவ துணர்ந்து போந்தார் என்றனன் தேவர் செம்மல். ......
38(தம்மக வுரைக்குங்)
தம்மக வுரைக்குங் கூற்றந் தாதையர் வினவு மாபோல்
அம்மக பதிசொற் கேளா அருள்செய்து பராச ரன்றன்
செம்மல்கள் தம்மை நோக்கிச் செயிரறு குணத்து நீவிர்
எம்மொடு செல்வீ ரென்றான் யாவையும் உணர்ந்த பெம்மான். ......
39(பராசரன் மைந்த)
பராசரன் மைந்த ரன்ன பான்மையை வினவிச் செவ்வேற்
கராசரண் அடைந்தேம் என்று கட்டுரைத் திறைஞ்சிச் செல்லச்
சராசரம் யாவுந் தந்த சண்முகன் தழல்கட் கெல்லாம்
இராசர்தந் தன்மை எய்தும் இருஞ்சுரங் கடந்து போனான். ......
40ஆகத் திருவிருத்தம் - 1765