வேலும் முருகப்பெருமானும் VElum |
---|
வேலும் முருகப்பெருமானும் (திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி) முருகப்பெருமானே வேல்; வேலே முருகப்பெருமான். முருகன் கைவேலுக்கு 'உடம்பிடித்தெய்வம்' என்று பெயர். "உடம்பிடித் தெய்வம் இங்ஙன் உருகெழு செலவினேகி, மடம்பிடித் திட்டவெஞ்சூர் மாமுதல் தடிந்ததன்றே" எனக் கச்சியப்பசிவாச்சாரியார் கந்தபுராணத்தில் இவ்வாறு முருகன்கை வேலின் பெயரைக் கூறுகின்றார். முருகப்பெருமானை வழிபடுவோர் வேல் நட்டு வழிபடுதல் மரபு. வேல் பிரதானமாக அமைந்த கோயில் வேற்கோட்டம் எனப்படும். புகார் நகரில் இத்தகைய வேற் கோட்டம் இருந்ததைச் சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை கூறும். பாநுகோபன் தலைமையில் அசுரருடன் நடந்த மூன்றாம் நாள் போரின்போது வேலாயுதத்தின் ஆற்றலைக் கண்ட வீரவாகுத் தேவர், "அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால் எந்தைக ணின்றும் வந்த இயற்கையாற் சத்தியாம்பேர் தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேற் பெம்மான்! கந்தனே யென்ன நின்னைக் கண்டுளங் கவலை நீத்தேம்" ... எனப் போற்றினார் (கந்தபுராணம் - யுத்தகாண்டம் மூன்றாம்நாட்போர், 212). இப்பாடலில் வீரபாகுதேவர் கூற்றாக கச்சியப்பசிவாச்சாரியார், முருகப்பெருமானுக்கும் வேலாயுதத்திற்கும் உள்ள ஒற்றுமையை எடுத்துக்காட்டி வேலே முருகன் என வேற்றுமையின்மையை வலியுறுத்துகின்றார். "ஈறிலாத ஒளிவீசுதலாலும், அறுமுகம் படைத்திருத்தலாலும், சிவபெருமான் அருளுதலாலும், சத்தியென்ற பேர் பெற்ற தன்மையாலும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே, நின்னைக் கந்தன் எனவே கண்டு நாங்கள் கவலையை விட்டொழிந்தோம்" ... என வீரவாகுதேவர் கூற்றிலிருந்து வேலாயுதத்தைக் கந்தன் எனவே போற்றி வழிபடவேண்டும் என்னும் உண்மை பெறப்படுகின்றது. வேலாயுதத்தின் ஒளிப்பெருமையை, "சுடர்ப்பரிதி ஒளிப்ப நிலவொழுக்குமதி ஒளிப்ப அலை அடக்குதழல லொளிப்ப ஒளிரொளிப் பிரபை வீசும்" ... என அருணகிரியார் ஓதுவார் (வேல்வகுப்பு). வேல் தியானத்துக்கு உரியது. "வேலும் மயிலும் துணை, வெற்றிவேல் உற்ற துணை" என்பது தமிழ் மந்திரம். "வேல்வேல், வெற்றிவேல்" என்பது வெற்றி தரும் வீரமுழக்கம். சித்தி தரும் இம்மந்திரத்தால் நன்மையடைந்தோர் பலர். "வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்", "காமக் கள்ளை மொண்டுண் டயர்கினும் வேல்மறவேன்" ... என்றார், திருப்புகழ் முனிவர். "செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க சிவமஞ் செழுத்தை முந்த விடுவோனே" ... 'பருவம் பணை' சிதம்பரத் திருப்புகழ். ... என்றமையால் வேலே திருவைந்தெழுத்து என்பதும் பெறப்படும். 'ஏத்துவார்க்கு இடரான கெடுப்பன வினைப்பகைக்கு அத்திரமாவன ஐந்தெழுத்துமே' ... எனத் திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்துக்கு ஓதிய பெருமையெல்லாம் வேலாயுதத்துக்கும் உண்டு. 'நாதன் நாமம் நமச்சிவாயவே, நந்திநாமம் நமச்சிவாயவே' ... என்ற திருவருள் வாக்கால், சிவமும் ஐந்தெழுத்தும் ஒன்றே என்பது பெறப்படும். ஐந்தெழுத்தே வேல். வேலே முருகன். முருகனே சிவம். 'ஐந்து முகத்தோடு அதோமுகமும்' கூடிய சிவமே அறுமுகன். கழையோடை வேற்பதிகம்*, "சிவசிவசங் கரமுருகன் செங்கை வேலே" ... எனத் துதிக்கின்றது. இந்த வேற்பதிகத்தை நாள்தோறும் பொருளுணர்ந்து பாராயணம் செய்து வேலாயுதக் கடவுளின் அருளைப் பெற்று அன்பர்கள் உய்வராக. * (கழையோடை வேற்பதிகத்திற்கு இங்கே சொடுக்கவும்) . |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |