| ஆலயத்தைப் பற்றி About the temple
கோலாலம்பூர் நகரத்தார் ஆருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய வரலாற்று குறிப்பு
சிறப்புமிக்க கோலாலம்பூர் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் 1893ஆம் ஆண்டு ஏற்பட்டது. இந்த ஆலயத்தை நகரத்தார் சொந்தத்தில் கட்டி சோபகிருது ஸ்ரீ ஆவணி மீ (1902) கும்பாபிஷேகம் செய்தார்கள். அன்று முதல் ஆலய நிர்வாகம் உன்னத நிலையில் நடைபெற்று வருகிறது.
உலகப் போருக்கு முன்னைய காலக்கட்டத்தில் ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தம், உலகப் போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புப் பணி ஆகியவை காரணமாக மீண்டும் திருக்குட நன்னீராட்டு விழாவிற்கான வாய்ப்பினை 30-10-1961-ல் தான் இறையருள் வழங்கியது. இதனை அடுத்து 1.11.1971-ல் ஒருமுறை திருக்குட நன்னீராட்டு விழா சிறப்புற நடைபெற்றதை அடுத்து 8.6.1984-ல் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இப்போது 9.2.1998-ல் திருக்குட நன்னீராட்டு விழா அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி கிருபையினால் திரு. அ. க. அ. சிதம்பரம் செட்டியார் அவர்கள் காரியத்தனத்தில் நடைபெறுகிறது.
திருப்பணி
ஆலயம் முழுவதும் சீரமைப்புச் செய்யப்பெற்று இந்தியாவிலிருந்து வந்துள்ள ஸ்தபதிகள் உதவியுடன் கோபுர வேலைப்பாடுகளும் அழகுற மேம்படுத்தப்பட்டுள்ளன. தூண்களிலும் முகப்பிலும் ஆறுபடை வீடுகளும் முருகப் பெருமானின் வாகனங்களும் சிவச்சின்னங்களும் மிளிர்கின்றன.
ஆலயத்தில் மூலவர் கருவறையில் திருக்கோலம் காட்டி வீற்றிருக்கிறார். கருவறையின் முன்கட்டின் வலம்புறம் வேழமுகத்தானின் அருட்கோலம், கருவறைக்கு வெளியே இடும்பன், மண்டப நுழைவில் வேலும், மயிலும், சுற்றுப் பிரகாரத்தில் இடப்புறத்தில் தும்பிக்கையான் சந்நிதி, சுற்றுக்கட்டு, அதன் இடப்புறம் மடப்பள்ளி, சமயச் சொற்பொழிவுக்கான ஒரு வாரம், பின்புறம் சாமான்கள் சேகரித்து வைக்கும் பகுதி, வலப்புறம் அலுவலகம், திருமணக் காலங்களில் மணமகன் - மணமகள் தங்கியிருக்க, உடைமாற்ற வசதியான அறைகள். கோவிலுக்கு வெளிப்புற சுற்றுச்சுவரை அடுத்து உட்புறமாக அரச மரத்தடியில் இருந்து அரசோச்சும் விநாயகப் பெருமான். இவரது பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
வெள்ளி ரதம்
பினாங்கு, சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய மூன்று இடங்களிலுமுள்ள நகர தண்டாயுதபாணி ஆலயங்களுக்காக தமிழகத்திலிருந்து தருவிக்கப் பெற்ற மூன்று வெள்ளி ரதங்களில் ஒன்று கோலாலம்பூர் ஆருள்மிகு நகர தண்டாயுதபாணியின் பங்குனி உத்திரப் பெருவிழாவிற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது இந்த வெள்ளி ரதம்.
ஸ்ரீ தண்டாயுதபாணி பள்ளிக்கூடம்
ஆலயம் தனக்குச் சொந்தமான நிலத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி பெயரில் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. நகரத்தார் பெருமக்களின் நன்கொடை மூலம் நிறுவப்பெற்றதுதான் இந்தப் பள்ளிக்கூடம்.
செட்டியார்கள் மண்டபம்
கோவிலை அடுத்துள்ள செட்டியார்கள் மண்டபம் 1920-ல் நிர்மாணிக்கப்பெற்றது. இந்த மண்டபம் வரலாற்றுப் பெருமை படைத்தது.
இன்று ஆளும் கட்சியின் பங்காளியாய், இன்றைய இந்திய சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், எதிர்கால சந்ததிகளின் தலைவிதியையும் நிர்ணயிக்கின்ற பெரும் பொறுப்பு ஏற்றுள்ள மலேசிய இந்தியர் காங்கிரஸ் 1946-ல் தொற்றுவிக்கப் பெற்ற புனிதத்தலமான பெருமை கொண்டது இம்மண்டபம்.
தமிழர் தம் இலக்கியம், கல்வி, கலை, கலாசாரம், நாகரிகம், பண்பாடு ஆகியவைகள் தமிழர் வாழும் இடமெல்லாம் முழுங்கச் செய்த தமிழ்ப்பண்ணை தோன்றத் துணையிருந்ததும் இம்மண்டபமெ.
சைவ சமயம் தழைக்க, சமயக் கூட்டங்கள், கூட்டுப் பிரார்த்தனை போன்றவைகளை சைவப் பெரியார் திரு. கா. ராமநாதன் நடத்தி, இந்தியர் இலங்கையர் ஆகியோர் கூடி இறைவன் துதிபாடி, இன்பம் கண்டதும் இம்மண்டபத்திலேதான். இன்றும் மாபெரும் சமயத்தலமாக இம்மண்டபம் விளங்கி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோலாலம்பூர் இந்து இளைஞ்ர் சங்கத்தின் நவசக்தி விழாவும், திருவிளக்கு பூசைகளும் சிறப்புற நிகழ இடமளிப்பதுவும் இம்மண்டபமே.
