| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
சுமார் 60 வருடங்களுக்கு முன் உருவான இவ்வாலயம் மேற்கு பகாங்கின் ரவுப்-லிப்பிஸ் நெடுஞ்சாலையின் 18-வது மைலில் அமைந்துள்ளது. முன்பு ஜெரம் புசு என்னுமிடத்தில் தங்கியிருந்த மராமத்து இலாகா ஊழியர்கள், 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற மரபிற்கேற்ப இங்கு விளக்கேற்றி ஆண்டவனை வழிபட்டு வந்தனர். சாலையை விரிவுப்படுத்தும் வேலை 18-வது மைல் அடையவே அங்குக் கிடந்த இரு பாறைகளையும் வெடித்து அப்புறப்படுத்த, வெள்ளைக்கார இஞ்சினியர் ஆணையிட்டார். விளக்கேற்றி வழிப்பட்டு வந்த இடம் வேட்டுக்குப் பலியாவதை அறிந்த மக்கள் மனம் கலங்கினர். அன்றையக் காலங்களில் வட மாநிலங்களில் இருந்து குவாந்தான் சென்று அடைய இதுவே மார்க்கமாக இருந்ததினால் சாலையை நேர்ப்படுத்தும் வேலை யார் தடுத்தும் நின்றபாடில்லை.
முதல் நாளன்று பாறையில் துவாரம் போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் துவாரம் வழியே இரத்தம் பீரிட்டு வர எல்லா ஊழியர்களும் பயந்து ஒடிவிட்டனர். சினம் கொண்ட இஞ்சினியர் மீண்டும் வேலையாட்களை அழைத்து, தாமே முன் நின்று வேலையைத் துவக்கினார். கண் மூடிக் கண் விழிக்கையில் அவருக்கு ஒரு கை உணர்வற்றுப் போய்விட்டது. பயத்தால் நடுநடுங்கி வீடு திரும்பினார்.
மறுநாள் இங்கு வந்து, தமது சக உழியர்களை அழைத்து, பாறைகளுக்கு முன்னிலையில் தவறு செய்துவிட்டதாகக் கூறி மன்னிப்பு கேட்டப்பின் கை உணர்வு பெற்றார். உடனே சாலையை நேர்படுத்தும் வேலை அன்றே கைவிடப்பட்டது. அன்று ஏற்றியத் தீபம் இன்னமும் சுடர்விட்டு எரிந்து கொண்டு, ஸ்ரீ பத்துமலை ஆண்டவர் வடிவில் நாடியோர்க்கெல்லாம் நல்லருள் ஆற்றி வருகின்றார்.
ஆலயத்திற்கு மற்றுமொரு சிறப்பு உண்டு. அதுதான் கற்பாறைக்குள் சிலை ஒன்று வளர்ந்து வருவது. எவ்வளவுக் காலமாக இதுவளர்ந்து வருகிறது என்று யாராலும் கூற இயலாவிட்டாலும் இயற்கையாக இது வளர்வதால் இதில் உயிர்ச்சக்தி இருப்பதாக பல பெரியோர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
மலாய்க்காரச் சகோதரர்களும் இவ்விரு பாறைகளையும் "பத்து காஜா" என்றழைத்து ஒருவிதச் சக்தி இருப்பதாக ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாலயம் இந்தியர்களை மட்டுமின்றி பல சீனர்களையும் கவர்ந்துள்ளது. பலர் இங்கு வந்து ஆண்டவனை தரிசித்து அருள் பெற்றுச் செல்கின்றனர். ஒரு முறை உண்டியலைத் திருடிவிட்டு மூவர் அன்று இரவெல்லாம் கண்மூடித்தனமாக ஆலயத்தைச் சுற்றி கொண்டிருந்தக் கதை இன்னமும் பலர் மறக்கவில்லை.
