முருகப் பெருமானுக்கு மட்டும் காவடி திரு கோ. அண்ணாமலை PJK Kavadi is for Murugan only Thiru K. Annamalai, PJK |
முருகப் பெருமானுக்கு மட்டும் காவடி (திரு கோ. அண்ணாமலை, PJK, ஜெரண்டுட், பகாங், மலேசியா) இயற்கையைப் போற்றிய பழந்தமிழரிடம் இறை உணர்வு இருந்தது. இதனைத் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. தமிழர்களிடம் முருக வழிபாடு என்பது மிகத்தொன்மையனது. எனவே, தெய்வத் திருத்தோற்றங்களிலே தனியொருவடிவமாக நின்று, தனித்தமிழ்க் கடவுளாகக் காட்சி தருகின்ற முருகப் பெருமானின் அருளாட்சி சொல்வதற்கு அரியது. தெய்வங்கள் பலவாக இருந்தாலும், வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத நிலையில் காவடி எடுப்பது முருகனுக்கு மட்டும் உரிய சிறப்பாகும். முருகனுக்கு மட்டுமே காவடி எடுக்க வேண்டும். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விசேச வழிபாட்டு முறைகள் உண்டு. அந்த முறையில்தான் முருகப் பெருமானுக்குக் காவடி எடுப்பது விசேச முறை பெற்றுள்ளது. முருகப் பெருமானுக்கு விசேஷமென கொண்டாடப்படுகின்ற ஆடி மாத உற்சவம் முதல் தைப்பூசம் - மாசிமகம் - பங்குனி உத்திரம் - சித்திராப் பௌர்ணமி - வைகாசி விசாகம் முதலிய உற்சவங்களிலே காவடிகள் பக்தர்களால் மிக விஷேஷமாக எடுக்கப்படுகிறது. நமது நாட்டில் தெய்வத் திருத்தலங்களில் மிக அதிகமாகக் காணப்படுவது முருகன் திருக்கோயிலே. உற்சவங்கள் பல வந்தாலும் தைப்பூச உற்சவமும், பங்குனி உத்திரமும் நமது நாட்டில் இந்துப் பெருமக்களின் உள்ளத்திலும், அதுவும் குறிப்பாக மாரான் (பகாங்) ஸ்ரீ மரத்தாண்டவர் திருமுருகன் ஆலயத்திலும் பெற்றுள்ள சிறப்பு மிக அலாதியானது. மிகவும் மகோவுன்னதமானது. பக்தியை அடிப்படையாக வைத்து செய்யப்படுகின்ற வழிபாடே சிறப்புடையதாகும். நம் ஆன்மாவை நாம் நேசித்து உய்வுபெறச் செய்கின்ற வழிபாடே சிறந்த காணிக்கையாகும். அத்தைகையக் காணிக்கைகளை இப்படி காவடி எடுத்து வெளிப்படுத்தும்போது பக்தரும் உய்வர். அதைக் காண்பாரும் நலம் பெறுவர். காவடி எடுப்பதற்குரிய முறையை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்னாள், அதன் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சிவபெருமானிடத்தில் மிகுந்த வரங்களைப் பெற்ற இடும்பன், சூரனை அழித்த கந்தவேள் குமரனின் அடியோனாக வாழ அருள் புரிய வேண்டினான். "அவ்வாறே ஆகுக" என அருள் புரிந்தார் சிவபெருமான். இடும்பனுக்கு அருள் புரிந்த இடம் இடும்பாவனம் என தற்போது வழங்கப்படுகிறது. இது திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் இரயில் மார்க்கத்தில், கோவிலூர் அருகில் உள்ளது. சிவபெருமானின் அருள்பெற்ற அகத்தியர், இமய மலைச்சாரலில் இருந்த இரு மலைச் சிகரங்களுள் ஒன்றை சிவனாகவும் மற்றொன்றை சக்தியாகவும் கொண்டு வழிபட்டதால், 'சிவகிரி - சக்திகிரி' என அழைக்கப்பட்டன. அந்த இரு சிகரங்களையும் தனது இருப்பிடமான பொதிகை மலைக்குக் கொண்டுவர விரும்பினார் அகதிய முனிவர். அதனைக் கொண்டுவர முருகனை வழிபட்டார். முருகன் திருவருளால் அந்த இரு சிகரங்களையும் கொண்டு வரும் ஆற்றலையும் பெற்று, கேதாரம் வரையில் கொண்டு வந்தவர், ஓய்வு எடுப்பதற்காக ஒரு வனத்திலே தங்கினார். அது சமயம் அதுவழியே தன் மனைவி இடும்பியோடு வந்த இடும்பன் அகத்தியரை வணங்கி அருள்புரிய வேண்டினான். முனிவரும், "யாம் கொண்டு வந்துள்ள இந்த இரு மலைகளையும் தென்திசை நோக்கி கொண்டு வருவாயானால் உனக்கு பெருமையும் புகழும் சித்தியும் உண்டாகும்" என்றார். இம்மொழிகளைக் கேட்டு அகம் மகிழ்ந்து, இடும்பன் இருமலைகளையும் ஆவலுடன் தூக்கினான். அவனால் அசைக்கக்கூட முடியவில்லை. எத்தனையோ பெரிய மலைகளையெல்லாம் தூக்கி எறிந்த இடும்பன், அசையாதிருக்கும் இந்த மலைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுவிட்டான். இந்த மலைகளை இக்குறுமுனிவர் எப்படி தூக்கிக்கொண்டு வந்தார் என வியந்தான். இம்முனிவர் தூக்கி வந்த இந்த மலைகளை, பராக்கிரமசாலியான தான் தூக்க முடியவில்லையே என மிகவும் வருந்தினான். பொதிகை முனியை வணங்கி தனக்கு மலையை தூக்கும் ஆற்றலை தந்தருள வேண்டினான். அவரும் மனமகிழ்ந்து முருகப்பெருமானுடைய மூல மந்திரத்தையும் வழிபாட்டு முறையையும் உபதேசித்தார். முனிவரை வணங்கி வலம் வந்து அவர் அருளியபடியே முருகப் பெருமானுடைய மூலமந்திரத்தை ஜபம் செய்து வந்தான். அப்போது அஷ்ட நாகங்கள் (எட்டு நாகங்கள்) கயிறுகளாக அவனிடம் வந்தன. பிரமதண்டம் புஜதண்டமாக (தோள் மீது சுமக்கின்ற தடியாக) வந்தது. வியப்புற்றான் இடும்பன். அகத்திய முனிவரின் தவ வன்மையையும் முருகப்பெருமானுடைய மந்திர ஆற்றலையும் வியந்தான். எட்டு நாகக் கயிறுகளையும் இரு உறிகளாக செய்தான். இருமலைகளையும் சுலபமாகத் தூக்கி, இரண்டு உறிகளிள் வைத்தான். அவற்றை தோள் தடியாக இருக்கின்ற பிரமதண்டத்தின் இரண்டு பக்கங்களிலும் சேர்த்து பிணைந்து விட்டு, மூல மந்திரத்தை ஜபித்து, முழங்காலை மண்ணில் ஊன்றி தண்டத்தை தோளில் வைத்து, முருகனின் நாமத்தை உரக்கக் கூறி எழுந்தான். இரு மலைகளும், காற்றென எழுந்தன. இவைகளையே அவன் காவடியாகத் தூக்கிக்கொண்டு தென்திசை நோக்கி வருகிறான். இப்படி அவன் வரும் வழியில் தூக்கி வரும் காவடியின் சுமை தோன்றாதிருக்க, முருகன் மந்திரத்தை ஜபித்துக்கொண்டும், முருகன் நாமத்தை பாடிக்கொண்டும் வரும்போது, திருவாவினன்குடியை (பழனியை) நெருங்கும்போது, சற்றே இளைப்பாற எண்ணி காவடியை இறக்கி வைத்துவிட்டு, சிறிது நேரம் இளைப்பாறினான். இளைப்பாறிக் களைப்பு தெளிந்தபின், காவடியைத் தூக்க முயன்றபோது முடியவில்லை. அவன் மனைவி இடும்பியும் முயன்றாள், முடியவில்லை. செய்வதறியாது நிற்கும் நேரத்தில், அங்கே வில்வமர நிழலில் நின்றுகொண்டிருந்த தண்டு தாங்கிய சிறுவன் ஒருவன், இடும்பனின் இயலாமையைக் கண்டு நகைத்தான். சினங்கொண்ட இடும்பன் இடியென கோபங்கொண்டு, சிறுவனைத் தாக்க முயன்றான். சிறுவன் சிரித்தான். அவனைத் தாக்கவும் இடும்பனால் இயலாது போகவே, சீறிப் பாய்ந்தான். பாய்ந்த கணத்தில் பூமியின் மீது வீழ்ந்தவன் மூச்சையுற்றான். இது கண்ட இடும்பனின் மனைவி ஓடி வந்தாள். வந்திருந்தது வடிவேலன் என அறிந்து 'ஐயனே! பிழை பொறுத்து மாங்கல்யப் பிச்சை அருள வேண்டும்' என வேண்டினாள். வேண்டியவர் யாராயினும் இரங்கி அருள்வான் இறைவன். இடும்பிக்கு இரங்கினான் தண்டபாணி. அவன் கடைக்கண் நோக்கினான். இடும்பன் உறங்கி விழித்தவன் போல் எழுந்தான். முருகவேளை வணங்கி நின்றான். "இடும்பனே! இந்த மலைச்சிகரங்கள் இரண்டும் இங்கேயே இருக்கட்டும். அவற்றின் மீது நாம் எழுந்தருளி இருப்போம். நீ இனி இம்மலையின் அடிவாரத்தில் காவல் புரிவாய். சிவகிரி, சக்திகிரி இரண்டையும் நீ காவடியாகக் கொண்டு வந்ததுபோல், நம் அடியார்கள், அவர்கள் தம் காணிக்கைகளைக் காவடியாக எடுத்துவந்து, தம் குறைகளை நீக்கிக்கொள்வார்கள்! உனக்கே இந்தப் பெருமை. உன் புகழ் ஓங்கும். நீ சித்தியடைவாய். வருகின்றவர்கள் முதலில் உன்னை வணங்கி, பின் நம்மையும் வணங்குவார்களாக" என்று அருள்மொழிந்தான் முருகன். குமரன் இட்டக் கட்டளைப்படியே மலையின் அடியிலே, இன்றும் காவல் புரிந்து வருகின்றான் இடும்பன். இதனால்தான் பக்தனான இடும்பனை முதலில் வணங்கிவிட்டப்பிறகே, மலையேறிச் சென்று, செவ்வேள் முருகனை வணங்கும் வழக்கம் இன்னமும் இருந்து வருகிறது. ஜெரண்டுட் (மலேசியா), ஸ்ரீ சிங்கார வடிவேலவர் ஆலயத்தின் 4வது மகா கும்பாபிஷேக நினைவு மலரிலிருந்து தொகுக்கப்பட்டது. ஆலயப் பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |