'ஓதுவார் சுவாமிகள்' | கந்தவேளின் KandhavEl's |
---|
கந்தவேளின் திருக்கைவேல் (இயற்றியது: கொடுமுடி எல். வசந்தகுமார் எம்.ஏ., 'ஓதுவார் சுவாமிகள்', புதுடில்லி - 22. இந்தியா) வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை அன்றாடம் போற்றி வழிபாடு செய்வது நம் தலையாய கடமைகளுள் ஒன்றாகும். அவ்வாறு வழிபடுவதற்கு சிறப்பானது வேற்பூசையாகும். எனவே எல்லாம் வல்ல வள்ளியம்மை தெய்வயானை உடனமர் கந்தப் பெருமானின் திருவருட் பெருங்கருணையினால் அன்பர்கள் அனைவரும் கந்தவேளின் திருக்கைவேலை வணங்கித் திருவருள் பெற வேண்டுகிறேன். | |
மாலொன்றும் நெஞ்சம் தெளிவாகும் இன்பம் வருந்தி அதன் மேலொன்று இரெண்டெனத் தோற்றாத வீட்டுக்குள் விடுப்பதற்கு கோலொன்றும் வில்லியர்தம் குலப்பேதை கொழுநன் அங்கை வேலொன்றுமே துணை அல்லால் மற்றுயாவும் வெறுந்துணையே. வேலாயுதமே - பஞ்சாட்சர மூலமந்திரம் எனப்படும் சிவமஞ்செழுத்தாம். செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க சிவமஞ்செழுத்தை முந்த விடுவோனே ... பாடல் 465 'பருவம் பணை' (சிதம்பரம்) வேலதே சிவமஞ்செழுத்தெனச் சொற்றார் விரிபுகழ்ப் பாவலரதனால் ... [தணிகைமணி]. பராசக்தியிற் தோன்றிய ஆரணி, ஜனனி, உரோதயித்ரி, என்னும் முச்சக்திகளின் புறவுருவான ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி எனும் ஐந்தொழில் சக்தியே சிவமஞ்செழுத்தாகும். பராசக்தியே உயிர்கள் உய்யும் பொருட்டு சிவமஞ்செழுத்தெனக் கனிந்திருப்பது. எனவே பராசக்தியே வேலாயுதத்தின் வடிவாய் குமரப்பெருமான் திருக்கரத்தில் விளங்குகின்றாள். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவரும் பூஜித்து வணங்குமாறு 1008 இதழ் தாமரையில் கொலு வீற்றிருந்தருளும் பராசக்தியே, தனது மைந்தன் யாவர்க்கும் கிட்டாத புகழும், யாவர்க்கும் மேலான நலனும் பொருந்தி விளங்க வேண்டும் என்பதற்காக வெற்றி வேலின் உருவம் கொண்டு விளங்குகிறாள். திருமகளும், கலைமகளும் - பராசக்தியிற் தோன்றியவர்கள். ஆதலால் வேலே - மகாலட்சுமியாகவும், சரஸ்வதியாவும் நிற்பது, செந்தாமரை மலர்மேல் வசிக்கின்ற திருமகளும் கொந்தார் கடம்புடைக் கோமான் கை வேல் என்று கூறுமினே. வெள்ளைக் கமலமிசை வீற்றிருந்ததும் வேற்படையே வேல் ஒன்றை வழிபடுவதால் மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரையும் வழிபட்ட பயனுண்டாம். கல்வி, செல்வம், வீரம் ஆகியன ஒருங்கே வாய்க்கப் பெறுவதாம். எனவே, என்றும் கெடாத திருமால் புகழ் கீர்த்தி நிறைவெய்தும் என்பது திண்ணமே. ஆருக்கும் அகப்படாத ஆறுமுகத்தை அகப்படுத்திய அருளாலராகிய அருணகிரிநாதர், மாதர் இன்பம் உண்டுண்டு அயரினும் யான் மறவேன் என்றுரைத்த பொருள் வேலே. கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் கல்விக்கள்ளை மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன் ... கந்தர் அலங்காரம் பாடல் 37 'கண்டுண்ட' மாமுருகனே வேலிடம் தஞ்சம் அடைந்திருக்கின்றான். வேற்பூசையே குகன் பூசனையாகும். வேலின்றி குகனை பூசை செய்தால் பயன் வீண்படுமே. வேலாயுதத்திற்கு மேலாயுதமென்ன வேறில்லையே. வினைகளை வேரறுத்தல், யம பயம் தீர்த்தல், உண்மை அறிவை அறியச் செய்தல் ஆகியன வேலின் வேலையாம். வேல் ஊழ்வினை மாற்றும் மாண்புடையது. இடுக்கண் வினை சாடும் - அதனை வழிபடுவார் ... வேல் வகுப்பு வேல் - உணர்வின் அடிப்படையில் நின்று தொழிற்படுவதால் உள்ளத்தில் உண்டாகும் சிந்தாகுலம் உயிரில் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும் கவலை ஆகியவற்றை அகற்றவல்லது. கருத்தே புகுந்து கதிகாட்டக் கூடியது. நுண்ணுணர்வையும் அதன்பாற்பட்ட பேரின்பத்தையும் எளிதில் நுகர வைப்பதில் நிகரற்றது. வேல் - என்றாலே உணர்வு என்று பொருள் வேல் - என்ற சொல் 'வெல்' என்ற முதல்நிலை நீண்ட தொழிற்பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். எல்லாவற்றையும் வெல்வது அறிவு. மேலும் அறிவு, ஞானம், வேல் என்பவை ஒருபொருட்கிளவிகள். அறிவுக்கு மூன்று இலக்கணங்கள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன. அறிவு ஆழமாக இருக்கும், பரந்து விரிந்து விளங்கும், கூர்மையாகத் திகழும். இப்பொழுது வேலின் உருவத்தை நினையுங்கள். வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது, இடைப்பகுதி விசாலமாக விளங்குகின்றது, நுனிப்பகுதி கூர்மையாகத் திகழ்கின்றது. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - என்கிறார் மாணிக்கவாசகர். - திருவாசகம். எனவே ஞானமே வேல். சூரியன் எதிர்பட்டாலன்றி இருள் கெடாது. அதுபோல் அறிவை அறிந்தால் அன்றி அறியாமை அகலாது. உயிர்கள் அவ்வறிவை அறிவதே ஆகும் பொருள். அருணகிரிநாதரும் அறிவை அறிவது பொருள் என்பதையே - முருகப்பெருமான் சிவபெருமானுக்கு உபதேசித்தார் என்று கூறுகின்றார். அரவு புனைதரு புனிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ் அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே. ... பாடல் 465 'குமர குருபர குணதர' (திருவருணை) அறிவால் அறிந்து உன் இருதாளிறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே ... பாடல் 101 'விறல்மாரன் ஐந்து' (திருச்செந்தூர்) அறிவே உருவானது கந்தன் திருவடி. அறிவும் அறிவை அறியச்செய்யும் பொருளும் அறிவு ஒன்றேயாகும். அறிவே உருவான கந்தன் திருவடியை அறிய வேல் வழிபாடே வகை செய்யும். எனவே வேற்பூசையே குகனுக்குரிய வழிபாடாகும். அது ஒன்றே மெய்ப்பேறு நல்கி உயிரை உய்விக்க வல்லதாகும். தன்னையன் பொடுபாடி ஆடும் ப்ரதாபமும் தலைமையும் பெற்ற வைவேல் ... வேல் விருத்தம் பாடல் 6 'பந்தாட லிற்கழ' இங்ஙனம் வடிவாகியுள்ள தெய்வம் வேல் ஒன்றே. ஆகவே அனைவரும் நித்தம் ஆராதிக்கவேண்டிய தெய்வம் எது என்று ஆழ்ந்து ஆராய்ந்தால் வேல் ஒன்றே என்பதை அறுதியிட்டுக் கூறலாம். வாலாயுதக் கரத்து இந்திரணாதியர் வாழ வைத்து மாலாயுததின் அவமானம் தீர்த்து மடிவில் சிவன் சூலாயுதத்தின் துணையாய்க் குகன் கையில் தோற்றும் வெற்றி வேலாயுதத்துக்கு மேலயுத மென்ன வேறில்லையே. சிவன் சூலாயுதத்தின் துணையாயும், பராசக்தியே பரிணமித்துள்ளதாயும், சரஸ்வதி, இலக்குமி, பார்வதி ஆகியோர் போற்றிப்புகழும் மேன்மையுடையதாயும், மாமுருகனே தஞ்சம் அடைந்திருக்கும் சிறந்த பொருளாயும் உள்ள கந்தவேளின் திருக்கைவேலின் மகிமை மனம் நிலைத்த யோகியர் தாம் அறிவர். ஆகவே வேலை வழிபடுவதையே வேலையாகக் கொண்டு வேல்முருகனின் திருவருள் பெற வேண்டுகின்றேன். வேலும் மயிலுந் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! கௌமாரச் செல்லத்துக்கு அரோகரா !! |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |