Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
திருவகுப்பு

Sri AruNagirinAthar's
Thiruvaguppu

Sri Kaumara Chellam
திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு
17 - கடைக்கணியல் வகுப்பு
தமிழில் பொருள் எழுதியது
  'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன், சென்னை, தமிழ்நாடு  


Sri AruNagirinAthar's Thiruvaguppu
kadaikkaNiyal vaguppu
Meanings in Tamil by
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan, Chennai, Tamil Nadu

'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents numerical index complete song  PDF  search
previous page next page
இச் செய்யுளின் ஒலிவடிவங்கள்

audio recordings of this poem
Ms Revathi Sankaran பாடலைப் பதிவிறக்க 

 to download 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem  ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &  
  சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்)  

  Sri Maha Periyava Thirupugazh Sabha &  
  Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem)  


இப்பாடலின் பொருள்

(முருகக் கடவுளின் கடைக்கண் நோக்கின் பெருமையை விளக்கிற்று).

   உலகோரை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்தி உய்யும் வழியை உபதேசிக்கும் கருணை வகுப்பு இது. அபிராமியின் கடைக்கண் அடியார்களுக்கு செல்வம் முதல் அனைத்து நல்லனவைகளைத் தரும் என்பது போல அபிராம நாயகியின் மதலையின் கண்பார்வையும் கீழ்க்கண்ட எல்லாவற்றையும் நல்கி அழிவிலா சிவ சாயுஜ்யம் தரும் என்பது உறுதி.

அருணகிரியார் தனக்கு பார்வை தீட்சை கிடைத்ததை பல திருப்புகழ் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

   ஒளி தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே
 குரம்பை மலசலம்  - பழநி திருப்புகழ்

   பரகதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே
 சதுரத்தரை நோக்கிய  - திருவேட்களம் திருப்புகழ்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும்
    அரசென நிரந்த ரிக்க வாழலாம்  ...... 1

அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும்
    அரசென அறஞ்செ லுத்தி யாளலாம்  ...... 2

அடைபெறுவ தென்று முத்தி யதிமதுர செந்த மிழ்க்கும்
    அருள்பெற நினைந்து சித்தி யாகலாம்  ...... 3

அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க
    அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம்  ...... 4

இலகிய நலஞ்செய் புட்ப கமுமுடல் நிறம் வெளுத்த
    இபஅர செனும்பொ ருப்பும் ஏறலாம்  ...... 5

இருவரவர் நின்றி டத்தும் எவர்எவர் இருந்தி டத்தும்
    ஒருவன்இவன் என்று ணர்ச்சி கூடலாம்  ...... 6

எமபடர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
    இடிஎன முழங்கி வெற்றி பேசலாம்  ...... 7

இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தை
    யினையினி விடும்பெ ருத்த பாருளீர்;  ...... 8

முலையிடை கிடந்தி ளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப
    முகையவிழ் கடம்ப டுத்த தாரினான்  ...... 9

முதலிபெரி யம்ப லத்துள் வரையசல மண்ட பத்துள்
    முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான்  ...... 10

முனைதொறு முழங்கி யொற்றி முகிலென இரங்க வெற்றி
    முறைநெறி பறந்து விட்ட கோழியான்  ...... 11

முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று
    முதுகழுகு பந்தர் இட்ட வேலினான்  ...... 12

மலைமருவு பைம்பு னத்தி வளருமிரு குன்ற மொத்தி
    வலிகுடி புகுந்தி ருக்கு மார்பினான்  ...... 13

மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர்முலை யுண்டு முற்றும்
    வடிவுடன் வளர்ந்தி ருக்கும் வாழ்வினான்  ...... 14

மலையிறை மடந்தை பெற்ற ஒருமதலை யென்று தித்து
    மலையிடிய வுந்து ணித்த தோளினான்  ...... 15

மயிலையும் அவன்தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கண்
    இயலையு நினைந்தி ருக்க வாருமே.  ...... 16

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  top button

அலைகடல் வளைந்து உடுத்த எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்  ...... 1


......... பதவுரை .........  top button

அலை வீசும் கடலால் சூழப்பட்டு ஆடை அணிந்தது போல் திகழும் ஏழு உலகங்களையும் காத்து ரட்சிக்கும் சக்ரவர்த்தி என்று எவரும் புகழும்படி முடிவில்லாத காலம் வரை நீங்கள் வாழமுடியும்,


அளகை அரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும்
அரசென அறம் செலுத்தி ஆளலாம்  ...... 2


......... பதவுரை .........  top button

அளகாபுரியின் தலைவன் பெரும் செல்வந்தனான குபேரனுக்கும் தேவராஜனான இந்திரனுக்கும் நீயே அரசன் எனும்படி தருமவழியில் நாட்டை ஆளலாம்,


அடைபெறுவது என்று முத்தி அதிமதுர செந்தமிழ்க்கும்
அருள் பெற நினைந்து சித்தி ஆகலாம்  ...... 3


......... பதவுரை .........  top button

மோட்சமே அடையத்தக்க இலட்சியம் என்று உணர்ந்து (அதைப் பெறுவதே ஒரு சிறந்த வழி என) முத்தி முதல்வனின் அருள் பெறுவதே எனக்கருதி முத்தமிழ் விநோதப் பெருமாள் முருகன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்பவன் ஆதலின் மிக இனிய செந்தமிழ் ஞானம் பெற அவனது அருளையே நாடி எண்ணிய எண்ணம் கை கூடப் பெறலாம் (கனத்த செந்தமிழால் நினையே நினைக்கவும் தருவாய் உனது ஆரருள்)


அதிரவரும் என்று முட்ட அலகில் வினை சண்டை நிற்க
அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம்  ...... 4


......... பதவுரை .........  top button

பகைவர்கள், மனம் அச்சத்தால் நடுங்கும்படி, எதிர்த்து தாக்க வரும் அளவற்ற தந்திர உபாயங்களுடன் போர் புரிய வந்தாலும் அவர்களை எதிர்த்து சண்டை போட்டு ஜெயம் அடையலாம்,


இலகிய நலம் செய் புட்பகமும் உடல் நிறம் வெளுத்த
இப அரசு எனும் பொருப்பும் ஏறலாம்  ...... 5


......... பதவுரை .........  top button

எல்லா நலங்களும் திகழும் குபேரனின் ரதமான 1000 கோடி மணிகள் கட்டப்பட்ட புஷ்ப விமானத்திலும் வெண்ணிறமுடைய வாரண ராஜனான ஐராவதத்திலும் சுகமாக ஏறலாம், (மயில் வகுப்பை பாராயணம் செய்வதாலும் இப்பேறுகள் கிடைக்கும் - ஐராவதம் ஏறப்பெறுவர்).


இருவரவர் நின்றிடத்தும் எவர் எவர் இருந்திடத்தும்
ஒருவன் இவன் என்று உணர்ச்சி கூடலாம்  ...... 6


......... பதவுரை .........  top button

இரண்டே பேர்கள் கூடி இருக்கும் இடத்திலும் பலர் இருக்கும் சபையாக இருந்தாலும் இதோ இங்கு இருப்பவன் ஒப்பற்ற ஞானி என பார்ப்பவர்கள் எல்லாரும் கூறும்படி ஞான அறிவு வாய்க்கப் பெறலாம்.

(இக்குறிப்பை திருப்புகழிலும் காணலாம்.

   தத்துவந்தரந்தெரி தலைவனென
   தக்கறஞ்செயுங்குண புருஷனென
   பொற் பதந்தருஞ் சனனம்பெறாதோ?


 தலை வலையத்து  - காஞ்சீபுரம்;

   உனைப்புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை திரு அருளாலே

 கருப்புவிலில்  - பழநி).

எமபடர் தொடர்ந்து அழைக்கில் அவருடன் எதிர்ந்து உள் உட்க
இடி என முழங்கி வெற்றி பேசலாம்  ...... 7


......... பதவுரை .........  top button

எமராஜனின் தூதுவர்கள் என்னைப் பின் தொடர்ந்து என்னை எமபுரத்திற்கு வா என கூப்பிட்டால் அஞ்சாமல் அவர்களை எதிர்த்து அவர்களின் நெஞ்சு அச்சத்தால் நடுங்கும்படி இடி முழக்கம் போன்ற பெருத்த குரலுடன் அவர்கள் பயந்து ஓட வெற்றியைக் கூவி சவால் விடலாம்,


இவை ஒழியவும் பலிப்பது அகல விடும் உங்கள் வித்தையினை
இனி விடும் பெருத்த பாருளீர்  ...... 8


......... பதவுரை .........  top button

மேற்சொன்ன வரங்கள் மட்டுமல்ல. உலகினில் பிறந்து வளர்வதாகிய சங்கிலியை நீக்கி விடும் (இறைவனின் கடைக்கண் பார்வையினால் பலிப்பது நீங்கி விடும் - கருவந்து விழ கடைகண்ணீந்து), நீங்கள் கற்றுக் கொண்ட உலக இயல் கலைகளை இனி விட்டு விடுங்கள் (உலக கலைகள் துக்கத்திற்குக் காரணமாகிய பிறவியை ஒழிக்காது). இறைவனின் அருள் பிரசாதமே அதைச் செய்யும்.

   (சிவ கலை அலது இனி
    உலக கலைகளும் அலம் அலம்


-  குருதி கிருமிகள்  - வயலூர் திருப்புகழ்)

பரந்த இப்பூமியில் வாழ்பவர்களே,

(மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே  ...... 16

......... பதவுரை .........  top button

மயிலையும் அவன் திருக்கையில் விளங்கும் வேலையும் முருகன் கடைக்கண் இயலையும் தியானிக்க வருவீர்களாக)



முலை இடை கிடந்து இளைப்ப மொகுமொகு என வண்டு இரைப்ப
முகை அவிழ் கடம்பு அடுத்த தாரினான்  ...... 9


