![]() | ![]() ஸ்ரீ ஞான ஸ்கந்தனின் Visvaroopa Tharisanam | ![]() |
---|
ஸ்ரீ ஞான ஸ்கந்தனின் விஸ்வரூப தரிசனம் P. வைத்யநாத சிவாச்சாரியார், M.Phil. Ph-D. மலைமந்தீர், ராமகிருஷ்ணபுரம், புதுதில்லி. (22.06.2000) ஓம் ஸ்ரீம் ஸ்வாமிநாத குரவே நம ஹ ஓம்கார ஸ்ரூபமாக உள்ள நமது ஞான ஸ்கந்த ஸ்வாமி நாதன் பல திருவுருவம் எடுத்து பல லீலா விநோதங்கள் நிகழ்த்தியுள்ளார். அவைகளில் சூரபத்மனுக்கு தனது விஸ்வரூபத்தை காண்பித்ததுதான் மிகவும் ப்ரமிக்க வைக்கும் விஷயமாகும். இவ்விஷயத்தை வேத வசனங்களும், ஸ்கந்த ராணம், சங்கர சம்ஹிதை சிவரஹசிய கண்டத்தில் இருந்து நாம் அறியலாம். சூரபத்மன் போர்புரிந்து வரும்போது பலப்பல மாய வடிவங்களையெல்லாம் கொண்டு யுத்தம் செய்தான். குமாரக் கடவுளாம் ஆதிபகவன், அவன் செய்கையைத் திருநோக்கஞ் செய்து மந்தகாசம் (புன்சிரிப்பு) பண்ணி, ஆயிரங்கோடி எண்ணிக்கைக் கொண்ட கொடும் பாணங்களைப்பொழிந்தார். அவைகளெல்லாம் துராத்மாவாகிய சூரபத்மன்கொண்ட மாயவுருவங்களை எல்லாம் ஓர் இமைப் பொழுதினில் அழித்து, குமாரக்கடவுள்பாற் திருப்பச் சென்றன. அப்போது சூரபத்மன் மாத்திரம் நின்றான். அதனை திருநோக்கஞ் செய்த முருகப்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். |
![]() | "அசுரனே ஸ்ரீ நீ கொண்ட மாயவடிவங்களை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் அழித்தேன். இப்பொழுது எனது வடிவத்தையும் சிறிது காட்டுகிறேன். ஆனால் உனது ஊனக்கண்ணால் காண இயலாது. நாம் உனக்கு ஞானக் கண்ணை அருளுகிறேன்" . . . என்று ஸ்ரீ பரமேஸ்வரரூபம் என்னும் விஸ்வ ரூபத்தைக் கொண்டருளினார். |
![]() (எந்தன் இடம் எல்லாத் தேவர்களுமுள்ளனர்) ![]() (காயத்ரி முதலிய சந்தசுகன் யஞ்ஞங்கள், அக்கினிஷ்டோமம் முதலிய யாகங்கள், விரதங்கள், சென்றகாலம், வரும்காலம், வேதங்களாற் சொல்லப்படுவன, இவையெல்லாந் தன் சக்தியால் மாயையுடையவன் சிருஷ்டிக்கின்றான். இவனிடமே ஏனையர் யாவரும் கட்டுண்டனர்) என்றும் வேதம் கூறுகின்றது. மேலும் .. ![]() (அவனது அவயங்களானவைகளாலே எல்லாவுலகமும் வ்யாபிக்கப் படுகின்றான்) என்று புகழும் காரணமஹா வாக்கியப் பொருளாயிருப்பவர் தாமே என்பதை யாவரும் உணர்ந்து உய்தற் பொருட்டு விஸ்வரூபம் கொண்டேன் என்று சூரபத்மனுக்கு ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கூறுகின்றார். முருகனின் விஸ்வரூபம் எவ்வாறு இருந்தது என்று சிறிது காண்போம். முருகன் திருவடியின் கீழ் .. மேருமலை, மந்தார மலை, மாலியவான், கந்தமாதனம், நிஷதம், இமயம், ஏமகூடம், விபுலம், சுபாசுபம், சுவேதம், சிருங்கம், மகாகிரி, குமுதம், குமாரம் .. போன்ற பலகோடி மலைகள் காணப்பட்டன. புறத்திருவடியினிடத்தில் .. உப்புகடல், பாற்கடல், தயிர்க்கடல், கரும்புச்சாற்றுக்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்தநீர்க்கடல் .. என்னுஞ் சமுத்திரங்களும், கங்கை, யமுனை, கெளதமி, சரஸ்வதி, கெளசிகி, காவிரி, நர்மதை, கம்பை, பம்பை, துங்கபத்திரை, குசை, பாலாறு, பாஞ்சாலி, கோமதி, அமராவதி, மணிமுத்தாறு, பவானி, சூரி, சிகி, பாபவிநாசினி, சங்கவாகி, பாவ விமோசனி முதலான எண்ணற்ற நதிகளும் காணப்பட்டன. திருவடி விரல்களிடத்தே இடி மின்னல் முழக்கம், கிரகங்கள் என்பவையும், திருவடியின் நடுப்பகுதியில் (உள்ளங்காலில்), வருணன், குபேரன், கருப்பு நிறம் கொண்ட நிருதி, பலப்பல அரக்கர்கள் காணப்பட்டனர். ஸ்ரீ ஸ்கந்தனின் கணைக்கால்களிடத்தே மார்க்கண்டேயர், வசிட்டர், விசுவாமித்திரர், காசிபர், கெளதமர், அகத்தியர், பாரத்துவாசர், ஆங்கீரசு, துர்வாசர், அத்திரி, பிருங்கி, ப்ருகு, சுவேதர், உபமன்னியர், உருகு, உக்கிரசீலர், போதாயனர், பிசிங்கி, தரவர், நாரதர், வாமதேவர், கண்ணுவர், காத்தியாயனர், பாரசரர், வியாசர், பக்குவர், கபிலர், கலாதரர், காணர், காலவர், கைவல்லியர், சாபங்கர், செளநகர், யாஞ்ஞவற்கியர், ததீசி, சனகர், சனாதனர், சனற்குமாரர், சனந்தனர், புசுண்டர், பைப்பலாதர், கணாதர், ஏகபாதர், சித்தர், சத்தியர், சுவேதாசுவதார், அதர்வணர், சதானந்தர், வான்மீகி, மாண்டூக்கியர், முண்டகர், சாதாதபர், ஜமதக்கினி, சற்சரர், மாண்டவியர், சதீக்கணர், இரதிதர், சாபாலர் போன்ற முனிவர் கூட்டங்களும், சிந்தாமணி, பாதுகாஞ்சனம், சியமந்தகபணி, சூளாமணி, சூடாமனி, கொஸ்துபமணி முதலிய இரத்தினங்களும் காணப்பட்டன. ஸ்ரீ ஸ்கந்தனின் முழங்கால்களிலே வித்யாதார், கின்னரர், கிரும்புருஷர், சித்தர், கந்தருவர், கருடர், பூதர், ரக்ஷ்க்ஷசர்கள், பைசாசர் முதலானோர்களும், தொடைமூலத்திலே (தொடை அடிப்பகுதியில்), இந்திரன், அவன் மகன் சயந்தனும், தொடை மத்தியப்பகுதியில் யமன், அவனின் மந்திரியாகிய காலன், தொடையின் பின் பகுதியில் அசுர கூட்டங்களும், இரு விளாபகுதியில் அஷ்ட (8) வசுக்களும், பன்னிருவர் (12) சூர்யர்களும், 11 ரூத்திரர்களும், .. நான்கு வகைகளாக பிரிக்கக்கூடிய முப்பத்து முக்கோடி தேவர்களும், பிருட்டத்திலிருந்து சர்ப்பங்களும், கோசத்திலே (மறைவிடம்) மரணத்தை ஒழிக்கும் வல்லமை பெற்ற அமிர்தமும், அடி வயிற்றுப் பகுதியல் சகல சராசரத் தோற்றங்களும், திருமார்பினிடத்தே (** கீழ்வருவன உபநிஷத்களின் பெயர்கள்) வாஜபேயம், கேனம், கடம், பிரச்சினம், மூண்டகம், மாண்டூக்கியம், தைத்திரீயகம், ஐதரேயம், சாந்தோக்கியம், பிருகதாரண்யம், ப்ரும்மம், கைவல்லியம், ஜாபாலம், சுவேதாசுவதரம், அம்சம், ஆருணிகம், கர்ப்பம், நாராயணம், பரமஹம்சம், அமிர்தபிந்து, அமிர்த நாதம், அதர்வசிரம், அதர்வசிகை, மைத்திராயணி, கெளஷீதப் பிராஹ்மணம், பிருகச் சாபாலம், நிரும்மதாபனி, காலாக்கினி ருத்திரம், மைத்திரேயி, சுபாலம் முதலிய உபநிஷதங்களும், உபவேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், உபபுராணங்கள், இதிகாசங்கள், ஆறு சாத்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் முதலிய உபவீதமும் (பூணல்) காணப்பட்டன. ஸ்ரீ ஸ்கந்தனின் திவ்ய