Sri Aadi ShankararKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees
ஸ்ரீ ஆதிசங்கரர்
சுப்ரமண்ய புஜங்கம்


Sri Aadi Sankarar
Sri Subrahmanya Bhujangam
Sri SendhilAndavan
 முகப்பு   தமிழில்   தமிழாக்கம்   PDF   தேடல் 
home English version search
      இப்பாடலின் ஒலிப்பதிவு   audio recording for this song      
Ms Revathi Sankaran பாடலைப் பதிவிறக்க 

 to download page 


முன்னுரை

   'புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.

   ஸ்ரீ ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக் கண்டு பொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவரொருவர் மந்திர ஏவலால் பகவத்பாதர்கள் காச நோயால் துன்புறச் செய்தார். இந்நோயால் இவர் தாங்கமுடியாதவாறு துடித்துத் தவித்தார். ஒருநாளிரவு சிவபரம்பொருள் இவருடைய கனவில் தோன்றி 'ஜயந்தி புரம்' எனும் திருத்தலத்தில் சூரபன்மாவை வென்றழித்துவிட்டு, 'ஜய வின்ப வடிவமாய்' விளங்கும் என் குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித் திருநீறும் அளித்தருளினார். ஆச்சாரியர் அதனை ஏற்று அணிந்து தம்மைப் பிடித்திருந்த நோய் நீங்கப்பெற்றார்.

   மறுநாள் தம்முடிய யோக சத்தியால் திருச்செந்தூர் என வழங்கப் பெறும் ஜயந்தி புரத்தை அடைந்தார். அங்கு ஆதிசேடன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே 'பாம்பு' எனும் பொருளைத் தரும் 'புஜங்கம்' என்னும் பெயரைக் கொண்ட புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத் திருச்செந்திலாதிபன் திருவடிக்குச் சூட்டினார். இது தான் 'திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்' தோன்றிய வரலாறாகும்.

   பத்திச் சுவை நனி சொட்டச் சொட்ட அமைந்த இந்நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் 'கவியரசு' அவர்கள். இவர் தென்மொழி, வடமொழி இரண்டிலும் வல்லவர். தமிழ் மொழிபெயர்ப்பு மூல நூல் போன்றே அமைந்துள்ளது. மூல நூலில் அமைந்துள்ள கருத்துக்களில் ஒன்றையும் விட்டுவிடாமல் 'புஜங்கம்' என்னும் யாப்பிலேயே மொழிபெயர்த்துள்ளமை சுவைத்து மகிழத்தக்கது.

   புஜங்க விருத்த யாப்புக் குறித்தும் இம்மொழிபெயர்ப்புக் குறித்தும் ஓரறிஞரின் கருத்து வருமாறு:

   புஜங்க விருத்தத்தின் அமைப்பு, `யமாதா யமாதா யமாதா யமாதா` என்று நான்கு வரிகள் கொண்டதாக இருக்கும். லகூகூ லகூகூ லகூகூ லகூகூ என்றும் இதைக் குறிப்பிடலாம். `ல்` என்பது `லகு`விற்கு எடுத்துக்காட்டாகவும், 'கூ` என்பது `குரு`விற்கு எடுத்துக்காட்டாகவும் தரப்பட்டுள்ளன. குறிலானது `லகு` என்றும் நெடிலானது `குரு` என்றும் அழைக்கப்படுகின்றன. லகுவானது ஒற்றடுத்து வரின் அதுவும் 'குரு' என்று கொள்ளப்படும்.

   இந்தப் புஜங்க விருத்தத்தில் சங்கரர் கீழ்க்கண்ட தோத்திரங்களையும் பாடியுள்ளார்.

   பவானி புஜங்கம்
   தேவி புஜங்கம்
   கணேச புஜங்கம்
   ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்திரம்
   சாரதா புஜங்கப்ரயாதஷ்டகம்
   சிவ புஜங்கம்
   வேதஸாரசிவ புஜங்கம்
   விஷ்ணு புஜங்கப்ரயாத ஸ்தோத்திரம்

சுப்ரமண்ய புஜங்கம்

   சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இது போன்ற நூல்கள் இயற்றுவதற்குத் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல புலமை வேண்டும். இத்தகைய பெரும் புலவர் கோவையில் வாழ்ந்தார் என்பது இந்நகருக்குப் பெருமை சேர்ப்பதாகும். (திரு. எஸ். வைத்தியநாத கிருஷ்ணன், ஆதிசங்கரர், ஞானபரம்பரை, வெளியீட்டுத் துறை, ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி).

   விநாயக வணக்கம்

   எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான்
      இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான்
         பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன்
            பொன்றாத திருவாள னருள்பேணு வோமே.
       ...... 1

   விநாயகன் எப்பொழுதும் இளமைப் பருவ முடையோன். நம்முடைய மலை போன்ற தீவினைகளை நாம் அவனை வணங்கிய மாத்திரத்தில் பொடிப்பொடியாக்கி விடுவான். யானை முகனாயினும் பஞ்சவதனனாலும் (சிங்கத்தாலும், ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் எனும் ஐந்து முகத்தினையுடைய சிவனால்) மதிக்கப்படுகிறான். திருமால் முதலிய தேவர்களாலும் முனிவர்களாலும் தேடப்படும் கணேசன். அளவற்ற மங்களமுடையோனாகிய கணேசனின் அருைௗ நாடுவோமே.

வினைக்குன்று - வினையாகியமலை. இபமா முகன் - யானைமுகன். குன்றை அழித்து விளையாடல் யானைக்கு இயல்பு. மேட்டினைக் கண்டால் கொம்பாலும் காலாலும் அதனைச் சிதைத்து விளையாடுதல் யானையின் இயல்பு.

   'இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்
      பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு'
(திருக்குறள்)

... ஆதலின், வினை மலையை அழித்தல் விநாயகராகிய யானை முகவருக்கு இயல்பு.

பஞ்சவதனன்- சிங்கம்; சிவன். இச்சொல் சிங்கத்தை நோக்கும்போது பெரிய முகத்தை உடையது எனவும், சிவனை உணர்த்துங்கால் ஐந்து முகங்களை உடையவன் எனவும் பொருள் தரும். யானையைச் சிங்கம் கொல்லுதல் இயல்பு. ஆனால் இபமாமுகனைப் பஞ்சவதனன் மகிழ்ந்து மதிக்கின்றான் என்பது ஒரு நயம்.

   பொன்னாகர் சுர நாடு புனிதன்:

பொன்+ஆகர் = திருமகளை மார்பில் உடையவர் - திருமால்
பொன்+ஆகர் = பொன்னிறமான உடலினர் - பிரமன்
பொன் +நாகர் = பொன்மயமான வானுலக அரசன் - இந்திரன்
பொன்+நாகர்+சுரர் = பொன்மயமான சுவர்க்கத்தில் வாழ்கின்றவர்களாகிய தேவர்கள்
பொன்+நாகர் = அழகிய நாகலோகத்தார்கள். நாகலோகம், பாதாளம்

   நூல் - அவையடக்கம்

   சொல்லேது பொருளேது கவியேது வசனந்
      துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
         எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
            திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே.
       ...... 2

   உன்னைத் துதிக்கக் குற்றமற்ற சொல்லோ, பொருளோ, கவியோ, வசனமோ நான் அறிந்தவனல்லன். ஆயினும் உன் ஒப்பில்லா ஆறுமுகங்களுடைய பெருஞ்சோதி எனது நெஞ்சில் குடி கொண்டு நல்ல தேனாகிய பாட்டை ஊற்றெடுக்கச் செய்கிறது.

   துகளேதும் இல்லாத என்ற அடைமொழியைச் சொல், பொருள், கவி, வசனம் என்ற நான்கிற்கும் கூட்டிக் கொள்க. எல் ஏறும் - எல்லா ஒளிகளினும் மிக்க. அறுமா முகச் சோதி - முருகனாகிய பரஞ்சோதி. சோதியானது இதயமாகிய கமலத்திலிருந்து, அதனை மலர்த்துதலால் அதிலிருந்து கவியாகிய தேனூறும்.

   செந்தில் நாயகன் வணக்கம்

   மயிலூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
      மனந்தன் வசங்கொள் மகானுள்ள முறைவோன்
         பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்
            பனவர்க்கு மெய்த்தேவை நினைவின்கண் வைத்தேன்.
       ...... 3

   மயில்வாகனன், நான்கு வேதங்களும் கூறுகின்ற பொருளோன், காண்பவர்களின் மனதைத் தன் வசப்படுத்தக் கூடிய அழகும் மகிமையும் உடையவன். மகான்களுடைய உள்ளத்தில் உறைபவன். ஞானிகள் பயின்றுவரும் 'தத்வமஸி' முதலிய நான்கு மகா வாக்கியங்களின் இலக்கானவன். சிவபெருமானின் பிள்ளை. அந்தணர்களுக்கு உண்மைத் தெய்வமானவன். இவனைச் சதா என் நினைவில் வைத்துள்ளேன்.

   முருகன் நான்கு வேதங்களாலும் புகழப்படுகின்ற பரம்பொருள். மனத்தைத் தன் வசமாக்கிய பெரும் தவசிகளின் உள்ளத்து உறைவோன். எல்லார் மனத்தையும் தன் வசமாக்கிக் கொள்ளுகின்ற பெரியோன் எனவும் கொள்ளலாம். மகாவாக்கு 'தத்வமசி' முதலிய மகாவாக்கியங்களின் இலட்சியமாக (சொல்லின் பொருளாக) உள்ளவன். பனவர்க்கு மெய்த்தே - பிரம்ம ஞானிகளாகிய அந்தணர்கள் வழிபடும் உண்மைத் தெய்வம். தே - தெய்வம்.

   என் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை
      யினை யேறி னாரென்று நிலமேல் விளக்கி
         துன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்
            துங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம்.
       ...... 4

   'என் சந்நிதிக்கு யார் வந்து என்னை வணங்குகிறார்களோ அவர்கள் பிறவிக் கடலை நீந்தியவர்களாகிறார்கள்.' எனும் இந்தத் தத்துவத்தை இவ்வுலகின்மேல் விளக்கிய தூயோன், செந்திற் கடற்கரையில் வீற்றிருக்கின்றான். அன்னை பராசத்தியின் அருட்சேயாகிய செந்திலாதிபனை நினைவில் வைப்போம்.

வேலை - கடல். துங்கம் - மேன்மை, உயர்ச்சி.

   திரைபொன்று மாபோலும் வினைபொன்று மின்றே
      திருமுன்பு வம்மின்களென நின்ற வன்போல்
         திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்திற்
            சேயோனை யிதயத்தி லேவைத் துளேனே.
       ...... 5

   'என் சந்நிதியில், கடலில் அலைகள் அழிதல்போல, என்னை அடையும் மக்களின் தீவினைகளும் அழிந்துவிடும். ஆகையால் என் முன் வாருங்கள்' என்று உணர்த்துவது போல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தழியும். அத்தகைய சீரலைவாயில் நின்ற செந்திற்குமரனை என் மனத்தில் வைத்துளேன்.

   செந்தில் நாயகன் கடற்கரையில் நின்று அடியார்களை அங்கு வருமாறு அழைக்கிறார். அது, பிறவிக் கடலை நீந்த விரும்புவோர் இங்கே வாருங்கள் என அவன் அழைப்பது போலும்.

திரை - கடலலை. பந்தி - வரிசை. பொன்றல் - அழிதல். வம்மின் - வாருங்கள்.

   கடலலை கரை சேர்ந்தவுடன் அழிந்துவிடுகிறது. அதுபோலக் கரையில் நின்ற செந்தில் நாயகனின் திருமுன்பை அடைந்தவர்களுடைய வினை பொன்றும் என்பது கருத்து.

   இதிலேறி னோர்கைலை யதிலேறி னோரே
      என்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்
         மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
            மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே.
       ...... 6

   'என் இருப்பிடமாகிய இக்குன்றிலே ஏறினோர்கள், கயிலை மலை ஏறுவது உறுதி' (சிவசாமீப்பியம் பெறுவர் என்றவாறு) என்பதை உணர்த்த, கந்தமாதன பருவதத்தின் மீது நிற்கின்றான். மதிபோன்ற ஆறுமுகங்களுடைய செந்திலாதிபனின் மலர்போன்ற திருவடிகள் நாம் உய்யும் பொருட்டு என்றும் வாழ்க.

கந்தவரை - சந்தனாசலம் (சந்தனமலை). செந்திலுக்குச் சந்தனாசலம் என்பதொரு பெயர். அது கைலை மலைக்கு நிகரானது. திருச்செந்தூர் சந்தனக் கல் மயமான மலையாக உள்ளது.

   'கயிலை மலையனைய செந்திற்பதி வாழ்வே' -  'இயலிசையில் உசித'  திருச்செந்தூர் திருப்புகழ்.

   திருச்செந்தூரை அடைந்தவர்கள் கயிலாய கதி அடைவது உறுதி.

   பெருவேலை யோரத்தி லேபாவ நீக்கும்
      பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
         ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
            உயிருக்கொ ருயிர்செம்பொ னடிபற்று வோமே.
       ...... 7

   பெரிய கடலோரத்தில் பாவத்தை நீக்கக் கூடிய பிரசித்தி பெற்ற சித்தர்கள் வாழ்ந்த கந்தமலையில், ஒப்பற்ற பிரகாசமான வடிவோடு, செந்திற் குகையில் வீற்றிருப்பவனும் உயிருக்குள் உயிராய் விளங்குபவனுமாகிய குகனின் பொன் போன்ற திருவடிகளைப் பற்றுவோமாக.

