Sri Aadi ShankararKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees
ஸ்ரீ ஆதிசங்கரர்
சுப்ரமண்ய புஜங்கம்


Sri Aadi Sankarar
Sri Subrahmanya Bhujangam
Sri SendhilAndavan
 முகப்பு   தமிழில் பொருளுடன்   தமிழில்   PDF   தேடல் 
home English version search

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய  'சுப்ரமண்ய புஜங்கம்'  (தமிழாக்கம்)

       1  தீராத இடர் தீர

என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும்
சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன்
நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும்
உதவும் மங்கள மூர்த்தமதே.

       2  புலமை ஏற்படும்

சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொளி
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.

       3  திருவடி தரிசனம் கிட்டும்

மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து
மனதை கவரும் உடலான்
பயில்வோர்கள் உள்ளக் குகைக் ஆகாயில் தங்கி
பார்ப்பவர் தெய்வ மானான்
உயிராகும் மறையின் பொருளாகி நின்று
உலகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக்
கந்தன் பதம் பணிகுவாம்.

       4  பிறவிப் பிணி தீரும்

என்றன் சந்நிதி யடையும் மனிதர்
எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை
எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச்
செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்
தூயன் பாதம் துதிக்கின்றேன்.

       5  போகாத துன்பம் போகும்

கடலில் தோன்றும் அலையும் அழிந்து
காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்
தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய
பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்
ஏற்றித் தியானம் செய்கின்றேன்.

       6  கயிலை தரிசன பலன் கிட்டும்

என்றன் இருக்கை யறிந்தே யெவரும்
இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும்
இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்
கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்
திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.

       7  கரையாத பாவம் கரையும்

கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே
பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர்
கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய்
குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான்
அவனைச் சரண மடைகின்றேன்.

       8  மனம் சாந்தியுறும்

மன்னும் இளமை யாயிரம் ஆதவர்
மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்
சித்தம் சாந்தி யுறும்.

       9  புகலிடம் கிட்டும்

மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.

       10  அக இருள் நீங்கும்

பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை
பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க
மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித்
தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

       11  ஆபத்து விலகும்

வேடவேந்தன் திருமகள் வள்ளி
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.

       12  ப்ரம்ம ஞானம் கிட்டும்

வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும்
கந்தா என்னைக் காத்திடுக.

       13  தாபங்கள் நீங்கும்

சந்திரர் அறுவர் வான் வெளியில்
சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும்
தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு
என்றும் உதயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும், நின்
கருணை முகத்திற் கெதிராமோ.

       14  அமுத லாபம் ஏற்படும்

அன்னம் அசைதல் போல் நின் புன்னகை
அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச்
சிவந்த உதடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து
பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கள் ஆறும் தாமரை
நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.

       15  கிருபா கடக்ஷம் கிட்டும்

விண்ணிலும் விரிந்த கருணை யதால்
வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும்
படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய
விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால்
ஏது குறைதாந் உனக்கெய்தும்.

       16  இஷ்டசித்தி ஏற்படும்

மறைகள் ஆறு முறை யோதி
வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உடலில் இருந்தே பின்
எழுந்த கந்தா, முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள்
திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

       17  சத்ருபயம் போகும்

இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ
நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உயர்ந்த நின் குண்டலங்கள்
வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா,
செந்தில் தலைவா, வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி
வருக என்றன் கண்முன்னே.

       18  ஆனந்தம் ஏற்படும்

வருக குமரா, அரு கெனவே
மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே
பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே, பரமன் மகிழ்ந் தணைக்கும்
முத்தே, இளமை வடிவுடைய
ஒரு சேவகனே, கந்தா, நின்
உபய மலர்த்தாள் தொழுகின்றேன்.

       19  கர்மவினை தீரும்

குமரா, பரமன் மகிழ் பாலா,
குகனே, கந்தா, சேனாபதியே,
சமரில் சக்தி வேல் கரத்தில்
தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா, எம்
குறைகள் தீர்க்கும் வேலவனே,
அமரில் தாரகன் தனை யழித்தாய்
அடியன் என்னைக் காத்திடுக.

       20  திவ்ய தரிசனம் கிட்டும்

தயவே காட்டும் தன்மை யனே
தங்கக் குகையில் வாழ்பவனே,
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப்
பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுகா, நீ தோன்றுகவே.

       21  எமபயம் தீரும்

காலப் படர்கள் சினம்கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன்
உயிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து
பயமேன் என்னத் தோன்றுகவே.

       22  அபயம் கிட்டும்

கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.

       23  கவலை தீரும்

அண்ட மனைத்தும் வென் நங்கே
ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை
மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ
தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும்
ஒருவனக் கொல்லுத லாகாதோ?

       24 & 25  மனநோய் போகும்

துன்பச் சுமையால் தவிக்கிறேன்
சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்
கருளும் கருணைப் பெருவாழ்வே
உன்னை நாடித் தொழு வதால்
ஊமை, நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும்
நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.

       25 - - -

கொடிய பிணிகள் அபஸ் மாரம்
குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம்
வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள்
குமரா உன்நன் திருநீறு
மடித்த இலையை பார்த்த வுடன்
மாயம் போலப் பறந்திடுமே.

       26  சராணாகதி பலன் கிட்டும்

கண்கள் முருகன் தனைக் காணக்
காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும்
பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உடலும் குற்றேவல்
எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம்
கலந்து மகிழ்ந்து குலவட்டும்.

       27  வரம் தரும் வள்ளல்

முனிவர் பக்தர் மனிதர்கட்கே
முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள்
தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும்
மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று
கருணை வடிவைக் காண்கிலனே.

       28  குடும்பம் இன்புறும்

மக்கள் மனைவி சுற்றம் பசு
மற்ற உறவினர் அனை வோரும்
இக்கணத் தென்னுடன் வசித்திடு வோர்
யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ்
குமரா எமக்குக் கதிநீயே.

       28  குடும்பம் இன்புறும்

மக்கள் மனைவி சுற்றம் பசு
மற்ற உறவினர் அனை வோரும்
இக்கணத் தென்னுடன் வசித்திடு வோர்
யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ்
குமரா எமக்குக் கதிநீயே.

       29  விஷம், நோய் போகும்

கொடிய மிருகம் கடும் பறவை
கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உடலில் தோன்றி வுடன்
கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உன்றன் வேல் கொண்டு
நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரெளஞ்ச கிரி பிளந்த
முருகா வருக, முன் வருக.

       30  குற்றம் குறை தீரும்

பெற்ற குழந்தை பிழை பொறுக்கும்
பெற்றோர் உலகில் உண்டன்றோ
உற்ற தேவர் தம் தலைவா,
ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ
நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக்
குறை யில்லாமல் காத்தருள்க.

       31  ஆனந்தப் பெருமிதம்

இனிமை காட்டும் மயிலுக்கும்
இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும்
தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே
இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும்
கந்தா வணக்கம் வணக்கமதே.

       32  வெற்றி கூறுவோம்

ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்
திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம்
முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்

       33  வாழ்த்து

எந்த மனிதன் பக்தி யுடன்
எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்.

... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல்   பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 

Sri Subrahmanya Bhujangam by Sri Aadi Sankarar


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.
Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY.

[fbk]   [xhtml] . [css]