![]() | ![]() அருள்மிகு முருகனும் ஆறுபடை வீடுகளும் 'தமிழ்க்குயில்' டாக்டர் கா. கலியபெருமாள் arulmigu Murugan and ARupadai veedu Thiru Ka. Kaliaperumal | ![]() |
அருள்மிகு முருகனும் ஆறுபடை வீடுகளும் ('தமிழ்க்குயில்' டாக்டர் கா. கலியபெருமாள், ஈப்போ, மலேசியா) உலகெலாம் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கோயில் கொண்ட பெருமான் முருகப்பெருமான். ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த சுவாமி நாதனைத் தமிழ்க்கடவுள் என்றே சான்றோர் கூறுவார்கள். தமிழ்க்கடல் திரு. வி.க., முருகனை அழகு என்றே நூலுரைத்தார், நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படை பன்னிரு திருமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழுகின்ற நாடுகளிலெல்லாம் முருகபக்திக்கு முதலிடம் தந்துள்ள வரலாற்றை உலகோர் அறிவர். அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரப் பாடலொன்றில், "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரை யுமங்கு வாழவைப்போன்" ... கந்தர் அலங்காரம் பாடல் 22 'மொய்தார் அணிகுழல்' என்று வருவதால் தமிழால் 'வைதாரையும் வாழவைப்பான் முருகன்' என்பது நம்பிக்கை. கலியின் கலிதீர்க்க வந்த கலிகால பிரணவ தெய்வம் என்பது முருக பக்தர்களின் அருள்வாக்கு. முருகப்பெருமானின் குமார சம்பவங்களை ஏற்றிப் போற்றிப் பாடிய பெருமக்கள் எண்ணற்றவர்களாவர். அருணகிரிநாதர் பாடியவை சந்தமலி திரும்புகழும், கந்தரனுபூதியும், சுந்தரந்தாதியும், திருவருட்புகழும், கந்தரலங்காரமுமாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் பாடியது கந்தபுராணம். நக்கீரர் பாடிப் பரவியது திருமுருகாற்றுப்படை, சண்முகக் கவசம் பாடி அருள்பெற்றவர் பாம்பன் சுவாமிகள். தணிகைமலை முருகனையும் கந்தக்கோட்ட முருகனையும் பாடி மும்மணி முழங்கியவர் வள்ளலார் என்பது குன்றின் மேலிட்டவிளக்காகும். அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளதாகி தொண்டர்கள் குருவுமாகி துகள்அறு தெய்வமாகி எண்திசை போற்றநின்று எனனருள் ஈசனான தின்திறன் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க! எனத் தொடங்கும் சண்முகக் கவசத்தை நம்பிக்கையோடு நாளும் ஓதி நலம்பெற்றார் பலராவர். "வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை; குகனுண்டு குறைவில்லை" ... என்பது அனைவரும் சொல்லும் இணையில்லாச் சொல்லாகும். செட்டி நாட்டிலே ஒன்பான் குடியமர்ந்த பண்பார் நகரத்தார்கள் மலைநாட்டிலே குடியேறிய ஊர்தோறும் குமரனுக்குக் கோயில் கண்டார்கள். கோயிலை முன் நிறுத்திச் சமூகக் காரியத்தனத்தைச் செய்து கொண்டார்கள். தனவணிகமும் குணப்பண்பும் கொண்ட நகரத்தார்கள் சேர்ந்து வாழவும், செய்தொழில் சிறக்கவும் செவ்வேள் முருகனை நம்பிக்கையோடு வணங்குகிறார்கள். அவ்வகையில் அலோர்ஸ்டார் முதல் சிங்கை வரை பதினான்கு தண்டபாணிக்கு கோயில்களைக் கட்டினார்கள். அவ்வகையில் தைப்பிங்கில் கோயில் கொண்ட தண்டபாணிக்கு ஆடிவேல் பிரசித்தம் மெக்ஸ்வெல் குன்றினடியில் வேலாய்த் தோன்றிய வேலவனை சிம்பாங் சாலைக்கு இடம் பெயரச் செய்து வழிபட்டு வருகின்றனர். இத்தலத்தின் காலம் 120 ஆண்டுகளுக்கு முன்பாகும். உருவாய் அருவாய் உளதாயில தாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! என்பது கந்தர் அனுபூதிப் பாடல். குருவாய் வந்து அருள்நெறி காட்டி இருள்நெறி ஓட்டும் எம்பிரான் கந்தவேள் கோயில் கொண்ட செந்தமிழ்க் கோயில்கள் பலவாகும். அவற்றில் சில குறிப்பிடத்தக்க கோயில்களாகும். அவை ஆறுபடை வீடுகளாகும். ஆறு படை வீடுகள் 1. திருப்பரங்குன்றம், 2. திருச்செந்தூர், 3. பழநி, 4. சுவாமி மலை, 5. பழமுதிர்ச்சோலை, 6. குன்றுதோறாடல் என்பனவாகும். ஆறு படை வீடுகளுடன் ஏழாவது திருத்தலமாகக் கருதப்படுவது மருதமலையாகும். படை வீடுகள் ஆறுடன் மருதமலைக்கும் குன்றக்குடிக்கும் சென்று வந்தவன் என்ற முறையில் சுருக்கிப் பொருளுரைக்கத் திருவருள் கூட்டிற்று போலும். |
![]() திருப்பரங்குன்றம் (முதலாம் படைவீடு) திருப்பரங்குன்றம் மதுரைக்குத் தென்மேற்கே ஐந்து கல் தொலைவிலுள்ள திருத்தலமாகும். பராசர முனிவரின் மைந்தர்கள் ஞானம் பெற்ற தலமாதலால் பராசரத்தலம் எனறும் அழைக்கப்படுவதுண்டு. செந்தமிழ்ப் புலவர் நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாடி அருள்பெற்ற தலமாதலால் இங்கு நக்கீரருக்கும் கோயில் உண்டு. சூரபத்மனை அழித்துக் தெய்வயானையை மணந்த தலம் என்பார்கள். திருப்பரங்குன்றதில் முருகன் கைவேலுக்கே சாத்துபடி நடக்கிறது. |
![]() திருச்செந்தூர் (இரண்டாம் படைவீடு) திருச்செந்தூர் திருநெல்வேலியிலிருந்து முப்பத்தாறு கல் தொலைவிலுள்ளது. அலையாடும் கடற்கரையில் அமைந்திருப்பதால் திருச்சீர் அலையாய் என்று அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் பாடிய தலம் என்பதும் விசுவாமித்திரர் திருநீற்றுப் பிரசாதத்தால் குடல்நோைய்ப போக்கிக் கொண்ட தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆறுமுகப் பெருமான் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருப்பதால் தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம் என்றும் கூறுவர். கடலில் மரமாகி நின்ற சூரபத்மனை வேலால் பிளந்து ஆட்கொண்ட திருச்செந்தூர் தலத்தில் கடற்கரை ஓரமாக உள்ள நாழிக்கிணற்று தீர்த்தம் உப்பாக இல்லையென்பது செப்பரிய பெருமையாகும். |
![]() பழநி (மூன்றாம் படைவீடு) பழநி திண்டுக்கல்லிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் முப்பத்தைந்தாவது கல்லில் ஒரு குன்றில் நாநூற்று ஐம்பதடி உயரத்தில் பழநி என மருவிற்று என்பர். அன்னை பராசக்தியால் பழம் நீ என்று அழைக்கப்பட்டதால் பழநீயாயிற்று என்பது தலபுராணக்கதை. பழநீ, குன்றின் மேலிருக்கும் தண்டபாணிக்குப் பெயர். அடிவாரப் பகுதியை ஆவினன் குடி என்பார்கள். அதுவே திருவாவினன் குடி என்றாயிற்று. ஆண்டிக்கோலத்தில் நின்றாலும் அலங்கார மூர்த்தியாக விளங்கும் தண்டபாணியின் திருத்தலத்தின் பிரகாரத்தில் பதினெண் சித்தர்களின் ஒருவரான போகருக்கும் சந்நிதி உண்டு. ஐயனின் திருவுருவம் நவ பாக்ஷாணத்தால் செய்யப்பட்டதால் (அபிஷேகம் பஞ்சாமிர்தத்தை) திருச்சாற்று ஐம்பானமுதை உண்போரின் நோய்கள் தீரும் என்பது மரபு. ஐய்யப்பனையும் குருவாயூர் அப்பனையும் வழிபடச் செல்வோர் பழநிக்குச் சென்று வழிபட்டாலன்றி வழிபாடு நிறைவுறாதென்பார்கள். எனவே, ஐயப்ப பக்தர்களும் அங்கே வருவர். |
![]() சுவாமி மலை (நான்காவது படைவீடு) சுவாமி மலை கும்பகோணத்திற்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் திருவலஞ்சுழிக்கும் பக்கத்தில் உள்ளது. இப்பதிக்குத் திருவேரகம் என்ற பெயரும் உண்டு. அப்பனின் மடியில் அமர்ந்து பிரணவ மந்திரத்தை ஓதிய சுப்பனானதலால், மலைக்குச் சுவாமி மலை என்றும் நாதனுக்குச் சுவாமிநாதன் எனறும் பெயர். அருணகிரிநாதர் முத்திப்பேறடைந்த சக்தி வாய்ந்த தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் மயிலுக்குப் பதில் யானை வாகனம் முதன்மை பெற்றுள்ளது. |
![]() குன்றுதோறாடல் (ஐந்தாவது படைவீடு) ஐந்தாவது படை வீடாக எதையும் குறிப்பாகச் சுட்டிச் சொல்லவில்லை. எனவே, குறிஞ்சித்தனைக்குரிய குன்றுகள் அனைத்திலும் குமரன் கோயில் கொள்வான் என்பது குறிப்பு. அதற்குச் சான்றாகச் சுருளிமலை வாழ் முருகன் பிரிங்கி முனிவரின் சாப விமோசனம் செய்தார். விராலிமலை முருகனை வணங்கி வசிஸ்டரும் அவர் மனைவி அருந்ததியும் சாப விமோசனம் பெற்றனர் என்பதும் பிரசித்தம். மயில் ஆணவங் கொண்டபோது அதனைக் குன்றாகும்படிச் சபித்த மலையே குன்றக்குடி என்றாயிற்று. ஐயன் சினந் தணிந்த மலை தணிகைமலை என்பார்கள். வயலூர் முருகனைப் பாடிய அருணகிரிநாதர். அங்குள்ள பொய்யா கணபதி மீது பாடப்பட்டதே "கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழ்ப் பாட்டாகும். மருதமலை முருகனையும், புள்ளிருக்கும் வேளூர் எனும் வைத்தீசுவரன் கோயிலையும் சொல்லவும் வேண்டுமோ! மலை நாட்டில் கோயில் கொண்டுள்ள அனைத்துக் கோயில்களையும் குன்றுதோறாடல் பதிகளில் சேர்த்து வணங்கலாம். |
![]() பழமுதிர்ச்சோலை (ஆறாம் படைவீடு) மதுரைக்கு வடக்கே பன்னிரண்டு கல் தொலைவிலுள்ளள திருத்தலம் பழமுதிர்ச்சோலை என்பதாகும். இப்பதியை அழகர் கோயில் என்றும் அழைப்பர். ஒளவைக்குப் பழம் உதிர்த்த சோலையாதலால் பழம் உதிர்ச் சோலையே பழமுதிர்ச்சோலை என மருவிற்று என்றும் கூறுவர். மலையை நோக்கி இரண்டு கல் தூரம் சென்றால் சிலம்பாறு எனும் தீர்த்தம் உண்டு. அதையும் தாண்டிச் சென்றால்தான் பழமுதிர்ச்சோலை எனும் முருகத்தலம் உண்டு. கீழே இருக்கும் அழகர் கோயில், பெருமாள் கோயிலாகும். ஆயினும் இங்கே திருநீறே பிரசாதமாகும். |
திருப்பதி வேங்கடாசலபதியும் திருமுருகன் பதியே! திருப்பதி அடிவாரம், திருமலை முடிக்கோயில், இதனை மேலத்திருப்பதி - கீழத்திருப்பதி என்பார்கள். திருமலையில் கோயில் கொண்டிருப்பவனும் முருகனே என்பது சான்றோர் கருத்து. முருகன் திருத்தோள்களில் சங்கு சக்கரத்தைப் பதித்தும் முகம் தெரியாமல் அகன்றப் பெருநாமம் போட்டும் சடாகிரி வைத்தும் வேலவனை மாலவனாக்கி வைத்துள்ளார்கள். ஆழிதுயில் மாதவனுக்கு மலையில் தலங்கொள்ளும் மரபில்லை என்பதையும் கற்றவர்கள் உணர்வர். ஓரூரும் ஒரு நாமம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டும் தமிழர்கள், வேலவனை - மாலவன் என்ற வேறுபாடு காட்டாமல் நாள்தோறும் வழிபட்டு நலம் பெறுகின்றனர். |
இருள் போக்கி அருள் பாலிக்கும் திருமுருகனையும் பங்காளியாகக் கொண்டு பணவணிகம் செய்யும் தன வணிகப் பெருமக்கள் தைப்பிங் நகரில் கட்டிய தண்டபாணித் திருக்கோயிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும், அதற்கென வெளியிடும் நூன்மலரும் பொன்மலர் மணம் பெற்றதுபோல் புகழ்மலர் பெற முருகப்பெருமானின் பொன்னடியைப் பணிகின்றேன். இனம்எனத் தொண்டரொடும் இணங்கிடும் செட்டி காக்க தனிமையில் கூட்டந்தன்னில் சரவணபவனார் காக்க நனியனுபூதி சொன்ன நாதர்கோன் காக்க, இத்தைக் கனிவொடு சொன்னதாசன் கடவுள்தான் காக்க வந்தே. ... சண்முகக் கவசம். முற்றும். தைப்பிங் லாரூட் (மலேசியா), அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (சுக்கில தை 19ம் நாள், 1-2-1990) சிறப்பு மலரிலிருந்து தொகுக்கப்பட்டது. ஆலயப் பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். (திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி). |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |