| ஆலயத்தைப் பற்றி About the temple
பத்தாங் பெர்ஜுந்தை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய வரலாறு
ஸ்தாபிதம்
ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப் பாங்கான இடத்தில் இருமருங்கும் ஒரு சில கடைகளைக் கொண்ட மிகச் சிறிய பட்டணமாக பத்தாங் பெர்ஜுந்தை பட்டணம் அமைந்தது. அக்காலத்தில் ரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் அதிகமானோர் வசித்தனராதலால் அங்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வந்ததுடன் வருடாந்தர விழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தன. அப்போது பத்தாங் பெர்ஜுந்தை பட்டணத்தில் ஒரு சில வியாபாரிகளும் சொந்த தொழில் புரிபவர்களும், மராமத்து தொழிலாளர்களுமே வசித்து வந்தனர். அவர்களின் ஆலய வழிபாட்டுக்கென பட்டணத்துக்கு அருகாமையில் உள்ள அரசு நிலத்தில் ஆகமவிதிப்படி அமையாத ஒரு சிறிய ஆலயத்தை அமைத்து அவ்வாலாயத்திற்கு தமிழர்களின் தனிப் பெருங் கடவுளாகிய ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் எனப் பெயரிட்டு வழிபாடு செய்து வந்தனர்.
புதுப்பித்தல்
ஜப்பானியர் காலத்தில் இப்பட்டணத்திற்கு அருகிலுள்ள சுங்கை சிலாங்கூர் பாலம் தகர்க்கப்பட்டதால், அப்பாலத்தின் பொருட்களைப் கொண்டு வந்து பொதுமக்களால் மேலும் இவ்வாலயம் விஸ்தாரிக்கப்பட்டது.
குடமுழுக்கு
அதன் பின் 1954-ம் ஆண்டு வாக்கில் அமரர் உயர்திரு. தருமலிங்கம் சுவாமிகளின் முயற்சியாலும், சுற்றுப்புற தோட்டக் குமாஸ்தாக்கள் தந்த பொருட்களின் உதவியாலும் ஆலயம் மேலும் சீர்திருத்தம் செய்யப்பட்டு, ஆகம விதிப்படி மூலக்கடவுளாகிய ஸ்ரீ சுப்பிரமணியர், மற்றும் அம்பாள், விநாயகர் ஆகிய விக்ரகங்களை வைத்து 1955-ம் ஆண்டில் அமரர் உயர்திரு. தருமலிங்க சுவாமிகளின் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டது.
ஆலய நிலம்
ஆலயத்துக்கென ஒரு செயலவை நியமிக்கப்பட்டு முறைப்படி நிலத்திற்கு மனு செய்து, ஆலயத்துக்காகவும், மண்டபம் அமைக்கவும் 1960-ம் ஆண்டில் (Lot No. 685 2 roods 18.8 Poles, Lot No. 674 2 roods 2.9 Poles) இரு லாடு நிலங்கள் மாநில அரசாங்கத்தால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டு அரசு பதிவேட்டில் (கெஜட்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலயப் பதிவு
ஆலயத்துக்குச் சட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மனு செய்து பதிவதிகாரியின் ஒப்புதல் மூலம் 17-01-1966 ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் 2064. அதன்பயனாக கோலசிலாங்கூர் 2 1/2 மைலில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம், புக்கிட் ரோத்தான் பட்டணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆகியவை கணிசமான அரசு மானியங்கள் பெற்று புனருத்தாரண வேலைகள் நடைபெற்று வந்தது.
பத்தாங் பெர்ஜுந்தை புதிய ஆலயம்
புதிய ஆலயம் அமைக்க மாண்புமிகு டத்தோ எம். மகாலிங்கம் அவர்கள் 4 இலட்சம் ரிங்கிட்டை அரசு மானியமாகப் பெற்றுத்தந்ததுடன் முன்பு டான் ஸ்ரீ என்.எஸ். மணியம் அவர்கள் காலத்தில் ஏற்பாடு செய்த 35,000 ரிங்கிட்டையும் பெற்றுத்தந்தார். மலேசியாவிலேயே அதிக அரசு மான்யம் பெற்ற ஆலயம் பத்தாங் பெர்ஜுந்தை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் என்றால் அது மிகையாகாது. இப்பெருமை மாண்புமிகு டத்தோ எம். மகாலிங்கம் அவர்களையே சாரும்.
பாலஸ்தாபனம்
ஸ்ரீ மகா கணபாதி, ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆகிய மும்முர்த்திகளின் பாலஸ்தாபனம் கடந்த இரத்தாட்சி வருஷம் வைகாசி மாதம் 15-ம் நாள் ஆங்கிலம் 28-05-1984 திங்கட்கிழமை கிருஷ்ண பட்ச திரயோதசி திதியும் பரணி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தன்று காலை மணி 9.30க்கு மேல் 11.30க்குள் லக்கினத்தில் ஆலய தலைவர் திரு. மு. முனியாண்டி, AMN அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கால்கோல் விழா
உயர்திரு S.C. வடிவேலு AMN, PJK, JP (கட்டிட வரைப்படக் கலைஞர்) அவர் புதிய ஆலயத்திற்கு வரைப்படம் வரைய, தமிழகத்திலிருந்து வந்துள்ள தலைமை ஸ்தபதி உயர்திரு G. இராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு சிற்பிகள் ஆலய திருப்பணியில் ஈடுபட்டனர். 03-06-1984-ல் மாண்புமிகு டத்தோ எம். மகாலிங்கம் DPMS, JMN, JP அவர்களின் தலைமையில் கால் கோள் விழா நடைபெற்றது.
இராஜ கோபுரத்துடன் ஆலயம்
ஐந்து நிலையிலான மிகப் பெரிய இராஜ கோபுரத்துடன் சுமார் 6 இலட்சம் ரிங்கிட் செலவில் தலைமை ஸ்தபதி உயர்திரு G. இராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு சிற்பிகள் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டுனர். மேலும், சுற்றுச்சுவர்கள், பூம்பொழில், நவக்கிரக சுவாமிகள், நடைபாதைகள் ஆகியவை அமைக்கத் திட்டமிட்டு மொத்தம் பத்து இலட்சம் ரிங்கிட் செலவில் கண்கவர் புதிய ஆலயம் அமைந்தது.
ஆலய வளர்ச்சி
ஆண்டுக்கொரு முறை தேர்தல் மூலம் செயலவையினர் தேர்வு செய்யப்பட்டு, ஆலய வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். பல அன்புப் பெரியோர்கள் தொண்டாற்றியதால் அவர்கள் அனைவருக்கும் ஆலய சார்பில் நன்றி நவில்கின்றோம்.
அரசு மான்யம்
1974-ம் ஆண்டு அசம் ஜாவா தொகுதிக்கு டான் ஸ்ரீ என்.எஸ். மணியம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் சுற்றுப்புறத் தோட்ட ஆலயங்களுக்கு அரசு மான்யம் பெற்றுத் தந்தார். அதேபோல இவ்வாலயத்துக்கும் 35,000 ரிங்கிட் அரசு மான்யம் பெறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
மண்டபம்
ஆலயத்தை அடுத்து திருமண மண்டபம் அமைக்க 1979-ம் ஆண்டில் பரிசுச் சீட்டு குலுக்குக்கு ஏற்பாடு செய்து 74,000 ரிங்கிட் வசூல் செய்தோம், தற்போதைய ம.இ.கா. தேசியத் தலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் S. சாமிவேலு அவர்களை டான் ஸ்ரீ என்.எஸ். மணியம் அவர்கள் அழைத்து வந்து 10-09-1979-ல் பரிசுச் சீட்டு குலுக்கு விழாவினைத் தொடக்கி வைத்தார்.
மண்டப நிலம்
மண்டபம் அமைக்கப்படவுள்ள லாட் எண் 674-ம் நிலம் 16 அடி பள்ளத்தாக்கினைக் கொண்ட சதுப்பு நிலமாக இருந்தது. ஏறக்குறைய 10,000 லாரிகள் செம்மண்ணைக் கொட்டி நிரப்பி அந்த நிலத்தை சீரமைப்பு நிலமாக மாற்ற பல அன்பர்கள் கடுமையாக உழைத்தனர். ஆலய சார்பில் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறோம்.
மக்கட் தொகை
தோட்டங்களில் செம்பனை பயிர் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதன் விளைவாக ஆட்குறைப்பு செய்ததனால் பலர் பட்டணங்களில் குடியேறினர். மேலும் பத்தாங் பெர்ஜுந்தை பட்டணம் நவீன மயமாக்கப்பட்டதன் வழி புதிதாக ஆரம்ப இடை நிலைப் பள்ளிகள் கட்டப்பட்டன. எனவே, இந்துப் பெருமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன.
டத்தோ மகாலிங்கம் வருகையும் செயலும்
1982-ம் ஆண்டு அசம் ஜாவா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மாண்புகமிகு டத்தோ எம். மகாலிங்கம் DPMS, JMN, JP. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். சில தோட்டங்களில் இருந்து ஆட்குறைப்பு செய்து குத்தகைத் தொழிலாளர்களை நியமித்ததன் மூலம் அங்குள்ள ஆலயங்கள் நன்கு பராமரிக்கப்படாமல் விடுபட்டதைக் கண்ட டத்தோ அவர்கள் பட்டணங்களில் உள்ள ஆலயங்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டினார்.
குடமுழுக்கு
திருமுருகன் அருளால் இராஜகோபுரத்துடன் ஆலய வேலைகள் முடிவடைந்து கடந்த 10-04-1989 திங்கட்கிழமை தமிழகத்தில்லுள்ள நான்காம் அறு படையான, "சுவாமிமலை தலைமை குருக்கள்" பிரம்மஸ்ரீ சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நவீன ஆலயம்
ஆகம விடிப்படியும், நீர் புகாவண்ணம் (Water Proof) அமைக்கப்பட்டுள்ள மேல் தளமும் நவீன முறையில் வர்ண பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தளங்களும், பூவேலைப்பாடுகளும், சித்திர கலைக்கூடமும் கொண்ட சிறப்பு மிகுந்த, மலேசியாவில் உள்ள கோயில்களில் சிறந்த கோயிலாக இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு நன்னீராடு விழா
10-04-1989 திங்கட்கிழமை குடமுழுக்கு நன்னீராட்டு விழா மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது. நன்னீராட்டு விழாவிற்காக சிறப்பு வருகையாளர்களாக மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ம.இ.கா. தேசிய தலைவரும் பொதுப்பணி அமைச்சருமான பெருந்தலைவர் மாண்புமிகு டத்தோ ச. சாமிவேலு அவர்களும், இந்திய நடுவன் அரசின் பேராளரும் (தூதர்) அவர்களும் ஸ்ரீல ஸ்ரீ பாலயோகி சுவாமிகளும் பல நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் திருக்கோயில்களின் பொறுப்பாளர்களும் இந்து பெருமக்களாக ஏறக்குறைய 15,000 பேர் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் கலந்து திருமுருகனின் திருவருள் பெற்றனர். அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக உபயங்கள் நடைபெற்றன. மண்டலாபிஷேக பூர்த்தியின் போது கலசாபிஷேகம் நடைபெற்றது. இரவு இரத ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குருக்கள்
தமிழகத்தின் நான்மறை கற்ற சிவாகம பூஜையில் தேர்வு பெற்ற பிரம்ம ஸ்ரீ ஐம்புகுமார குருக்கள் 7 ஆண்டுகள் மிகச் சிறப்பாக பணியாற்றி சென்ற பின் அவரைத் தொடர்ந்து வேதாகமங்கள் கற்ற நான்மறையில் தேர்வு பெற்ற சிவ ஸ்ரீ யோகவனம் சுரேஷ் குருக்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.
இரதமும் இரதக் கொட்டகையும்
ஆலயத்திற்குச் சொந்தம் இல்லாத குறையினை நீக்க பெருமனம் கொண்ட நன்கொடையாளர்களிடம் நன்கொடை பெற்று ஈழச்சிற்பிகளைக் கொண்டு மிக அழகாக ஆகம முறைகளுக்கேற்ப புதிய இரதம் செய்யப்பட்டது. இரதத்தினை பாதுகாக்க உறுதியான இரதக் கொட்டகையும் அமைக்கப்பட்டது.
உணவுக் கூடம்
பழமையான உணவுகூடம் இடிந்து விழும் நிலையில் இருந்த போது அதற்குப் பதிலாகச் சிறந்த உறுதியான உணவுக் கூடத்தினை L&R ஹோல்டிங்ஸ் நிறுவனத்தார் அமைத்துக் கொடுத்தனர்.
பளிங்குக் கற்கள்
ஆலயத்தைச் சுற்றி அழகான பளிங்குக் கற்களை குத்தகையாளர் திரு. சொ. பெருமாள் - அவர்கள் செலவில் பதித்துக் கொடுத்தார்.
அலுவலகத் தாழ்வாரம்
அலுவலகத் தாழ்வாரத்தினை திருவள்ளுவர் நற்பணி மன்றத்தினர் அன்பளிப்பு செய்தனர்.
வசந்த மண்டபம்
ஒரு சிறந்த ஆகம விதிகளோடு அமைக்கப்பெற்ற ஆலயத்திற்கு, வசந்த மண்டபம் மிக முக்கியமாகும். அழகிய ஆகம விதிகளோடு கூடிய சிறந்த வசந்த மண்டபத்தினை L&R ஹொல்டிங்ஸ் நிறுவத்தினர் அமைத்துத் தந்தனர்.
குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா
எம்பெருமான் திருமுருகனின் அருளால் ஆலயத்திற்குப் புதிதாக வர்ணம் பூசப்பட்டு அனைத்து குடமுழுக்கு திருப்பணிகளும் பூர்த்தியாகி 27-05-2001-ல் குடமுழுக்கு நன்னீராட்டு விழா சர்வ சாதகம் தலைமை குருக்கள் சிவஸ்ரீ யோகனந்த சுரேஷ் குருக்கள் தலைமையில் நடைற்றது.
இன்பமே சூழ்க நல்லோர் வாழ்க!
|