பெருவேலை - பெரிய சமுத்திரம்.

   கந்த வெற்பானது தன்னையடைந்தவர்களின் பாவத்தை நீக்குவதில் பிரசித்தி பெற்றது. சித்தர்கள் வாழ்வது. ஆன்மாக்களின் இதயமாகிய குகையில் சோதி வடிவாக அமர்ந்திருக்கும் பரம்பொருளே குகன். புறத்தும் அவன் செந்தூரில் கந்தவெற்பு குகையிலமர்ந்து இருக்கின்றான்.

   இதுவரை விநாயக வணக்கமும் செந்தில்நாயகன் வணக்கமும் கூறப்பட்டன. இனி முருகனது திருவுருவச் சிறப்புப் பாதாதி கேசமாகக் கூறப்படுகின்றது.

   முருகன் திருமேனிச் சிறப்பு

   பொற்கோயி லிற்பொன் மணிக்கட்டி லேறிப்
      பொலிகின்ற ஒருகோடி ரவிமங்க வீசும்
         விற்கோல நற்செந்தி லிற்கார்த்தி கேயன்
            விபுதேச னைச்சிந்தை விழைகின்ற தாலோ.
       ...... 8

   அழகிய திருக்கோவிலில், பன்மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மீது, பிரகாசிக்கின்ற ஒருகோடி சூரியர்களுடைய பிரகாசமும் மங்கிவிடுமாறு எல்லையற்ற சோதியையுடைய கார்த்திகேயன், தேவதேவன், வீற்றிருக்கும் மகத்துவத்தைச் சிந்தனை செய்து வணங்குவோமே.

பொன்மணிக் கட்டில் - பொன்னாலும் மணியாலுமாகிய சிங்காசனம். ஒருகோடி ரவி - ஒருகோடி சூரியர்கள். விற்கோலம் (விற்+கோலம்) = ஒளிபொருந்திய திருமேனி. விபுதேசன் - தேவதேவனாகிய முருகன்.

   திருவடிச் சிறப்பு

   அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே
      அமுதம் பொழிந்தே பிறப்பென்ற கோடை
         வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா
            மரைமேவு மளிநெஞ்ச மலைவாயின் முருகே.
       ...... 9

   அன்னப்பறவைகள் விளங்குவதாகவும், சிவப்பு நிறமுள்ளதாயும், அமுதம் பொழிவதாகவும், பிறப்பென்ற விடாயைத் தவிர்க்கக் கூடியதாகவும், பிரகாசத்துடன் விளங்குவதாகவும் உள்ள அலைவாயிலில் வீற்றிருக்கும் முருகனின் பாத தாமரைகளின் மீது என் மனதாகிய வண்டானது சதா ரீங்காரம் செய்து கொண்டே இருக்க வேண்டுகின்றேன்.

முருகன் திருவடி தாமரையாகும். அடியார்கள் நெஞ்சம் அதில் மொய்க்கும் வண்டாகும். தாமரையில் அஞ்சம் (அன்னம்) விளங்கும். அஞ்சம் - ஹம்சம் - அன்னம். அளி - வண்டு. முருகன் திருவடித் தாமரையில் ஹம்சம் என்னும் மகாமந்திரம் பொருந்தி விளங்குகிறது.

திருவடித் தாமரை சிவந்து அழகு நிறைந்து அமுதம் பொழிகிறது.

அலைவாய் - திருச்செந்தூர். இது தாமரைக்கும் திருவடிக்கும் சிலேடை- இரட்டுற மொழிதல்.

   திரு அரைச் சிறப்பு

   இலகும்பொன் உடைமீது கணகண்க னென்றே
      இசைகிண்கி ணீகச்சை யொடுபட்டை யம்பொன்
         அலகில்வி லதுவீசு செந்தூரி லம்மான்
            அரைநீடு மழகென்றன் அகமேவி யுனுமே.
       ...... 10

   ஒளிரும் தங்கமயமான உடைமீது இடுப்பில் இசைகின்ற கணகணவென ஒலிக்கும் பொற்சலங்கைகள்; இவை எல்லையற்ற பிரகாசத்தைக் கொடுக்கின்றன. அத்தகைய அழகுடைய செந்தூரிலம்மானை அகத்தில் இருத்தி தியானிப்போம்.

   முருகன் தன்னுடைய அரையில் (இடுப்பில்) பொன்னுடையும், அதன்மேல் கச்சையும் ஒட்டியாணமும் அணிந்துள்ளான்.

பொன் உடை - பீதாம்பரம். பட்டை- ஒட்டியாணம். வில் - ஒளி. அரை - இடுப்பு. அகம் - மனம்.

   திருமார்பின் சிறப்பு

   குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
      கொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட
         திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
            திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்.
       ...... 11

   குறவேடனின் மகளாகிய வள்ளியின் இரு தனங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள குங்குமங்கள் அவளைத் தழுவிய காரணத்தால் முருகனின் மார்பிலும் பட்டு மார்பு சிவந்து ஒளிவீசியதோ? அல்லது, தன் அன்பர் குழாம் மீது அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினால் மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ? அச்செவ்வொளி வீசும் மார்பினைத் தொழுவேன்.

துங்க தனம் - உயர்ந்த ஸ்தனங்கள். அநுராகம் - காதல். காதலின் நிறம் செம்மை என்பது கவி மரபு. சேந்தல் - சேத்தல் - சிவத்தல்.

   திருக் கைகளின் சிறப்பு

   அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே
      ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே
         துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை
            துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே.
       ...... 12

   பிரமனைப் புடைத்துச் சிறையிலிட்டு, அண்டங்களை எல்லாம் காத்தருளி, யானையின் தும்பிக்கையையும் வடிவினால் வென்று, எமனை ஓட்டி, சூரபதுமனைக் கொன்று இந்திரனின் துயரை நீக்கி, தனை அடைந்தோருக்கு என்றும் அபயமளிக்கின்ற நின் கை எனக்குத் துணை செய்தருள்க.

அயன் - பிரமன். அண்டநிரை - உலகக் கூட்டங்கள். அபயம் என்றல் - அஞ்சேல் என்பது.

   திருமுகச் சிறப்பு

   பனியென்று முளவாயோர் பங்கம் படாமல்
      பரிபூர்ண வொளியோடு பலதிக்கு நிலவை
         நனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்
            நளிர் செந்தி லோனாறு முகமொக்கு மாலோ.
       ...... 13

   எப்போதும் குளிர்ந்தனவாய், களங்கம் இல்லாதனவாய், பரிபூரணமான நிலவை எல்லாத் திக்கிலும் வீசுகின்ற மதியங்கள் ஆறு என்றைக்கும் உள்ளனவானால் அவை திருச்செந்திலாதிபனின் முகங்களுக்கு ஒப்பாகும். அவ்வாறு இல்லாமையால் முருகன் திருமுகங்கள் ஒப்பில்லாதனவாம்.

பங்கம் - களங்கம். நளிர் - குளிர்ச்சி. தவ - மிகவும். இது இல்பொருளுவமை.

   சிவன் மைந்த நகையென்ற அனமென்று மேவித்
      திகழுங் கடைக்கண்களெனும் வண்டுலாவித்
         தவவின்சொ லமுதூறு கொவ்வைச்செ விதழ்சேர்
            சலசங்க ளெனுமாறு முகமென்று காண்பேன்.
       ...... 14

   சிவனின் மைந்தனாகிய உன்முகத்தில் விளங்கும் புன்னகை தாமரை மலரிலிருக்கும் அன்னப்பறவைக்கு நிகரானது. எப்பொழுதும் சலித்துக் கொண்டிருக்கும் உன் கடைக்கண் பார்வைகளோ, தாமரை மலரிலுள்ள வண்டுகளை ஒக்கும். மேன்மையான அமுதூறும் இன்சொற்களையுடைய திருவாயிதழ் தாமரையிதழ் ஒக்கும். இத்தகைய ஆறுசெந்தாமரை மலர்கள் போன்றுள்ள உன் ஆறுமுகங்களை என்று காண்பேன்?

சலசம் - தாமரை. தவ - மிக. அனம் - அன்னம்.

   திருக்கண்களின் சிறப்பு

   குறைவென்கொ லோசெந்தி லாய்கா தளாவிக்
      குறையாத அருள்வீசு விழிபன் னிரண்டில்
         இறையேயொர் விழியின் கடைப்பார்வை தொழுமிவ்
            வெளிநாயி னேன்மீதி லொருபோது விழுமேல்.
       ...... 15

   முருகனின் கண்கள் காதளவில் நீண்டுள்ளன. அருளொளி வீசுகின்றன. அத்தகைய பன்னிரு கண்களில் ஒன்றன் பார்வையாவது எளியேனாகிய என்மீது வீசினால் உனக்கு என்ன குறைவு உண்டாகும்? உனக்கு ஒன்றும் குறைந்துபோகாது. உனக்குப் பெருமையே உண்டாகும் என்பது குறிப்பு.

இறையே - சிறிதே. எளி நாயினேன் - இழிந்த நாய் போன்ற என்மேல். ஒருபோது - ஒருதடவை.

   ஏ செந்தில்! உன் திருக்கண்பார்வை என்மேல் படுமாயின் அதன்பின் எனக்கு என்ன குறைவு உண்டு என்றும் பொருள்படும்.

   திருமுடிச் சிறப்பு

   எனதங்க நீமைந்த வாழ்கென்று மோந்தே
      ஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்
         நினதிங்கள் முகமாறு மறவாது பணிவேன்
            நிலைநின்ற செந்தூரில் வெளிநின்ற தேவே.
       ...... 16

   சிவபெருமான், முருகனை, 'மைந்த, நீ என் உடம்பே,' என்று சொல்லி, முருகனது முகத்தை முகர்ந்து களிக்கின்றான். அத்தகைய கிரீடமணிந்த திங்கள் போன்ற திருமுகத்தை நான் மறவாது தியானம் பண்ணுவேன்.

அங்கம் - உடல்.

இத்துடன் பாதாதிகேச வருணனை முடிந்தது.

   வேண்டுகோள்

   வரவேணு மடியேன் முனெசெந்தி னாதன்
      மணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்
         பிரகாச மிகமாடை யுடையோடு கையிற்
            பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச.
       ...... 17

   மார்பில் நவரத்தின மணி மாலைகளுடனும், தோள்களில் ஆபரணங்களுடனும் கையில் குறி பிசகாத வடிவேலின் மிகுசோதி வீசவும் செந்திலாதிபன் அடியேன் முன் தோன்றி என்னை உய்விக்க வேண்டுகின்றேன்.

   தோத்திரங்கள்

   குமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
      குதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்
         டமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்
            அழகான மழமேனி மறவாது நினைவேன்.
       ...... 18

   அம்மையின் மடியில் மழமேனியுடன் முருகன் வீற்றிருக்கக், 'குமரா' என்றழைத்துச் சங்கரன் கைகளை நீட்டுகின்றார். அம்மையின் மடியினின்றும் முருகன் குதித்துச் சென்று அப்பனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடுகின்றார். இவ்வாறு பரனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து விளையாடுகின்ற செந்தூரனாகிய எம்பிரானின் அழகான இளமேனியை நான் மறவாது நினைப்பேன்.

அமரா - அமர்ந்து, இருந்து. விரும்பி எனலுமாம். மழமேனி - குழந்தைத் திருமேனி.

   குமாரா சிவன்சேய் குறக்கன்னி நாதா
      குகாகந்த சேனாப தீசத்தி பாணீ
         எமார்வ ப்ரபோ தாரகாரீ மயூரா
            இனாநீவு வாய்செந்தி லாயஞ்ச லென்னே.
       ...... 19

   மாரன் என்ற மன்மதனை வென்ற குமரா! சிவகுமாரா! குறவள்ளியின் கணவனே! ஆன்மாக்களின் இதய தாமரைக் குகையில் வாழ்பவனே! ஆறு குழந்தைகளும் ஒன்றாகத் திரட்டப்பட்டுக் கந்தன் என்ற திருப்பெயருடன் வழங்குபவனே! தேவசேனாபதியே! பராசத்தியின் வடிவாகிய சத்தி வேலினைக் கையில் ஏந்தியவனே! எம்முடைய அன்பினை உடைய பிரபுவே! தாரகாசூரனை அழித்தவனே! மயில்வாகனனே! என்று நாமங்கள் பல ஓதித் தொழுவாரின் துன்பங்களை நீக்குபவனே!. செந்திலாதிபனே! என்னை அஞ்சல் என்று அருள்வாயாக.

குமரன் - என்றும் இளையோன், மாரனைத் (மன்மதன்) தாழ்வுசெய்தவன்; அஞ்ஞானத்தை அழிப்பவன் எனப் பலபொருள்கள் தரும். சிவன் சேய் - 'சிவனின் சேய்' என்றும் 'சிவனே சேயாக வந்தவன்' என்றும் பொருள்படும்.

   ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
      அறிவின்றி யுளமஞ்சி யுயிர்மங்குபோதே
         நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
            நினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே.
       ...... 20

கோழை மேலிட்டு, உடல் நலிந்து, ஐம்பொறிகளும் வலி கெட்டு, அறிவு தடுமாறி, உள்ளம் நடுக்கங் கண்டு உயிர் மங்கும்பொழுது, குருதிப் பசை கொண்ட வடிவேலை யுடைய செந்தூரனே! உன்னையன்றி வேறுயார் எனக்கு அபயமளிக்க வல்லவர்?

   யமதூதர் சுடுவெட்டு பிளவென் றதட்டி
      எனைவெஞ் சினத்தோ டொறுக்கென்று வந்தால்
         நமதன்ப அஞ்சே லெனச்சத்தி யேந்தி
            நவிரத்தின் மிசைசெந்தி லாய்வந்து காவே.
       ...... 21

   எம தூதர்கள் என்னை, 'சுடு', 'வெட்டு' 'பிள', என்று வெஞ்சினத்துடன் அதட்டி வருங்காலத்து, செந்தூரா! `நமது அன்பனே அஞ்சேல்` என உன் சத்திவேலினை ஏந்திக்கொண்டு மயில் மீதேறி வந்து எனக்குக் காட்சி கொடுத்துக் காத்தருளல் வேண்டும்.

   அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்

   உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
      ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
         அயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்
            ஐயா உனக்கேகை யடையாகி னேனே.
       ...... 22

   உயிர் மங்கும் பொழுது உனது தாள்களை நினைக்கச் சத்தியற்றவனாகி விடுவேன். ஓ! செந்திலாய்! எனச் சொல்ல இயலாதவனாகி விடுவேன். கைகள் குவியேன். அயர்வடைகின்ற அவ்வேளையில், ஐயா! அடியேனைக் கை விட்டிடேல். இன்றே உனக்கு நான் அடைக்கலமானேன்.

   மன வேதனை நீக்க வேண்டல்

   அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
      அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
         மண்டும் பலஞ்செற்ற வடிவேல அலைவாய்
            மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே.
       ...... 23

   ஓராயிரம் அண்டங்களைக் கொண்ட சூரபதுமன், அவன் தம்பிமார்களாகிய சிங்கமுகன், ஆனைமுகன், ஆகியவர்களின் வலிமையை நாசஞ் செய்தழித்த வடிவேலைக் கையில் தாங்கி அலைவாயில் வீற்றிருக்கும் அதிபனே! என் மனநோயை ஒழிப்பாயாக.

   நீயே அடைக்கலம்

   அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்
      அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
         மிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்
            மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே.
       ...... 24

   ஒளி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு செந்தூரிலமர்ந்திருக்கும், தேவர்களுக்கெல்லாம் மணியாய் விளங்குபவனே! அடியேனோ எப்பொழுதும் துன்பப்படுபவன். நீயோ ஏழைபங்கன். உன்னைத் தவிர எனக்குத் துணையாக வேறு யாரையும் அறியேன். சிறியேனாகிய என்னை அணுகும் துன்பங்கள் யாவும் பொடிப் பொடியாக அருளுவாயாக.

   இலை விபூதி மகிமை

   கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
      காசங் கயம்குட்ட முதலாய நோயும்
         விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
            வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே.
       ...... 25

   செந்திலம்பதியில் அமர்ந்தருளும் தேவ தேவா! உன்னுடைய இலை விபூதியைக் கண்ட மாத்திரத்தில் கை கால் வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலாய நோயும் பூதம், பைசாசம், தீவினைகள் யாவுமே விட்டோடிடும்.

   பிரார்த்தனை

   செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
      செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
         கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
            கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க.
       ...... 26

   முருகனே ஏழை பங்கன்

   பிறதேவர் முனிவர்க்கு மிகுபத்தி யோர்க்கும்
      பிரியங்க டருவார்கள் புலையர்க்கு மருள்வார்
         பிறர்யாவர் மணிவாரி யலை வீசு செந்திற்
            பிரானன்றி யறியேன் சொனேன் நம்பு வீரே.
       ...... 27

   பிரம்ம, விஷ்ணு, ருத்ரன், இந்திரன் முதலிய தேவர்களோ தங்களை அன்புடன் வணங்கும் முனிவர்களுக்கும், பக்தியுள்ள மேலான ஜாதியினருக்கு மட்டுமே அருள்புரிவார்கள். ஆனால் மணிவாரி அலைவீசும் செந்திற்பிரானன்றி வேறு யாரும் புலையருக்கும் (சண்டாளருக்கும்) அருள்புரிந்து அவர்களைத் தடுத்தாட்கொண்டார் என்பதை யானறியேன். இதை நீங்கள் நம்புவீர்களாக. நம்செந்திற் குமாரன் ஜாதி பேதமற்ற கருணாமூர்த்தி.

   வழிவழி அடிமையாக வேண்டுதல்

   மனைமக்கள் உறவாள ரடியார்கள் தோழர்
      மற்றுள்ள பேர் என்றன் மனைவாழும் யாரும்
         உனையன்பு கொடுபூசை புரிவோர்கள் தொழுவோர்
            உனையோது வோராக அருள்செந்தி லானே.
       ...... 28

   பகை நீக்கி அருள வேண்டுதல்

   கொடிதென்ற மிருகங்கள் பறவைக் குலங்கள்
      கொடுநஞ்ச வகையென்னை மெலிவிக்க வந்தால்
         வடிவிக்ர மச்சத்தி யாலே யழித்தே
            வாழ்விக்கவே செந்தில் வாழ்கந்த வேளே.
       ...... 29

   பிழை பொறுக்க வேண்டுதல்

   மகார் செய்த பிழைபெற்ற பேர் மன்னி யாரோ
      மகனல்ல னோயான் விண் மண் பெற்றதந்தாய்
         மகாதேவ செந்தூரில் வாழ்கந்த வேளே
            மன்னிக்க யான் செய்த புன்மைக் குழாமே.
       ...... 30

   சிறு குழந்தைகள் செய்த பிழைகளைப் பெற்றோர் மன்னிக்க மாட்டார்களா? அடியேன் உன் மகனல்லவோ? விண்மண் பெற்ற தந்தையே! மகாதேவா! செந்தூரில் வாழும் கந்தவேளே! மன்னித்தருளுக! யான் செய்த திரளான பாவங்களை.

   போற்றி

   மயில்போற்றி வேல்போற்றி மறியாடு போற்றி
      வன்காற் படைச்சேவ லும்போற்றி நந்தூர்
         உயர்வெண் டிரைச்சிந்து வும்போற்றி முருகோன்
            உபயப் பதம்போற்றி யுரைசெந்தில் போற்றி.
       ...... 31

   வாழ்த்து

   ஜயவின்ப வடிவா ஜயச்சோதி ரூபா
      ஜயப்பாவு புகழோய் ஜயத்தாவி லின்போய்
         ஜயவின்ப சிந்து ஜயச்சர்வ பந்து
            ஜயவின்ப வள்ளால் ஜயச்செந்தில் வாழ்வே.
       ...... 32

   வெற்றியைத் தரும் இன்பவடிவான சுப்பிரமணியக் கடவுளே! வெற்றிச் சுடருருவ மூர்த்தி! வெற்றி பரவும் புகழுடையோய்! குற்றமில்லாத இன்ப வெள்ளப் பெருக்கே! வெற்றியும் இன்பமும் திகழும் செந்தூரா! எல்லா உயிர்களுக்கும் அபயமளிக்கும் தந்தையே! இன்ப வெள்ள வள்ளலே! செந்திலம்பதியின் வெற்றியை நாட்டி விளங்கும் கந்தவேளே! அடியேனை ஆதரித்தருளுக!

   நூற்பயன்

   திருச்செந்தி நாதன் பதத்தே மணக்கும்
      திருப்பாட்டி வைக்கார்வம் வைத்தே படிப்போர்
         திருப்பெண்டு மக்கட் சிறப்பின்ப வாழ்வும்
            சிறக்கத் திகழ்ந்தின்ப வீடெய்து வாரே.
       ...... 33

   திருச்செந்தில் நாதன் திருவடியில் மணக்கும் புஜங்க மென்னும் இப்பாடல்களை ஆர்வத்துடன் படிப்போர் திருமகள் போன்ற பெண்டு, பிள்ளைகள், சிறப்பு, இன்பவாழ்வு முதலியவற்றால் சிறப்படைந்து நீடூழி வாழ்ந்து பேரின்ப மயமான வீடெய்துவாரே.

   செந்தில் நாயகன் சேவடி வாழ்க!

   சாத்துக் கவி

   சிரவணபுரம் கெளமார மடாலயத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் அருளியது

   தேவைப் பெருக்கின்பு தருசிந்து வாய்நீள்
      செந்திற் குகேசன் புஜங்கத் தமிழ்ப்பா
         கோவைப் பதிக்கண் நடேசன் கனிந்துட்
            குளிர்பண்பில் அணிநீபம் அளிமாண் புடைத்தே.


                        - - - - - -

 முகப்பு   தமிழில்   தமிழாக்கம்   PDF   தேடல் 
home English version search with mp3 audio
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

Sri Subrahmanya Bhujangam Tamil Version

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல்   பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 

Sri Subrahmanya Bhujangam by Sri Aadi Sankarar Tamil version by 'Kaviyarasu' Coimbatore


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.
Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY.

[fbk]   [xhtml] . [css]