......... பதவுரை .........  top button

முருகப் பெருமான் வள்ளிப்பிராட்டியை இருகத் தழுவுவதால் அவர் மார்பில் இருந்த கடப்ப மாலை அம்மையின் முலை பாரத்தால் நசுக்கப்பட்டன, அம்மாலையில் மொய்த்திருந்த வண்டுகள் ஒலி செய்து கொண்டு ஓட, மெட்டுக்கள் மலரும்படி கடப்ப மாலையை புனைந்தவன்,


முதலி பெரிய அம்பலத்துள் வரை அசல மண்டபத்துள்
முநிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்  ...... 10


......... பதவுரை .........  top button

முழுமுதல் பொருளாம் நடராஜப் பெருமானின் நடன சபையாகிய பெரிய அரங்கில் மலை போன்ற கம்பீரமான கனக சபையில் பதஞ்சலியும் வியாக்ர பாதரும் வணங்கும்படி அன்று நடன தரிசனம் கொடுத்தான்:

அரிதுயில் சயன வியாள மூர்த்தனும்
    மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
        அரிதென முறை முறை ஆடல் காட்டிய ...... பெருமாளே.


...  மகரமொடுறு குழை  - சிதம்பரம் திருப்புகழ்).


முனைதொறு முழங்கி ஒற்றி முகிலென இரங்க வெற்றி
முறை நெறி பறந்து விட்ட கோழியான்  ...... 11


......... பதவுரை .........  top button

போர் முனைதோறும் போரொலி எழுப்பி தாக்கி மேகத்தின் இடி ஒலி போல் கர்ஜனையுடன் மோதி யுத்த வழிமுறைப்படி பறந்து சண்டை போடும் கோழியைக் கொடியாகக் கொண்டவன்,


முதிய அவுணர் அன்று பட்ட முதிய குடர் நன்று சுற்று
முது கழுகு பந்தர் இட்ட வேலினான்  ...... 12


......... பதவுரை .........  top button

மிகுந்த காலம் வாழ்ந்தவர்களாகிய அசுரர்களின் சமர் புரிந்த அந்த நாளில் அடிபட்டு வெளி வந்த முற்றி குடல்களை நன்றாக கழுத்து மாலைகளாக சுற்றி இருப்பதால் வயதான கழுகுகள் (அம் மாமிசம் உண்ண விரும்பி) பந்தல் போட்டது போல் மேலே சுற்றி இருக்கும் வேலாயுதத்தை உடையவனும்,


மலைமருவு பைம்புனத்தி வளரும் இரு குன்றம் ஒத்தி
வலி குடி புகுந்திருக்கு மார்பினான்  ...... 13


......... பதவுரை .........  top button

வள்ளி மலையில் பசுமையான தினைப்புனத்தை காத்திருந்த வள்ளியின் இரு மலை போன்ற கொங்கைகள் தாக்கினதால் வலிக்கின்ற மார்பை உடையவனும்,


மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு முற்றும்
வடிவுடன் வளர்ந்திருக்கும் வாழ்வினான்  ...... 14


......... பதவுரை .........  top button

மழலைச் சொற்கள் பேசிக் கொண்டு தன்னைச் சுற்றி இருக்கும் கார்த்திகை மாதர்கள் அறுவரின் (தாரா கணமெனும் தாய்மார் அறுவர் தரு முலைப்பால் உண்ட பாலன்) உடல் அங்கங்கள் ஒவ்வொன்றும் முழு அழகுடன் வளர்ந்திருக்கும் வாழ்வை உடையவனும்,


மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்று உதித்து
மலை இடியவும் துணித்த தோளினான்  ...... 15


......... பதவுரை .........  top button

இமவான் மகள் பார்வதியின் ஒப்பற்ற குழந்தை என தோன்றி இருந்தாலும் ஒரு மலையைத் தூளாக்கிய புயங்கள் கொண்டவனும் (ஆன ஆறுமுகப் பெருமானின்)


மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண்
இயலையு நினைந்திருக்க வாருமே  ...... 16


......... பதவுரை .........  top button

மயில் வாகனத்தையும் திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தையும் அவன் கடைக்கண்களில் பெருகும் கருணை பெரும் தன்மைகளையும் தியானிக்க வருவீர்களாக.

(அருணகிரியார் திருப்புகழ் பாடல்களில் மயிலையும், அயிலையும் கடைக்கண் இயலையும் பாடிப் பாடி தான் பெற்ற பேரின்பத்தை உலகோரனைவரும் அடையவேண்டும் என்ற உயர்ந்த கருணை நோக்கத்துடன் அவ்வகுப்பைப் பாடியுள்ளார். ஆதலால் நம்மை ஆற்றுப்படுத்தும் இவ்வகுப்பை ஒரு திருமுருகாற்றுப்படையாக கருதலாம்).

திரு அருணகிரிநாதரின் திருவகுப்பு 17 - கடைக்கணியல் வகுப்பு
Thiruvaguppu 17 - kadaikkaNiyal vaguppu
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri AruNagirinAthar's Thiruvaguppu 17 - kadaikkaNiyal vaguppu

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 ஆரம்பம்   அட்டவணை   மேலே   தேடல் 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து   பார்வையாளர் பட்டியலில் சேர 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0905.2023[css]