| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
இந்துக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கென வழிபாட்டுக்கு ஆலயங்கள் அமைத்துக்கொண்டு வாழ்ந்து வருவது மரபு. என்றாலும், கோத்தா பாருவில் வழிபாட்டிற்கென கோயில் இல்லாமல் இருந்தோம்.
கிளந்தான் மாநிலத்தில் சைவ சமயத்திற்கென கோயில்கள், இந்து சமூக மண்டபங்கள், பள்ளிகள், அற நிலையங்கள் மற்றும் இடுகாடுகள் முதலியன நிறுவி அவற்றை மேற்பார்த்து நடத்துதல் ஆகிய குறிக்கோளுடன் அமரர் டத்தோ டாக்டர் எஸ். அருளம்பலம் அவர்கள் தலைமையில் கிளந்தான் இந்து சபா தொடக்கக் கூட்டம் 24-9-1965 நடைபெற்றது. 1966-ல் இந்து சபா பதிவு செய்யப்பட்டது.
கிளந்தான் இந்து சபாவின் முதல் திட்டமாகக் கோத்தா பாரு நகா¢ல் சுப்பிரமணியருக்கு ஆலயம் அமைக்க முடிவு செய்து பணம் வசூல்செய்து மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு கோயில் கட்டுவதற்கு நிலத்திற்கு பலமுறை விண்ணப்பித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. பலவித இடர்பாடுகளால் கோத்தாபாருவில் குமரனுக்கோர் கோவில் கட்டும் திட்டம் நடைபெற இயலவில்லை.
டத்தோ டாக்டர் அருளம்பலம் எவ்வளவோ முயற்சித்தும் ஒரு பலனுமளிக்காமல், அவரின் மறைவிற்குப் பிறகு 1973-ல் உயர்திரு. ஆ.வ. நாகரெத்தினம் அவர்கள் சபாவிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அய்யா நாகாவும் எவ்வளவோ முயற்சித்தும் ஒன்றும் இயலவில்லை. அன்னார் மறைவிற்குப் பிறகு, டத்தோ நாச்சியப்பன் அவர்கள் 1977-ல் தலைவராகத் தேர்ந்தெடுக்ப்பட்டார்கள்.
டத்தோ நாச்சியப்பன் அவர்கள் தலைமையில் மீண்டும் பலமுறை மாநில மத்திய அரசாங்கத்தை அணுகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
1976-ம் ஆண்டில் ஜாலான் ஜைனால் அபிடினில் ஒரு புற்று தோன்றியது. அந்தப் புற்றிலிருந்து நாகம் தென்பட்டதால் அதை தெய்வீக செயலாக நம்மவர் போற்றி, அன்று முதல் அங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தார்கள். நாளடைவில் அந்த சிறிய புற்றைச் சுற்றி ஒரு சிறிய கோவிலை அமைத்தார்கள். மக்கள் கூட்டம் தினமும் பெருக அந்தக் கோவில் பிரபலமடைந்து கோத்தா பாருவிலிருக்கும் இந்துக்களுக்கு ஒரு தெய்வ தலமாக அமைந்தது. நாளடைவில் சிவசக்தி ஆலயமாகப் பெயர் பெற்றது.
சுமார் 25 ஆண்டுகள் சிவசக்தி ஆலயம் செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. இந்து இளைஞர் பலர் ஒன்று கூடி நல்ல திட்டங்களை செயல்படுத்தினர். தேவாரம், பஜனை, தமிழ் வகுப்புகள் ஆகியவை ஆரம்பிக்கப்பட்டு நல்ல பலன்களை அளிக்க ஆரம்பித்தது.
ஜாலன் ஹம்சா இடத்தை சுப்பிரமணியர் ஆலயம் கட்டுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி வாங்க அப்போது கோத்தா பாரு ம.இ.கா தலைவராகவும் இந்து சபா செயலாளாராகவும் இருந்த திரு. நா. இராமநாதன் K.M.N., A.M.N., (இராமு) அவர்களை நியமித்தது.
ம.இ.கா. மூலமாகவும் மத்திய அரசை அணுக முடிந்தது. இறுதியாக அப்போதைய துணை மந்திரி பெசாராக இருந்த மாண்புமிகு டத்தோ ரஸ்டம் மூலமாக ஜாலான் ஹம்சா இடத்தை கோயிலுக்கான நிலமாகப் பதிவு செய்தனர். என்றாலும், முழு இடுகாட்டு இடத்தையும் கோவிலுக்காகப் பெற முடியவில்லை. ஒரு பகுதிதான் கிடைத்தது.
1996-ம் ஆண்டு நகரான்மை வளார்ச்சிக்கு வழிவிட சிவசக்தி வேறு இடத்திற்கு மாறி செல்ல வேண்டிய நிபந்தனை ஏற்பட்டது. அதற்கு ஏற்ப சிவசக்தி ஆலய நிர்வாகக் குழுவும், பொது மக்கள் சார்பில் சிலர் ஒன்று கூடி இந்து சபாவினை அணுகினர். சிவசக்தி ஆலயம் கோத்தாபாருவில் சிறிய அளவிலேயே இருந்தாலும் மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் ஸ்தலமாக இருந்ததாலும் சிவன் ஆலயமகக் கட்டலாமேயென சிவசக்தி ஆலயத்தினர் இந்து சபா தலைவர் டத்தோ நாச்சியப்பனிடம் கோரிக்கை வைத்தனர்.
இருதரப்பாரும் கலந்து பேசி இந்து சபா பராமரிப்பிலிருந்த ஜாலான் ஹம்சா இடுகாடு இடத்தில் புதிய ஆலயம் நிர்மாணிக்கத் தீர்மானம் செய்து ஆகம சான்றோர்களிடம் ஆலோசனை பெற்று அங்கேயே ஆலயம் அமைக்கலாமெனத் தீர்மானித்தனர்.
1999-ஆம் ஆண்டு மே மாதம் சுப்பிரமணியன் நாச்சியப்பன் இந்து சபா செயலாளராக நியமிக்கப்பட்டார்கள். நவம்பர் 2002-ல் டத்தோ நாச்சியப்பன் அவர்கள் மறைவிற்கு பின் திரு. சுப்பிரமணியன் இந்து சபா தலைவரானார்கள்.
சிவனே முருகன், சுப்பிரமணியரே சிவன் ஏன்ற சைவ சமய கோட்பாட்டின்படி இந்து சபாவினர் டத்தோ நாச்சியப்பன் அவர்கள் தலைமையில் சுப்பிரமணியர் கோயில் என்ற கொள்கையை சற்றே மாற்றி "சிவசுப்பிரமணியர்" ஆலயம் கட்டலாமென முடிவெடுத்தனர்.
கோத்தா பாரு இந்து பெருமக்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த சிவசுப்பிரமணியர் ஆலய அடிக்கல் நாட்டு விழா 2000-ஆம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் கோலாகலமாக நடைபெற்றது.
திரு. சுப்பிரமணியம் நாச்சியப்பன் அவர்கள் மாநில அரசுடன் அணுக்கமாகத் தொடர்பு கொண்டு மாண்புமிகு அனுவார் டான் அவர்கள் மூலமாக முதலில் ஒரு மண்டபம் மட்டுமே கட்ட அனுமதி அளித்த மாநில அரசினர் பின்பு கோபுரத்துடன் ஒரு ஆலயம் அமைக்க அன்புடன் அனுமதி தந்தனர்.
மாநில அரசுக்கு நன்றி! நன்றி!
|