கலை, கலாசார இலக்கிய விழாக்களுக்கு நிலைக்களனாக விளங்கிய, விளங்குகின்ற இம்மண்டபத்திலும், ஆலயத்திலும் ஆண்டுக்கு 400 திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்நாட்டிற்கு பூரண விசுவாசம் செலுத்தி, இந்நாட்டினைத் தாயகமாகக் கொண்டு, இங்கேயே நிரந்தரமாகவாழ முடிவு செய்துவிட்ட இன்றைய நகரத்தார் சமுகத்தினர் நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் தங்களது திருமணச் சடங்குகளை நடத்தும் "ராசிமிக்க" மண்டபமும் இதுதான்.
மண்டபத்தில் இலக்கிய சமய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற போதிலும்கூட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்நாட்டுக்கு வருகை புரிகின்ற இந்து துறவிகள், சமய பெரியார்கள், உபதேசிகள், சொற்பொழிவாளர்கள் ஆன்றோர் சான்றோர்களை அன்புடன் வரவேற்று, உபசரித்து, அவர் தம் நல்லுரை கேட்டு நல்லாசிபெற ஆலய சந்நிதானமே இடமளித்தும் வருகின்றது.
கல்வி, சமய வளர்ச்சிக்காகவும், பிற அறப்பணிகளுக்காகவும் அவ்வப்போது அடக்கமான முறையில் ஆலய நிர்வாகம் நன்கொடை வழங்கிவருகின்றது. பிரச்சார நோக்கினைப் பிரதன அம்சமாகக் கருதாமல் இத்தகைய நன்கொடைகள் வழங்கப்பெறுகின்றன.
அலுவலர் ஒருவர், அந்தணர் ஒருவர், நான்கு பண்டாரங்கள், இருவரடங்கிய நாதஸ்வரக் குழு, காவலர், தோட்டக்காரர், இருபணியாளர் ஆகியோர் அடங்கிய சிப்பந்திகள் பணியாற்ற ஆகம முறைப்படி, நான்கு கால பூசைகள் சிறப்புற நடை பெறுகின்றன. இவைதவிர தனியார்களின் ஷண்முகார்ச்சனை, விசேஷ அபிஷேகம், ஆராதனைகளும் நடத்தப்பெறுகின்றன. சிப்பந்திகளுக்காக குடியிருப்புகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தின் முக்கியமான சிறப்பம்சம் மூலவரின் திருத்தோற்றம். கவர்ந்திழுக்கும் காந்தசக்தி. திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமைகளில் விசேஷ கால நேரங்களில் இவர் தரும் வெவ்வேறான கொள்ளை அழகுமிக்க தோற்றம். ஈப்போ சாலையில் இருந்தவாறே தரிசிக்க வழி செய்கின்ற அளவில் அமைந்த பீடம், பெரியவர் ஒருவர் குறிப்பிட்டது போல "கோலாலம்பூர் முருகன் கோலாகலமானவர் மட்டுமல்ல, எந்த மூலவருக்கும் இல்லாத ஓர் ஈர்ப்புச் சக்தியைத் தன்பால் கொண்டவர்". கவர்ந்திழுக்கும் இந்த காருண்ய மூர்த்தி பங்குனி உத்திரத்தில் லெபோ அம்பாங்கிலிருந்து வெள்ளி ரதத்தில் ஜெகஜோதியாய் அலங்காரப் புருடராய் பவனி வந்து பல்லாயிரக்கணக்கானோருக்கு அருள் புரிகிறார். திருஉலாக் காட்சியின் மாட்சி வருணனைக்க அப்பாற்பட்டது. ஏழத்தாழ 5,000 பேர்களுக்கு அன்று அன்னதானம் உண்டு.
ஆலய விழாக்களும் சிறப்பு பூசைகளும்
சித்திரை:
வருடப் பிறப்பு சிறப்புப் புசை, திருநாவுக்கரசர் குருபூசை, சித்திரா பொர்ணமி சிறப்புப் பூசை.
வைகாசி:
விசாக தின சிறப்புப் புசை, திருஞானசம்பந்தர் குருபூசை.
ஆனி:
மாணிக்கவாசகர் குருபூசை.
ஆடி:
ஆடிக்கார்த்திகைப் பூசை, சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை.
ஆவணி:
விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூசை.
புரட்டாசி:
நவராத்திரி பூசை.
ஐப்பசி:
திபாவளி சிறப்புப் பூசை, ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழாவும் ஊஞ்சல் உற்சவமும்.
கார்த்திகை:
திருக்கார்த்திகை சிறப்புப் பூசை, சோம வாரப்பூசை.
மார்கழி:
திருப்பள்ளி எழுச்சி, தினசரி சிறப்புப் பூசை, லட்சார்ச்சனை பூர்த்தி.
தை:
பொங்கல் சிறப்புப் பூசை, தைக்கார்த்திகைப் பூசை, தைப்பூச சிறப்புப் பூசை.
மாசி:
சிவராத்திரி சிறப்புப் பூசை.
பங்குனி:
பங்குனி உத்திர சிறப்புப் பூசை, வெள்ளிரதத்தில் திருஉலா.
திருகார்த்திகை தினத்திலும், சோமவார சிறப்புப் பூசைகளின் போதும், மார்கழி மாதம் நடைபெறும் லட்சார்ச்சனை பூர்த்தியின் போதும், தைப்பூசம், தைக்கார்த்திகை நாட்களிலும் உட்பிரகாரத் திருஉலா வந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீ தண்டாயுதபாணிப் பெருமான்.
|