Sri Kaumara ChellamKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திருமுருகக்கடவுள்

பேராசிரியர் டாக்டர்
சிங்காரவேலு சச்சிதானந்தம்

God MURUKAN

Prof Dr. Singaravelu Sachithanantham
University of Malaya

Dr. Singaravelu Sachithanantham 
பேராசிரியர் டாக்டர்
சிங்காரவேலு சச்சிதானந்தம்


    இப்பக்கத்தை TSCII தமிழில் காண   கௌமாரம் இணையத்தில் தேடல் 
 இப்பக்கத்தை PDF தமிழ் எழுத்துருவில் காண (பிரிண்டரில் அச்சிட) 
    view this page in TSCII Tamil   view the PDF English version (for printing) 
 English version   search Kaumaram Website 




திருமுருகக்கடவுள்

(பேராசிரியர் டாக்டர் சிங்காரவேலு சச்சிதானந்தம்,
மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா)


1. முருகன் என்னும் திருப்பெயர், இயற்கை அழகையும், இளமையையும்
உணர்த்தும் முருகு என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து வந்த
திருப்பெயராகும். திருமுருகு என்னும் சொல்லும் திருமுருகக்
கடவுளைக் குறிப்பதாகும். [எடுத்துக்காட்டாக, சங்க காலத்தைச்
சேர்ந்த புலவர் பெருமான் நக்கீரர் இயற்றியருளிய
 திருமுருகாற்றுப்படை  என்னும் நூல் திருமுருகக் கடவுளிடம்
அடியார்களை ஆற்றுப்படுத்தும் (வழிப்படுத்தும்) நூலாகத்
திகழ்கின்றது.]

2. திருமுருகக் கடவுள் இயற்கை அழகு, மற்றும் என்றென்றும்
நிலைத்திருக்கும் இளமை ஆகியவற்றின் வடிவில் திகழ்வதால், முருகன்
என்னும் திருப்பெயர் என்றென்றுமுள்ள திருமுருகக் கடவுளின்
முக்கால முழுமையை உணர்த்தும் திருப்பெயராக விளங்குகின்றது.
மேலும், முருகன் என்னும் அத்திருப்பெயரே முழுமுதற்
கடவுளின் முழுமையான பண்புநலனை உணர்த்தும் சொல்லாக
விளங்குவதை எண்ணிப் பார்க்கும்போது தமிழ் மொழியின் திறன்
தெளிவாகத் தெரிகின்றதன்றோ!

3. மிகப்பழங்காலந்தொட்டு முழுமுதற் கடவுளாகத் தமிழர்களால்
போற்றி வணங்கப்பெற்று வரும் திருமுருகக் கடவுள் வழிபாடு,
பண்டைக்காலத் தமிழகத்தில் குறிஞ்சி எனப்படும் மலையும்
மலைசார்ந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களிடையே தோன்றி
வளர்ந்துள்ள வழிபாடாக விளங்குகின்றது. திருமுருகக் கடவுளின்
அறுபடை வீடுகள், திருமுருகக் கடவுள் விரும்பி அணியும்
செங்காந்தள், கடம்பு போன்ற மலர்கள், திருமுருகக் கடவுளின்
ஆற்றல்மிக்க வேற்படையாகத் திகழும் வேல், திருமுருகக் கடவுளின்
சிறப்பு வாகனமாகத் திகழும் மயில், திருமுருகக் கடவுளின்
வெற்றிக்கொடிகளிலும் பதாகைகளிலும் முக்கியதொரு சின்னமாக
விளங்கும் சேவல், தினைப்புனத்தைக் காத்துவந்தவரும் திருமுருகக்
கடவுளின் துணைவியராகச் சித்திரிக்கப்படும் வள்ளியம்மையார்
ஆகியோர் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4. மலைமீது அமைந்திருக்கும் திருமுருகக் கடவுளின் அறுபடை
வீடுகள் எனப்படும் திருத்தலங்களாவன:

