| ஆலயத்தைப் பற்றி About the temple
முன்னாள் ஆலயத் தலைவர் திரு. P. ஆதிமூலம் PJM., PBS. Thiru P. Aathimoolam (former temple president)
ஆலய வரலாறு
முருகனின் புகழ்மிக்க அருட்பெரும் தலங்களுள் ஒன்று
(22.5.2002-ல் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகத்திற்காக வெளியிடப்பட்ட மலரிலிருந்து). எழுதியது ஆலயத் தலைவர் திரு. P. ஆதிமூலம் PJM., PBS. அவர்கள்.
மலைகள் பல இருப்பினும், முருகப்பெருமான் பினாங்கு கொடிமலையினையே பெரிதும் விரும்பி, அங்கு தங்கி வீற்றிருந்து, அன்பர்களுக்கு அருள் புரிந்து வருகின்றான் என்று பலர் குறிப்பிடுகின்றனர்.
முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் இச்சாசக்தி, கிரியாசக்தி ஆகிய வள்ளியம்மை, தேவசேனையோடு வீற்றிருந்து வேண்டுவோர் வேண்டும் வரங்களையெல்லாம் அருளித்தருளுகின்றான். திருவிழாக் காலங்களில் பல இன மக்கள் கூடி, முருகனை அன்புடன் வழிபட்டு அருள் பெற்று மகிழ்கின்றனர். ஆலயத்துக்கு விஜயமளித்த டாக்டர் சுவாமி கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற பெரியார்கள் கொடிமலை முருகனை புகழ்ந்து துதித்துள்ளனர்.
பினாங்கு கொடிமலையில் புகழ்மிக்க திருமுருகனின் ஆலயம் கிழக்காசியாவிலேயே அதிகமான உயரத்தில், (2500 அடி ... 762 மீட்டர்) மலை உச்சியில், அடியார்களின் பாவங்களைப் பொறுத்து அருள் புரியும் தலமாக அமைந்திருக்கிறது.
இவ்வாலயத்துக்குச் செல்லும் அன்பர்கள் கொடிமலை அடிவாரத்திலிருந்து அழகிய மரம், செடி கொடிகள் சூழ்ந்திருக்கும் மலை உச்சிக்கு இரயில் வண்டி மூலமாகச் செல்லும் வசதிகள் உள்ளன. கால் நடையில் செல்ல விரும்பும் அன்பர்களுக்கு பினாங்கு வாட்டர்பால் பூந்தோட்டத்திலிருந்து உள்ள நடைபாதை உள்ளது. இருப்பினும் இந்தப் பாதை உயரமாகவும் சுமார் இரண்டரை மைல் (4 கி.மீ.) தூரமான பாதையாகும். இங்குள்ள திருமுருகன் ஆலயத்தின் சிறப்பு பலவாறாகத் தமிழ் மக்களுக்குப் பெருமையைத் தருகின்றது. இத்தலத்தில் திருமுருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். மலையின் சிகரத்து உச்சியில் திருமுருகன் கோயில் கிழக்கு நோக்கி சிறந்தோங்கி அமைந்துள்ளது. அக்காட்சி அழகு வாய்ந்து திகழ்கிறது என்று கொடிமலை ஆலயத்துக்கு வரும் மக்கள் புகழ்ந்து போற்றியிருக்கின்றார்கள். உலகில் பல மலைகளில் முருகன் இருப்பது போல், பினாங்கு கொடிமலையிலும் பெரிதும் விரும்பி, அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றான் என்றும் புகழ்ந்துள்ளார்கள்.
தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்படும் தெய்வமாகத் திகழ்பவன் திருமுருகன். கலியுக கண்கண்ட தெய்வம் என விளங்கி, அடியார்களுக்கெல்லாம் திருமுருகன் அருள் செய்பவன். முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன்பால் மக்களுக்கு எல்லையில்லாத பக்தியும் அன்பும் உண்டு. முருகப்பெருமானுக்குரிய விழாக்கள் சிறப்பாக நடைபெருகின்றன. மக்கள் அன்புடன் போற்றி வணங்கி வருகின்றனர். பல இன மக்கள் கொடிமலைக்குச் சென்று, முருகனை வழிபட்டு மகிழும் காட்சி பக்தியில்லாதவர்களுக்கும் பக்தியை உண்டாக்கும். அவரவர்களும் முருகனின் அருளால் தம்பிணிகள் தீர்ந்தும், கவலைகள் ஒழிந்தும், துன்பங்கள் நீங்கியும், பல நன்மைகளை எய்தியும் முருகனின் அருளைப் பெற்று, மகிழ்ந்து செல்கின்றனர்.
மலேசிய நாட்டில் சிறப்புற்று நிற்கும் கோயில்களில் பினாங்கு ஸ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயம் திகழ்ந்தோங்கி வளர்ந்து வருகின்றது.
ஆலயத் தலைவரின் உளமகிழ் செய்தி
அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணை கூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய !
(ஆலயத் தலைவர் P. ஆதிமூலம் PJM., PBS. அவர்கள் எழுதியது).
.. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் .. .. ஆலயம் தொழுவது சாலவும் நன்று ..
என்ற ஆன்றோர் வாக்குக்கு இணங்க, பினாங்கு கொடிமலை வாழ்மக்கள், வேலாயுதம் ஒன்று அமைந்த இடத்தில் ஸ்ரீ அருளொளி திருமுருக பெருமானுக்கு ஆலயம் கட்டுவதற்கு தெய்வ தத்துவங்களையும், ஆன்மீகத்தையும் நன்கு உணர்ந்த அருள்மாமணி உயர்திரு N.T.S. ஆறுமுகம் பிள்ளை AMN., DJN. அவர்களைத் தலைவராகவும், அடியேனை உதவித் தலைவராகவும், திரு. L. சிங்காரம் அவர்களைக் கெள. காரியதரிசியாகவும் காப்பாளராகவும் கொண்ட நிர்வாகத்தால் பினாங்கு கொடிமலை உச்சியில் 2500 அடி உயரத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இடத்தில் அன்று ரி.ம. 75,000 செலவில் அற்புதமாகக் கட்டப்பட்டது.
ஆலயத் திருப்பணிக்கெனெப் பக்தப் பெருமக்கள் பலர் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளார்கள். இத்தகைய ஆலயத்திற்கு மூலஸ்தானத்தில் திருமுருகனாக ஆறு முகங்களுடன் மயிலின்மேல் அமர்ந்தபடி, பக்கத்தில் வள்ளி தெய்வானையுடன், குடும்ப சமேதராகக் காட்சி தருகின்றார். ஆலயத்தின் மூலஸ்தானத்தின் வலது பக்கம் விநாயகரும், இடது பக்கத்தில் இடும்பனும் அமையப் பெற்றிருக்கின்றனர். இவ்வாலயத்தின் திருப்பணி வேலைகள் தமிழ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்தபதிகளால் பூர்த்தி செய்யப்பட்டு, 5. 7. 1971-ல் தவத்திரு சுவாமி சித்திரமுத்து அடிகளாரின் இயந்திரஸ்தாபனம் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆலயத்தின் இரண்டாவது மகாகும்பாபிஷேகம் 23. 6. 83-ல் நடைபெற்றது.
மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில், திருவிழா காண வருபவர்கள் தங்கிக் களைப்பாறவும், திருவிழா தொடர்பான மற்ற நிகழ்ச்சிகளை நடத்தவும், வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி தங்கிச் செல்லவும் வேண்டி நிர்வாகத்தால் 1988-ஆம் ஆண்டு ஒரு சமூக மண்டபத்தை ரி.ம. 150,000 செலவில் அழகிய மண்டபமாகக் கட்டி முடிக்கப்பெற்றது.
