| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று", "கோவில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்" என்பது ஆன்றோர் வாக்கு. இறை வழிபாட்டிற்கு இடமில்லா ஊரில் வாழும் வாழ்வு, சிறை வாழ்வினும் கொடியதென்பர் பெரியோர். 1950-அம் ஆண்டுகளில் மாசாய்ப் பகுதியில் ஏறக்குறைய 500 இந்துப் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் முறையாக இறைவனை வழிபட பொதுவான ஒரு கோவில் இன்றி மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையைக் கண்டு பெரிதும் மனங்கலங்கி நின்றனர் மாசாய் வாழ் இந்துப் பெருமக்கள். அனால் இப்பிரச்சனையைத் தீர்க்க வழி காணாது திகைத்து நின்றனர்.
1959-ஆம் ஆண்டில், மாசாய்த் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற திரு. கு. முத்துசாமி அவர்களும் அப்போது மாசாயில் மளிகைக் கடை வைத்திருந்த பொதுநலத் தொண்டர் திரு. எம். சுப்ரமணியம் அவர்களும் மாசாய்ப் பட்டணத்தில் முருகப் பெருமானுக்குக் கோவில் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை செயலாக்க முனைந்தனர்.
தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் இப்பணியை, ஒர் இயக்கம் அமைத்துச்செய்திடின் சிறப்புற அமையும் என்ற நோக்கில் 1960-ஆம் ஆண்டில் அகில மலாயா தமிழர் சங்கத்தை ஸ்தாபித்து திரு. எம். சுப்ரமணியம் அவர்கள் தலைவராகவும், திரு. கு. முத்துசாமி அவர்கள் செயலாளராகவும் திரு. சி. இராமன் அவர்கள் பொருளாளராகவும் செயல்பட்டனர்.
இச்சங்கத்தின் மூலம் கோவிலுக்கு நிலம் கேட்டு மாவட்ட அதிகாரிக்கு மனு செய்தனர். அத்தோடு மாவட்ட அதிகாரியை நேரில் சந்தித்தும் முறையிட்டனர். இதன் வழி மூன்றே மாதத்தில் முருகப் பெருமானுக்குக் கோவிலமைக்க தற்போதைய நிலம் கிடைக்கப்பெற்றது. மட்டில்லா மகிழ்ச்சி கொண்டனர் மாசாய் வாழ் இந்துப் பெருமக்கள்.
1963-ஆம் ஆண்டு, கோவில் கட்டப் பணம் கேட்டு சமூகநல இலாகாவுக்கு மனுச் செய்தனர். மறைந்த ம.இ.க. தலைவர் அமரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் மூலம் முருகன் அருளால் யாதொரு தடங்கலுமின்றி 20,000 வெள்ளி கிடைக்கப்பெற்றது. அதே வேளையில் மாசாய் வட்டாரத்திலுள்ள தோட்டப் பெருமக்களிடமிருந்து நன்கொடை வசூலிக்க ஆரம்பித்தனர் தமிழர் சங்கத்தினர். தோட்டம் தோட்டமாகச் சென்று மக்களை கூட்டி முருகப் பெருமானுக்கு மாசாயில் கோவில் அமைக்கப்படவிருப்பதை எடுத்துரைத்து வேலை செய்வோர் ஒவ்வொருவரும் மாத மொன்றுக்குத் தலா ஒரு வெள்ளி தருமாறு வேண்டினர். மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கோண்டனர். இப்பணத்தைச் சிரமம் பாராது வசூலித்துத் தந்தவர்களில் திரு. தேவசீலன், திரு. திருவேங்கிடம், திரு. என். குணமனி, திரு. எம். கிருஷ்ணன் ஆகியோரும் காலஞ்சென்ற திரு. ஆர். ராமகிருஷ்ணன், திரு. ஆர். எஸ். சின்னையா ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இதனைத் தொடர்ந்து மாதா மாதம் திரைப் படம் காண்பித்து நன்கொடை வசூலிக்கப்பட்டது.
இவ்விதமாக சுமார் 10,000 வெள்ளி வரை வசுல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் 50,000 வெள்ளி வரை கோவில் கட்டப் பணம் சேர்ந்தது. இத்தருணத்தில் காலஞ்சென்ற திரு. நடேசன் செட்டியார் அவர்கள் இணைப்பொருளாளராக இருந்து செயலாற்றினார்.
தமிழகத்திலிருந்து இங்கு வந்து கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திரு. பழனியப்ப ஸ்தபதிகள் குத்தகையின் கீழ் கட்டுமானப்பணி 1964-இல் தொடங்கியது. கோவில் கட்டும்பணி தொடங்கியபோது காலஞ்சென்ற திரு. நடேசன் செட்டியார் சுமார் 3000 வெள்ளி மதிப்புள்ள இரும்புகளைக் கொடுத்து உதவினார்.
சுமார் ஒராண்டு காலத்திற்குள் ஸ்தபதி திரு. செல்லக்கண்ணுவின் கைத்திறனில் கோவில் கட்டுமாணப்பணி முடிவுற்றது. எனினும் கும்பாபிஷேகம் செய்யப் பணம் பற்றாமையால் இப்பணி தடைபட்டது. ஆகவே தமிழர் சங்க செயலவையினர் மீண்டும் மக்களை நாடினர். தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்ய நிதி திரட்டும் பணிதொடங்கியது. சிங்கப்பூர் சிலோன் ரோடு ஜோசியர் உயர்திரு. ராஜமாணிக்கம் அவர்கள் கோவிலின் மூலஸ்தான முருகன் சிலையையும், மூலஸ்தானக் கதவையும் அன்பளிப்பாக வழங்கியதோடு, மாதா மாதம் கோவிலுக்கு வேண்டிய எண்ணெயையும், வெள்ளிக்கிழமை பூசை செலவையும், ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் இடும்பன் பூசையையும் தானே மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.
இதன் பின் கோவில் நிர்வாகம் அமைக்கப்பட்டு கோவிலின் பணிகள் சீராக நடைபெற ஆரம்பித்தன. மாசாய் வணிகர் திரு. கருப்பையா, திரு. எம். பெரியசாமி, திரு. சி. இராமன் ஆகியோர் காலஞ்சென்ற திரு. கருப்பண்ணன் ஆகியோர் கோவிலின் தலைவர்களாக இருந்து சிறப்பான சேவையாற்றினர்.
இதற்கிடையே ஆரம்பத்தில் கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் போதாத காரணத்தால் 1967-ஆம் ஆண்டில் நல்லெண்ண விருந்து என்ற பெயரில் ஒரு சந்திப்புக் கூட்டத்தைக் கூட்டி அவ்விருந்திற்கு அமரர் துன் வீ. தி. சம்பந்தன் அவர்களை வரழைத்து கோவிலுக்கு மேலும் நிலம் தேவை என கோரி மகஜர் ஒன்று கொடுக்கப்பட்டது. இது துன் அவர்கள் மூலம் இவ்விருந்திற்கு வந்திருந்த மாவட்ட அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இதன் வழி கோவிலுக்கு மேலும் 15 போல் நிலம் கிடைத்தது.
திரு. இராஜி என்பவர் தமது சொந்த செலவில் முன்பிருந்த கல்யாணமண்டபத்தைக் கட்டிக் கொடுத்தார். தொழிலாளர் அதிகாரி திரு. ஆர்.எஸ். சிவம் அவர்கள் குறைந்த செலவில் கோவிலைச் சுற்றியுள்ள மதிற்சுவரை எழுப்பிக் கொடுத்தார்.
அவ்வப்போது அரசாங்கத்திடமிருந்தும், சட்டமன்ற, நாடாளுமன்ற உருப்பினர்களிடமிருந்தும் பெறப்பட்ட மான்யங்களை கொண்டு கோவிலின் அவ்வப்போதைய தேவைகள் நிறைவேற்றப்பட்டன. 1985-இல் ஜோகூர் மாநில ம.இ.கா.வின் மூலம் பெறப்பட்ட 20,000 ரிங்கிட் மான்யத்தைக் கொண்டு கோவில் கல்யாண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. இதனைப் பெற ஜோகூர் மாநில ம.இ.கா. தலைவர் மாண்புகிகு டத்தோ ஜி. பாசமாணிக்கம், துணைத்தலைவர் மாண்புமிகு வி. ஆறுமுகம் செயலாளார் மாண்புமிகு கே. எஸ். பாலகிருஸ்ணன் ஆகியோர் பெரிதும் உதவினர்.
இம்மான்யத்தைப் பெற அடிகோலியவர்களுள் ம.இ.கா. மாசாய் கிளையின் தலைவராக இருந்த காலஞ்சென்ற திரு. எஸ். சாமி, துணைத் தலைவராக இருந்த காலஞ்சென்ற திரு. எம். கந்தசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
மாண்புமிகு கே.எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான பின் கோவிலின் வளர்ச்சியில் தீவிர அக்கறை காட்டி, அவ்வப்போது மான்யங்கள் வழங்கி கோவிலின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்.
தற்போதைய நிர்வாகத்தின் கீழ், கோவிலின் திருப்பணி ஏறக்குறைய ஒரு லட்சம் வெள்ளி செலவில் நிறைவேற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இத்தருணத்தில் இக்கோவில் அமைய தூண்டுதலாகவும் அஸ்திவாரமாகவும் இருந்த முன்னால் மாசாய்த் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான திரு. கு. முத்துசாமி அவர்களையும், பொதுநலத் தொண்டரும் தற்போது சிங்கப்பூரில் வசிப்பவருமான திரு. எம். சுப்ரமணியம் அவர்களையும், இக்கோவிலின் ஸ்தாபகத்திற்கு அடிகோலிய ஏனையோரையும் தற்போதைய நிர்வாக சபை அவர்தம் பணிகளைப் பாராட்டி நன்றியுடன் நினைவு கூறுகிறது.
நன்றி, வணக்கம்.
நிர்வாக சபை ஸ்ரீ சுப்ரமணியர் கோவில் பரிபாலன சபா, மாசாய்.
|