# மதுரை மாநகரிலிருந்து 5-கல் தொலைவில் உள்ள
 திருப்பரங்குன்றம், 
# திருநெல்வேலியிலிருந்து 35-கல் தொலைவில் உள்ள
 திருச்சீரலைவாய்  எனப்படும்  திருச்செந்தூர், 
# திண்டுக்கல் என்னும் ஊரிலிருந்து 20-கல் தொலைவில் உள்ள
 திருஆவினன்குடி  எனப்படும்  பழநி, 
# கும்பகோணத்திலிருந்து 4-கல் தொலைவில் உள்ள  திருவேரகம் 
எனப்படும்  சுவாமிமலை, 
# மதுரை மாநகரிலிருந்து 12-கல் தொலைவில் உள்ள
 பழமுதிர்சோலை, 
# சென்னையிலிருந்து 70-கல் தொலைவில் உள்ள  திருத்தணிகை 

என்பவையாகும். மேலும் சங்க காலத்தைச் சேர்ந்த
திருமுருகாற்றுப்படை என்னும் நூலில் அறுபடை வீடுகளுள் ஒன்றின்
திருப்பெயராக வழங்கும் குன்றுதோறாடல் என்னும்
சொற்றொடரானது, 'திருமுருகக் கடவுள் திருநடம்புரியும் அனைத்துக்
குன்றுகளும்' என்னும் பொருளைக் குறிப்பதால், அவற்றுள்

# தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த  குன்றக்குடி, 
# சென்னைக்கு அருகில் உள்ள  வடபழநி, 
# மலேசியாவில் உள்ள  பத்துமலை 

ஆகிய திருத்தலங்களும் அடங்கும் எனக் கருதலாம்.

5. திருமுருகக் கடவுளின் திருமுடி, தீயைப்போன்ற நிறமுடைய
செங்காந்தள் மலர்களாலாகிய குளிர்ச்சி பொருந்திய மாலையைக்
கண்ணியாக அணியப்பெற்றது.

6. திருமுருகக் கடவுளின் திருமார்பு, செங்கடம்பு மலர்களால்
தொடுக்கப்பெற்ற மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

7. குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேங்கை மரத்தின் இலையைப் போன்ற
வடிவத்தையுடைய தலைப் பகுதியைக்கொண்ட வேல், திருமுருகனின்
ஆற்றல்மிக்க வேலாயுதமாக விளங்குகின்றது.

'சூர்' எனப்படும் தீயசக்தியை வெல்லும் சக்திவேல்,

"சூர்மறுங்கறுத்த சுடர் இலை நெடுவேல் சினமிகு முருகன்
தண்பரங்குன்றத்து"

என சங்க காலத்தைச் சேர்ந்த அகநாநூற்றுப் பாடலில் [59:10-11]
குறிப்பிடப்படுகின்றது. திருமுருகனின் வேலாயுதம், தீய சக்திகளை
ஒடுக்கி அழிப்பதோடு, மெய்ஞானத்தை அருளும் தெய்வீகச்
சின்னமாகவும் திகழ்கின்றது.

8. 'மயில் வாகனன்' என அன்புடன் போற்றப்பெறும் திருமுருகக்
கடவுளுக்கும் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த மயிலுக்கும் மிகப்
பழங்காலந்தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது. சங்க
கால இலக்கியத்தில் மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின்
செழுமையையும் இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் பறவையாக
விளங்கிய மயில், திருமுருகக் கடவுளின் சிறப்பு வாகனமாகிய பின்னர்,
கருடனைப் போல் வானத்தில் அதிக உயரத்தில் பறக்கவல்ல ஆற்றலை
உடையது எனவும், கடற்பகுதியுடன் தொடர்புடையது எனவும்
கருதப்படலாயிற்று. இவ்வாறு, நிலம், வானம், கடல் ஆகிய பிரதான
இயற்கை அம்சங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மயில்,
பிரபஞ்சத்தின் முழுமுதற் கடவுளாகிய திருமுருகக் கடவுளின் சிறப்பு
வாகனாமாகக் கருதப்படுவதில் வியப்பில்லையன்றோ!

9. ஏறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்க
காலத்தில் தமிழர்களிடையே போற்றப்பட்டுவந்த திருமுருகக் கடவுள்
வழிபாட்டில் அந்நூற்றாண்டுக்குப் பின்னர் புதிய அம்சங்கள் சில
சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. அவற்றுள் முக்கியமானதோர்
அம்சமாவது திருமுருகக் கடவுள், சிவபெருமான், உமா தேவியார்
ஆகியோருக்குத் திருமைந்தர் என்பதாகும். இந்த அம்சத்தின்
விவரங்கள், ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள் தமிழ் மொழியில்
அருளிய  கந்தபுராணம்  என்னும் நூலைச் சேர்ந்த உற்பத்திக்
காண்டத்தில், திருவவதாரப் படலத்தில் அடங்கிய [942-1068]
திருப்பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளன. அவ்விவரங்களுள்,
அசுரன் சூரபன்மனின் கொடுமைகளைத் தாங்கவொண்ணாத
வானோரின் அன்புவேண்டுகோளை ஏற்றுக்கொண்ட
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு
தீப்பொறிகள், காற்று, நெருப்பு, கங்கைநதி ஆகியவற்றால் சரவணப்
பொய்கையைச் சேர்ந்த தாமரை மலருக்குக் கொண்டு
செல்லப்பட்டவுடன் பாலமுருகன் சரவணபவனாக ஆறு
திருமுகங்களுடனும் பன்னிரண்டு திருக்கரங்களுடனும் அவதரித்தார்
என்பதும், கார்த்திகைப் பெண்டிர் அறுவர் சரவணபவனாக அவதரித்த
பாலமுருகனுக்குப் பாலூட்டி வளர்த்த செவிலித் தாயானார்கள்
என்பதும் பின்னர் உமாதேவியார் தம் திருக்கரங்களால் ஆறு தெய்வக்
குழந்தைகளையும் எடுத்து அணைத்துத் தூக்கியபோது அறுவரும்,
ஆறு திருமுகங்களையும் பன்னிரு திருக்கரங்களையும் உடைய கந்தன்
என்னும் திருப்பெயருடைய ஒருவரானார் என்பதும் அடங்கும்.

10. மேற்கூறிய விவரங்கள் உணர்த்தும் பொருளாவது, சிவபெருமானின்
எல்லாத் தெய்வாம்சங்களும் சிவபெருமானின் திருமைந்தரான
திருமுருகக் கடவுளிடம் உள்ளன என்பதாகும் [Clothey 1978: 46].
'பாலமுருகன், சிவபெருமான், உமாதேவியார் ஆகியோருக்கு
அன்னியமானவர் அல்லர்' என்று சிவபெருமான் உமாதேவியாரிடம்
உரைக்கும் செய்தியும் மேற்கூறிய கந்தபுராணத்தைச் சேர்ந்த
திருப்பாடல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது:

"... ... ... நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும்
பேதகம் அன்றால் நம்போல் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருள வல்லான்."

[கந்தபுராணம், திருப்பாடல் 1070, 1_014_19].

11. ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த  "அகரமும் ஆகி" 
எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில், திருமுருகக் கடவுள்,
"அயனென ஆகி, அரியென ஆகி, அரன் என ஆகி அவர் மேலாய்த்,"
திகழ்கின்றார் என வருணிக்கப்படுவதையும் காணலாம். இதன்
பொருளாவது, அயன் (பிரமன்), அரி (திருமால்), அரன்
(சிவபெருமான்) ஆகிய மும்மூர்த்திகளும் தாமாகி முழுமுதற் கடவுளாக
விளங்குபவர் திருமுருகக் கடவுள் என்பதாகும்.

12. கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், திருமுருகக் கடவுள்
வழிபாட்டோடு இணைக்கப் பெற்ற மற்ற செய்திகளுள், திருமுருகக்
கடவுளும் திருவிநாயகர் பெருமானும் சிவபெருமானின் திருமைந்தர்கள்
என்னும் செய்தியும், திருமுருகக் கடவுள் உமாதேவியாரின் சோதரரான
திருமாலின் திருமருகன் என்னும் செய்தியும் அடங்கும். இச்செய்திகள்
உணர்த்தும் பேருண்மையாவது, பக்தர்கள் வணங்கிவரும்
தெய்வாம்சங்கள் அனைத்தும் உலகை ஆளும் ஓரே இறைவனின்
இறையம்சங்கள் என்பதாகும்.