இந்த மண்டபத் திருப்பணி நிர்வாகக் குழுத் தலைவர் அருள்மாமணி அவர்களின் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சாமிவேலு அவர்கள் அடிக்கல் நாட்டியதோடு அன்னவர் அரசாங்கத்திடமிருந்து ரி.ம. 25,000 மானியம் பெற்றுத் தந்தார்கள். மீதியுள்ளத் தொகை பக்தப் பெருமக்கள் நன்கொடையாக வழங்கியதாகும். குறிப்பாகச் சமூக மண்டபத் திருப்பணிக்கு பணம் எதுவும் பெறாமல் உதவி அளித்த கட்டிடக் கலைஞர் மாண்புமிகு டத்தோ லிம் சொங் கியாட் அவர்களுக்கும், இந்த மண்டபம் நிறைவுபெற நன்கொடை அளித்தவர்களுக்கும், இன்னும் மற்ற வகைகளில் உதவியளித்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாலயத்திற்கு உற்சவ மூர்த்தி இல்லாத குறை நீங்க உயர்திரு அருள்மாமணி அவர்களின் மறைவுக்குப் பிறகு 1989-ஆம் ஆண்டில் அடியேனைத் தலைவராகவும், திரு. L. சிங்காரம் அவர்களை உதவித் தலைவராகவும், திரு மா. அருணாசலம் அவர்களைக் கெள. காரியதரிசியாகவும் கொண்டு செயல்பட்ட நிர்வாகம், ரி.ம. 8,000 செலவில் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வடிவத்திலும், விநாயக விக்கிரஹம் ஒன்றும் செய்யப்பட்டு, 1993-ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து இங்கே தருவிக்கப்பட்டது. இந்த விக்கிரஹங்கள் வயலூர் முருகனைப்போல அழகாக உருவாக்கப்பட்டதாகும். இந்த விக்கிரஹங்களைச் செய்வதற்கான ஏற்பாட்டையும், விக்கிரஹங்களை கொடிமலை ஆலயத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு உதவியாகயிருந்த பக்தர்களுக்கும் அடியேன் அன்பு வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாலயத்திற்கு தவத்திரு பன்றிமலை சுவாமிகள், தவத்திரு குன்றக்குடி அடிகளார், சுவாமி சித்பாவனந்தா, தவத்திரு டாக்டர் கிருபானந்த வாரியார் சுவாமிகள், தவத்திரு சித்திரமுத்து அடிகளார் உட்பட இன்னும் பல பெரியோர்கள் சிறப்பு வருகையளித்ததுடன் ஆகம விதிமுறைப்படி பூஜைகள் நடத்தி, நல்லாசி கூறிச்சென்றார்கள்.
மேலும் புகழ்பெற்ற சினிமாப் பாடகராகிய டாக்டர் சீர்காழி கோவிந்தராஜனும், அவரது புதல்வர் டாக்டர் சிவசிதம்பரம், அவரது குடும்பத்தினரும், திருவாடுதுறை நாதஸ்வர வித்வான் திரு. சுப்பிரமணியம் அவர்களும், அரசியல் தலைவர்களான மாண்புமிகு துன் சம்பந்தன், தோபுவான் உமா சம்பந்தன், மாண்புமிகு டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் துணைத் தலைவர், விவசாயத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ சி. சுப்பிரமணியம் DSNS., SMJ. அவர்களும், மாண்புமிகு டத்தோ கு. பத்மநாபன் அவர்களும், மாண்புமிகு துன் டத்தோ டாக்டர் லிம் சொங் யூ அவர்களும் இன்னும் மற்றவர்களும் விஜயம் செய்துள்ளார்கள். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சியா குவான் சாய் அவர்களும், சட்டமன்ற உறுப்பினராகிய மாண்புமிகு லாய் சியூ வேங் அவர்களும், மாண்புமிகு டத்தோ டாக்டர் கு. ராஜபதி அவர்கள் அரசாங்கத்திடமிருந்து மானியமர் பெற்றுத் தருவதாக தெரிவித்தமைக்கு அன்னவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
கொடிமலை அருளொளி திருமுருகன் ஆலயத்தில் தொடர்ந்து மாதந்தோறும் அமாவாசை, கார்த்திகை, சஷ்டி உபயங்களும், விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, வரலெக்ஷ்மி பூஜை, திருக்கார்த்திகை தீபம், இன்னும் மற்ற விழாக்களும் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக ஆடிப்பூரத் திருவிழா 13 தினங்களுக்கு உபயமாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா தொடர்ந்து 7 நாட்கள் உபயமாக நடைபெறுகின்றது. திருவிழாக் காலங்களில் மக்கள் அதிகமாக வருகை புரிவார்கள். மேலும் இவ்வாலயத்தில் மறு சீரமைப்புச் செய்ய வேண்டியிருந்ததால், 2000-ஆம் ஆண்டில் தீருவாளர் ஸ. லெக்ஷ்மிகாந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்ட கட்டட கமிட்டியினர்கள் திருப்பணி வேலையைத் தொடங்கி, ஆலயத்தின் திருப்பணி வேலை தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட தலைமை ஸ்தபதி உயர்திரு பழனிக்குமார் அவர்களும் அவர்தம் குழுவினரும் கலை நுணுக்கத்தோடு, ஆகம விதிகளுக்கேற்ப சிற்பங்களை கம்பீரமாக அமைத்து, மிகச் சிறந்த அழகிய ஆலயமாக அமைத்தமைக்கு ஆலயத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தெய்வத் தத்துவங்களையும், ஆன்மீகத்தையும், நன்கு தெரிந்த நமது ஆலயக் குருக்களாகிய திரு. முத்துகுமார குருக்கள், ஆலய செயற்குழுவினர்களுக்கு உறுதுணையாகயிருந்து, பக்தப் பெருமக்களிடம் கணிசமான நிதி வசூல் செய்து, இத்திருப்பணி வெற்றிப்பெற உதவியாயிருந்த அன்னவருக்கும் ஆலயத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன்.
ஆலயக் கட்டிடக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்று, திருப்பணியில் அயராது உழைத்து, பல அன்பர்களிடம் கணிசமான நிதி பெற்றுத் தந்த, இவ்வழகு ஆலயம் முழுமைபெறக் காரணமாக இருந்த திருவாளர் ஸ. லெக்ஷ்மிகாந்தன் அவர்களுக்கும், கோயில் திருப்பணிக்கும், கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் கும்பாபிஷேக சிறப்பு மலர் தயாரிக்க ஆதரவு நல்கிய கணேச அச்சக உரிமையாளர் திருவாளர் ை.ரு. தங்கவேலு அவர்களுக்கும், ஆலய அரங்காவலர்களுக்கும், செயலவையினருக்கும், நன்கொடை வழங்கிய பொதுமக்களுக்கும் எனது பணிவான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, 22. 5. 2002-ல் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு நன்னீராட்டு வைபவம் சிறப்புடன் நிறைவேற வேண்டுமாய் எல்லாம் வல்ல எம் பெருமான் ஸ்ரீ அருளொளி திருமுருகனை இறைஞ்சுகிறேன்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
நன்றி. அன்புடன், P. ஆதிமூலம் PJM., PBS.
சில உண்மைச் சம்பவங்கள்
(எழுதியது திரு. அருணாசலம், ஆலய செயலாளர்)
சில காலங்களுக்கு முன்பு ஆலயத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீ குன்றக்குடி அடிகளார், மூலஸ்தானத்தில் ஆறு முகத்துடன் பன்னிரு கரத்தினுடனும் மயில் மீது அமர்ந்து காட்சி தரும் முருகப் பெருமானைக் கண்ணுற்றதும், கண்ணீர் மல்க, 'எம்பெருமான் குன்றக்குடியானை, அங்கிருந்து புறப்பட்ட நாள் முதல் காணாது ஏங்கினேன். இந்தக் கொடிமலை ஆறுமுகனைக் கண்டதும் திகைத்துப்போனேன். உள்ளத்தில் எண்ணிலா மகிழ்ச்சி கொண்டேன். கண்டேன் குன்றக்குடியானை இங்கே. அங்கே முருகன் வள்ளி, தெய்வானையை மயில்மீது அமர்த்திக் கொண்டு, மயில் இறகை விரித்து புறப்படும் நிலையில் இருக்கும். ஆனால் இங்கோ, எம்பெருமான் மயிலைவிட்டு, அம்மையரை நிற்க வைத்து, இறகை மூடிய மயில்மீது நிம்மதியாக அமர்ந்து காட்சி தருகின்றான். ஐயன் இங்கே குடிகொண்டுவிட்டான்' என்று நாத் தடுமாறக் கூறினார்.
'நல்ல குளிர் தென்றல் வீசும் கொடிமலையில் குடிகொண்டான் நம் முருகன்'
அவருடைய சொல்லிற்கேற்ப, ஆலயத்தைப் புதுப்பிக்கவும், மூலஸ்தானத்தை இன்னும் பெரிதாக்கவும் நிர்வாகம் முடிவிற்கு வந்து, பாலாலயம் செய்து, ஆறுமுகப் பெருமானை மண்டபத்திற்கு கொண்டு செல்வோம் என்று முடிவு செய்து, முயற்சி செய்தபோது, அவரை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலையில் வீற்றிருந்தார். இரண்டு ஆலயங்கள் கட்டிக் கொண்டிருந்த ஸ்தபதிகளின் உதவியை நாடினோம். நிச்சயமாக முடியும் என்று வந்து பார்த்துவிட்டு, வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டார்கள். மீறி எடுத்தால் ஏதாவது நேரக்கூடும் என்றும் கூறிவிட்டார்கள். இறுதியில் ஆறுமுகப் பெருமானின் கைவேலையே நாங்கள் வைத்து வழிபாடுகள் செய்கிறோம். மூலஸ்தானத்தை விரிவு படுத்தாமல் மற்றவற்றைச் செய்கிறோம்.
'வேறூன்றிவிட்டான் முருகன், அங்கு வினை தீர்க்க வந்தான்'
ஒருமுறை தாய்லாந்து, பேங்காக்கிலிருந்து ஓர் அம்மையார் தனது மகனுக்கு திடீரென்று ஏற்பட்ட நோயினால் நடக்கக் கஷ்டப் பட்டதாகவும், பேச்சு நின்றுவிட்டதாகவும் கூறினார். மருந்துகளால் குணப்படுத்த முடியாது போகவே, பெளத்த ஆலயங்களுக்குச் சென்றிருக்கின்றார். ஒருநாள் ஒரு பெளத்த பிச்சு, பினாங்கில் ஓர் உயரமான மலையில் ஒரு கோயிலிருக்கிறது. அங்கு போனாயானால் நோய் குணமாகும் என்று கூறினாராம். ஆதலால் அவர் வந்து வேண்டிச் சென்றார்.
சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு நாள் காலையில் கூடை கூடையாக விதவிதமான பழங்கள், சுவாமிக்கு விலை உயர்ந்த பட்டுத் துணிகள், பூமாலைகள், பூஜை சாமான்கள் எனக் கொண்டு வந்து முருகன் சன்னிதானத்திற்கு முன்னால் அடுக்கி வைத்துவிட்டார். கணிசமான நன்கொடையும் வழங்கினார். தனது மகன் குணமடைந்து விட்டதின் நன்றிக் கடனே என்றார்.
'என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி'
கடந்த ஆண்டு பாலாலயம் செய்து, கோவில் மண்டபத்தில் இறைவனை வைத்து வழிபடும் நேரம். ஒரு நாள் இரவு 8.30 மணிக்குக் காற்றும் மழையுமாக இருந்தது. ஆலயக் குருக்கள் ஒரு காரியமாக கீழே சென்றிருந்தார். 8.35 மணிக்கு நான் மண்டபத்தைப் பூட்டிவிட்டு வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அச்சமயம் கொட்டும் மழையில் தலைமீது சில காகிதங்களைப் பிடித்துக்கொண்டு, ஆண்களும் பெண்களுமாகச் சில தாய்லாந்து பிரஜைகள் கோவிலுக்கு வரும் வழியில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு பெண் வேகமாக கோவில் பக்கத்திலிருக்கும் மசூதியைப் பார்த்துவிட்டு ஓடிவந்தாள். என்னைப் பார்த்ததும் மண்டபத்தைக் காண்பித்து, அது என்னவென்று வினவினாள். நான் 'மண்டபம்' என்றேன். 'கோவில் ஒன்று இருந்ததே' என்றாள். 'அதுவா, பக்கத்தில் கட்டுகிறார்கள், இப்பொழுது மண்டபத்தில் சாமி கும்பிடுகிறோம்' என்றேன். 'பார்க்க வேண்டும்' என்றாள். 'கோவிலை அடைத்துவிட்டேன், வேண்டுமானால் பக்கத்தில் புத்தர் சிலை ஒன்றிருக்கிறது, அதைப் பார்த்துவிட்டுப் போங்கள்' என்றேன். அதற்கு அவள் 'பேங்காக்கிலிருந்து புறப்பட்டு, எங்கும் போகாமல், நேராக இந்த மழையையும் பொருட்படுத்தாமல் 20 பேரை அழைத்துக் கொண்டு இந்த இருட்டில் சாமி கும்பிட வந்திருக்கிறேன். நீ கோவிலை மூடிவிட்டேன், புத்தரைப் பார்த்துவிட்டுப் போ என்கிறாயே' என்றாள் கோபத்துடன். நான், 'கோவிலை முடிவிட்டேன், திறப்பது சரியல்ல' என்றேன். 'சுவாமியை பார்த்துக் கும்பிடாமல் போகமாட்டோம்' என்றாள்.
