| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு (தொகுப்பு: திரு. அ. ந. அசுவலிங்கம் - தலைவர், ஸ்ரீ முருகன் கோவில் பரிபாலன அவை)
1. தோற்றம்:
பட்டர்வொர்த், மாக் மண்டின் பச்சை வீடு என்று பரவலாக கூறப்படும் பகுதியில் ஸ்ரீ முருகன் கோவில் ஆனந்த வருஷம் புரட்டாசி மாதம் 4-ம் நாள் (20-09-1974) வெள்ளிக்கிழமை ஒன்பது அன்பர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆனந்த வருஷம் புரட்டாசி மாதம் 19-ம் நாள் (ஆங்கிலம் 5-10-1974) சனிக்கிழமையன்று பூர்வாங்க கட்டுமான வேலைகள் ஆரம்பமானது.
2. முதலாவது பொதுக்கூட்டம்
கடந்த 30-11-1975 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 7.00க்கு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. தோற்றுவித்த ஒன்பது பேர்கள் மேற்படி கோவிலை பொதுமக்களிடமே ஒப்படைத்து பொதுக் கோவிலாக உருப்பெற்றது. அன்று அமைப்புக் கூட்டத்தின்வழி நிர்வாகக் குழுவினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
3. மாசி மக உற்சவம்
கடந்த 16-2-1976 முதன்முறையாக மாசி மக உற்சவம் கொண்டாடப்பட்டது. இதுவே முதலாவது உற்சவமாகும்.
4. மகா கும்பாபிஷேகம்
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவினர்களின் முயற்சியில் பலகைக் கோட்டகையாக இருந்த கோவிலின் கர்ப்பகிருகத்தை சிமெண்ட் சுவராக்கி ஒரு சிறிய கோபுரம் நிறுவி முதலாவது மகா கும்பாபிஷேகம் நள வருஷம் கர்த்திகை மாதம் 20-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியது. அதுமுதல் இக்கோவிலின் பிரமோற்சவம் திருக்கார்த்திகை திருவிழாவாக 14 ஆண்டு காலம் வரை நீடித்து, கடந்த 11-12-1989 அன்று கடைசி (14-ம் ஆண்டு) திருக்கார்த்திகைகொண்டாடப்பட்டது.
5. கோவில் பதிவு
இக்கோவில் சங்கங்களின் பதிவு இலாகாவில் பதிவு செய்யும் பொருட்டு 1976-ல் விண்ணப்பம் செய்யப்பட்டது. கடந்த 23-6-1978-ல் கோவில் பதிவு பெற்றது. பதிவு எண்: P.P. 1800.
6. தற்காலிக நில அனுமதி
இக்கோவில் பதிவு பெற்றபின் கோவிலுக்கு நிலம் கேட்டு பினாங்கு மானில அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. மாநிலஅரசாங்க பரிசீலனைக்குப் பிறகு தற்காலிக நில அனுமதி வழங்கியது. அதனைக் கொண்டு கோவிலில் மின்சாரம், தண்ணீர் விநியோகம் கிடைத்தது. இது சுமார் நான்கு ஆண்டு காலம் நீடித்தது.
7. கோவிலுக்கு நிலம் கிடைத்தது
இக்கோவில் மிகவும் பழுதுபட்டு இருந்ததுடன் கும்பாபிஷேகம் கண்டு 14 ஆண்டு ஆகியபடியாலும் புதிய கோவில் கட்டுவதற்கு செயலவை செயலவை தீர்மாணித்தது. அதன் அடிப்படையில் சில பிரமுகர்களின் உதவியை நாடி கோவிலுக்கு நிலம் பெற்றுத் தர பினாங்கு மாநில அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. நமது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த 06-01-1989-ஆம் நாள் 12,534 சதுரடி பரப்பளவு கொண்ட இரண்டு லாட்டு நிலம் வழங்கப்பட்டது. இந்நாள் பினாங்கு மாநில துணைமுதல்வர் மாண்புமிகு ஹஜி முகமட் ஷரீப் அவர்கள் கோவிலுக்கு வந்து வழங்கினார். நிலம் கிடைப்பதற்கு பெரிதும் உதவி புரிந்த திருமிகு R. அருணாசலம் JP., அமரர் S. முனுசாமி PJM., அமரர் திரு. S. காத்தான் மற்றும் பிற அன்பர்களுக்கும் இவ்வேளையில் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளோம்.
8. யதாஷ்டானம் பாலாலய உற்சவம் (பாலஸ்தாபனம்)
கடந்த பிரமோதூத வருஷம் ஆனி மாதம் 23-ம் நாள் (ஆங்கிலம் 07-07-1990) சனிக்கிழமையன்று பாலாலயம் செய்ய இரண்டு நாள் யாகசாலை அமைத்து பூஜை செய்விக்கப்பட்டது.
9. திருப்பணிக் குழு நியமானம்
புதிய கோவிலை நிர்மாணிக்கும் பொருட்டு திருப்பணி குழு நியமிக்கப்பட்டது. அதன் முதல் தலைவாராக திரு. சுவாமிநாதன் அவர்கள் கடந்த 1990 முதல் 1993 வரை சேவையாற்றினார். பின்னர் அண்ணார் விலகிக் கொண்டார். 1993 ஜூலைத் திங்களில் பினாங்கைச் சேர்ந்த திரு. K. அரியாகுட்டி அவர்களை நிர்வாகம் தேர்வு செய்தது. அது முதல் அண்ணார் பொருப்பில் கோவில் முழுமையான திருப்பணி கண்டது.
10 கடந்த ஆங்கீரச வருஷம் தை மாதம் 10-ம் நாள் (23-01-1993) சனிக்கிழமையன்று திரு. R. அருணாசலம் JP., அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து கட்டிட வேலைகள் துவங்கின.
11. திருப்பணி நிதி நடவடிக்கைகள்
கோவிலின் திருப்பணிக்கு ரிங்கிட் 3 லட்சம் தேவைப் படுவதால் நிதி சேகரிக்க பலவகையான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவைகளாவன:
அ) பொது வசூல்
வீடு வீடாக சென்று பொது மக்களிடையே வசூல் செய்யப்பட்டதுடன், ஆங்காங்கே நடைபெறும் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்களுக்கு சென்று வசூல் செய்யப்பட்டது.
ஆ) சிற்றுண்டி மையம்
தைப்பூசத்தின்போது சிற்றுண்டி மையம் போட்டு வியாபாரம் வழி நிதி சேர்த்தது.
இ) கட்டிட திருப்பணி நிதி விருந்து
கடந்த 10-10-1992-ஆம் நாள் திருமிகு R. அருணாசலம் JP அவர்களின் தலைமையில் கட்டிடத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டது.
ஈ) பெருநடைப் போட்டி
கடந்த 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் பெருநடைப் போட்டி நடந்தது.
உ) கார்ப்பக்கிருக கல் ஸ்தாபித விழா
கடந்த ஸ்ரீ முக ஆண்டு ஐப்பசி மாதம் 15-ம் நாள் (31-10-1993) ஞயிற்றுக்கிழமையன்று கர்ப்பக்கிருக கல் ஸ்தாபித விழா நடந்தேறியது. புதுமையான முறையில் நடந்தேறிய இதில் பலர் பங்குக்கொண்டு பலன் அடைந்தார்கள். அதன் மூலம் கட்டிடத் திருப்பணிக்கு நிதியும் திரட்டப்பட்டது.
12. மகா கும்பாபிஷேகம்
மங்களகரமான தாது வருஷம் பங்குனி மாதம் 11-ஆம் நாள் (ஆங்கிலம் 24-03-1997) திங்கட்கிழமை காலை மணி 10.39 முதல் 11.21 வரை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதரான சுப்பிரமணிய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது.
|