13. திருமுருகக் கடவுளின் ஏனைய திருப்பெயர்களுள், சரவணபவன்,
கார்த்திகேயன், கந்தன், குகன், சுப்பிரமணியன், ஆறுமுகம்
(ஷண்முகம்) என்பவையும் அடங்கும்.

14. தீயவர்களான அசுரர்களின் இன்னல்களிலிருந்து நல்லவர்களைக்
காத்தருளும் பொருட்டு நாணற்புற்கள் ['சர'] செறிந்து ['வண']
வளர்ந்திருந்த பொய்கையில் தோன்றிய ['பவன்'] பாலமுருகக்
கடவுளின் மற்றொரு திருப்பெயர் சரவணபவன் என்பதாகும்.

15. கார்த்திகைப் பெண்டிர் அறுவர் சரவணப் பொய்கையில் பாலமுருகக்
கடவுளுக்குப் பாலூட்டி வளர்த்த காரணத்தால், திருமுருகக் கடவுள்
கார்த்திகேயன் என்னும் மற்றொரு திருப்பெயராலும்
போற்றப்பெறுகின்றார்.

16. திருமுருகக் கடவுள், எல்லா உயிர்களுக்கும் 'கந்து' எனப்படும்
'தூண் போன்ற பற்றுக்கோடாக' (உறுதுணையாக) விளங்குவதால்,
'கந்தன்', அல்லது 'கந்தர்' என்னும் மற்றொரு திருப்பெயராலும்
போற்றப்பெறுகின்றார். 'கந்தன்' என்னும் திருப்பெயர் 'ஸ்கந்த' [Skanda]
என்னும் வடமொழிச் சொல்லுடன் தொடர்புடையது எனக் கருதுபவரும்
உளர்.

17. திருமுருருகக் கடவுளின் மற்றொரு திருப்பெயராகிய 'குகன்'
என்னும் சொல், எல்லா உயிர்களின் இதயக் குகையில் திருமுருகக்
கடவுள் வீற்றிருப்பதை உணர்த்தும் சொல்லாகும்.

18. திருமுருகக் கடவுளைக் குறிக்கும் சுப்பிரமணியன் என்னும்
திருப்பெயர். சு-பிரஹ்மண்ய என்னும் வடமொழித் திருப்பெயரோடு
தொடர்புடையது என நம்பப்படுகின்றது. அந்தத் திருப்பெயரின்
பொருளாவது 'சிறந்த பிரஹ்ம ஸ்வரூபன்' என்பதாகும். ('பிரஹ்மம்'
என்னும் வடமொழிச் சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கும்
சொல்லாகும்).

19. ஆறுமுகம் [ஷண்முகம்]: ஆறு திருமுகங்களையுடைய திருமுருகக்
கடவுள், ஆறுமுகம், அல்லது சண்முகம் [ஷண்முகம்] என்னும்
திருப்பெயரால் போற்றப்பெறுகின்றார். சிவபெருமானின்
திருமைந்தராக ஆறுமுகக் கடவுள் சரவணப் பொய்கையில்
அவதரித்தது பற்றி கந்தபுராணத்தில் குறிப்பிடப்படுள்ள செய்தியாவது,
ஆறு திருமுகங்களுடைய பாலமுருகனுக்குச் செவிலித்தாய்மார்களாக
பாலூட்டி வளர்க்கும் பணியை ஏற்றுக்கொண்ட கார்த்திகைப் பெண்கள்
அறுவரும் தனித்தனியாகப் பாலூட்ட விரும்பியதால் பாலமுருகன்
ஆறு தெய்வக் குழந்தைகளானார் என்பதும், பின்னர் உமாதேவியார்
தம் திருக்கரங்களால் ஆறு தெய்வக் குழந்தைகளையும் எடுத்து
அணைத்து தூக்கியபோது அறுவரும் ஆறு திருமுகங்களையும்
பன்னிரு திருக்கரங்களையும் உடைய கந்தன் என்னும் திருப்பெயரால்
போற்றப்பெற்ற ஒருவரானார் என்பதுமாகும்.

20. திருமுருகக் கடவுளின் ஆறு திருமுகங்களைப் பற்றிய மேற்கூறிய
புராணச் செய்தி முக்கியமானதோர் ஆன்மிகக் கருத்தினை
உணர்த்துகின்றது. திருமுருகக் கடவுளின் ஆறு திருமுகங்கள்,
அறுவகை தெய்வீகப் பண்புகளான 'ஞானம், வைராக்கியம், வலிமை,
கீர்த்தி, திரு, ஐசுவர்யம்' ஆகியவற்றையும், 'முற்றறிவு, பேரின்பம்,
பற்றின்மை, தம்வயமுடைமை, பேரருள், பேராற்றல்' ஆகியவற்றையும்
உணர்த்துகின்றன என்று முறையே சுவாமி சிவாநந்தா அவர்களும்,
திருமிகு கிருபானந்த வாரியார் அவர்களும் கருதுகின்றனர். மேலும்,
திருமுருகக் கடவுளின் திருமுகங்கள் ஆறும் பிரபஞ்சத்தின் வடக்கு,
தெற்கு, கிழக்கு, மேற்கு, மேல், கீழ் ஆகிய ஆறு திக்குகளைக்
குறிப்பதன்மூலம் திருமுருகக் கடவுள் பிரபஞ்சமெங்கும் நிறைந்துள்ள
முழுமுதற் கடவுள் என்பதை உணர்த்துகின்றன என்னும் கருத்தும்
உள்ளது [Clothey 1978: 175].

21. அதே வேளையில், ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் திருமுருகக்
கடவுளை நோக்கி விண்ணப்பிக்கின்ற  திருப்புகழ்ப்  பாடல்
உணர்த்தும் கருத்தும் எல்லாப் பக்தர்களின் சிந்தனைக்குரியதாக
விளங்குகின்றது. திருமுருகக் கடவுளின் பக்தர்கள் அனைவருக்கும்
நன்கு அறிமுகமான அத்திருப்பாடல் பின்வருமாறு:

"ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!"

22. திருமுருகக் கடவுளின் துணைவியர்: புராணங்களிலும், பக்தி
இலக்கிய நூல்களிலும் வள்ளியம்மையாரும் தெய்வானையம்மையாரும்
திருமுருகக் கடவுளின் இரு துணைவியராகக் சித்திரிக்கப்படுவதைக்
காணலாம். ஆயினும், வள்ளியம்மையார் ஆன்மாவின்
'இச்சா-சக்தி' யையும், தெய்வானையம்மையார் ஆன்மாவின்
'கிரியா-சக்தி'யையும் உணர்த்தும் உருவகமாவர் எனக்
கருதப்படுகின்றது. இவ்வுருவகத்தின் உட்பொருளாவது, திருமுருகக்
கடவுளின் வேலாயுதம் என்னும் மெய்ஞானத்தின் துணைகொண்டு,
பக்தர்கள் ஒவ்வொருவரும் தன்னலம் சார்ந்த விருப்பு-வெறுப்புகளை
நீக்கித் தத்தம் கடமைகளை நிறைவேற்றுவாராயின் 'கர்ம-பலன்'
எனப்படும் வினைப்பயன் அவர்தம் ஆன்மாவைச் சாராதாகையால்
திருமுருகக் கடவுளின் தாமரைபோன்ற திருவடிகளைச் சேர்ந்து
முக்திப் பயனை அடைவர் என்பதாகும். இந்தத் தத்துவத்தின்
அடிப்படையில்தான் திருமுருகக் கடவுளின் திருப்படிமங்கள்
அனைத்தும் வேலாயுதத்தை மட்டும் திருக்கரத்தில் ஏந்தியவாறு
காட்சியளிக்கின்றன. திருமுருகக் கடவுளின் இருபக்கங்களிலும்
வள்ளியம்மையார் தெய்வானையம்மையார் ஆகியோரின்
திருப்படிமங்கள் காணப்படினினும், அவை முறையே ஆன்மாவின்
'இச்சா-சக்தி', 'கிரியா-சக்தி'ஆகியவற்றின் உருவகமேயாகும் எனக்
கருதப்படுகின்றது [Clothey 1978: 85 & 168].

23. பரம்பொருளாகிய திருமுருகக் கடவுள் எப்படியிருப்பார்?
என்னும் வினா பக்தர்கள் மனத்தில் எழக்கூடுமாதலால்
அவ்வினாவிற்கு விடைகூறும் வகையில், திருமுருகக் கடவுள் தமக்கு
அருளிய உபதேசத்தையும் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்
 கந்தரலங்காரம்  என்னும் நூலைச் சேர்ந்த திருப்பாடல் ஒன்றில்
குறிப்பிட்டுள்ளார். அஃதாவது,

"... கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ;
வான்அன்று, கால்அன்று, தீஅன்று, நீர் அன்று, மண்ணும்அன்று,
தான்அன்று, நான்அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே!"

[கந்தரலங்காரம், திருப்பாடல் 9]

["திருமுருகக் கடவுள், அடியேனுக்கு குருவாக வந்து உபதேசித்து
அருளிய மெய்ப்பொருள் ஒன்று உள்ளது: ' (பரம்பொருள்' என்பது),
ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, நீர் அன்று,
மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது
அன்று, உருவமுடையதும் அன்று!" ('பரம்பொருள்' என்பது,
மேற்கூறிய) எல்லாவற்றிற்கும் அப்பால் உள்ள ஒன்று!]

24. ஆயினும், அந்தப் பரம்பொருளைப் பக்தர்கள்
காணவியலுமாதலால், திருமுருகக் கடவுள் தமக்கு அருளிய
தரிசனத்தில் காட்சியளித்ததையும் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்
பின்வருமாறு வருணிக்கின்றார்:

"திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே!"

[கந்தரலங்காரம், திருப்பாடல் 102]

["திருமுருகக் கடவுளின் திருவடிகளும், அவற்றை அலங்கரிக்கும்
தண்டை எனப்படும் அணிகலனும், உள்ளே மணிகள் ஒலிக்கும்
சிலம்பும், கிரவுஞ்ச மலையைத் தொளைத்துப் போர் செய்த கூர்மையான
வேலாயுதமும், கடப்ப மலர்களும், அம்மலர் மாலைகளால்
அலங்கரிக்கப்பெற்ற விசாலமான பன்னிரண்டு திருத்தோள்களும்
பொருந்திய அழகுமிக்க ஆறு திருமுகங்களும், குருமூர்த்தியாக
எழுந்தருளிவந்து அடியேன் மனம் குளிருமாறு ஆனந்தக்கூத்தாடின!"]

- - -

ஆதார நூல்கள்:

ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த திருப்புகழ்.
உரையாசிரியர்: திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். ஆறு
தொகுதிகள். சென்னை: வானதி பதிப்பகம், 2-ஆம் பதிப்பு, 2000.

ஸ்ரீ அருணகிரி நாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தரலங்காரம்.
உரையாசிரியர்: திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். சென்னை:
வானதி பதிப்பகம், 8-ஆம் பதிப்பு, 1986.

ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார் இயற்றியருளிய கந்தபுராணம் மூலமும்
தெளிவுரையும். உரையாசிரியர்கள்: பேராசிரியர் அ. மாணிக்கம்
அவர்களும், டாக்டர் பூவண்ணன் அவர்களும். சென்னை:
வர்த்தமானன் பதிப்பகம், மூன்றாம் பதிப்பு, 2000 [உற்பத்திக்
காண்டம், திருவவதாரப் படலம், மற்றும் சரவணப் படலம், பக்கங்கள்
942-1070].

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அருளிச்செய்த திருச்செந்தூர்க் கந்தர்
கலிவெண்பா. திருப்பனந்தாள், காசித்திருமடம், 2002.

புலவர் பெருமான் நக்கீரர் இயற்றியருளிய திருமுருகாற்றுப்படை.
தெளிவுரை, விளக்கவுரை, அரும்பத அகராதி மற்றும் ஆங்கில
மொழிபெயர்ப்பு: சிங்காரவேலு சச்சிதானந்தம். கோலாலம்பூர்: இந்திய
ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம், 2011.

CLOTHEY, Fred. The Many Faces of Murukan. The History
and Meaning of a South Indian God. The Hague: Mouton
Publishers, 1978.

 www.kaumaram.com 



Articles in Kaumaram dot com - The Website for Lord Murugan and His Devotees

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 


... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

top

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]