| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் எங்கெல்லாம் தொழில் செய்ய வந்தார்களோ அங்கெல்லாம் வேல்முருகன் திருவடிகளின் துணையினால் வாழ்வும் வளமும் பெற்றார்கள். தமிழ் நாட்டிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பாய்மரக் கப்பல்மூலம் கடல் கடந்து மலையகம் வந்தபொழுது "திருத்தணி முருகன் வழித்துணை வருவான்" என்று முருகனிடம் சரணாகதியடைந்து தொழில் செய்வதற்காக முதல்பணமும் கப்பலில் கொண்டுவந்தார்கள்.
அவ்வண்ணமே பேராக் மாநிலத்தில் தொழில் செய்ய மையமாக அமைந்துள்ள ஈப்போ நகர் பொருத்தமாக இருந்தது. ஈயமண் வளம், நகரின் மையமான அமைப்பு இவை நகரத்தார்களை ஈர்த்தது. 1900-ம் ஆண்டுக்கு முன்னதாகவே நகராத்தார்கள் ஈப்போவில் தொழில் செய்து வந்திருக்கின்றனர். முருகனுக்கு ஆலயமும் அமைத்தனர்.
ஆலயத் தோற்றம்
1904-ம் ஆண்டு முருகனுக்கு ஆலயம் எழுப்ப முயற்சி நடந்தது. நிலம் 1905-ம் ஆண்டு இப்பொழுதுள்ள லகட் சாலையில் வாங்கப்பெற்றது. 1907-ல் கட்டிட வேலைகள், சிற்பவேலைகள், கோபுர வேலைகள் செயலாக்கம் பெற்று 1908-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆலயம் முறைப்படி அபிஷேக பூசைகளுடன் இயங்கி வருகிறது.
கும்பாபிஷேகங்கள்
இதுவரை இந்த ஆலயத்தில் மூன்று முறை கும்பாபிஷேகங்கள் நடைபெற்று இருக்கின்றன. 1908 ஏப்ரலில் முதலாவது கும்பாபிஷேகத்திற்கு பிறகு 1931-ம் வருஷம் ஏப்ரல் மாதம் 29-ம் தேதிக்கு சரியான பிரசோற்பத்தி ஆண்டு சித்திரைத் திங்கள் 16-ம் தேதி - இரண்டாவது கும்பாபிஷேகமும் 1965 செப்டம்பர் மாதம் 1-ம் தேதிக்கு சரியான விசுவாசு ஆண்டு ஆவணித் திங்கள் 16-ம் தேதி - மூன்றாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றன.
பாலஸ்தாபனமும் கும்பாபிஷேகமும்
நான்காவது கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னேற்பாடாக 1988-ல் ஜனவரி மாதம் 23-ம் தேதிக்கு சரியான பிரபவ வருஷம் தை மாதம் 9-ம் தேதி பாலஸ்தாபனம் செய்து கோயில் புதுப்பிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப் பெற்று பூர்த்தியாகி கும்பாபிஷேகமும் 20-8-1989-ம் சுக்கில வருடம் ஆவணி மாதம் 4-ம் தேதி நடைபெற்றது.
கலைக்கோயில்
கோயில் நல்ல தொழில் மையமான இடத்தில் மிகப் பழமையான ஆங்கிலோ சைனீஸ் ஸ்கூல் எதிரில் இடம் பெற்றிருக்கிறது. அத்துடன் செட்டியார்கள் பெயரால் கலாசாலை ஒன்று இருக்கிறது என்றால் அது ஈப்போவிலேயே உள்ளது. நமது கோயிலுக்கு மிகப் பக்கத்தில் நகரத்தார்கள் மனமுவந்து அளித்த நிலம் நிதி இவற்றினால் கட்டப்பெற்ற கலைக்கோயிலாக செட்டியார் கலாசாலை அமைந்துள்ளது. முருகன் இருக்குமிடமெங்கும் கலைகளும் முத்தமிழும் இருக்கும் என்பதை இது குறிக்கிறது.
