| பிரார்த்தனை
புன்னெறி தன்னில் செல்லா புத்தி, ஐம் புலன் அடக்கம், தன்னலம் நாடாத் தன்மை, சஞ்சலம் ஏலாச் சித்தம், இன்னுயிர்ச் சாலம் எல்லாம் இறைவனின் உருஎன்(று) ஓர்தல் நின்னடி த்யான யோகம் நிதமெனக்(கு) அருள் செய்வாயே. ...... 1
மனதினை உன்னில் ஊன்றி வாழ்வு தாழ்வுற்ற போதும் மனநிலை சாய்ந்தி டாமல், வாய்த்ததில் திருப்தியுற்று, வினையினை யெல்லாம் உன்பால் விட்டொரு பற்று மின்றி இனிது வாழ்ந் திட எனக்குன் இன்னருள் செய்குவாயே. ...... 2
எப்பணி செய்யும் போதும், எவ்வுண வுண்ணும் போதும், தர்ப்பணம் ஹோமம் தானம் தபஜபம் பண்ணும் போதும் அப்பனே அவற்றை யெல்லாம் அன்புடன் உன் தாளிணையில் அர்ப்பணம் செய்யும் நீர்மை அடியனுக்கு அருள் செய்வாயே. ...... 3
உன்னை எக்காலும் என்றன் உளமதில் எண்ணி நின்றுன் பொன்னடிச் சரோருகத்தைப் போற்றி நமஸ்கரித்துன் இன்னருட் கடலில் மூழ்கி, எவற்றினும் உன்னைக் கண்டு தன்னிய னாகி வாழத் தமியனுக்(கு) அருள் செய்வாயே. ...... 4
யானென(து) என்ற கர்வம் அணுவள வேனும் என்றன் மானஸம் தன்னில் தோன்றா வலி, நிலை பெயராத் தைர்யம், ஞானசா தனத்தில் வேட்கை, நன்னெறி, குருவணக்கம், தானமா குணங்கள் எல்லாம் தயவுடன் அருள் செய்வாயே. ...... 5
விருப்பமும் வெறுப்பும் இன்றி வினைப்பயன் எல்லாம் உன்றன் திருப்பதம் தன்னில் சேர்த்துத் திருப்தியும் திறனு முற்று ஒறுப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடா தன்பே பூண்டுன் திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே. ...... 6
| |