| ஆலயத்தைப் பற்றி About the temple
போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய வரலாறு (1-2-1998ன் கும்பாபிஷேக சிறப்பு மலரிலிருந்து)
கோலக்கிள்ளான் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் 115 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். தமிழகத்திலிருந்து இந்நாட்டிற்குப் பாய்மரக்கப்பல் மூலம் கோலக்கிள்ளான் துறைமுகத்தில் வந்திறங்கி இரயில்வே இலாக்காவில் சேர்ந்து வேலை செய்தவர்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் அரசமரத்தடியில் வேல் ஒன்றை வைத்துத் தினமும் வணங்கி வந்தனர். பல்லாண்டுகள் கடந்த பின் அதே இடத்திலேயே அத்தாப்புக் கொட்டகை அமைக்கப்பட்டு அதில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
திரு. சங்கரன் பிள்ளை என்ற குமாஸ்தா சிலிப்வே வேலை செய்தவர். அவரது பொருமுயற்சியில் அந்த இடத்திலேயே பலகையில் ஒரு சிறிய கோவிலாகக் கட்டப்பட்டுத் தொடர்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டன. ஆண்டுகள் பல கடந்த பின் தமிழர்கள் இக் கோலக்கிள்ளான் வட்டாரத்தில் பெருமளவில் வாழ்ந்து வந்தனர். பெரும்பாலும் இவர்கள் துறைமுகத் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆலயத்தைப் பலகையால் அமைக்கத் திட்டமிட்டு, 1948ம் ஆண்டு கோவில் கட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1952ம் ஆண்டு பூர்த்தியானது.
மூலஸ்தானம் கல்லாலும் மற்றும் மண்டபம் பலகையிலும் கட்டப்பட்டது. முதலாவது கோவில் கும்பாபிஷேகம் தை மாதம் 29ம் திகதி (ஆங்கிலம் 11.2.1952) திங்கட்கிழமை காலை மணி 11:00 முதல் பிற்பகல் மணி 1:00 வரை நடத்தப்பட்டது (மகா கும்பாபிஷேகம்). இதன் பொருப்பாளர்கள் கெள. செயலாளர் திரு. கு. சண்முகம், பொருளாளர் திரு. செ.மு. அப்துல்லா, தலைவர் திரு. S. சொக்கப்பன், அறங்காவலர்கள் திரு. S. ஆண்டியப்ப பிள்ளை, திரு. வீ. கருப்பையா கப்பலா ஆகியோர்.
தொடர்ந்து இவ்வாலாயத்தைப் பல பிரமுகர்கள் நிர்வகித்து வந்துள்ளனர். அவர்களுள் அமரர்கள் திரு. துரைசாமி நாயுடு, திரு. சி. நடேசன் ஆசிரியர் திரு. பக்கிரி கப்பலா ஆகியோரும் அடங்குவர்.
1968 முதல் 1971 வரை நிர்வாகம் பொறுப்பில் தலைவர் திரு. L.K. குமார், கெள. செயலாளர் திரு. கி.ச. இராசப்பா, பொருளாளர் திரு. சுந்தரம் ஆகியோர் இருந்தனர். 1971ல் நடைபெற்ற ஆலயப் பொதுக்கூட்டதில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. தலைவர் அமரர் திரு. துரைசாமி நாயுடு, கெள. செயலாளர் அமரர் திரு. சி. நடேசன் ஆசிரியர், பொருளாளர் அமரர் திரு. சின்னையா ஆகியோர் தேர்வு பெற்றனர்.
1976ல் இந்த ஆலயத்திற்கு ஒரு நிலம் எப்படியாவது பெற வேண்டுமென்று எண்ணிய நிர்வாகம் அமரர் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசம் அவர்கள் போக்குவரத்து அமைச்சராக இருந்த வேளையில் இரயில்வே பொது நிர்வாகி டத்தோ சரிப் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கோவிலுக்கு 3 ஏக்கர் நிலத்தைப் பெற்றுத் தந்தார்கள். அதோடு கோவில் வளாகத்தில் இருபுறமும் இருந்த இரயில்வே வீடுகளை உடைக்க அனுமதி வழங்கியது. 16 வீடுகள் அப்போது உடைக்கப்பட்டது. அதன் பின் 1984ல் கோயில் பால ஸ்தாபனம் செய்யப்பட்டது.
1986ம் ஆண்டு இப்புதிய ஆலய நிர்மாணிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. வரைப்படம் பொறியியலாளர், நில அளவையாளர் ஆகியோரை டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் பொறுப்பிலேயே ஏற்பாடு செய்யப்பட்டன.
இப்பணிகளை மேற்கொள்ள தமிழகத்தின் பல இடங்களிலிருந்து 9 ஸ்தபதியர்கள் கொண்டு வரப்பட்டு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாலாயத் திருப்பணி வெற்றிகரமாக நிறைவு பெற பல பிரமுகர்கள், இந்துப் பெருமக்கள் முதலானோர் நல்கொடைகள் வழங்கிப் பேராதரவு தந்தனர். ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெற்ற சித்திரா பெளர்ணமி திருவிழாவில் கிடைக்கும் வசூலைக் கொண்டும் திருப்பணிகளை நடத்தி வந்துள்ளோம்.
நவக்கிரக மண்டப அமைப்புச் செலவுகள் அனைத்தையும் அமரர் திரு. கோ. முனியாண்டி (பண்டமாரான் ஜெயா) அவர்கள் ஏற்றுக்கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 3 ஏக்கர் நிலத்தில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலாயம் அரசாங்கத்தில் பதிவு பெற்ற ஒன்றாகும்.
இந்த நல்ல வேளையில் கோவில் நிர்வாகம், பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சாமிவேலு அவர்களது பேராதரவுக்கும், ஒத்துழைப்பிற்கும் மகத்தான நன்றியறிதலைப் புலப்படுத்திக்கொள்ளப் பெறும் கடமைப்பட்டுள்ளது.
இறுதியாக ஆலயக் கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடைபெற எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி எல்லாத் தரப்பினர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இக்கண்
திரு. ஆர்.எஸ். மணியம், ஆலய நிர்வாகத் தலைவர்.
|