| அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. ... ... ... ... (1)
ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. ... ... ... ... (2)
இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. ... ... ... ... (3)
ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன் ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க. ... ... ... ... (4)
உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க. ... ... ... ... (5)
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத் தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க. ... ... ... ... (6)
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க. ... ... ... ... (7)
ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க. ... ... ... ... (8)
ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க. ... ... ... ... (9)
ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம் பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும் கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம் வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க. ... ... ... ... (10)
ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள் தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின், தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க. ... ... ... ... (11)
ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர் தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத் தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும் கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க. ... ... ... ... (12)
கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல் சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க. ... ... ... ... (13)
ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள் சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க. ... ... ... ... (14)
சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும் நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க. ... ... ... ... (15)
ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம், திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம் எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க. ... ... ... ... (16)
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம், நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம் எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க. ... ... ... ... (17)
இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால் முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம் சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க. ... ... ... ... (18)
தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய் சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல், அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க. ... ... ... ... (19)
நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம் அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல் இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க. ... ... ... ... (20)
பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக் கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க. ... ... ... ... (21)
மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும் விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. ... ... ... ... (22)
யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க. ... ... ... ... (23)
ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன் செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில் எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க. ... ... ... ... (24)
லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல், நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில் இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க. ... ... ... ... (25)
வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க் கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க. ... ... ... ... (26)
இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல், வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும் பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும் செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க. ... ... ... ... (27)
இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில் வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க. ... ... ... ... (28)
இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க. ... ... ... ... (29)
இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக் கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. ... ... ... ... (30)
... ஸ்ரீ சண்முக கவசம் முற்றிற்று.
| |
|