அறுபடை வீடு அமர்ந்த அருளாளன் (புலவர் க. துரியானந்தம்) தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து இருந்தார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவை அவை. குறிஞ்சி நிலத்திற்கு முருகப் பெருமான் தெய்வம். தமிழ் மக்களின் தனிப் பெருந்தெய்வமாக அன்று தொட்டு இன்று வரை அவனே விளங்கி வருகின்றான். அவனுடைய புகழையும் அவனை வழிபடும் அடியார்களின் தன்மைகளையும் அவனை அக்கால தமிழ்மக்கள் எவ்வாறெல்லாம் வழிபட்டார்கள் என்பதை எல்லாம் பண்டைத் தமிழ்ப்பனுவல்கள் பகருகின்றன. சங்க இலக்கியங்கள் பாட்டும் தொகையுமேயாகும். அவை எல்லாம் காலப் போக்கில் எங்கோ எப்படியோ மறைந்து போய் இருந்தன. 'தமிழ் தாத்தா' டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள்தான் பெரு முயற்சி கொண்டு அவற்றை எல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் படித்து இன்புற வழிவகை செய்தார்கள். சங்க நூல்கள் எல்லாம் மறைந்திருந்தாலும் பத்துபாட்டு என்னும் தொகுதியில் அமைந்திருந்த திருமுருகாற்றுப்படை என்னும் நூல் மட்டும் என்றும் அழியாமல், மறையாமல் அப்படியே இருந்தது. அதன் காரணமாக அந்நூல் மக்களால் பக்தி சிரத்தையோடு எப்போதும் பாராயணம் செய்யப்பட்டு வந்ததேயாகும். இதன் சிறப்புக்கருதியே பத்துப்பாட்டில் இதன் முதலில் வைத்தனர் தமிழ்ச் சான்றோர்கள். முருகப்பெருமான்பால் பக்தி பூண்டு அவன் அருளைப் பெற்ற ஒருவன், பிற ஒருவனிடம் 'முருகப் பெருமானிடம் பக்தி கொண்டு அவனை வழிபட்டால் தன்னைப் போலவே உயர்ந்த நிலையை அடையலாம்' என்று அப்பெருமான் கோயில் கொண்டுள்ள இடங்களுக்கு அவனை ஆற்றுப்படுத்துகின்றான். எனவே அந்நூல் திருமுருகாற்றுப்படை எனப் பெயர் பெற்றது. அவ்வாறு அவன் ஆற்றுப்படுத்தும் முகந்தான் குமரப்பெருமான் உறையும், சிறப்புப் பெற்ற பதிகளான திருப்பரங்குன்றம், திரச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை முதலிய அறுபடை வீடுகளின் சிறப்பினையும், அங்கு வாழும் மக்களின் இயல்புகளையும், அவர்கள் செய்யும் முருக வழிபாட்டையும் மிகவும் தெளிவாகவும், அழகாகவும் கவினுற வடித்துத் தந்திருக்கின்றார் நக்கீரர். முருகை உடையவன் முருகன். 'முருகு' என்பதற்கு அழகு, இளமை, மணம், தெய்வத் தன்மை போன்ற பல பொருட்கள் உண்டு. முருகனுக்குரிய நிலை மூன்று: அவை எல்லாவற்றையும் கடந்தது; எல்லாவற்றிலும் கலந்தது; சான்றவர் உள்ளத்தில் சிறந்து விளங்குவது. இவை எல்லாவற்றையும் இயற்கை அடிகோடு கற்பவர் உள்ளம் கழிபேருவகை கொள்ளும் வண்ணம் தெய்வத்தை தமிழில் வடித்துத் தந்திருக்கின்றார் சங்கப் புலவர் நக்கீரர். எனவே எந்நூலுக்கும் இல்லாத தனிப்பெரும் சிறப்பாக, இத் திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிலும், பதினோராம் திருமுறையிலும் இடம் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியம் என்ற சிறப்பும் உண்டு; பக்திப் பனுவல் என்ற பெருமையும் இதற்கு உண்டு. முதற் வீடாகிய திருப்பரங்குன்றத்தைப் பாடும்போது சூரர மகளிர் எவ்வாறு அவனை வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். இதில் சூரர மகளிரின் உடல் அமைப்பும் அவர்கள் அணிந்துள்ள அணி வகைகளும் மிகவும் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளன. அவர்கள் எவ்வாறெல்லாம் தங்களை அலங்கரித்துக் கொண்டு உள்ளார்கள் என்று விளக்கமாக எடுத்துரைத்த நக்கீரர், அவர்கள் செய்யும் வழிபாட்டையும் கூறுகின்றார். இவர்கள் மணம் வீசும் மலர்களைப் பரப்பி