அவர்களுடைய பக்தியைக் கண்டு வியந்து, மண்டபத்தைத் திறந்துவிட்டேன். பூமாலைகள், பட்டுத் துணி, பூஜை சாமான்கள் எல்லாவற்றையும் வைத்து வழிபட்டார்கள். பிறகு அவர்களுக்குள்ளே ஒரு வயதான பெண்ணுக்கு அருள் வந்து, தாய் பாஷையில் பேசினாள். என்ன என்று ஒருவரிடம் கேட்டேன், சாமி பேசுகிறது என்றாள்.
கடைசியாக என்னிடம் முதலில் பேசிய பெண், 'இது நான் பார்த்த சிலை அல்ல. அதற்கு நிறைய கைகள் இருக்கும்' என்றாள். நான் பக்கத்துக் கதவைத் திறந்து, கட்டப்படும் கோவிலுக்கு நடுவே நிற்கும் மூலஸ்தானத்தைக் காண்பித்து, நடந்தவற்றைக் கூறினேன். அவள் சந்தோஷத்துடன், அந்த இடம்தான் என்று சொல்லி, எல்லோரிடமும் காட்டினாள்.
அப்பொழுதுதான் அவள் கூறினாள், '12 வருடங்களுக்கு முன்பு எனக்கு வயது 15 இருக்கும்போது, என் சகோதரனுக்கு ஒரு கொடிய நோய் வந்தது. டாக்டர்கள் அவனைக் காப்பாற்ற முடியாது என்றும், சில மாதங்களே வாழ்வார் என்றும் கூறவிட்டார்கள். பிறகு ஒரு நாள், தற்செயலாக பேங்காக்கில் ஓர் புத்த ஆலயத்தில், முன்பு இருந்த ஆலயத்திற்கு வந்தவர்களைச் சந்தித்தேன். அவர்கள் எங்களை இங்கு வந்து வேண்டிக்கொள்ளச் சொன்னார்கள். அப்படியே செய்தோம். இறைவன் கருணையால் இன்றும் என் சகோதரன் நலமுடன் இருக்கிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இப்படிப் பலரை அழைத்து வருவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக வரவில்லை. பேங்காக்கிலிருந்து சாமி கும்பிட வந்தோம். பார்த்துவிட்டோம், நிம்மதியாக வீடு செல்வோம்' என்றாள்.
'நம்பினார் கெடுவதில்லை'
சிவஸ்ரீ ம. முத்துக்குமார குருக்கள் SivaSri M. Muthukumara Gurukal
சிவஸ்ரீ ம. முத்துக்குமார குருக்கள்
ஸ்ரீ மங்களேஸ்வரி அம்பிகா ஸமேத ஸ்ரீ மங்கள நாத சுவாமி ஸகாயம்
இறையன்பர்களே,
நம் இந்து சமய வழிபாடுகளில், ஸ்ரீ முருகப் பெருமானின் வரலாறுகளை கூறும் கெளமாரம் என்பதாகும். மேலும் பல வகை நூல்களில் குமரனின்வரலாறுகள் உண்டு. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் வாழும் இடம் என ஆன்றோர் பெருமக்களால் போற்றப்பட்டும், வழிபட்டும் வருகின்றார்கள். மேலும் கலியுகத்தில் ஸ்ரீ இராமலிங்க வள்ளலார், பாம்பன் குமர குருதாச சுவாமிகள், ஜவ்வாது புலவர், இன்னும் பல அடியார்களுக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த வரலாறுகள் பல புராணங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். பல புகழ்களைக் கொண்ட முருகப் பெருமான், குளிர் தென்றல் வீசி, கொடிமலை தன்னில் அருளாட்சி செய்து வருகின்ற கந்தப் பெருமான், வேண்டுவோர்க்கு வேண்டுவன அளித்து, ஆறு முகங்களுடன் அருள் பாலித்து வருகின்றார்.
பல நாம தேயங்களைக் கொண்ட ஸ்ரீ முருகப் பெருமானுக்கு இங்கு 'சத்ரு சம்ஹார திரிசதை' என்கிற அர்ச்சனை நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் பல பக்தகோடி பெருமக்கள், நற்பலன்கள் அடைந்து உள்ளார்கள்.
சூரபத்மன் கடும் தவம் இயற்றி, எம்பெருமானிடத்தில் பல வரங்களைப் பெற்று அரசாட்சி நடத்தி வந்தான். அப்படி அவன் ஆட்சி செய்யும் காலத்தில், தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் பல இன்னல்கள் செய்து கொடுமைகள் புரிந்து வந்தான். இதனைத் தாங்க முடியாத முனிவர்கள், தேவாதி தேவர்கள், எம்பெருமான் ஸ்ரீ முருகனை வேண்டி, மனம் உருகி அவர்மீது செய்யப்பெற்ற நாமதேய அர்ச்சனைதான் 'சத்ரு சம்ஹார அர்ச்சனை.'
விளக்கம்
எம்பெருமான் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் செய்து, சிவசக்தியினுடைய சொரூபமாய் விளங்குகின்ற சக்திவேலுக்கு முதலாவதாக அர்ச்சனை செய்து, தூப, தீப, நைவேத்யம், ஆராதனைகள் செய்த பின்பு, ஆறுமுகத்திற்கும் தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம், ஈசானமுகம், அதோமுகம் என்று சொல்லக்கூடிய ஆறுமுகங்களுக்கும் தனித்தனியே அர்ச்சனை செய்வதாகும். ஆறுவகை பூக்கள், ஆறுவகை நைவேத்யங்கள் செய்யப்படவேண்டும். இதன் விளக்கங்கள் 'ஸ்காந்த புராணத்தில்' விரிவாக கூறப்பட்டுள்ளது.
நற்பலன்
சத்ரு .. எதிரி, சம்ஹாரம் .. அழித்தல், பகைவர், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் (மந்திர, யந்திர, தந்திர) தோஷங்கள் நீங்கி, நம் காரியங்கள் அனுகூலமாகும். இந்த அர்ச்சனையை அரைமண்டலம் ஒருமண்டலம் என செய்து வந்தால் ஸ்ரீ ஷண்முகநாதப் பெருமானின் திருவருளால் நினைத்த காரியங்கள் அனுகூலம் கிடைக்கும். ஸ்ரீ ஷண்முகநாதப் பெருமானின் திருவருள் கூடும். காலனை சம்ஹாரம் செய்ததனால், ஸ்ரீ பரமேஸ்வரருக்கு 'காலசம்ஹாரர்' எனவும், சூரபத்மனை சம்ஹாரம் செய்ததனால் எம்பெருமானுக்கு 'சத்ரு சம்ஹரமூர்த்தி' என வழங்கலாயிற்று. இங்கு முருகன் ஆறுமுகப் பெருமானாக அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
இறைவனுடைய திருக்குட நன்னீராட்டு விழா இனிதே நடைபெறவும், இதனைக் கண்ணுறும் அனைத்து இறைபக்தர்களுக்கும் ஸகல நலன்களும் கிட்டி, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸமேத அருளொளி திருமுருகப் பெருமானை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
இறைவன் பணியில் சிவஸ்ரீ ம. முத்துக்குமார குருக்கள்
ஸத்யோ ஜாத சிவம்
ஆலயத் தலைமை குருக்கள் மகாகும்பாபிஷேக சர்வசாதகம், பினாங்கு கொடிமலை
'ஸர்வேஸ்ஜெனா ஸகினோ பவந்து'"
|