| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
தொகுத்தவர் - இந்துசமய நற்பணியாளர் அரு. இராமநாதன் செட்டியார், ஜோகூர்பாரு
தோகைமேல் உலவுங் கந்தன் சுடர்க்கரத் திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே, மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே என்பது மணிவாசகப் பெருமானின் அருள்வாக்காகும். மெய்ஞ்ஞானமாகிய சிவஞானத்தைப் பெற்றுய மனிதப் பிறவிகள் தஞ்சமடைகின்ற இடங்களே கோயில்களாகும். முன்பு உலகமுழுவதும் முடியாட்சி சூழ்திருந்தபோது மக்களுக்காக மன்னர்களே கோயில்களை அமைத்து வழிப்படச்செய்தனர். காலம் செல்லச் செல்ல முடியாட்சிகள் மறைந்து குடியாட்சிகள் தோன்றியபின் மக்களுக்காக மக்களே கோயில்களை அமைத்துக்கொள்ளும் நிலை ஏற்படலாயிற்று. அப்பழக்கம் தங்கள் தாய்நாடுகளில் மட்டுமல்லாது குடியேறிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படியாக இந்துப்பெருமக்கள் குடியேறிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படியாக இந்துப் பெருமக்கள் குடியேறிய நாடாகிய மலேசியத் திருநாட்டின் தென்மாநிலமாம் ஜோகூர் மாநிலத்தின் தலைநகராகிய ஜோகூர்பாரு மாநகரில் 1917-ஆம் ஆண்டு (கலியுகம் 5018 - நள, பிங்கள ஆண்டுகள்) திருக்கோயில் ஒன்றை அமைக்கும் நற்போற்றைப் பெற்றிருந்த உயர்திரு ரா. வெ. பெருமாள் நாயுடு அவர்கள் தனக்குச் சொந்தமான ஜாலான் கோயில் நிலத்தில் அருள்மிகு முருகப் பெருமானின் அம்சமாக வேல் ஒன்றைப் பிரதிஷ்டைச் செய்து முருகன் கோயில் ஒன்றை ஏற்படுத்தினார்.
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' ஆன்றோர் வாக்கிற்கிணங்க நாடித்தேடி வணங்கிச் செல்லும் பக்தர்களுடன் தானும் வணங்கிக்கொண்டு கோயிலைத் தன்சொந்தப் பொருப்பிலேயே சிறிது சிறிதாக வளர்ச்சி அடையச்செய்துள்ளார். இப்படிச் சிரிய அளவிலான கோயில் சுமார் 22 ஆண்டுகள் அருளாளர் திரு. ரா. வெ. பெருமாள் நாயுடுவின் நேரடிப்பார்வையில் இருந்தபின் 8-6-1939-ஆம் நாள் திரு. வெ முத்துக்கிருஷ்ண பிள்ளை, திரு.கந்தையா மேசனார், திரு. முத்தையா (P.W.D.), அரசாங்க அச்சாபீஸ் திரு. தங்கவேல், திரு. ஜி. முனுசாமி (P.W.D.) ஆகிய ஐவர் அடங்கிய பஞ்சாயாத்தாரிடம் இடைக்காலமாக கோயிலை ஒப்படைத்துவிட்டு, மலாக்காவிற்குக் குடிபெயர்ந்து விட்டார். பஞ்சாயத்தார் குழு 1940-ஆம் ஆண்டின் முற்பகுதியில் பொதுக்கோயிலாக்கி மக்களின் பிரதிநிதிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 29-4-1940-இல் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கோயில் ஸ்தாபகர் திரு. ரா. வெ. பெருமாள் நாயுடு அவர்களைத் தர்மகர்த்தாவகவும், திரு. க. தென. வேணுகோபால் நாயுடு அவர்களைச் சபாநாயகராகவும் திரு. வே. முத்துகிருஷ்ண பிள்ளை கௌ. செயலாளராகவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தர்மர்த்தா திரு. ரா. வெ. பெருமாள் நாயுடு அவர்களிடம் கோயில் அமைந்துள்ள 7 லாட் நிலத்தையும் கோயிலையும் பொதுமக்களுக்கே தர்மமாக எழுதிக்கொடுக்கும்படி பொதுமக்கள் வேண்ட, திரு. நாயுடு அவர்களும் அதனை முழுமனதாக ஏற்றுக்கொண்டாலும் ஏனோ அவர் 1943-ஆம் ஆண்டு சிவபதவியடைந்த காலம் வரையில் அவ்வேண்டுகோளை நிறைவேற்றவில்லை.
பொதுமக்களின் ஆதரவினால் ஓரளவு வளர்ச்சி பெற்று மூலவரும், பரிவார மூர்த்திகளும் சிலைகளாக மாற்றப்பட்டு உபயங்களும், விழாக்களும் சிறிதளவுகளில் நடைப்பெற ஆரம்பித்தன. 1940-ஆம் ஆண்டுகளில் இறுதியிலும் 1950-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் கோயிலில் பராமரிப்பிலும் வளர்ச்சியிலும் அன்றைய பொதுமராமத்து இலாகாவின் (PWD) இந்து அன்பர்கள் பெரிதும் துணைபுரிந்திருக்கிறார்கள். கோயிலில் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோகூர் பாரு பட்டணத்தின் பிரபல வணிகர் திரு. கே. ஆர். நடேசன் செட்டியர் அவர்களால் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு விநாயகர், தண்டாயுதபாணி, நவக்ரகங்கள், இடும்பன் ஆகிய கற்சிலைகளை உபயம் செய்தார். ஜோகூர் பாரு பட்டணத்தின் மற்றொரு வணிகரான திரு. பால. மு. இராமசாமி அவர்களால் வழங்கப்பட்ட மயில்வாகனம், பலிபீடச் சிலைகள் முதலியன பிரதிஷ்டைச் செய்து 2.2.1958-ஆம் நாள் (விளம்பி ஆண்டு) திருக்குட நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) சிறப்பாக நடைபெற்றது.
கோயில் பொதுமக்களின் நன்கொடைகளாவும் காணிக்கைகளாலும் நாளும் வளர்ச்சி பெற்று, மூலவர் தண்டாயுதபாணிக்கும், கற்பக விநாயகருக்கும் வெள்ளி அங்கிகளும், மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் தங்க நகைகளுக்கும், எழுந்தருளும் ஐம்பொன் விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியர் சிலைகளுடன் பொலிவுறக் தொடங்கியது. கற்பக விநாயகர் உற்சவச்சிலை ஜோகூர் பாரு திரு. கே. ஆறுமுகத்தார் அவர்களால் வழங்கப்பட்டது.
திரு. கே. ஆர். நடேசன் செட்டியார் சுமார் 17 ஆண்டுகள் இக்கோயிலின் தலைவராக இருந்து கோயிலின் வளார்ச்சிக்குப் பெரும்பணியாற்றி உள்ளார். அவரின் தலைமைத்துவத்திலேதான் மிகச்சாதாரணக் கட்டடமாக இருந்து கோயில் முழுவதும் திருத்தியமைக்கப்பட்டு இப்போதுள்ள அமைப்பையும் மகாமண்டபத்தையும் பெற்றது. (பழைய கோயில்) மின்விளக்குகள் யாவையும் மாற்றி பரவலாக ஒளிகிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுவாமிகளுக்கு வெள்ளி அங்கிகள் செய்யப்பட்டன. மேலும் உபயங்களும் தைப்பூசத்திருவிழாவும் பெரிய அளவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்வாறாக அண்ணாரின் தலைமைத்துவத்தில் கோயில் பலவகையிலும் வளர்ச்சி கண்டது. கோயிலும் மிகப்பிரபலமாகக் பிரகாசிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் 1970-ஆம் ஆண்டு வாக்கில் கோயில் நிர்வாகத்தின்மேல் அதிருப்திகொண்ட சிலரின் எதிர்ப்புகளால் கோயில் நிர்வாகத்தை 1972-ஆம் ஆண்டு அரசாங்கப் பொதுச்சொத்து பராமரிப்பு இலாகா, நிர்வாகாத்தைத் தானெடுத்துக்கொண்டு, திரு. அ. முத்துக்குமார், திரு. அடைக்கலம் செட்டியார், திரு. நாயர், திரு. செல்வதுரை, திரு. குருசாமி பிள்ளை ஆகியவர்களைக்கொண்ட "இடைக்கால பராமரிப்புக் குழுவினரிடம்" கோயில் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தது.
இடைக்காலப் பராமரிப்புக் குழுவினரில் பலர் அவ்வப்போது வேலை மாற்றலாகி வேறு இடங்களுக்குச் சென்றதாலும், இயற்கை எய்தியதாலும் உடனுக்குடன் தக்க வேறு நபர்களுடன் குழு தொடர்ந்து செயலாற்றி வந்துள்ளது. திரு. முத்துக்குமார், திரு. பால. மு. இராமசாமி, திரு. வெ. இராம. வெ. இராமநாதன் செட்டியார், திரு. டி. இரத்தினம், திரு. கோவிந்தசாமி ஆகியோரின் அதாவது இடைக்காலப் பராமரிப்புக் குழுவின் பெருமுயற்சியாலும், பொதுமக்களின் நன்கொடைகளாலும் ஒத்துழைப்பாலும் கோயில் மகாமண்டம் முழுமையாகவும் விரிவாகவும் திருத்தி அமைக்கப்பட்டும் கோயிலின் எல்லா மின் இணைப்புகளும் மாற்றியமைக்கப்பட்டது. மேலும் சீரமைப்புகளுடன் கோயில் புதுப்பொலிவுடன் விளங்கலாயிற்று.
இப்படியாகக் கோயில் பொதுநிர்வாகத்தில் இருந்த அரசாங்கத்தின் நல்லாதரவுடனும் இடைக்காலப் பராமரிப்புக் குழுவினரின் திறமையான, நேர்மையான செயல்களாலும் கோயில் நன்முறையில் நடைப்பெற்று வந்தது எனலாம்.
கோயில் நிலத்தைப் பெயர் மாற்றம் செய்துதரும்படி பொதுச்சொத்து பராமரிப்பு இலாகா அதிகாரியிடம் இடைக்கால நிர்வாகக்குழு வேண்ட அதற்கு நிலத்தின் உரிமையாளார் திரு. சுப்பராயலு நாயுடு திரு. ரா. வே. பெருமாள் நாயுடு அவர்களின் மகன் அவர்களையும் இடைக்கால நிர்வாகக் குழுவில் இடம்பெறச்செய்து, அவர் மூலமாகவே மேற்படி கோரிக்கையை எழுப்பும்படி ஆலோசனைக் கூறப்பட்டது. அதன்படி திரு. நாயுடுவையும் இணைத்து, கோயில் நிலத்தைப் பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கும், கோயிலைப் பதிவு செய்து மீண்டும் பொதுமக்களின் நிர்வாகத்திற்குக் கொண்டு வருவதற்கும் அதிகாரிகளுடனும் திரு. நாயுடுவிடமும் வேண்ட, அவரும் கோயில் இடத்தின் பெயர் மாற்றம் எதனையும் செய்யாமல் குறிப்பிட்ட நிலத்தில் கோயில் தொடர்ந்து இயங்கிவர யாதொரு ஆட்சேபனையும் இல்லை என்ற உறுதி மொழி ஒன்றை மட்டும் எழுதிக்கொண்டார். அந்நிலையில் வேறெதனையும் செய்ய முடியாது இடைக்கால பராமரிப்புக்குழு அக்கடிதத்தை ஏற்றுக் கொண்டு, சான்றோர்கள் பலரின் நன்முயற்சியுடன் கோயில் பதிவுக்கும் பொதுமக்களின் நிர்வாகத்திற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டுச் செயல்படத் தொடங்கியது.
இடைக்காலக் குழுவில் இடம் பெற்றிருந்தோரில் திரு. பால. மு. இராமசாமி சிவபதவியடைந்ததும் மற்றவர்களில் திரு. அ. முத்துகுமாரைத் தவிர மற்றவர்கள் வேரு இடங்களுக்கு மாற்றலாகி சென்றதால் கோயிலில் மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்கும் காலம்வரை திரு. அ. முத்துக்குமார் அவர்கள் மட்டும் தன்னந்தனியாக திறமையுடன் செயலாற்றி கோயில் நிர்வாகப்பொறுப்பைப் பொதுமக்கள் நிர்வாகத்திடம் நன்முறையில் ஒப்படைத்தார். மேலும் கோயில் மீண்டும் பொதுநிர்வாகத்திற்கு வந்தபின் அண்ணாரது ஆயுட்காலம் வரை மூத்த தர்மகர்த்தவாகத் தொடர்ந்து சேவையாற்றி வந்துள்ளதை நன்றியுடன் நினைவுகூர்வோம்.
கடந்த 6-12-1977 - இல் அமைக்கப்பட்ட "இடைக்கலப் பராமரிப்புக்குழு" திரு. பெ. சுப்பராயலு நாயுடு அவர்களைத் தலைவராகவும், திரு. இரா.பத்மநாபன் அவர்களைச் செயலாளராகவும், திரு. பால. மு. இரா. சுப்பிரமணியம் பொருளாளராகவும் கொண்டு செயல்படத் தொடங்கியது.
இக்காலக் கட்டங்களில் "பக்திச் சைதான்ய பிரம்மச்சாரி" தவத்திரு. பத்பநாபன் (இன்றைய தவத்திரு. சுவாமிஜி பக்தகுகனந்தா மகராஜ் அவர்களும்) தெய்வீக வாழ்க்கைச் சங்கமும், இந்து இளைஞர் இயக்கத்தினரும் கோயிலுக்குப் பல அரிய சேவைகளைச் செய்துள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது. தவத்திரு பத்மநாபன் அவர்களின் முயற்சியால் அமரர் திரு. பால. மு. இராமசாமி அவர்களின் குடும்பத்தினராலும், ஆசிரியர் திரு. அண்ணாமலை அவர்களாலும் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட அருள்மிகு தேவி கருமாரியம்மன் ஐம்பொன் சிலையை, ஆகம முறைப்படி 9-9-1980-ஆம் நாள் ஸ்தாபனம் செய்து கேரளத்தின் சித்தாந்த பூஷணம் நம்பூதிரி அவர்களால் கும்பாபிஷேகம் செய்துவைக்கப்பட்டது. அரசாங்கத்தின் இடைக்காலப் பராமரிப்புக் குழுவின் நிர்வாகத்தில ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் இருந்தபின் பெரியோர்களின் நன்முயற்சியாலும் அருள்மிகு தண்டாயுதபாணியின் திருவருளாலும் கோவில் மீண்டும் பொதுமக்களின் நிர்வாகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த 3-11-1979-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் அன்றைய இளம் தளபதி டாக்டர் என். ஞானபாஸ்கரன் அவர்களைச் தலைவராகவும் தவத்திரு இரா. பத்மநாபன் அவர்களைச் செயலாளராகவும் திரு பால. மு.இரா. சுப்பிரமணியம் அவர்களைப் பொருளாளராகவும் மற்றும் செயற்குழுவினரையும் தேர்ந்தெடுத்ததுடன் தர்மகர்த்தாக்களாக திரு. அ. முத்துகுமாரு, திரு. செ. பரஞ்சோதி திரு. அ. அரவிந், திரு. ஆர். என். ராஜூ, திரு. ஜெ. கணபதி ஆகிய ஐவரையும் தேர்ந்தெடுத்தனர்.
மூன்று தலைமுறையாக கோயில் தலைமைப் பொறுப்பேற்று தங்களால் இயன்ற நற்சேவையை வழங்கிய அமரர் திரு. க. ரெங்கசாமி செட்டியார் (1943 - 1944) அதன் பின்னர் அவர்தம் குமாரர் அமரர் திரு. கே. ஆர். நடேசன் செட்டியர் (1955 - 1972), இந்த வரிசையி அண்ணாரின் மகன் இன்றைய கோயில் மேலாண்மைக்குழு தலைவரான டாக்டர் என். ஞானபாஸ்கரன் தலைமைப் பொறுப்பேற்றக்கொண்டவுன் கோயில் நிர்வாகம் முன்னிலும் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது. உபயங்கள் பல்கிப்பெருகின. கோயில் திருவிழா வரலாற்றுச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. பாரம்பரியக் கலை, பண்பாடு, மொழியினைக்காக்கும் நடவடிகைகள் மேற்கொள்ளபட்டன. இத்தருணத்தில் கோயில் பக்கத்தில் தெய்வீக வாழ்கைச் சங்கத்திற்குச் சொந்தமான காலிமனை ஒன்றிருந்து. இம்மனையை கோயிலின் தேவைக்காக வங்கிவிட முடிவெடுக்கப்பட்டது. அதிட்டத்திற்குத் தெய்வீக வாழ்க்கைச் சங்கமும் உடன்படவே, 1980-ஆம் ஆண்டு மேற்கூறப்பட்டுள்ள நிலம் வாங்கப்பட்டது.
கோயிலில் நடைபெரும் தைப்பூசம் போன்ற திருவிழா நாட்களிலும் மற்ற விழாக்களிலும் மக்கள் அமர்வதற்கோ, அன்னதானம் முதலியன நடைபெறுவதற்கோ மண்டபம் இல்லாமல் இருப்பதை உணர்ந்து, 1982, 1983, 1984-ஆம் ஆண்டுகளில் அமரர் திரு. வே. நடராச ஆசாரி, திரு. பால. மு. இரா. குமார், திரு. அரு. இராமநாதன் செட்டியார் ஆகியவர்களைக் கொண்ட தைப்பூசத் துணைக்குழு (இக்குழுவில் இன்றைய செயலாளர் திரு. ஆர். எம். அமிர்தலிங்கம் பொருளாளராக இருந்து பணியாற்றினார்). அன்னதானக் கொட்டகை (கூடம்) ஒன்றைக் தற்காலிகமாக அமைக்க முயற்சி மேற்கொண்டு கனிசமான தொகையைச் சேகரித்து வழங்கியது. இக்குழுவினரே இரண்டு நாள் தைப்பூசத் திருவிழாவை மூன்று நாளாக்கி முதல் நாள் கொடியேற்றத்துடன் ருத்ராபிஷேகத்துடன் ஆரம்பித்து வைத்தனர். கொட்டகை அமைப்பதைக் காட்டிலும் எளிமையான திருமண மண்டபத்தை அமைக்கலாம் என்று நிர்வாகம் முடிவெடுத்தது. தற்காலிகத் திருமண மண்டபத்தைத் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்திடமிருந்து பெற்ற நிலத்தில் அமைக்க ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை - அதாவது தேவையான அளவுடன், உத்தேச வரைபடம் வரைந்து அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறும் பொறுப்பை, திரு. கே. பாலகிருஷ்ணன் (பி.யூ.பி.) அவர்களிடமும் துணையாக திரு. அரு. இராமநாதன் செட்டியாரையும் கோயில் நிர்வாகம் நியமித்தது. அவர்களின் முயற்சியுடனும் கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் திருமண மண்டப வேலை, 21-03-1983-ஆம் நாள் (துந்துபி ஆண்டு பங்குனி மாதம் 7-ஆம் நாள்) பாரம்பரிய முறையில் திரு. கோ. சுப்பிரமணிய ஆசாரியரால் தச்சுசெய்ததும், மூத்த தர்மகர்த்தா திரு. அ. முத்துக்குமார் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டும் மண்டப வேலை தொடங்கப்பட்டது. திருமண மண்டபச் சிறப்பு மலர் வெளியீட்டின் மூலமாகத் திருமண மண்டபத்தின் கட்டுமாணச் செலவு பெருமளவு ஈடுகட்டப்பட்டது. மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டதும் 23-06-1984-ஆம் நாள் (இரத்தாட்சி ஆண்டு, ஆனிமாதம் 9-ஆம் நாள் ம.இ.கா.வின் தேசியத் துணைத்தலைவரும், ஊராட்சி, வீடமைப்புத்துறை துணை அமைச்சருமான மாண்புமிகு டத்தோ சி. சுப்பிரமணியம் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்து.
1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோயிலில் பல உபயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் பூஜை, கன்னிப் பெண்களுக்கான சுகாசினிப் பிரார்த்தனையுடன் கூடிய ஆடி வெள்ளி உபயங்கள், விஜயதசமி, அதாவது நவராத்திரியின் பத்தாம் நாள் நோன்பு, கார்த்திகைச் சோமவாரம் போன்றவையும், தமிழ்நாட்டுக் கோயில் ஒன்றுக்காக சிறப்பு வழிபாடு செய்யபட்டதும் குறிப்பிடத்தக்கவை. ஆடி வெள்ளி உபயத்தில் மாதர்கள் பெருமளவில் பங்குகொண்டதும், மக்கள் வெள்ளம் கோயிலை ஸ்தம்பிக்கச் செய்ததும், ஆடி வெள்ளி உபயத்தில் மலேசியாவின் தென் மாநிலங்களில் முதன் முறையாக நவசக்தி விழா, பதினான்கு சிவாச்சாரியர்கள் பங்குபெற மிகப்பெறிய அளவில் நடத்தப்பட்டது. நவராத்திரி விழா ஒன்பது நாட்களுடன் கொண்டாடப்பட்டுவந்ததைப் பத்தாம் நாள் விஜயதசமியில் அம்பாள் அம்பு போடுவதையும் தொடங்கி, அந்நிகழ்ச்சியை ஜோகூர்பாரு இந்து டாக்சி ஒட்டுனர்கள் மிகப்பெரிய உபயமாக நடத்தி வந்தார்கள். அதைப்போல கார்த்திகைச் சோமவாரம் இவ்வட்டாரத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு இன்றும் இவ்விழா தொடர்கின்றது. இவ்வாறு பல்வேறு உபயங்களால் கோயில் பெறுமை பெற்றதில் மிகவும் அதிசயிக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்றும் நிகழ்ந்தது.
தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவையாற்றுக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் திருநெய்த்தானம். இவ்வூரில் அருள்மிகு இளங்கோவையம்மன் கோயில் ஒன்றுள்ளது. இந்த அம்பாளைச் குலதெய்வமாகக்கொண்ட அமரர் திரு. சிதம்பரம் செட்டியார் என்பவர் அருள்மிகு தேவி கருமாரியம்மனுக்குச் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்து அம்பாளுக்குச் சங்காபிஷேகத்துடன் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து உபயத்தைச் சிறப்பாக நடத்தினார்கள். தமிழ்நாட்டுக் கோயிலுக்காக மலேசியாவில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இங்கு மட்டுமே என்று கருதுகிறோம்.
இப்படியாகக் கோயில் தலைவர் டாக்டர் என். ஞானபாஸ்கரன் அவர்கள் தலைமையில் பெரிய அளவில் வளர்ச்சிபெறத் தொடங்கியது. இக்காலக்கட்டதில் தற்போதைய கோயிலின் பழமையான நிலையையும் பக்தர்களுக்குப் போதுமான வசதியின்மையும் கருத்தில்கொண்டு புதிய கோயிலை உருவாக்கும் எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் உருவாயிற்று. கோயில் மேலான்மைக் குழுவினரும் 1991-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கோயில் கட்டும் திருப்பணியைத் தொடங்க முடிவெடுத்தது. கோவிலுக்கும் திருமண மண்டபத்திற்கும் அடுத்தாற்போலுள்ள நிலம் முதலில் வாங்கப்பட்டது. கடந்த 1991-இல் கோயிலில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஜோகூர் பாரு நகரில் வாழும் இந்து மாதர்கள் குறிப்பிட்ட தொகையை கோயில் வளாகத்திலேயே திரட்டி, கோயில் கட்டட நிதியைத் தொடங்கி வைத்தார்கள் இவர்கள் திரட்டி அளித்த இந்த நிதியே முதல் நிதியாகும் என்பது குறிப்பிடதக்கது. 1993-ஆம் ஆண்டு, கோயில் தர்மகர்த்தா திரு. ஆர். என். இராஜூ அவர்கள் தலைமையில் புதிய கோயில் கட்டட நிதிக்குழு அதன் பணியினை உடனடியாகத் தொடங்கியது. அதாவது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலமாக சிறுகச் சிறுக நிதி வளத்தைத் திரட்டத் தொடங்கியது. இந்நிலையில் 1994-ஆம் ஆண்டு கோயில் கட்டட தொழிநுட்ப நிர்வாகக்குழு (டெக்னிக்கல் கமிட்டி) ஒய்வுபெற்ற என்ஜினியர் திரு. கே. தாசன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டது.
கோயில் கட்டிட நிதிக்குழு தலைவர் திரு. ஆர். என். இராஜு அவர்கள் கட்டிட திருப்பணிக்கான நிதியைச் சேர்க்க பலவகையிலும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இம்முயற்சிகள் சில ஆண்டுகள் தொடர்ந்தன. விடாமுயற்சியுடனும் ஆர்வத்துடனும் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட வேலைகள் மெதுநடை போடத்தொடங்கியது. இந்நிலையில் எதிர்பாரா வண்ணம் திரு. ஆர். என். இராஜூ அவர்கள் 1993-இல் மறைவுற்றார். அதன்பிறகு திரு. கே. தாசன் அவர்கள் புதிய கட்டட நிதிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே புதிய கட்டட திருப்பணிக்கு நிதி ஆதாரங்களைத் திரட்ட கோயில் தலைவர் டாக்டர் என். ஞானபாஸ்கரன் அவர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு, தன் அயரா உழைப்பால் நிதியைக் திரட்டத்தொடங்கினார். நிதியும் சிறுகச் சிறுக சேரத்தொடங்கியது. இம்முயற்சியில் கட்டட நிதிக்குழு தலைவர் திரு. கே. தாசன் அவர்களும் நிதிநிலையைப் பெருக்க முழு ஆதரவையும் அளித்தார். இத்தருணத்தில் ஜோகூர் பாரு 'ஈடன் காடன்' ஹோட்டலில் 21-02-1998-இல் நடைப்பெற்ற மாபெரும் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியின் மூலம் கட்டிட நிதிக்கு ஏறக்குறைய ஆறு லட்சம் வெள்ளி திரட்டப்பட்டது. இவ்விருந்து நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற தலைமைவகித்து பேருதவி புரிந்தவர் ஆர்தர் எண்டர்சன், திரு. பி. பாலகிருஷ்ணன் அவர்களாவர். இவ்விருந்து நிகழ்ச்சியில்தான் இளம் தொழிலதிபர் டத்தோ கே. கெதீஸ்வரன் அவர்கள் கட்டட நிதிக்குத் தனது பங்காக ஐந்து இலட்சம் வெள்ளி வழங்க வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விருந்து நிகழ்ச்சியின் மூலம் பதினொரு இலட்சம் வெள்ளி திரட்டப்பட்டது. மலேசியாவில் இது ஒரு பெரும் சாதனையாகும்.
கடந்த 24-3-1993-இல் ஜோகூர் பாரு, தொண்டர்மணி திரு. சுக. சுப்ரமணியம் அவர்கள் தொகுத்த "திருமுருகன் பாமாலை" என்ற நூல் வெளியீட்டின் மூலமாக கட்டிட நிதிக்கு ஏறக்குறைய இருபத்தேழாயிரம் வெள்ளி திரட்டப்பட்டது.
கடந்த 4-11-1994 வரையில் கோயில் சார்பாக நடைப்பெற்ற 1008 கலச பூஜை ஒன்றைக் திருமதி சீதாலட்சுமி செல்லையா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அந்நிகழ்ச்சியின் மூலமாகவும் கட்டிட நிதி சேர்க்கப்பட்டது.
இக்கோயில் கட்டிட நிதிக்கு ஜோகூர் மாநில அரசும் வெள்ளி ஒரு லட்சம் நன்கொடை வழங்கியுள்ளமைக்கு இத்தருணத்தில் நன்றி கூறுகிறோம். நமது திருக்கோயிலின் அழைப்பை ஏற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வருகைதந்து பெருமை சேர்த்திருக்கும் நமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ம. இ. காவின் தேசியத் துணைத்தலைவரும் உள்நாட்டு வணிகம், பயனீட்டுத்துறை அமைச்சருமாகிய மாண்புமிகு டத்தோ சி. சுப்பிரமணியம் அவர்கள் கடந்த 15-3-1998-ஆம் சாஸ்திரப் பூர்வமாகவும், பாரம்பரிய முறையிலும் தச்சு செய்து அடிக்கல் நாட்டியும் புதிய கோயில் கட்டிட திருப்பணி வேலைகளைத் தொடங்கிவைத்தார்.
எம்பெருமான் அருள்மிகு தண்டாயுதபாணி நல்லருளால் முதலில் கட்டிட அமைப்பு வேலைகளும், பின்னர் திருப்பணி தொடங்கி நடைப்பெற்று வந்தன. தலைமை ஸ்தபதியாக மதுரை திரு. எஸ். டி. எம். தண்ணீர் மலையம் அவர்கள் நியமிக்கப்பட்டார். கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்பதற்கொப்ப ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளும் தனித்தனி விமானங்களுடன் தலைமேவும் எழில் நிறைந்த சிற்பங்களுடன் புதிய கோயிலின் திருப்பணி வேலைகளும் செவ்வனே நிறைவேறியுள்ளது.
காலமாற்றத்திற்கு ஏற்ப சுமார் ஒருநூற்றாண்டுக் காலம் அருள்பாலித்து வந்த இடத்திலிருந்து இடம் மாறி, புத்தகம் புதிய இடத்திற்குக் குடிபெயர்ந்திருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் பழைய இடத்தில் யாகசாலை அமைப்பதற்காகத் தற்காலிகமாக 16-9-1999-ஆம் நாள் (பிரமாதி ஆண்டு, ஆவணி மாதம் 30-ஆம் நாள்) "பாலஸ்தாபனம்" செய்யப்பட்டதை நினைவுகூர்வதுடன், அருள்மிகு தண்டாயுதபாணி திருவருளால் கோயில் திருப்பணி நிறைவுபெற்று நாளது 15-11-1999-ஆம் நாள் (பிரமாதி ஆண்டு, ஐப்பசி மாதம் 29-ஆம் நாள்) திங்கட்கிழமை காலை மணி 10.32 முதல் 11.24-க்குள் நடைப்பெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா (மகாகும்பாபிஷேகம்) சீரும் சிறப்புடன் நடைபெற்றதை நினந்து எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டி மகிழ்கிறோம்.
நன்றியுடன் நினைவுகூர்வோம்.
நிறைவாக தனது இளம் வயதில் திருக்கோயில் ஒன்றின் திருப்பணியை ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்திருக்கும் பெரும்பாக்கியத்தைப் பெற்றிருக்கும் திருக்கோயிலின் மூன்றாம் தலைமுறை தலைவர் டாக்டர் என். ஞானபாஸ்கரன் அவர்களின் சீரிய முயற்சிகளுக்கும் ஏற்ற பொறுப்பைச் செவ்வனே செய்து முடித்திருக்கும் கட்டிட நிதிக்குழு திருப்பணிக்குழு தலைவர் திரு. கே. தாசன் அவர்களின் அயராத ஆற்றலும், பெரும் நன்கொடை அளித்து திருக்கோயில் வரலாற்றில் தன்பெயரையும் முத்தாகப் பதித்துக்கொண்ட டத்தோ கே. கெதீஸ்வரன் அவர்களுக்கும், அனைத்து நன்கொடையாளார்களுக்கும், ஆலயத்திற்கு வற்றாத ஆதரவை வாரி வழங்கி வரும் பக்தபெருமக்களுக்கும், கோயில் வளர்ச்சியில் அக்கரைக்கொண்டு சேவையாற்றிவரும் கோயில் மேலாண்மைக் குழுவினரும் கோயிலின் கட்டிட நிதிகுழுவினருக்கும் கோயிலில் தொடர்ந்து உபயங்களைச் செய்து வரும் உபயக்காரர்களுக்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா குழுவினருக்கும் இந்தப் பெருமகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்ட நன்னாளில், அருள்மிகு தண்டாயுதபாணியின் திருவருள் நிறைந்திருக்க நெஞ்சம் நிறைந்து பிரார்த்திப்போமாக. அனைவருக்கும் மங்களம் உண்டாகட்டும்.
என் கடன் பணிசெய்து கிடப்பதே! முருகா தன் கடன் அடியேனையும் தாங்குதல்!! முருகா ! முருகா ! முருகா !
மங்களம்
கும்பாபிஷேகம் நடைபெற்ற விவரம்:-
1வது கும்பாபிஷேகம் 1917 (கலியுகம் 5018 நள பிங்கள ஆண்டு) 2-வது கும்பாபிஷேகம் 1946 ஜூலை மாதம் (நவக்கிரகத்திற்கு மட்டும்) 3-வது கும்பாபிஷேகம் 2.2.1958 (விளம்பி ஆண்டு) கருமாரியம்மன் கும்பாபிஷேகம் 9.9.1980 நவக்கிரக கும்பாபிஷேகம் 8.9.1995 (யுவ ஆண்டு ஆவணி மாதம் 23) பாலஸ்தாபனக் கும்பாபிஷேகம் 16.9.1999 (பிரமாதி ஆண்டு ஆவணி மாதம் 30) புதிய கோயிலின் முதலாம் கும்பாபிஷேகம் 15.11.1999 (பிரமாதி ஆண்டு ஐப்பசி மாதம் 29-ஆம் நாள் திங்கட்கிழமை காலை மணி 10.32 முதல் 11.24 க்குள்
குறிப்பு: 1991-ஆம் ஆண்டு முதல் இன்றைய வரையிலான வரலாற்றுக் குறிப்புகளை முறைப்படுத்தியும் விடுப்பட்ட விபரங்களைச் சேர்த்தும் எழுதியவர் இந்தச் சிறப்பு மலரின் தொகுப்பாசிரியர் தொண்டர்மணி திரு சுக. சுப்ரமணியம்.
கோயில் வரலாற்றுக் தொகுப்பிற்கான ஆதாரங்கள்: 1939 முதல்-ஆம் ஆண்டு வரையிலும் 1954, 1955, 1957 முதல் 1972 வரையிலான கோயில் கூட்டக் குறிப்புகள் (மினிட்). கோயிலின் பழைய நிகழ்ச்சிகளின் வெளியீடுகள், ஆண்டு அறிக்கைகள், உபயதிருவிழா பத்திரிகைகள், இடைக்கால, தற்காலப் பராமரிப்புக் குழுக்களின் கோப்புகள் (பைல்கள்). இக்கோயிலோடு சம்பந்தப்பட்ட வயது முதிர்ந்த பெரியோர்களின் வாய்மொழித் தகவல்கள்.
மங்களம் - மங்களம் - மங்களம்.
|