அதன் மேல் கோழிக் கொடியை நட்டு அதன் மேல் மலர்களை எல்லாம் தூவி "வெற்றி மிக்க கோழிக் கொடி வாழ்க" என்று துதித்து எங்கும் ஆடிப்பாடுகின்றார்களாம். இரண்டாவது படைவீடாகிய திருச்சீரலைவாய் என்று அழைக்கப்பெறும் திருச்சொந்தூரிலே அவனுடைய திருக்கோலத்தைக் கூறுகின்றார், நக்கீரர். இங்கு முருகப் பெருமான் 'பிணிமுகம்' என்ற யானையை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஆரோகணித்து வருகிறான். இப் படைவீட்டில் செந்தில் நாதன் ஓராறு முகங்களுடனும் ஈராறு கரங்களுடனும் காட்சி தருகின்றான். தன்னை வணங்கும் அடியவர்களின் மனத்திலே பொருந்தி காட்சி தருகின்றது ஒரு முகம்; ஒரு முகம் துதி செய்யும் அன்பர்களுக்கு அவர்கள் மனம் மகிழுமாறு வரம் கொடுக்கின்றது; ஒரு முகம் அறவாழி அந்தணர்களின் வேள்விகட்குத் தீங்கு வாராதபடி காத்து நிற்கின்றது; ஒரு முகம் மக்களுக்கு விளங்காத பொருள்களை எல்லாம் அவர்கள் உய்யும்படி ஆய்ந்து சந்திரனை போல எல்லாத் திசைகளையும் விளக்கும். ஒரு முகம் மென்மை பொருந்தியவளும், கொடி போன்ற இடையை உடையவளுமாகிய இளமை பொருந்திய வள்ளி நாச்சியாருடன் சிரித்து விளையாடலை விரும்புகின்றது. இவ்வாறு ஆறுமுகங்களும் விளங்க பன்னிரு கரங்கள் என்ன செய்கின்றன என்று பார்ப்போம். ஒரு கை முனிவர்கள் துன்பம் அடையாதவாறு பாதுகாக்கின்றது; ஒரு கை இடுப்பிலே பொருந்திற்று; ஒரு கை அழகு பொருந்திய தொடையின் மீது கிடக்கின்றது; ஒரு கை அங்கு சத்தை ஏந்தி நிற்க இரு கைகள் அழகிய கேடகத்தோடு வேலாயுதத்தைச் சுழற்றுகின்றன. ஒரு கை ஞான முத்திரையோடு பொருந்தி விளங்குகின்றது. ஒரு கை மாலையோடு கிடக்கின்றது; ஒரு கை தோளின் பக்கமாகக் கீழே விழுகின்ற "நொடி" என்னும் அடியோடு மிகவும் மேலே சுழல்கின்றது; ஒரு கை மணியை மாறி மாறி ஒலிக்கின்றது; ஒரு கை மழையைப் பெய்விக்கின்றது; ஒரு கை பெருமை பொருந்திய தெய்வப் பெண்களுக்கு மணமாலையைச் சூட்டுகின்றது. இவ்வாறு திருச்சீரலைவாயில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் தேவர்களின் குறை தீர்க்கும் பொருட்டாக சூரபத்மனை வென்றான்.சூரபத்மன் தன் தவவலிவால் அரிய பெரிய வரங்களைப் பெற்று அதனால் ஆணவம் மிகந்து எல்லோர்க்கும் இன்னல் விளைவித்து வந்தான். எல்லோரும் சிவ பெருமானிடம் சென்று முறையிடவே வெந்த குவர்க்காற்றாது விண்ணோர் முறைக்கிரங்கி தனது நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியை உண்டாக்கி ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சந்தியோ சாதம், என்ற ஐந்து முகங்களுடன் கீழ் நோக்கிய முகம் என்ற ஆறாவது முகமும் தந்து மகிழவே குமரன் சக்தி வேலையையும் பெற்று மாமரமாக நின்ற சூரனை இரு கூறுகளாகப் பிளந்தான். இங்குதான் முருகப் பெருமானின் கருணைத் தன்மை முழுதும் வெளிப்படுகின்றது. சூரனை இரு கூறுகளாகப் பிளந்து அவனை அப்படியே விட்டுவிடவில்லை ஒரு கூறு மயிலாகவும் மறு கூறு சேவலாகவும் மாறி முருகனுக்கு வாகனமாகவும் கொடியாகவுமாயிற்று. இதனைத்தான் 'மறக்கருணை' என்று கூறுவர். சூரனை வென்றதும், அவனுடன் போர் புரிந்ததுமான நாட்களே கந்தசஷ்டி நாட்கள். திருச்செந்தூரில் அந்த அற்புதக் காட்சியை நாம் காணலாம். திருச்செந்தூரிலேதான் முருகன் தேவசேனாபதியாக எழுந்தருளி இருக்கின்றான். திருவாவினன்குடி என்னும் பதியில் எழுந்தருளியிருக்கின்ற பழனியப்பனை தரிசிக்க எல்லோரும் வருகின்றனர். யார்? யார்? பாம்புகள் அழியும்படி அவற்றை அழிக்கும் ஆற்றலைக்கொண்ட