| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
நீண்ட காலமாக வட்டித்தொழில் செய்து வந்த கூலிம் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் இறையருள் துணை வேண்டித் தங்கள் வழிபாடு செய்வதற்காகத் தனித் தண்டாயுதபாணித் திருக்கோயிலைக் கூலிமில் கட்டுமுன்பு, அண்மையில் உள்ள சுங்குரும்பை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரன்று அறக்கொடை என்ற மகமை எழுதி அடிக்கடி அங்கு சென்று வழிபட்டு வந்தார்கள்.
பின்னால் கூலிம் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தங்களது சொந்தத் தண்டாயுதபாணித் திருக்கோயிலை கட்ட முடிவு செய்து, கூலிம், ஜாலான் புத்ராவில் ஒர் இடத்தை வாங்கி அதில் வெகுதானிய ஆண்டு தை மாதம் வாக்கில் (1939) சீனக் கட்டுமானத் தொழிலாளார்களைக் கொண்டு புதிய கோயிலின் சுதை வேலைப்பாடுடன் கூடிய கருவறை விமானம், கோபுரம் வகையாராக்களை தமிழ் கொத்தனாரை வைத்துக் கட்டி, விநாயகர், தண்டாயுதபாணி சிலைகளை அதற்குரிய கருவறைகளில் நிறுவி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்றப் பிரகாரம், மதில் சுவர் ஆகியவற்றை மிக அழகாகக் கட்டி முடித்து, 16-6-1940-ம் நாள் முதலாவது பெருந்திருக்குட நீராட்டைச் சிறப்பாகச் செய்தார்கள். அதற்கு மறுநாள் முதல் அருள்மிகு விநாயகப் பெருமானுக்கும் அருள்தரு தண்டாயுதபாணி சுவாமிக்கும் உருஏறத் திருஏறும் என்பதற்கிணங்க ஆகம முறைப்படி 48 நாட்கள் வரை தொடர் நீராட்டும் 1008 மலர் வழிபாடும் நடைபெற்றன. அடுத்துச் சுமார் 28 ஆண்டுகள் சென்ற பின்பு 10-5-1968-ம் நாள் மருந்து சார்த்திய இரண்டாவது திருக்குட நன்னீராட்டு சிறப்பாகச் செய்யப்பெற்றது.
கூலிம் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலை மாலை என்ற இரண்டு கால வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நாள் வழிபாடு தவிர திருக்கோயிலில் சிறப்பு வழிபாடாக ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு மறுநாள் முதல் ஆறு நாட்களுக்கு கந்தர் சஷ்டி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள். அத்துடன் விசு ஆண்டு கார்த்திகைத் திங்கள் முதல் (1941) திருக்கார்த்திகைச் சிறப்பு வழிபாட்டை ஆரம்பித்து இன்றும் அதைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். மேலும் கார்த்திகைத் திங்களில் வரும் 4 சோம வாரங்களிலும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கோயில் சிப்பந்திகளாகப் பண்டாரமும் தோட்டக்காரரும் கோயிலில் அன்றாடம் பணிபுரிந்து வருகிறார்கள். குலிம் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலை நான்கு அறங்காவலர்கள் (டிரஸ்டீஸ்) கொண்ட அமைப்பு பிலவ ஆண்டு கார்த்திகை மாதம் (1961) முதல் திருக்கோயில் சொத்துக்களைப் பராமரித்து வருகிறது.
கூலிம் நகரில் வட்டித்தொழில் செய்துவந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களில் தமிழகம் மகிபாலன் பட்டியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்ததை முன்னிட்டு மற்ற ஊர் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் குலிம் நகரைச் சின்ன மகிபாலன் பட்டி எனச் சிறப்பாகச் சொல்லுவது வழக்கம்.
சிங்கப்பூர் மலேசியாவில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கட்டி வழிபட்டு வரும் தண்டாயுதபாணி கோயில்களின் வரிசையில் குலிம் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் 16வது திருக்கோயிலாகக் கட்டப்பெற்ற சிறப்புக்குரியது. அதன்பிறகு இரண்டாவது உலக மகாயுத்தம் வந்ததால் வேறு எந்த ஊரிலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் புதிய தண்டாயுதபாணி கோயிலைக் கட்டியதாகத் தெரியிவில்லை
கூலிம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் கூலிம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மகமை எழுதி அப்பணத்தைக் கோயிலை அன்றாடம் பராமரிக்கும் நடப்புக்காரியக்காரரிடம் செலுத்துவார்கள். இது தவிர பழைய இறைத்தொடர்பை விட்டுவிடாமல் சுங்குரும்பை அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் பங்குனி உத்திரச் சிறப்பு வழிபாடுக்காக குலிம் நகரத்தார் பொதுவில் ஒரு காணிக்கையாக ரிங்கிட் ஐம்பத்து ஒன்று மகமை எழுதி அந்தக் கோயிலுக்கு அப்பணத்தைக் கொடுத்துவருகிறார்கள்.
குலிம் தண்டாயுதபாணி சுவாமிக்கு கார்த்திகைப் பூசையன்று உள் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வருவதற்காக துன்மதி ஆண்டு (1981) முதல் விநாயகர், சுப்பிரமணியர் இருவருக்கும் திருநாள் சிலைகள் செய்து வைக்கப்பெற்றுள்ளன.
குலிம் தண்டாயுதபாணி திருக்கொயிலுக்கு மூன்றாவது திருக்குட நன்னீராட்டுச் செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
|