| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
உயர்திரு. பாரிட் முனிசாமி உடையார் அவர்களிடம் வேலை பார்த்துவந்த கல் உடைக்கும் தொழிலாளி திரு. மாரிமுத்து என்பவர், தம் தொழிலின் நிமித்தம், குனோங் சீரோ, கல்லுமலைஅடிவாரத்தில் நடமாடிக் கொண்டிருக்கும்போது, "இங்கே வா, இங்கே வா" என்று யாரோ அழைப்பதுபோன்ற குரல் கேட்டு, திகைப்படைந்து நிற்கையில், மீண்டும் அதே போன்ற குரலொலி மலைப்பகுதியிலிருந்து வருவதைக் கண்டு மேலும் திகைப்படைந்து, தம்முடைய முதலாளியாகிய திரு. பாரிட் முனிசாமி உடையார் அவர்களிடம் போய் தகவலறிவித்தார். முதலில் அசட்டை செய்திட்ட திரு. முனிசாமி உடையார் அதனைக் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவராய்த் தம்முடைய தொழிலாளார்கள் பலருடன் மலைப் பகுதியை ஆராய்ந்து அலசிப் பார்க்கத் தொடங்கினார். அப்போது, கும்மென்ற இருட்டுடன் கூடிய குகை தென்பட்டது. தீப்பந்தங்களை தயாரித்துக்கொண்டு, உள்ளே ஊடுருவிச்சென்று பார்த்தார்கள். கமகம என்று சாம்பிராணி, கற்பூரம், ஊதுபத்தி வாசனைகள் சேர்ந்து மணக்க அனைவரும் தங்களை அறியாமலேயே பக்தி வசப்பட்டு, மிக்க பயபக்தியுடன் மேற்கொண்டும் அங்குள்ள இரகசியத்தைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள். அப்போது திருமுருகன் சாயல் போன்ற அமைப்பு ஒன்றினை கல்லிலே கண்டு அதிசயித்தனர். அதனைத் தொடர்ந்து அக்குகை தூய்மை படுத்தப்பட்டு, திருமுருகன் குடிக்கொண்டுள்ள இடமாகக் கருதப்பட்டு, வழிபாட்டிற்குரிய ஒன்றாக மாற்றி அமைக்கப்பெற்றது. இதனைத் தொடார்ந்து, கல்லுமலைக் குகையில், அருள்மிகு சுப்பிரமணியர் கோயில், குனோங் சீரோவில், 1889-ம் ஆண்டில் அமைந்தது.
இணைப்பு
ஈப்போ, கல்லுமலை, குனோங் சீரோவில் அமைந்துள்ள, கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் குகாலயம் மக்களின் வணக்கத்துக்குரிய இடமாக மாற்றி அமைக்கப்பட்டவுடன், ஈப்போ, சுங்கைப்பாரி வழியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்துக்கும், கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் குகாலயத்துக்கும் தொடர்பு ஏற்படலாயிற்று. இரு ஆலயங்களையும் பராமரிக்கும் பொறுப்பு, திரு. வி. செங்கல்வராயன் நாயுடு (மேசனார்) அவர்களையே சார்ந்ததாயிற்று. அதுமுதல், தைப்பூசக் காவடி காணிக்கைகள் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலிருந்து, கல்லுமலை, அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலுக்குக் கொண்டுபோய் செலுத்தும்படியான நடைமுறை ஏற்பட்டது.
அரசு ஆணை
1926-ம் ஆண்டில் நடைபெற்ற தைப்பூச உற்சவத்தின்போது, குனோங் சிரோ சரிவில் இருந்தபெரும் பாறை ஒன்று உடைந்து விழுந்ததில், திரு. அங்கமுத்து, திரு, இராமன் ஆகிய இருஅர்ச்சகர்கள் மரணமடைந்தனர். இவ்வுயிர் இழப்பையும் விபத்தையும் கருத்தில் கொண்டு, அரசாங்கம் குகாலயத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி ஆணையிட்டு, குணொங் சிரோ பகுதி மக்கள் நடமாட்டத்துக்கு ஆபத்தான இடம் எனவும் ஆணையிட்டது. அரசு ஆணையைத் தட்ட முடியாமல், அந்த ஆணைக்கு இணங்க வேண்டியதாயிற்று. அரசினர் ஆலயத்தை மாற்றியமைக்க, பழைய அறுப்புக் கொட்டகை (பாலிம்) அமைந்துள்ள இடத்தில் நிலம் வழங்கினர்.திரு. வி. செங்கல்வராயன் நாயுடு (மேசனார்) அந்த இடத்தில் ஆலயத்தை மாற்றி அமைக்க இசையாமல், இப்போதுள்ள இடத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தை அமைத்தார்.
புதிய திருக்கோயில்
1930-ம் ஆண்டுவரை குகாலயமாக விளங்கிய கல்லுமலை கந்தன் ஆலயம் 1932-ம் ஆண்டில்சாந்துக் கலவையால் சிற்ப வேலைப்பாடுகளுடையை கர்ப்பக் கோபுரத்துடனும் தகரத்தாலான கூரையுடன் கூடிய மண்டபத்துடனும் அமைக்கப்பெற்றது. 1932-ம் ஆண்டு இறுதியில் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடைபெற்றது. இந்த அமைப்பினைத் தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு பராமரிப்பு, செம்மையாக்குதல் வேலைகள் நடைபெற்று வந்தன என்றாலும், பெருமளவிலான மாற்றங்கள் எதனையும் செயலாற்ற இயலாமல் இருந்தது. ஆனாலும், தைப்பூச உற்சவம் மிக ஆடம்பரமான வகையிலும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. கல்லுமலை கந்தப்பெருமான் இந்திய இந்துக்கள் அல்லாத பிற என மக்களையும் தம்முடைய அருள் வளத்தால் ஈர்த்துக்கொண்டு, காவடி முதலிய காணிக்கைகளை மனதார, பக்தி சிரத்தையுடன் செலுத்தும் பக்தர்களாக ஆட்கொண்டார்.
தமிழ் உயர் நிலைப்பள்ளி
1954-ம் ஆண்டு கல்லுமலைக் கோயிலை அடுத்து, ரிங்கிட் 15,000 செலவில் மண்டபம் ஒன்று எழுப்பப் பெற்றது. தமிழ் உயர்நிலைப் பள்ளி ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற உள் நோக்குடன் இம்மண்டபம் சுமார் 150 மாணவர்கள் படிக்கத் தக்கதாகக் கட்டப்பெற்றது. எனினும் அரசாங்கத்தின் ஆமோதிப்பு கிடைக்காத காரணத்தால் அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தமிழ் இடைநிலைப் பள்ளியோ அல்லது உயர்நிலைப் பள்ளியோ நடத்த அனுமதிக்காத காரணத்தாலும் உயர்நிலைப் பள்ளித் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மேற்படி மண்டபம் தைப்பூசக் காலங்களில், பக்தர்கள், மழை, வெய்யில் முதலிய சிரமங்களுக்கு ஆளாகாமல், அழகுற அமர்ந்து ஐயரின் அருளமுதை வயிறார உண்டு மகிழும் மண்டபமாக விளங்கிற்று. தமிழ் உயர்நிலைப் பள்ளி மண்டபமாக உருவாவதற்கு, ஈப்போ, ஜாலான் பெண்டஹாரா, மஞ்சள் புத்தூர் ஆயிர வைசிய சமூகத்தினர் வெள்ளி 7,500 நன்கொடை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த மண்டபம் ஆண்டுக்கொரு முறை தைப்பூசத்தன்று சாப்பாட்டிற்கு மட்டுமல்லாது, ஒரு பயனுள்ள மண்டபமாக அமைக்கவேண்டுமென்றநோக்கத்தில் ஆலய செயலவையினர் கருதினர். இதையறிந்து ஆண்டுதோறும் தைப்பூசத்தன்றுஅன்னதானமளிக்கும், ஈப்போ, மஞ்சள்புத்தூர் ஆயிர வைசிய சமூகத்தினர், திருமண மண்டபமாக்கமுன் வந்தனர், சபா செயலவையினரின் சம்மதத்துடன், மண்டபத்தை அகலப்படுத்தி, திருமண மண்டபமாகவும், அதையொட்டி சாப்பாட்டு மண்டபமும், சமையல் கட்டும் கட்டி, 1970-ம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பெற்றது. இன்று அந்த மண்டபம் திருமணங்கள், சமயப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பயன்படுகின்றது. இந்த விஸ்தாரிப்புச் செயலவையும் ஆயிர வைசிய சமூகத்தினரே ஏற்றுக்கொண்டது போற்றுதற்குரியது.
திருமதில் திருப்பணி
1968-ம் ஆண்டுவரை, கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் கம்பிவேலி உடையதாக இருந்தது. சாதாரண காலங்களிலும், சிறப்பு விழாக் காலங்களிலும், திருவிழாக் காலங்களிலும் அத்தனை பாதுகாப்பு இல்லாததாக இருந்த குறைபாடு, 1969-ம் ஆண்டில் வெள்ளி 34,000 செலவில் சுற்றுத் திருமதில் எழுப்பப்பட்டு குறை களையப்பட்டது. அத்துடன் சிற்ப வேலைகளுடன் கூடிய நுழைவாயில் வளைவு ரிங்கிட் 6,500 செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இவை யாவும் சபாவினரால் நிறைவு செய்யப்பட்டது.
திருக்கோயில் திருப்பணி
திருமதிலும், நுழை வாயில் கோபுர வளைவும் அமைந்தவுடன், ஆலய நிர்வாகிகள், ஆக்கமும், ஊக்கமும் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டும், விரிவாக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டது. 22-1-1969-ல் நுழை வாயில் கோபுர வளைவு திறப்பு விழாவிற்கு வருகை தந்து, திறந்து வைத்து பொதுப்பணி, அஞ்சல், தந்தித் துறை அமைச்சர் மாண்புமிகு துன் வீ. தி. சம்பந்தன் அவர்களிடம் திட்டத்தையும், அரசிடமிருந்து நிதியுதவி செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையையும் சமர்பிக்க அமைச்சர் அவர்களும் நிதியுதவி பெற்றுத் தருவதாக வாக்களித்துச் சென்றார்கள். கல்லுமலை அருள்மிகு கந்தப்பெருமான் திருவருளால் நிர்வாக சபையினரின் கனவு நனவாயிற்று. அமைச்சர் அவர்கள் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத் திருப்பணியைத் தொடங்கி வைத்து, கால்கோல் விழாவைச் சிறப்பிக்க18-4-1970-ல் வந்தபோது மத்திய அரசினரின் நிதியுதவியாக வெள்ளி 25,000 க்கான காசோலையை வழங்கி, கால்கோள் விழாவினை நடத்தி வைத்தார்கள். ஆலய நிர்வாகிகள் பல்லாண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த ரிங்கிட் 15,000 த்துடன் பொது மக்களின் நன்கொடையான (வாக்களிக்கப்பட்ட தொகை உட்பட) வெ. 15,000 மும் சேர்ந்து வெள்ளி 55,000த்தை முதலாகக் கொண்டு ஆலயக் கட்டடத் திருப்பணி துவங்கப்பட்டது. ஒர் இலட்சம் வெள்ளி திட்டத்தில் கட்டப் பெறுகின்ற, ஒரே நேரத்தில் 2000 மக்களுக்கும் மேலாக நின்றும், அமர்ந்தும் இறை வணக்கம் செய்யத்தக்கதான அமைப்பைக் கொண்டதும், மிகப் பெரிய இரதக் காவடிக்ளும் கூட நேரே சந்நிதானம் வரை சென்று செலுத்தும் படியான அமைப்பைக் கொண்டதுமாக அமைந்தது. 3-12-1970-ம் ஆண்டு சிறப்பாக குடமுழுக்கு மாண்புமிகு அமைச்சர்கள் துன் வீ. தி. சம்பந்தன் அவர்கள், டான்ஸ்ரீ வே. மாணிக்கவாசகம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
மணிக்கூடு
ஈப்போ, தனவணிகர் திரு. கா. காத்தமுத்து கோனார் அவர்கள், தம் செலவினால் மணிக்கூடு ஒன்றினை அமைத்து அதற்கு பெரியதொரு மணியையும் தமிழகத்திலிருந்து தருவித்து கொடுத்தார், அதை இப்பொழுது சபாவினர் உயரத்தைக் குறைத்துக் கட்டி திருத்தம் செய்துள்ளனர்.
விநாயகர் சந்நிதி
ஈப்போவில் வழக்கறிஞர் தொழில் புரிந்த, திரு. ப. தர்மானந்தா அவர்களின் ஒரு பகுதி பொருள்உதவியுடன், அருள்மிகு விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டது. சபா செயலவையினர் அதை பல திருத்தங்களுடன் மேல் கோபுரத்தை மாற்றி, விநாயகர் சிலைகள் மூன்று பக்கங்களிலும் அமைத்து, உள்ளே கருங்கல் பதித்து, பளிங்கு கருங்கல் பீடத்தின் மேல் ஆனை முகத்தானை அமர்த்தியுள்ளனர்.
அம்மன் சந்நிதி
கல்லுமலை, கந்தபிரான் பேரில் பெரிதும் பயபக்தி கொண்ட, ஈப்போவில் வசித்த, திருமதி புஷ்பலில்லி மாணிக்கம் அம்மாள் தமது பொருட் செலவில் அருள்மிகு அம்மன் சந்நிதியை அமைக்க உதவினார், ஆனால் அந்த சந்நிதியை ஆலய நிர்வாகத்தார், அதன் உள்ளே கருங்கல் பதித்து, மேல் கோபுரத்தைபுதுப்பித்து, சிலைகள் அமைத்து திருத்தம் செய்துள்ளனர் சபா செலவில்.
வண்ண மின் விளக்குகள்
திருவாளர்கள் எம். கலைராஜா, எம். சிங்காரம், எம். இராமநாதன் சகோதரர்கள், தங்கள் செலவில் மின் விளக்குகள் அனைத்தையும் அலங்கரிக்க உதவினார்கள். ஆனால் புதுப்பிக்கப்பட்டுவரும் ஆலயத்தில் அத்தனை விளக்குகளையும் சபாவினரே தங்கள் செலவில் அலங்கரித்துள்ளனர்.
|