கருடன் அழகாக எழுதப்பெற்ற நீண்ட கொடியினை உடைய திருமாலும், ரிஷபக் கொடியினை உடையவனும், புகழப்படுகின்ற தோள்களை உடையவனும், முக்கண்களை உடையவனும் முப்புரங்களை அழித்தவனுமாகிய சிவபெருமானும், ஐராவதம் என்னும் யானையை உடையவனும், ஆயிரம் கண்களை உடையவனுமாகிய இந்திரனும், நான்கு முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனும், தேவ கணங்களும், மற்றும் பலரும் கந்தவேளை வந்து தரிசிக்கின்றனர் என்கிறார் நக்கீரர். நான்காம் படைவீடாகிய 'திருவேரகம்' என்னும் திருத்தலத்தில் அந்தணர்கள் ஆறுமுகச் செவ்வேளை வணங்கும் முறை கூறப்பட்டுள்ளது. நாற்பத்தெட்டு வருடங்களை பிரம்மச்சரிய விரதம் இருந்து காத்த அவர்கள் தொழ வேண்டிய காலத்தை அறிந்து துதி செய்து முப்புரி நூல் அணிந்து உலராத ஆடையை உலரும் படி அணிந்து கொண்டு உச்சியிலே குவித்த கையினராய்; ஆறு எழுத்து மந்திரமாகிய 'நமோ குமாராய' என்னும் மந்திரத்தை நாக்கு மாத்திரம் அசைய பல முறை உச்சரித்து மணமிக்க மலர்களால் அவனை அர்ச்சித்து மகிழ அவனும் மிகவும் மகிழ்ந்து திருவேரகத்தில் எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றான். ஐந்தாம் படைவீடாகிய குன்றுதோறாடலில் குறவர்கள் செய்யும் முருக வழிபாட்டைப் படம் பிடித்துக்காட்டுகின்றார் நக்கீரர் பெருமான்.இவர்கள் குன்றினிடத்தே தங்கள் சுற்றத்தாருடன் சேர்ந்து 'தொண்டகம்' என்னும் குறிஞ்சிக் கருவியை அடித்துக் குரவைக் கூத்து ஆடுகின்றனர். அப்போது வேலன் ஒருவன் நாட்டு மல்லிகையோடு வெண் கூதாளப் பூவையும் சேர்த்துக் கட்டிய தலைமாலையை உடையவளாய் மேலும் பல மலர்களையும் தலைகளையும் சேர்த்துக்கட்டிக்கொண்டு குழல் ஊதுபவனாய், கொம்பு ஊதுபவனாய், இடுப்பில் நல்ல துணியை உடையவனாய் யாழின் நரம்பு ஒலித்தல் போன்ற இனிய குரலை உடைய பெண்களையும் அகன்ற கையிலே ஏந்திக்கொண்டு ஒவ்வொரு குன்றிலுமாக அவர்கள் ஆடுகின்றார்கள். ஆறாவதாக பழமுதிர்சோலை என்னும் படைவீட்டை நக்கீரர் பெருமான் பிற மக்கள் எவ்வாறு கந்தக் கடவுளை வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். சிறுதினை அரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து ஆட்டுக் குட்டியை அறுத்து, கோழிக் கொடியுடனே இடந்தோறும் நிறுத்தி அன்பர் துதி செய்ய களத்திலும் காட்டிலும் ஆறுகளிலும் குளங்களிலும், நாற்சந்தியிலும் முச்ச்நதியிலும் ஊருக்கு நடுவேயும் பொது இடங்களிலும் மலைக் கோயில்களிலும் முருகப் பெருமான் எழுந்தருள்வான் என்று கூறுகின்றார். இப் படைவீட்டில் முருகப் பெருமானை பலவாறாக விளிக்கின்றார். இவ்வாறாக சங்க காலத்தில் முருக வழிபாடு பரவலாக எல்லாத் த ரப்பு மக்களாலும் மிகவும் உயர்ந்த முறையில் அமைந்திருந்தது என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ளலாம். தமிழ் நாட்டின் தனிப் பெரும் தெய்வம் முருகன். 'முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்' ... என்று அருணகிரிப் பெருந்தகை கூறியதுபோல தன்னை வைதவர்களையும் வாழ வைக்கும் கருணைக்கடல். சேயோன் சேவடி போற்றி! போற்றி! முற்றும். தைப்பிங் லாரூட் (மலேசியா), அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (சுக்கில தை 19ம் நாள், 1-2-1990) சிறப்பு மலரிலிருந்து தொகுக்கப்பட்டது. ஆலயப் பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். (திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி). |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |