ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் திரு P. காளீஸ்வரன் ARupadai VeedugaLil MurugapperumAn Thiru P. Kaleeswaran |
ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் (திரு P. காளீஸ்வரன்) முருகப்பெருமான் குன்று இருக்கும் இடமெல்லாம் குடி இருப்பார் என்பது ஆன்றோர் வாக்கு ஆகும். அது பொய் அல்ல மெய் என்பதை நாம் இன்று இருக்கும் முருகப்பெருமான் திருத்தலங்களை வைத்து அறியலாம். ஆறுபடை வீடுகளில் முருகன் உறைவதாக நாம் அறிகிறோம். அவையாவன திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை என்பவை. இந்த ஆறு தலங்களும் குன்றின் மீதே அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் ஒரு குடைவரைத் தலம் ஆகும். இங்கு முருகன் குன்றின் மீது உள்ளார். பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, சோலைமலை ஆகிய தலங்களை நாம் நேரடியாக மலை மீது இருப்பதாகக் காணலாம். ஆனால் திருச்செந்தூர் கோவில் கடல் கரையில் இருப்பதாக அறிகிறோம். ஆனால் உண்மையில் இந்த கோவில் கடற்கரையோரமாக உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. செந்தூர் கோவிலில் உள்ள திருமால் பள்ளிகொண்டிருக்கும் இடத்தில் நாம் சந்தன மலையைக் காணலாம். திருப்புகழில் பாடப்பட்டு இருக்கும் பெரும்பாலான கோவில்கள் மலை மீதே உள்ளன. இவற்றில் சில கோவில்கள் முருகனை மூலவராகவும், சில கோவில்கள் சிவபெருமானை மூலவராகவும் கொண்டவை. ஆறுபடை வீடுகளையும் அருணகிரிப் பெருமான் தன்னுடைய திருப்புகழில் பாடிக் களித்து இருக்கிறார். ஆறுபடை வீடுகளில் நாம் சிவபெருமானை நான்கு கோவில்களில் தரிசனம் செய்யலாம். மேலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு ஆறுபடை வீடுகளும் இருக்கின்றன. அவற்றின் சிறப்புகளை இக் கட்டுரையில் என்னால் இயன்ற அளவு, எனக்குத் தெரிந்த அளவு தந்துள்ளேன். |
திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும். 247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று ஆகும். நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பாடி உள்ளனர். இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எந்த முருகன் திருக்கோவில்களிலும் காண இயலாத காட்சி ஆகும். திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். துர்க்கையின் சன்னதி எதிரிலேயே கொடிமரமும், கோபுரமும் இருந்து தலத்தின் சிறப்பை அதிகரிக்கின்றன. கருவறையில் துர்க்கைக்கு இடது புறம் கற்பக விநாயகர் அருளுகிறார். கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு சிறப்பு ஆகும். இந்த கோவிலில் கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மலையையே விமானமாக வணங்குகின்றனர். சிவபெருமானே மலை வடிவில் அருளுகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இங்கு தான் சூரசம்ஹரத்தின் போது சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குவார். இங்கு மட்டும் தான் முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மற்ற வீடுகளில் நின்ற கோலத்தில் அருளுகிறார். இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அருளுகிறார். அருகில் நாரதர், இந்திரன் ஆகியோர் உள்ளனர். பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். சூரியன், சந்திரன், கீழே முருகனின் வாகனமான மயில் மற்றும் ஆடு உள்ளது. இது மற்ற தலங்களில் காணக் கிடைக்காத அபூர்வக் காட்சி ஆகும். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதாக ஐதீகம். சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். இங்கு இவர் தான் பிரதான மூர்த்தி ஆவார். விழாக் காலங்களில் இவருக்கு தான் கொடி ஏற்றப்படுகிறது. இருப்பினும் முருகனே சிவபெருமானின் வடிவம் என்பதால் அவரே வீதி உலா வருகிறார் என்பது இன்னொரு சிறப்பு ஆகும். மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார். இங்கு சிவபெருமானுக்கு எதிரே பவளக்கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சிவனுக்கு எதிரே நந்தி இல்லை, பெருமாளுக்கு எதிரே கருடன் இல்லை. மாறாக சிவனும் பெருமாளும் எதிர் எதிரே உள்ளனர். ஆகவே இதனை மால்விடை கோவில் என்று அழைப்பது இன்னொரு சிறப்பு. இந்த பவளக்கனிவாய்ப் பெருமாள் தான் மதுரையில் நடைபெறும் மீனாக்ஷி திருக்கல்யாணம் அன்று சொக்கருக்கு தாரை வார்த்து கொடுக்கப் போவார். ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்" என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்" என்று மருவியது. அருணகிரியார் தன் பாடல்களில் தென்பரன்குன்றுரை பெருமாளே என்று பாடுகிறார். இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை "சத்தியகிரீஸ்வரர்" என்று அழைக்கின்றனர். முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாற்றப்படுகிறது. முருகன் குடைவரை மூர்த்தியாக இருப்பதால் இந்த ஏற்பாடு. புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று முருகனிடம் உள்ள வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அபிஷேகம் நடக்கும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இங்கு மட்டுமே ஆகும். வேலுக்கு முக்கியத்துவம் ஏன் என்றால் சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததே ஆகும். சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருப்பது மற்றுமோர் சிறப்பு ஆகும். |
திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது இரண்டாவது படைவீடாகும். இந்த தலத்தை அருணகிரி நாதர் மற்றும் நக்கீரர் பாடி உள்ளனர். இங்கு தான் முருகன் சூரபத்மனை வதம் செய்தார். இங்கு மட்டுமே 4 உற்சவர் சுவாமிகள் உள்ளனர். ஷண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய்ப் பெருமாள் என்று 4 உற்சவர்கள் தனி தனி சன்னதிகளில் அருளுகின்றனர். குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி" என்றழைக்கின்றனர். இங்கு மூலவர் கிழக்கு நோக்கி கடலைப் பார்த்த படி அருளுகிறார். ராஜ கோபுரம் மேற்கு நோக்கிய திசையில் உள்ளது. கிழக்கே கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும் எனினும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஆறுபடை வீடுகளில் உயரமான ராஜ கோபுரம் இங்கு மட்டுமே உள்ளது. இங்கு முருகன் தவக்கோலத்தில் அருள் புரிகிறார். இங்கும் முருகனுக்கு பிரகாரம் இல்லை. இந்த மூலவரின் உற்சவர் அருகில் தெற்கு நோக்கி அருளுகிறார். அவருக்கு பிரகாரம் உள்ளது. மூலவருக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் இவருக்கு உண்டு. இங்கு மூலவராகிய முருகனுக்குப் பின்புறம் முருகன் வழிபட்ட 5 லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களுக்கு பூஜை முடிந்த பிறகே மூலவருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. இங்கு முருகனுக்கு 9 கால பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருக்கிறது. இது செந்தூரும் மலை கோவில் என்பதற்கு சான்று. இங்கு கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாற்றை இத்தலத்தில் கூறினார். இந்த கோவில் குரு ஸ்தலமாக போற்றப்படுகிறது. முருகனின் வெற்றிக்காக கந்த ஷஷ்டி யாகம் துவங்கும். ஜெயந்திநாதர் தான் சூரனை வதம் செய்ய வருவார். ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வர். குமரவிடங்கர், முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார், குரு. தீபாவளி அன்று புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, பிரகார தெய்வங்களுக்கு அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கிறார்கள். |
பழநி இது மூன்றாம் படை வீடு ஆகும். இந்த தலத்தை அருணகிரி நாதர் மற்றும் நக்கீரர் பாடி உள்ளனர். திருப்புகழில் அருணகிரியார் இந்த பழனி மலை முருகனைத் தான் அதிக பாடல்களில் பாடி உள்ளார். மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும். பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள். இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதிகம். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி" என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவராக காட்சி தருகிறார். முருகனின் கையில் உள்ள தண்டத்தில் ஒரு கிளி உள்ளது. அந்த கிளி அருணகிரியாரின் வடிவமாகப் போற்றப்படுகிறது. மூலவர் ஆண்டிக் கோலத்தில் அருளுகிறார். தினமும் இரவு இவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. அதைக் காணவே பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக வருகின்றனர். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகன் நவபாஷன சிலையால் ஆனவர். பழனி செல்பவர்கள் இங்கு உள்ள பெரியவுடயரையும், பெரியநாயகியும் தரிசித்து செல்கின்றனர். தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். பழனியில் மூன்று கோலங்களில் முருகனைத் தரிசனம் செய்யலாம். பெரியநாயகி கோவிலில் வள்ளி, தேவசேன சமேதராகவும், மலையாடிவரத்தில் திரு ஆவினங்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலை மீது தண்டபாணி தெய்வமாகவும் அருளுகிறார். இங்கு மட்டுமே ஆறுபடை வீடுகளில் அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சேரமான் பெருமான் என்னும் மன்னரால் இந்த கோவில் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இங்கு மட்டுமே சித்தராகிய போகருக்கு சமாதி உள்ளது. சூரசம்ஹாரத்துக்கு முருகன் மலையில் இருந்து கீழே இறங்கி வருகிறார். மலை கோவில் செல்லும் வழியில் உள்ள இடும்பன் தோளில் மலையை தாங்கிய நிலையில் உள்ளார். இடும்பனுக்கு பூஜை செய்த பிறகே தண்டபாணிக்கு பூஜை நடைபெறும். இங்கு மலைப் பாதை துவங்கும் இடத்தில் பாத விநாயகர் உள்ளார். இவரை வணங்கிய பின்பே தங்கள் யாத்திரையை துவங்குகின்றனர். பழனி பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது. இங்கு தினமும் தங்க ரத பவனி நடைபெறுகிறது. உற்சவர் முத்துக்குமார சுவாமி. அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். |