ஆலய அமைப்பு
ஆலயத்தின் தோற்றம் மிகவும் அழகு வாய்ந்தது. நுழைவாயிலுக்குப் பிறகு இரண்டு விசாலமான திண்ணைகள் உள்ளன. அதை அடுத்து அர்த்த மண்டபம், மண்டபத்தைச் சுற்றி மதிற்சுவர்கள். நடுவிலே அழகான கர்ப்பக்ரகம். கர்ப்பக்ரகத்தில் இடப்பக்கம் விநாயகர் அமர்ந்துள்ளார். நடுவில் அழகிய தண்டாயுதபாணி நிறை உருவில் காட்சிதந்து கோயிலையும் குவலயத்தையும் ஆட்சி செய்கிறார். அரியும் சிவனும் ஒன்றென்ற பழமொழிக்கேற்ப ஸ்ரீ ராமரின் திருவுருவப்படமும் கர்ப்பக்கிரகத்தில் உள்ளது. கர்ப்பக்கிரகத்திற்கு வெளியில் நடராசர் திருவுருவமுள்ள படம் உள்ளது. கர்ப்பக்கிரகத்தின் பின்புறச் சுவரில் ஆறுமுகம் கொண்ட அழகிய திருவுருவப் படமும் வலமும் இடமும் வள்ளியும் தெய்வானையும் வரையப்பெற்று காட்சி தருகின்றார்கள். முருகனுக்கு எதிரில் மயில், பலிபீடமும் இடும்பனாகிய வேலும் அமைக்கப்பெற்றுள்ளன. ஆலயத்தின் பின்புறம் ஒர் அரச மரமும் அதனடியில் விநாயகர் திருவுருவமும் உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இக்கோயில் தேவாமிர்தமாகத் திகழ்ந்து வருகின்றது.
பூசைகள்
இவ்வாலயத்தில் பூசைகள் ஆகமமுறைப்படி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பண்டாரங்கள், பிராமண அர்ச்சகர்கள் சேவை செய்து வருகின்றனர். தினமும் நான்கு கால பூசைகள் உண்டு. காலை பூசை, உச்சிக்கால பூசை, சாயங்காலப் பூசை, அர்த்தயாம பூசை முறையே காலை 7.30, பகல் 12.00, மாலை 6.30, இரவு 8.30, மணியளவில் நடைபெற்று வருகின்றன. தினமும் காலைப் பூசை, மாலைப் பூசைக்கு முன்னதாக அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. மேளம், தவில் கலைஞர்கள் எல்லாப் பூசைகளிலும் அபிஷேகங்களிலும் பக்தியிசை முழங்கி வருகின்றார்கள்.
திருவிழாக்கள்இங்கு நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் சிறப்புடையன. வைகாசி விசாக திருநாளில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுவந்து தரிசனம் செய்வார்கள். அன்று சிறப்பான அபிஷேகங்கள், சோடனை, மகேசுவர பூசை, அன்னதானம், சுவாமி அழகிய தேரில் திருவீதியுலா நடைபெறுகின்றன. சுவாமி நகர்வலம் வந்து சேர்க்கை சேரும் பொழுது கட்டியம் கூறி மரியாதை செய்வது மரபு. திருக்கார்த்திகை பூசை, திருவெம்பாவை வழிபாடு, ஆனி திருமஞ்சனம், தைப்பொங்கல். ஆகிய சிறப்பு வழிபாடுகள் கொண்டாடப் பெறுகின்றன. ஒவ்வொரு திங்களும், வெள்ளியும், கார்த்திகையன்றும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரங்கள் உண்டு.
நிர்வாகம்
இதன் நிர்வாகம் நகரத்தார்கள் நடத்திவரும் தொழில்கள் இடம் பெற்றுள்ள கிட்டங்கிகளில் உள்ள அனைத்து நகரத்தார்களையும் சார்ந்தது. தலைவர் என்னும் பதவி நகரத்தார்களில் வயது மூத்தவர்கள் யாரானாலும் உரியதாகும். நிர்வாகத்தை கிட்டங்கிகள் மாறி மாறி ஒவ்வொரு கிட்டங்கிக்காரரும் காரியக்காரர்களாக இருந்து பணியாற்றி வருகிறார்கள் ஈப்போவில் தற்சமயம் 8 கிட்டங்கிகள் உள்ளன.
|