| ஆலயத்தைப் பற்றி About the temple
ஸ்ரீ கார்த்திகேயன் ஆலயத்தின் வரலாறு மற்றும் விளக்கம்
இடம்
ஸ்ரீ கார்த்திகேயன் ஆலயம் புந்தோங் தீகா வட்டாரத்தில் உள்ள மலையில் அமைந்துள்ளது. இவ்விடமானது ஈப்போவில் புந்தோங் நகர் மற்றும் லுமுட் நெடுஞ்சாலை எதிரே அமைந்துள்ளது.
தொடக்க நிலை
70-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் (1977 - 1979) மலேசிய இந்தியர்கள் சிலர் புந்தோங் வட்டாரத்தில் வசித்து வந்தனர். இவர்கள் மலையின் உச்சியில் உள்ள நீர் வீழ்ச்சியின் அருகே அமைந்துள்ள தற்போதய கோவிலில், முருகப் பெருமானின் படத்தை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். இவர்கள் கார்த்திகை திருநாளை ஆலயத்தின் சிறப்பு நாளாக தேர்ந்தெடுத்தனர். இந்நாள் முருகப்பெருமானுக்கு முக்கியத் திருநாளாகும். காரணம் அன்றுதான் கார்த்திகைப் பெண்கள் சரவணப்பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளை, ஒன்று சேர்த்து ஆறுமுகம் என்று பெயரிட்டு அன்னை பார்வதியிடம் கொடுத்த நாளாகும். மலைத் தளங்கள் முருகன் குடி கொண்டிருக்கும் இடமென்று இந்துக்களின் நம்பிக்கையாகும்.
ஸ்ரீ கார்த்திகேயன் ஆலயத்தின் ஸ்தாபனம்
தாமான் சிலிபின் மக்கள் இவ்விடத்தை ஆக்கரமத்தவுடனும், குடியிருப்பு பகுதிகள் தோன்றவே, புந்தோங் தீகா உருவெடுத்தது. இவர்கள் பழைய பக்தர்களோடு இணைந்து நீர் வீழ்ச்சியின் அருகே வழிபாட்டை நடத்தினர். பிறகு 1980-ல் ஒரு செயற்குழுவை அமைத்து ஒரு கோவிலை நிருவ முடிவெடுத்து குடிசை அமைத்தனர். இக்குடிசையே ஸ்ரீ கார்த்திகேயன் ஆலயமாக உருவெடுத்தது.
தற்போதைய ஸ்ரீ கார்த்திகேயன் ஆலயத்தின் உருவாக்கம்
1981-ஆம் ஆண்டு கார்த்திகேயனுக்கு புதிய ஆலயம் ஒன்றை நிருவ இவ்வாலய செயற்குழு உருப்பினர்கள் நிதி உதவியை தேடினர். மூன்று வருடத்தில் ஆலயத்தின் முக்கியப் பகுதிகள் மற்றும் பார்வதி தெய்வங்களின் கற்சிலைகள் பெற்றன. சிலைகளை பிரதிஷ்டை செய்வதோடு, முதல் கும்பாபிஷேகத்தை செப்டம்பர் 1984-ல் நடத்தியது. ஆலய வழிபாடு, சிலோன் பிராமண அர்ச்சகரால் நடத்தப்பட்டது.
முதல் கார்த்திகேயன் ஊர்வலம்
1984-ஆம் ஆண்டு காத்திகேயனின் பக்தர்கள் கார்த்திகை திருநாளை பெரிய அளவில் கொண்டாடியதோடு, கார்த்திகேயனை ஊர்வலமாக கொண்டு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் ஊர்வலத்திற்கு தேவையான உலோகச் சிலை இல்லை. எனவே சிலிபினில் இருக்கும் ஒரு பக்தனின் உதவியோடு பெரிய முருகப் பெருமானின் படத்தைப் பெற்றனர். இப்படம் டாக்டர் R. முத்தையாவின் பிரத்தியேக பிரார்த்தனைக்குப் பயன்பட்டு வந்த படமாகும். இப்படத்தைக் கொண்டு டிசம்பர் 6, 1984ல் கார்த்திகேயனின் முதல் ஊர்வலத்தை நடத்தினர். முருகனின் படத்தைப் பல்லக்கில் வைத்து பக்தர்கள் தூக்கிச் சென்றனர். இவ்வூர்வலம் 1985-லும் நடந்தேறியது.
பக்தரின் கனவில் ஸ்ரீ கார்த்திகேயனின் தோற்றம்
1985-ல் நேர்மையான கடவுள் பக்தர் ஒருவர் கனவில் தோன்றினார். அவரிடம் இக்கோயிலுக்கான சிலையை ஏற்பாடு செய்யும்படி கூறினார். 1986-ல் இந்த பஞ்சாபி இஞ்சினியர் மாணவர் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினார். இச்சேய்தி காட்டுத்தீப்போல் எங்கும் பரவி பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
கார்த்திகேயன் ஆலயத்திற்கான புதிய இரதம்
கார்த்திகேயன் தெய்வத்திற்கு இரத ஊர்வலம் ஏற்படுத்த பக்தகோடிகள் விருப்பங்கொண்டு நிர்வாக உறுப்பினர்கள் ஸ்ரீ நடராஜர் ஆலய உறுப்பினர்களை நாடினர். 1986 முதல் 1988 வரை நடராஜர் ஆலயத்திலிருந்து இரதம் இரவல் பெற்று தீபத்தன்று ஊர்வலம் விடப்பட்டது. பின்னர் லகாட் வழி கருணை மனங்கொண்ட கொடைநெஞ்சர் திரு. K. குமாரசாமி குடும்பத்தினரின் நன்கொடையாலும் முயற்ச்சியாலும் 1989-ஆம் ஆண்டு கார்த்திகேயன் ஆலயத்திற்கு புதிய இரதம் வாங்கப்பட்டது. இன்றுவரை இந்த இரதமே பாயன்பாட்டில் உள்ளது.
கார்த்திகேயன் ஆலயப் பதிவு
1991-ஆம் ஆண்டு முதல் இவ்வாலயம் முறையே பதிவு செய்யப்பட்டு ஸ்ரீ கார்த்திகேயன் ஆலயம் என்ற பெயரில் வழிபாட்டு தலமாக விளங்குகிறது.
தற்போதைய வளர்ச்சி
1999-ஆம் ஆண்டு நாகக்கன்னி மற்றும் காளியம்மன் சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் கும்பாபிஷேகம் அர்ச்சகர் குழுவினரால் நடைபெற்றது. பின்னர் 2000-ஆம் ஆண்டு முனீஸ்வரர் சிலை ஸ்தாபிக்கப்பட்டது.
பூஜைகளும் திருவிழாக்களும்
தற்போது, தினந்தோறும் மாலை 4 மணியளவில் மூன்று பிரதான தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெறுகிறது. தற்சமயம் இவ்வட்டாரத்தைச் சார்ந்த இந்திரன் என்ற மாணவரால் பூஜைகள் நடத்தப்படுகின்றன. திருவிழா காலங்களில் மற்ற ஆலயங்களிலிருந்து ஆர்ச்சகர்கள் வரவழைக்கப்படுகின்றனர். 11 முதல் 14 நாட்கள் நடைபெரும் இவ்விழாவின் மஹோற்சவம் கார்த்திகை தீபமாகும். மறுநாள் பக்தகோடிகளுக்கு அருள்பாலிக்க முருகப் பெருமானின் இரத ஊர்வலம் நடைபெறும். மற்ற திருவிழாக்களின் விபரங்களை ஆலய திருவிழாப் பட்டியலின் மூலம் அறியலாம்.
எதிர்கால திட்டங்கள்
கோயில் பின்புறத்தில் அமைந்துள்ள மலை பாங்கான நிலப்பரப்பில் 3 ஏக்கர் நிலம் பக்தர்களால் கோரப்பட்டுள்ளது. இந்நிலம் காட்டுவள இலாக்காவிற்கு சொந்தமானதாகும். இதற்கிடையில் கோயில் கட்டிட நிர்மாணிப்பு பணிகள் இந்து ஆகம முறைப்படி நடைபெறும்.
கார்த்திகேயன் ஆலயத்தின் புனிதத்தன்மை
இவ்வாலயத்தின் சூழல் தெய்வீகத்தன்மையுடனும் கார்த்திகேயனின் அருள் நிறைந்துள்ளது. சமய சம்பந்தமான விஷயங்களில் பக்தர்களைக் கவரும் ஆலயமாக விளங்குகிறது.
அ) சுவாமி சிவபாலயோகி அவர்கள் 2002-ஆம் ஆண்டில் 2 முறை இவ்வாலயத்திற்கு வருகை புரிந்து, அக்னி ஹோத்திரம் ஓமம் வளர்த்து பக்தர்களுக்கு அருள் புரிந்துள்ளார்.
ஆ) மார்ச் 2003-ஆம் ஆண்டில் ஆன்மீக முறையில் நோய்களை குணப்பட்டுத்தும் நிபுணரான சுவாமி ஆத்தான் அவர்கள் இவ்வாலயத்திற்கு வருகை அளித்து ஆத்மீக பூஜை மற்றும் குணப்படுத்தும் பயிற்சிகளையும் வழங்கினார்.
|