சரீரத்தில் உள்ள அளவற்ற உரோமத் தொகுதிகளுள் ஒவ்வொரு உரோமங்களிலும் ஒவ்வொறு அண்ட புவனங்களும், ருத்திர கோடிகளும், உள்ளங்கையினிடத்தே எல்லாப் போகங்களும், திருந்தோள்களினிடத்தே பிரும்ம, விஷ்ணுக்களும், திருக்கை விரல்தொரும் எல்லாத் தேவப்பெண்களும், திருக்கண்டத்திலே எல்லாப் பண்களும், இசைகளும், அக்கினிதேவனும், திருவாய் பகுதியில் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும், பற்களினிடத்தே எல்லா எழுத்துக்களும், நாவின் பகுதியில் காமிகம், யோகசம், சிந்தியம், அசிதம், தீப்தம், சூக்ஷமம், சகத்திரம், அம்சுமான், சுப்பிரபேதம், நிர்வாசம், ஸ்வாயம்புவம், ஆக்னேயம், வீரம், இரெனரவம், மகுடம், விமலம், சந்திரஞானம் முதலிய சிவாகமங்களும், அவற்றின் பேதங்களாகிய உபாகமங்ளும், ஸ்கந்தனின் உதடுகளிலே மஹாமந்திர வித்தியா சமுகங்களும், நாசி (மூக்கு) இடத்தே வாயு தேவனும், திருக்கண்களிலே சூர்ய சந்திரர்களும், செவிகளிலே பத்துத் திக்குகளும், அழகிய நெற்றியினிடத்தே பிரணவமும், தலைப்பகுதியில் பரமான்மாவும், இன்னும் மற்றைய உறுப்புகள்தோறும், அளவற்ற சக்திகளும், சத்தர்களும் காணப்பட்டனர். இங்ஙனமாக பரமேஸ்வர ரூபமென்னும் விஸ்வரூபத்தைக் கண்ட தேவர், முனிவர், ப்ரும்மன், விஷ்ணு, முதலாயினோர் யாவரும் தரிசித்து மிகவும் பயந்து நடுநடுங்கிக் .. குஹப்பெருமானே ரக்ஷ ரக்ஷ .. என்று ஓலமிட்டனர். முருகக் கடவுள் அவர்கள் யாவர்க்கும் அபயம் கொடுத்தார். சூரபத்மன் அத்திருவுருவத்தைத் தரிசித்து விசேஷ ஞானமுற்றான். என்றும் அழியாத அழகிய மயில்வாகனனாக சூரபத்மன் விளங்குகின்றார். நான் அறியாமையால் ஸ்கந்தர் முன் (பாலன் என்று எண்ணி) போர் புரிந்தேன். இவரன்றோ பரம்பொருள், இவரே சர்வலோகாதிபதி, சர்வாந்தரியாமி (எல்லாவற்றின் உள் இருப்பவர்) சர்வகாத்தத்துவர் (படைப்பவர்) சர்வஞானத்துவமுடையவர், எல்லா லோகத்தையும் இயக்கச் செய்பவர் என்று ஸ்கந்தனை ஸ்துதிச்செய்கின்றான். இவ்வுண்மையை கிருஷ்ணயஜுர் வேதம் மந்திர சாகையினிடத்தில் காணலாம். ![]() ஸ்கந்தனுக்கு நான் மீளா அடிமையாகி வாழவேண்டும் என்று என் மனம் பெரிதும் விரும்புகின்றது என்றும் பலவிதமாக உரைத்து துதிக்கின்றான் சூரபத்மன். இவ்விஸ்வரூபதரிசனம் சூரபத்மனுக்கு மட்டும் அல்லாது, முன்னர்க்காலத்தில் தேவர்களுக்கும், ஜெயந்திபுரம் எனப்படும் உலகமெல்லாந் தம்மிடத்தேயடங்கும் உருவமுடைய மூர்த்தியாக உள்ளதால் விஸ்வரூப மூர்த்தியானார் குமாரக்கடவுள், (விஸ்வம் = உலகம்). ![]() என்று வேத வசனங்கள் காணப்படுகின்றன. மேலும் ஸ்கந்த மஹாபுராணம் .. சங்கர சம்ஹிதை .. சிவரஹசிய கண்டத்தில் .. ![]() தமிழ் கந்தபுராணம் .. சூரபத்மன் வதைப்படலத்திலும் காணப்படுகின்றது. இவ்விஸ்வரூபத்தில் உள்ள எல்லா பெயர்களை தினம் படிப்பவர்களுக்கு சகல வசதிகள் உண்டாகும். திருமுருகன் திருவருள் கிட்டும் என்பது திண்ணம்! ... சுபமஸ்து ... |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |