Murugan Temple Gopuram Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Nallur Kandaswamy Temple Sri Lanka நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்
யாழ்ப்பாணம் ஸ்ரீ லங்கா

Flag of Sri Lanka  Nallur Kandaswamy Temple
Jaffna Sri Lanka
history address timings special events previous-other names location map
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை 
 home   contents 

இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில்

1734 - 2023 வரை ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக கடமையாற்றிய தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியார், தமது பதவி காரணமாகவும், அந்தப் பதவி மூலம் கிடைத்த செல்வாக்குக் காரணமாகவும், இடிந்த நல்லூர்க் கோயிலைக் கட்டுவதற்கான உத்தரவை அரசிடம் இருந்து பெற்றார்.

கந்தபுராண கலாசாரத்தை ஏட்டு வடிவில் பின்பற்றிய யாழ்ப்பாணத்துக் குடும்பங்களில் மாப்பாண முதலியார் குடும்பத்திற்கு முதன்மையான இடம் உள்ளது.

கந்தபுராண ஏட்டுடன், வேல் ஒன்றையும் வீட்டில் வைத்து வழிபடும் மரபை தொன் யுவான் மாப்பாண முதலியார் என அழைக்கப்பட்ட முதலாவது இரகுநாத மாப்பாண முதலியார் ஆரம்பித்தார். அவ்வாறு வைத்து வழிபடப்பட்ட வேலும், கந்த புராண ஏடும் இன்றும் இருப்பதுடன், அவற்றை மாப்பாண முதலியார் குடும்பத்தினர் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள்.

போர்த்துக்கேயர்களால் இடித்து அழிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீளவும் குருக்கள் வளவில் கட்டுவதற்கான அனுமதியை ஒல்லாந்தர் அவருக்கு கி.பி 1734 இல் வழங்கியதுடன், தற்போதைய ஆலயமானது, புராதன நல்லூர் ஆலயம் அமைந்திருந்த குருக்கள் வளவிலேயே அமைந்துள்ளது.

முதலாவது ஆலயம் 1734 ஆம் ஆண்டு களி மண்ணாலும், ஓலையாலும் அமைக்கப்பட்டது. கோயிலில் உள்ள உறுதிகளின் பிரகாரம் சகல சொத்துக்களுக்கான உரிமை முருகனுக்கும் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்திற்கும் உள்ளது.

வழி வழியாக கோயில் அதிகாரியாக பொறுப்பேற்பவர்கள் தமக்கும் பின்னர் யாருக்கு நிர்வாக உரிமை செல்ல வேண்டும் என்பது தொடர்பாக தெளிவாக உறுதி எழுதும் வழக்கம் உண்டு. அதன் பிரகாரமே அடுத்த கோயில் அதிகாரியாக வருபவர்கள் முருகனுக்கு தனது சேவைகளை வழங்குகிறார்கள்.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக கடமையாற்றிய தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியாருக்கு அரச உத்தியோகம் மன்னாருக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு அவர் மன்னாருக்குச் செல்லும்போது, அவரது மகன் இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியாரிடம் கோயில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டதாக கோயில் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகிறது. தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியார் கி.பி 1734 தொடக்கம் கி.பி 1750 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.

முதலாம் இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக முத்துக்குமரனுக்கு தொண்டாற்றினார்.

1734 ஆம் ஆண்டு களி மண்ணாலும், ஓலையாலும் அமைக்கப்பட்ட கோயில், 1749 இல் கல்லினாலும் செங்கற்களாலும் கட்டப்பெற்று, ஓட்டினால் வேயப்பட்டது. அக்காலத்தில் கர்ப்பக்கிரகம் கல்லாலும் சில இடங்கள் செங்கட்டிகளாலும் கட்டப்பெற்று, பீலி ஓடுகளால் வேயப்பட்டு, நிலம் சாணியால் மெழுகப் பெற்றதாகவும் அறிகிறோம். அவர் 1750 தொடக்கம் 1800 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.

இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் அதிகாரியாக இருந்த முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் கிடைத்த கல்வி வளர்ச்சி காரணமாக கோயில் நடைமுறைகள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு.

ஆனாலும் அவரது காலத்தில் வேல் சாத்துப்படி ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக எவ்விதமான பதிவுகளோ அல்லது ஆவணங்களோ இல்லை என்பதால், அவ்வேல் சாத்துப்படியானது முதலாவது ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்துக்கு முற்பட்டது என்பதுடன், மிகப் பழைமையான மரபு என்ற முடிவுக்கு கோயில் அதிகாரிகள் வருகிறார்கள்.

மூன்றாவது கோயில் அதிகாரியான முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் பிள்ளையார் மற்றும் வைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் ஸ்தாபிக்கப்பட்டன. முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் 1800 தொடக்கம் 1839 வரை முருகனுக்கு சேவையாற்றினார்.

முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் முருகனுக்கு தனது சேவைகளை ஆரம்பித்தார்.

அவரது காலத்தில் கோயிலைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டதுடன், கோயில் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன் அவரது காலத்தில் ஆலயத்திற்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டதுடன், அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மகோற்சவத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட கொடிமரமானது, தற்போது உள் வீதியில் உள்ள சண்முகருக்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியார் 1839 தொடக்கம் 1860 வரை கோயில் அதிகாரியாக தொண்டாற்றினார்.

மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியார் ஆண் சந்ததி அற்று இறந்த காரணத்தால், அவரது முதல் மகளான சோமவல்லியின் கணவரான டாக்டர் கந்தையா, தனது மனைவியின் குடும்பப் பெயரையும் இணைத்து கந்தையா மாப்பாண முதலியாராக கோயில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அதேவேளை முதல் மனைவியான சோமவல்லியின் இறப்பின் பின்னர், மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் இரண்டாவது மகளான அமிர்தவல்லியை திருமணம் புரிந்தார். அதனால் தொடர்ந்தும் அவரே கோயில் அதிகாரியாகத் தொண்டாற்றினார். அவரது நண்பரே ஆறுமுக நாவலர் ஆவார்.

சைவ சமய வளர்ச்சியின் பொருட்டும் ஆன்மீகத்தை மேன்மை கொள்ளச் செய்யும் பொருட்டும் கந்தையா மாப்பாண முதலியாரின் அழைப்பின் பேரில் நாவலர் நல்லூர் ஆலயத்தில் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.

ஆயினும் கந்தையா மாப்பாண முதலியாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையில் சில விடயங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. கந்தையா மாப்பாண முதலியார் 1860 தொடக்கம் 1890 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.

கந்தையா மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மூன்றாவது மகளான பொன்னுப்பிள்ளை வசம் கோயில் திறப்பு சேர்ந்தது.

அவரது கணவர் சங்கரப்பிள்ளை தனது மனைவியின் குடும்பப் பெயரை தனது பெயருடன் இணைத்து, சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியாராக கோயில் அனுட்டானங்களில் மாத்திரம் பங்கெடுத்துக் கொண்டார்.

ஆயினும் இரண்டு மூத்த சகோதரிகளின் காலத்தில் இடம்பெற்ற சில கசப்பான அனுபவங்களாலோ என்னவோ, கோயிலின் நிர்வாகத்தை பொன்னுப்பிள்ளை தம் வசம் வைத்திருந்தார். சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியார் 1890 தொடக்கம் 1915 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.

சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியாரின் மறைவின் பின்னர் அவரது மூத்த மகன் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

தந்தையை இழந்த அவருக்கு, அவரது அன்னையான பொன்னுப்பிள்ளையின் வழிகாட்டல் கிடைத்தது. தற்போதைய நல்லூர்க் கோயில் எழுச்சியின் ஆரம்ப பொற்காலமாக பொன்னுப்பிள்ளையின் காலத்தைக் குறிப்பிடலாம்.

இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் ஒரு கப்பலோட்டிய தமிழர். ரங்கூன் வணிகத்தில் பணம் ஈட்டி பெரும் செல்வந்தரானார். தான் உழைத்த செல்வம் முழுவதையும் சந்ததி அற்ற காரணத்தினால் கோயிலுக்கு வழங்கினார். அவர் தனது காலத்தில் நல்லூர்க் கந்தனுக்கு கருங்கல்லால் மூலஸ்தானத் தரை வேய்ந்து திருப்பணியை செய்து, கல்வெட்டு ஒன்றையும் அதில் பொறித்தார்.

இவரது காலத்தில் கோயிலை சுற்றி சுற்று மதில் அமைக்கப்பட்டு, உள்வீதி உருவானது. நல்லூர்க் கோயில் உள்வீதிக் கொட்டகை அமைத்தார். அத்துடன் கோயிலுக்கு முதன்முதலாக மணியுடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றை ஸ்தாபித்து, அதில் கல்வெட்டு ஒன்றையும் பொறித்தார்.

இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் அழகன் முருகனுக்கான தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றைச் செய்து அழகன் முருகனை அழகு பார்த்தார்.

இவரது காலத்தில் சண்முகர் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சண்முகரே தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலிக்கத் தொடங்கினார். அதுமாத்திரமல்லாமல் நல்லூர்க் கோயிலை முழுமையாகக் கருங்கற்களால் கட்ட விரும்பி, கருங்கற்களைக் கொண்டு வந்து இறக்கினார். ஆயினும் அவரது கனவு தவிர்க்க முடியாத காரணத்தினால் நிஜமாகவில்லை. இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் 1915 தொடக்கம் 1921 வரை கோயில் அதிகாரியாக முருகனுக்குத் தொண்டாற்றினார்.

இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

அவரது காலத்தில் முதன் முதலாக கோயில் அர்ச்சனையின் பொருட்டு, அர்ச்சனைச் சீட்டை அறிமுகப்படுத்தியதுடன், அர்ச்சனைச் சீட்டுக்களை வழங்கும் பொருட்டு தேக்கு மரத்தினால் ஒரு அறையை உருவாக்கினார். அத்துடன் அவர் நேரம் தவறாத பூசை முறையை அறிமுகப்படுத்தினார்.

அத்துடன் பூசை நடைமுறைகளுக்காக பிராமணர்களை சம்பளத்திற்கு அமர்த்தும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். இவருடைய காலத்தில் முத்துக்குமாரர் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அவருக்கான தங்க ஆபரணங்களை செய்வித்தார். அத்துடன் தாயான பொன்னுப் பிள்ளையின் ஆணைப்படி பருத்தித்துறை வீதிக்கு அப்பால் இருந்த காணியில் முருகனுக்கு திருக்குளம் அமைத்து, திருப்பணி நிறைவேற்றினார்.

அத்துடன் தாயின் விருப்பத்தின் பேரில் கேணித் திருக்குளத்திற்கு முன்பாக பழனி ஆண்டவர் சந்நிதியை ஸ்தாபித்தார். அதுமாத்திரமல்லாமல் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றை வெள்ளைக்கல் கொண்டு திருப்பணி ஆரம்பித்தார்.

ஆயினும் அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கும் மாத்திரமே திருப்பணி செய்யப்பட்டது. நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் 1921 தொடக்கம் 1945 வரை கோயில் அதிகாரியாக தொண்டாற்றினார்.

நான்காவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது மூத்த மகனான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், தனது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியாரை துணைக்கு வைத்துக் கொண்டு கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அழகு முருகனை அலங்காரக் கந்தனாக்கி, அவனது திருவிழாக்களை வண்ணமயமாக்கினார்.

தனது கற்பனைக்கு ஏற்ற வகையில் ஆலயத்திற்கு வாகனங்களை செய்வித்தார். தனது தந்தையார் கட்டிய கேணித் திருக்குளக் கொட்டகையைப் பெருப்பித்தார். அதன் காரணத்தால் கேணித் திருக்குளத்தைச் சுற்றிய இடம் இன்னுமொரு கோயில் கட்டட வளாகமாக பரிணமித்தது.

அத்துடன் கேணித் திருக்குளத்திற்கு முன்பாக தண்டாயூதபாணியின் அருட்சந்நிதியையும் ஸ்தாபித்தார். மேலும் தனது தந்தையார் ஆரம்பித்த வெள்ளைக்கல் கோபுரத் திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை பூர்த்தி செய்தார். அத்துடன் வள்ளி - தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியை நிறைவு செய்தார்.

நல்லூரில் வள்ளிகாந்தர் மூர்த்தியை ஸ்தாபித்து, வள்ளிகாந்தருக்கு பள்ளியறை விமானம் ஒன்றை திருப்பணி செய்த பெருமை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியாரையே சாரும்.

நல்லூரில் பாவனையில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தினால், அதன் அபாயத்தை உணர்ந்த அவர், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை இன்னும் அழகாக்கினார்.

ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழாக்களுக்கு பெருமை சேர்த்ததுடன், புது வடிவத்தினாலான வாகனங்களை தன் கற்பனைக்கு ஏற்ற வகையில் உருவாக்கினார். இவர் தனது காலத்தில் பெரிய கைலாச வாகனம் அடங்கலாக அதிகளவான வாகனங்களைப் பெருக்கியதுடன், சொற்பொழிவுகள் மற்றும் வானொலி அஞ்சல் முதலியவற்றின் மூலம் முருகனிடம் பக்தர்களை மேலும் நெருக்கமாக்கினார்.

அதன் காரணத்தினால் உலகின் இந்துக் கோயில் ஒன்றில் இருந்து முதலாவது நேரடி அஞ்சல் என்ற பெருமை நல்லூருக்குக் கிடைத்தது. ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் 1945 தொடக்கம் 1964 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.

ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கோயிலின் 10 ஆவது கோயில் அதிகாரியாக, மிக இள வயதில் பொறுப்பேற்றார்.

நல்லூர் பக்தர்களைப் பொறுத்த வரையில் அழகன் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரியாக குமாரதாஸ் மாப்பாண முதலியார் கருதப்படுகிறார். தொடர்ச்சியாக 50 வருடங்களுக்கு மேலாக இவர் முருகனுக்குத் தொண்டாற்றி வந்தார்.

இவர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற 1965 ஆம் ஆண்டு தொடக்கம் நல்லூர் வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் வருடா வருடம் கோயிலுக்கான திருப்பணியை நிறைவேற்றி வந்தார்.

யுத்த காலப் பகுதியிலும் குறித்த நடைமுறையை குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவேற்றிமைக்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை நிறைவேற்றினார்.

இவரது அயராத முயற்சியின் பயனாக மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அனுமதியுடன் அரச காணிக்குப் பதிலாக கேணித் திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாற்றினார்.

அவரது 50 வருடங்களுக்கு மேலான கடின உழைப்பும் முருகன் மேல் கொண்ட பக்தியும் இன்றைய நல்லூர் பெருங்கோயிலின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது.

நல்லூரின் நேரம் தவறாது பூசைகளையும் அழகன் முருகனையும் பக்தி பூர்வமாக வணங்குவதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக 1 ரூபா அர்ச்சனையை இன்றும் நடைமுறைப்படுத்தியவர்.

குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட வருடாந்த திருப்பணி மரபை, தனது முதுமையையும் பொருட்படுத்தாமல், தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணியை நிறைவேற்றினார். சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணி மூலம் வரலாற்றில் இலங்கையில் உள்ள இந்துக் கோயில்களில் தங்கக் கூரை கொண்டு வேயப்பட்ட முதலாவது கோயில் என்ற பெருமை நல்லூருக்கு கிடைத்தது.

அவரின் மறைவிற்கு பின்னர் (2021இல்) அவரது மகன் சயந்தன மாப்பாண முதலியார் தற்போதைய நல்லூர் கோவில் நிர்வாக அதிகரியாக இருந்து திருப்பணிகளை தொடர்கிறார்.
ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple


ஆலய நேரங்கள்

temple timings

4 am - 5 am
7:30 am - 12 noon

3 pm - 6 pm

ஆலயத்தின் முகவரி

Address of temple

Nallur Sri Kandaswamy Temple,
Point Pedro Road,
Nallur,
Jafna,
SRI LANKA
Telephone: +94 71 212 4201
E-Mail: info@nalluran.com

Official Temple Website:  https://nalluran.com
ஆலயம் இருக்கும் இடம் / வழி

temple location & directions
(courtesy of Google Maps & WAZE)

        View Location on Google Maps  
        View Waze route  
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எனக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்

email: kaumaram@gmail.com
A kind request from the Webmaster of Kaumaram.com
Please send me other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Nallur Kandaswamy Temple - , Jaffna, Sri Lanka
(kdcsla05)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே 
 home   contents   top 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.