சுவாமி மலை இது நான்காவது படை வீடு ஆகும். இங்கு முருகன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இவர் சிவனுக்கே ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தால் இங்கு மூலவர் குருவாக அருளுகிறார். மூலவர் இங்கு சுவாமிநாத சுவாமி என அழைக்கப்படுகிறார். அருணகிரியாரும், நக்கீரரும் பாடி உள்ளனர். இங்கு தமிழில் உள்ள 60 ஆண்டுகளை விளக்கும் விதமாக 60 படிகள் உள்ளது. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் மலை மீது இருப்பது சிறப்பு ஆகும். இங்கு ஐயப்பன் கோவில் போல தமிழ் வருடபிறப்பில் படி பூஜை செய்யப்படுகிறது. ஆறுபடை வீடுகளில் இங்கு தான் முருகன் உயராமாக உள்ளார். சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது சிறப்பு ஆகும். முதல் 3 படை வீடுகளில் சிவபெருமான் தனியாக எழுந்தருளுகின்றார். ஆனால் இங்கு முருகனே சிவபெருமான் வடிவில் அருளுவது சிறப்பு ஆகும். இங்கு மூலவருக்கு வாகனமாக யானை உள்ளது. இங்குள்ள முருகனுக்கு அலங்காரம் சிறப்பு பெற்றது. விபூதி அபிஷேகத்தின் போது பழுத்த ஞானியாக காட்சி தருகிறார். பழனி போலவே இங்கும் முருகன் மட்டும் தனித்து உள்ளார். இங்கு ஸ்தல விருக்ஷம் நெல்லி ஆகும். |
திருத்தணிகை இது ஐந்தாம் படை வீடு ஆகும். முருகன் கோபம் தணிந்து இங்கு காட்சி தருகிறார். அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார். வள்ளியை திருமணம் செய்த தலம். இங்கு வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகள் உள்ளன. இங்கும் புத்தாண்டில் படி பூஜை நடைபெறுகிறது. இங்கு முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருளுகிறார். சித்திரை திருவிழாவில் தெய்வானை திருக்கல்யாணம், மாசி விழாவில் வள்ளி திருமணமும் நடைபெறுகிறது. பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் தெய்வானையும், ஒருநாள் வள்ளியுமாக முருகனுடன் அருள்செய்கின்றனர். இங்கு முருகன் சூரனை வதம் செய்த பிறகு கோபம் தணிந்து வந்து அமர்ந்ததால் சூரசம்ஹாரம் இங்கு நடைபெறவில்லை. மாறாக அன்று முருகனை குளிர்விப்பதற்காக புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் இன்னமும் இருக்கிறது. இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. மூலவர் சன்னதி மேலே உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது. ஆறுபடை வீடுகளில் இங்குதான் உயரமான கருவறை கோபுரம். முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் வழங்கப்படுகிறது. இங்கும் சுவாமிமலை போலவே யானை தான் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சன்னதியின் வெளியே பார்த்தவாறு உள்ளது. இங்குள்ள பைரவர் 4 நாய் வாகனங்களுடன் காட்சி தருகிறார். |
பழமுதிர்ச்சோலை முருகனின் ஆறாம் படை வீடு. அருணகிரியாரின் பாடல் பெற்ற தலம். முருகன் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று வினவிய தலம். இன்றும் அந்த நாவல் மரம் இங்கு இருக்கிறது. இந்த மரம் மற்ற நாவல் மரம் போல் அல்லாமல் அயிப்பசி மாதத்தில் பழுக்கிறது. ஆறுபடை வீடுகளிலே இங்கு மட்டும் தான் வள்ளி, தெய்வானை, முருகன் ஒரே பீடத்தில் அருகருகே ஒரே கருவறையில் உள்ளனர். இங்கு முருகன் உள்ள மலை அடிவாரத்தில் அழகர் கோவில் உள்ளது. இது 108 திவ்ய தேசத்தில் ஒன்று ஆகும். இங்கு முருகன் மாமன் அருகில் இருக்கிறார். இது ஒரு காலத்தில் அடர்ந்த காடு. மலை மேலே முருகன் குறிஞ்சிக்கடவுள், மலை அடிவார காட்டில் திருமால் முல்லை நிலக் கடவுள். எங்கும் இது போன்ற அதிசயம் காண முடியாது. ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளையர்கள் கவர்ந்து செல்ல வந்த போது பெருமாளை இங்கு உள்ள சோலை மலையில் கொண்டு வந்து பத்திரமாக வைத்து இருந்தனர். ஆக இங்கு உள்ள முருகன் மாமனுடன் நல்ல இணக்கம் கொண்டவர். பரங்குன்றம், செந்தூர், சோலைமலை ஆகிய தலங்களில் முருகன் தன் மாமன் திருமால் உடன் இருக்கிறார். |
முடிவுரை: ஆறுபடை வீடுகளும் அளப்பரிய பெருமைகளைக் கொண்டது. நான் கொவிலுக்கு சென்ற போது அங்கே கேள்விப்பட்ட செய்திகளும், படித்த செய்திகளையும் இங்கே கொடுத்துள்ளேன். |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |