| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
ஆரம்பக்கால தோற்றமும், சரித்திர வரலாறும்
இயற்கைத் தோற்றம்
எங்கு நோக்கிலும் இதயத்தை ஈர்க்கும் பசுமை நிரம்பிய மாமலைகளைக் கொண்ட நாடு இம்மலேசியத் திருநாடு. தொட்டயிடமெல்லாம் தெய்வ மணங்கமழும் செந்தமிழ்த் தெய்வம் திருமுருகன், கந்தவேலன், ஆறுபடை வீட்டதிபன், ஆறுமுகசரவணன்.
குன்றுதோறும் .. குகைதோறும் திருவிளையாடல் புரியும் விந்தைமிகு காட்சியை சிந்தை நிறைந்த பக்தியுடையவர்களே காணமுடியும்.
தேவஸ்தான தோற்றம்
கம்போங் கபாயாங் (பேராக்) கல்லுமலை அடிவாரத்தில் ஓடும் சுங்கை ராயா ஆற்றங்கரை அழகு ஓரு புறமும், இயற்கை அரணாக விளங்கும் குன்றில் எழில்மிக்க உயர்ந்த தோற்றம் ஓரு புறமும், எவர் மனத்தையும் கவர்ந்து போன நிலையை உண்டாக்கும்.
ஈப்போவிலிருந்து கோலாலம்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் கம்போங் கபாயாங் என்னும் சிற்றூருக்கும் கம்போங் என்னும் நகருக்குமிடையில் நெடுஞ்சாலையிலிருந்து கிழக்கு நோக்கி சுமார் அரை கி.மீ. தூரம் சென்றால் கல்லுமலையின் கவர்ச்சிமிக்க ஸ்ரீ சிவ சுப்பிரமணியக் கடவுளின் சன்னிதானத்தின் பெருமையை அறியலாம். குகாலயத்தின் இயற்கையின் விந்தைமிகு தோற்றத்தைக் கண்டுகளிக்கலாம். குகையின் கண்குடிகொண்டுள்ள குகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரின் திருவருளைப் பெற்றுய்யலாம். இத்தகைய விந்தைமிகு தோற்றத்துடன் கூடிய தலத்தின் பெருமையை அறிந்தின்புற பக்தகோடிகளையும் பெரியோர்கள், தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவரையும் வரலாற்றின் துணைக்கொண்டு அங்குசெல்ல சிறிது நேரம் அன்போடு அழைக்கின்றோம்.
1901-ம் ஆண்டு வாக்கில் கம்போங் கபாயாங் என்னும் சிற்றூரை அடுத்துள்ள கல்லுமலை அடிவாரத்தில், கல்லுடைத்துக் கொண்டு அவ்விடத்தையே தங்கள் உறைவிடமாகக் கொண்டிருந்த தமிழ்த் தொழிலாளர்களிடையே, காடெல்லாம், மேடெல்லாம் சுற்றித்திரிந்து களைத்து இளைத்துச் சோர்வுற்ற துறவியார் ஒருவர் வந்து சேர்ந்தார். அத்துறவியைக்கண்ட தொழிலாளர்கள் இனம்புரியாத அன்பு உணர்வோடு, அன்னவருக்கு நல்வரவுக் கூறி, நல்லாதரவு தந்து தங்களுடைனேயே தங்கும்படி கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கிணங்க, துறவியார் அவர்கள் கல்லுமலை அடிவாரத்திலேயே அவருக்கென தொழிலாளர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட ஓர் சிறிய குடிசையில் தங்கினார்.
அன்று நள்ளிரவு நேரத்தில் திருமுருகபிரான், வெற்றி வேலாயுதப் பெருமான், வேலேந்திய காத்தினனாய், குழந்தை வடிவில் காட்சி தந்து, தான் குடிகொண்டிருக்கும் குகை மறைந்து இருக்கிமிடத்தைத் துறவியாருக்கு அழகாக உணர்த்திவிட்டு மறைந்தார். மறுநாள் அதிகாலையில் தொழிலாளர்களின் வருகையைக்கண்ட துறவியார் பக்திபரவசமேலிட்டவராய் முன் செல்ல, தொழிலாளர்கள் அனைவரும் அவருடன் தொடர்ந்து பின் செல்ல, திருமுருகன் கோயில் கொண்டுள்ள குடியைக்காண, அவர் காட்டியதிசை இடம் நோக்கிச் சென்றனர். திருமுருகன் காட்டிய இடம் இதுதான் என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார் துறவியார். அனைவரும் அவ்விடத்தை கூர்ந்து நோக்கினர். அங்கு மூன்று அடி அகலமுள்ள கரையான் புற்று ஒன்று குகையின் நுழைவாயிலை அடைத்துக்கொண்ருப்பதைக் கண்டனர். அதை இடித்துவிட்டுப் பார்த்தபோது அங்கு ஒரு குறுகிய, ஆள் தாராளமாக நிமிர்ந்த நிலையில் நடந்துச் செல்லக்கூடிய அளவில் அமைந்த நுழைவாயில் இருக்கக் கண்டு வியந்தனர். அங்கு தோன்றிய இயற்கை மண்டபத்தின் கீழே திருமுருகன் எழிலையெல்லாம் வாரி இறைத்துக் குழந்தை வடிவில் வலது கரத்தில் வேல் தாங்கியத் திருக்கோலத்துடன் நின்று காட்சியளிப்பதைக்கண்டு அனைவரும் மெய்மறந்து .. முருகா ஸ்ரீ முருகா ஸ்ரீ .. என்று இறைஞ்சி வீழ்ந்து வணங்கினர். பின்னர் உடனடியாக தீபம் ஏற்றி, பூசைகள் முதலிய வழிபாடுகள் செய்வதற்குரிய ஏற்பாடுகளை தீவிரமுடன் செயல்படத் துவங்கினர். அன்று முதல் இன்றுவரை கம்போங் கபாயாங் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் குகாலயம் சாதி, சமய, நிற, மத, வேறுபாடின்றி பல்வேறு மக்களாலும் கவரப்பட்டு, போற்றப்பட்டு, பக்திரசமிக்க வழிபாட்டிற்குறிய சிறப்பு இடமாக மலர்ந்து காட்சி தருகின்றது.
இயற்கைவளமிகுந்த இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இக்குகாலயத்தின் சமய வளர்ச்சிப் பணிக்கு அயராது தொண்டாற்றிய அன்பர்களின் வரிசையில் அக்காலத்தில் கோப்பெங் (கப்பி மலை) ஈயச்சுரங்க வட்டாரத்தில் சிறப்பாகப் பணியாற்றி வந்தவரும், அவ்வட்டார மக்களுக்கு நன்கு அறிமுகமானவருமாகிய பெரியார், இவ்வாலயத்தின் ஆரம்பகால ஸ்தாபகர், மறைவுற்ற சமயக்காவலர் உயர்திரு கே. எம். மருதமுத்து தண்டல் அவர்கள் முதன்மை வகிப்பவர் என்பது சரித்திர வரலாறுமாகும். அன்னவர் சக தொழிளாலர்களின் உதவியோடு குகைவாயிலை உடைத்துப் பெரிதாக்கி, இவ்வட்டார மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, ஆலோசித்து, ஆண்டுதோறும் வழிபாடு செயவதற்குரிய சகல ஏற்பாடுகளைச் செய்து, 1901 முதல் 1934-ம் ஆண்டு வரை இவ்வாலயத்தின் ஸ்தாபராகவும், கெளரவத் தலைவராகவும் தொண்டாற்றி இருப்பது நாமெல்லாம் பெருமைப்படுவதற்குறியது.
இவ்வாலயத்தின் சமய வளர்ச்சிப் பணிக்கு, அயராது தொண்டாற்றி மறைவுற்றப் பெரியார்கள், உயர்திரு சின்னான் தண்டல், உயர்திரு சின்னததம்பி தண்டல், உயர்திரு பரம்புக்குட்டித் தேவர், உயர்திரு கொல்லிமலைப்படையாச்சி, ஆசாரி தண்டல் ஆகியோர் ஆவர். 1908-ம் ஆண்டு ஒன்றித்து முன்னின்று இவ்வட்டாரத்தின் பெருத்த ஆதரவோடு, முதன் முதலாகத் தைப்பூசத் திருவிழாவை வெகு சிறப்புடன் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து சித்திரா பெளர்ணமி திருவிழாவும் மென் மேலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1918-ம் ஆண்டு, சித்திரைத் திருநாள் நிறுத்தப்பட்டு தைப்புசத் திருநாள் மட்டும், ஐந்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது அதன்வழி.
1918-ம் ஆண்டு, தமிழ்நாட்டிலிருந்து இரதம் வருகை
ஸ்ரீ சிவசுப்பிரமணிர் வள்ளி தெய்வானை சமேதராய் ஊர்வலம் வருவதற்காக அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய எடுப்பான, கவர்ச்சிகரமான அழகிய இரதம் ஒன்று, வண்ணப் பொலிவுடன், மிகுந்த பொருட் செலவில், தமிழ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது. மற்றும் கொடியேற்றுவிழா பக்தர்களின் காவடி உற்சவம், அன்னதானம், மூன்றுநாள் நாடகம், இரத ஊர்வலம், இடும்பன் பூசை முதலிய நிகழ்ச்சிகளுடன் ஐந்து நாள் திரளாக கூடுகின்ற மக்கள் வெள்ளத்திற்கிடையே வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 1918-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இரதம் இன்றும் இளமைப்பூரிப்போடு விளங்கும் குமரிப் பெண்ணைப்போல் நெஞ்சைக் கொள்ளை கொண்டும் வண்ண வணப்புடன் மிளிர்வது குறிப்படத்தக்கது.
1918-ம் ஆண்டு திருப்பணிகள்
1918-ம் ஆண்டைத் தொடர்ந்து குகைவாயில் முன்முகப்பு மண்டபம், இரதக்கொட்டகை, நாடகமேடை, முதலிய அமைப்புகள் உருவாயின. கணேசர், அம்பாள், இடும்பன், சனீஸ்வரர் முதலிய தெய்வத் திருவுருவச் சிலைகளும், சிற்பச்சீருடன் கூடிய மயில் பீடமும் அவ்வப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்தது. ஆலய வளர்ச்சிக்கு அயராது தொண்டாற்றி வருபவரும், கம்போங் கபாயாங் வட்டாரத்தில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரும், செல்வாக்கு மிக்கவருமாகிய பெரியார் உயர்திரு மாரிமுத்து கிராணியார் அவர்களும், அவர்தம் குடும்பத்தினரும், மற்றும் தமது இறுதி மூச்சுவரை ஆலய வளர்ச்சிப் பணிகளுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, 1947-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை கெளரவச் செயலாலராகவும், 1967-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரை கெளரவத் தலைவராகவும், ஆலோசகராகவும் சிறப்பாகச் சேவைகள் பல புரிந்து, அண்மையில் மறைவுற்ற பெரியார் உயர்திரு கே. எஸ். சுப்பிரமண்யம் உபாத்தியாயர் (கப்பிமலை) அவர்களும், தம் குடும்பத்தினரும் கடந்த காலங்களிலே செயற்குழு உறுப்பினராகவும், தற்போது ஆலயக் கெளரவச் செயலாளராகவும் செயலாற்றி வருகின்ற உயர்திரு என். கோவிந்தராஜூ அவர்களும் தம் குடும்பத்தினரும், முன்னாள் செயற்குழு உருப்பினராகவும், முன்னாள் கெளரவப் பொருளாளராகவும் தமது சிறப்பான பணியினையாற்றிய உயர்திரு எ. முனியாண்டி (நியூ கோப்பிசான்) அவர்களும் தமது குடும்பத்தினரும் இவ்வாலயத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு, சிரிய முறையில் பணியாற்றியுள்ளது நாமெல்லாம் பெருமைப் படத்தக்கதாகும்.
இவ்வாலயத்தின் தைப்பூச விழா, பொது மக்களின் ஆதரவோடும், பொருளுதவி, நிதி உதவியோடும் ஆண்டுதோறும் கொண்டாடப்படவேண்டியுள்ளது. எனவே பொது மக்கள் வழங்கப்பட்ட, தொகைகளுக்கு முறைப்படி ஜனநாயக ரீதியிலே பொதுக்கூட்டங்கள் யாவும் அவ்வப்போது கூட்டப்பட்டு கணக்கறிக்கைகள் பொது மக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசினரின் மேற்பார்வையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு இக்குகாலயம் 1968-ம் ஆண்டு அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
எங்களின் கற்பனைக் கோட்டைகள் அனைத்தும் கற்கோட்டைகளாக நிறைவெய்தி இம்மலேசியத் திருநாட்டில் மற்றுமொரு அருளோடும் கூடிய அற்புதங்களை நிகழ்த்தும் ஓர் சிறப்பு வாய்ந்த குன்றத்து முருகன் குடிகொள்ள தேவாலயத்தை இன்று பார்க்கிறீர்கள்.
வாழ்க மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு. வளர்க சமயம், நற்தொண்டு.
...... விக்கிரம ஆண்டு ஆவணி மாதம் 4-ம் தேதி (20.8.2000) நடந்த மகா கும்பாபிஷேக மலரிலிருந்து தொகுக்கப்பட்டது......
|