| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய தொடக்க கால வரலாற்றை நினைவு கூறும் சில வரிகள் ......
சிரம்பான் கே.ஜி.வி. ஆங்கிலப் பள்ளித் திடலில், 1883ம் ஆண்டு நமது முன்னோர்களால் முதன் முதலில் இவ்வாலயம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் திம்மியாங், கம்மிங் சாலையில் ஆலயம் அமைப்பதற்கு மாற்று இடத்தை மாநில அரசாங்கம் வழிங்கியதைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஆலயம் நிறுவப்பட்டது.
சீனர் சமூகத்தினரை பெரும் வாரியாக கொண்ட திமியாங், கம்மிங் சாலையில் ஆலய வழிப்பாட்டினை செய்வதற்கு சிரமமாக இருந்ததின் காரணமாக, இந்துக்கள் வசித்து வரும் இடத்தில் இந்த ஆலயம் அமையப்பெற்றால் மிகவும் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்ற கோரிக்கையை மாநில அரசாங்கத்தின் பார்வைக்கு 1935ம் ஆண்டு கொண்டுச் சென்று மேல் முறையீடு செய்ததை தொடர்ந்து, திரு. வெள்ளக்குமரன் பழனி, திரு. கருப்பையா மற்றும் திரு. இராமையா ஆகியோர்களின் பெரும் முயற்சியால் 1936ம் ஆண்டில் அரசாங்கம் லோபாக் பகுதியில் (தற்பொழுது ஆலயம் குடிக்கொண்டுள்ள இடம்) இந்த ஆலயத்தை நிறுவுவதற்கான இடத்தை வழங்கியது.
1965ம் ஆண்டில்
திரு. கு. பி. இராமையாவின் தலைமையில் ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு முதல் முறையாக ஆலயத்தின் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயத்திற்கு திருக்குட நன்னீராட்டு அபிஷேகம் செய்வது நமது இந்து சமய மரபின் வழக்கமாகும். அதன்படி 1977ம் ஆண்டு இரண்டாவது குடமுழுக்கு கும்பாபிஷேக ஆராதனை திரு. கண்ணன் கருப்பையா தலைமையில் நடைப்பெற்றது.
1978ம் ஆண்டில்
திரு. பெ. நா. முத்துசாமி தலைமையிலான நிர்வாகத்தின் பொருப்பில் ஆலயத்திற்கு நிரந்தர நில உரிமை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நீண்ட கால முயற்சிக்கு பிறகு, மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும், மாநில ம. இ. கா. தலைவராகவும் பொறுப்பேற்று வந்த மாண்புமிகு திரு. அ. பொன்னையா அவர்களின் தீவிர ஒத்துழைப்பால், மாநில மந்திரி புசார் டத்தோ ராயிஸ் யாத்திம் அவர்களின் அங்கீகரத்தோடு 25-03-1981 அன்று 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்துடனான, நில உரிமை பட்டாவினை மாநில அரசாங்கம் இலவசமாக ஆலய நிர்வாகத்திடம் வழங்கியது. அதே ஆண்டில் ஆலய வளர்ச்சி நிதிக்காக மாநில அரசு உதவி மான்யமும் ஆலயத்திற்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. பி. இராமையா மற்றும் திரு. ஆ. பழனியப்பன் ஆகியோரின் முயற்சியால் 1981ம் ஆண்டில்தான் ஆலய நிர்வாகம் அரசாங்க பதிவினை பெற்றது. 1984ம் ஆண்டில் ஆலயத் தலைவர் திரு. சுப. பிச்சையா தலைமையில் ஆலயம் மீண்டும் மறுசீரமைப்பு கண்டது. திட்டங்கள் வகுக்கப்பட்டு பல் வேறு சமுக சமய மேம்பாட்டு குட்டாய்களும் செயல் படத் தொடங்கியது. ஆலய நிர்வாகம் சிறந்த முறையில் ஆலயம் பராமரிக்கப்படுவதற்கும் மேலும் உதவியாக மாநில அரசின் வழி உதவி மான்யங்களை பெற்று தந்தார் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், அன்றைய மாநில ம. இ. கா. தலைவருமான மாண்புமிகு டத்தோ மு. முத்துபழநியப்பன்.
1987ம் ஆண்டு
ம. இ. கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு தலைமையில் 1987ம் ஆண்டு ஆலய கல்நாட்டு விழா நடைபெற்றது. மேலும் ஆலய நிர்மாணிப்பு பணிகளுக்கு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு 40,000 வெள்ளியை உதவி நிதியாக வழங்கினார்.
ஆலயத் தலைவர் திரு. சுப. பிச்சையா மற்றும் கட்டிடக் குழுத் தலைவர் திரு. மு. வேலு ஆகியோரின் தலைமையில் ஆலயத் திருப்பணி வேலைகள் முழுமைப்பெற்று, 8-11-1992 நாளில் ஆலயத்தின் மூன்றாவது திருக்குட நன்னீராட்டு பெருவிழா மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. அதன் பிறகு திரு. சி. கருப்பையா மற்றும் திரு. பி. ஆறுமுகம் ஆகியோரின் தலைமைத்துவத்திற்கு, 1999ம் ஆண்டு திரு. எஸ்.வி. இராஜூ ஆலயத் தலைவர் பொறுப்பினை ஏற்றார். அக்காலக்கட்டத்தில்தான் ஆலயத்தின் நுழைவாயில் மண் சரிவு ஏற்பட்டு ஆலயத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலைமை சரிச்செய்வதற்கு ஆலயம் நிர்வாகம், ஆலயத் துணைத் தலைவர் திரு. கே மணியரசுவை தலைவராகவும், திரு. ஆர், ராஜேந்திரனை செயலாளராகவும் கொண்ட ஆலய கட்டிடம் செயற் குழுவொன்றை அமைத்தது. அக்குழுவின் தீவிர நடவடிக்கையால் கட்டிடபொறியாளர் திரு. தோமஸ் தம்பு அவர்களின் ஆலோசனைப்படி, சிரம்பான் நாடளுமன்ற உறுப்பினரும் கல்வி துணை அமைச்சருமான மாண்புமிகு டத்தோ ஒன் சூன் கிம் அவர்களின் துணையோடு, வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சின் மூலமாக நிதி வழங்கப்பட்டு 178,000 வெள்ளி செலவில் ஆலய முன்புறம் பெரிய மதில் சுவர் எழுப்பட்டது. அதற்கான பணிகள் 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுப்பெற்றது.
நன்னெஞ்சம் கொண்ட பொதுமக்களின் துணையோடும், ஆலய நிர்வாகத்தில் அறிய முயற்சியாலும், ஆலய கட்டிடக் குழுவின் தீவிர நடவடிக்கையாலும் ஆலய நிர்மாணிப்பு சீரமைப்பு வேலைகள் குறுகிய காலத்தில் தொடங்கப்பட்டது.
அதற்கு முன்நின்று உதவிக்கரங்களை நிதி உதவிகள் மூலம் வழங்கிய ஆலய நிர்வாகத்தின் சுமைகளை இறக்கிவைத்தார்கள் பிரபல தொழில் அதிபரும் ரெஸ்டா செக்யூரிடி நிறுவனத்தின் உறுமையாளாருமான டத்தோ தவராஜா மற்றும் துணைவியார் டத்தின் ருக்குமணி தவராஜா அவர்கள். இதனிடையே "யாமிருக்க பயமேன்" என்ற சொல்லுக்கேற்ப ஆலய நிர்மாணிப்பு பணிகளில் தொடங்கி, ஆலய வளாகத்தில் கற்பக்கிரகம், உள்புறம் வெளிப்புறம் முழுமைக்கு கிரெனைட் மற்றும் பளிங்கு கற்கள் பொறுத்துவதுடன் ஆலய கும்பாபிஷேகம் செலவுகளையும், அன்னதானம் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் பிரபல குத்தகையாளரும், ஆலய கும்பாபிஷேக குழுவின் ஆலோசகருமான திருமிகு. என். செல்வமணி.
ஆழ்கடலில் கிடைக்கும் முத்துக்கள் போன்று இந்த, நல்லுள்ளம் படைத்த இவர்களைப் போன்று பலரின் உதவியோடு, இன்று ஸ்ரீ சுப்பிரமணியர் பாலதண்டாயுதபாணி ஆலயம், லோபாக் வட்டார மக்களுக்கு அருள் காட்சியை வழங்கும் பொன்னாளாக டத்தோ எஸ். தவராஜா தம்பதிகளின் முன்னிலையில் "சிவாகம கிரியா ரத்தினம்" சிவஸ்ரீ எஸ.எம். ஆதித்த சிவாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் 23-01-2005 நடைப்பெற்றது.
தொகுப்பு:
மலர் ஆசிரியர் வி. என். இந்துணன் 1975 கும்பாபிஷேகக் குழு
வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துதவியர்கள்:
கவிஞர் அரிதாஸ், திரு தனபாலன், திரு க. ஆண்டியப்பன்.
|