ஆரம்பக் காலத்தில் கோயில் மராமத்து இலாகா ஊழியர்கள் கண் காணிப்பில் இருந்து வந்தது. பகுதி நேர பூசாரிகள் ஆலய வழிபாடுகளைக் கவனித்து வந்தனர். பின் ரவுப், இந்து பரிபாலன சபாவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது. ஆலய மேம்பாட்டிற்குப் பாடுபட்டு மறைந்த சிலர் திரு. செல்லப்பா, திரு. கனகசபை, திரு. கந்தையா, திரு. மாணிக்கம், திரு. காளிமுத்து பூசாரி, இரத்தினசிங்கம், திரு, கா. பெரியசாமி, திரு. மா. மாரிமுத்து ஜே.பி., ஏ.எம்.என்., திரு. முனுசாமி மண்டூர், திரு. பெ. நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அத்துடன் ஆலய வளர்ச்சிக்கு பலவிதமான ஒத்துழைப்பு தந்தவர்களில் சிலர் குவாந்தான் திரு. எஸ். முருகன், திரு. விஸ்வநாதன், ரவுப் - திரு. எஸ். எஸ். வேலுசாமி ஏ.எம்.என்., பி.ஜே.கே., கோலாலம்பூர் - திரு. கணேசன், திரு. வி. தம்பி, திரு. இராஜாகோபால், சிரம்பான் - திரு. கந்தசாமி, தஞ்சோங் மலிம் - திரு. எம். ரெங்கையா, காராக் - திரு. ஏ. இராமசாமி, சுங்கை தெக்கால் - திரு கே. குஞ்சுப் பிள்ளை, கோலாலிப்பிஸ் - திரு. செல்லப்பா பிள்ளை, திரு. எம். சுப்பையா, திரு. கே பாலசுப்பிரமணியம், பெந்தா தோட்ட திரு. இரத்தினம் மண்டுர், திரு. ஐ. குமாரசாமி, புடு தோட்ட திரு. பழநியப்பன் மண்டூர், திரு. குப்பன்ணன் மண்டூர், பெந்தா திரு. காளிமுத்து மண்டூர் போன்றோர் சிறப்பிக்கப்படவேண்டியவர்கள்.
படிப்படியே வளர்ந்த ஆலயம், 1968-ம் ஆண்டு ரவுப் இந்து சபாவினரிடமிருந்து பிரிக்கப்பட்டு புடு தோட்ட, பெந்தா தோட்ட, பெந்தா வாழ் இந்தியர்களின் தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1971-ல் பதிவு பெற்ற நிர்வாகம் இவ்வட்டார இந்தியர்கள் அனைவரையும் அங்கத்தினர்களாக்கிப் பொதுவானதொரு சிறப்புமிக்க ஸ்தாபனமாக செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை விமர்சையாகக் கொண்டாடிவரும் வேளையில் கோபுரம் இல்லாதக் குறையை உணர்ந்த நிர்வாகம், 1975-ல் கட்டிட நிதியொன்றைத் துவக்கி, ஆலயச் செயலாளர் திரு. என். செல்வராஜ் அவர்கள் தலைமையில் உள்ளூர், வெளியூர் வசூல்களோடு பல மாநிலங்களுக்குச் சென்று நிதி திரட்டி ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
1977-ம் ஆண்டு சுகாதார துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ கே. பத்மநாபன் அவர்கள் வருகையையொட்டி ஆலயத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் பெறப்பட்டது. கட்டிடநிதித் துவங்கி பல ஆயிரம் வெள்ளி சேர்த்ததோடு மட்டுமின்றி முன்னால் பிரதமர்துறை துணைஅமைச்சர் மாண்புமிகு செனட்டர் எஸ். சுப்பிரமணியம் அவர்களின் உதவிக்கொண்டு அரசாங்க மான்யம் ,000 பெறப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் இருந்து சிற்பிகளை அழைத்து ஆலயத்தை அழகுர கட்டும், அதே வேளையில் எல்லாப் பாகங்களையும் புதுப்பித்து ஆலயத்திற்கு எல்லா சிறப்பினையும் சேர்த்துத் தந்துள்ளது இன்றைய நிர்வாகம். இன்று திரு. என். சன்முகநாதன் அவர்களின் தலைமையில் கீழ் இயங்கி வரும் இவ்வாலயம் பெந்தா தோட்ட, புடு தோட்ட பெந்தாவைச் சேர்ந்த 22 நிர்வாக உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது. திரு. கே. வெள்ளைய பண்டாரம் அவர்கள் நீண்ட நாட்களாக ஆலய அர்ச்சகராக இருந்துகொண்டு மல்லிகை மாலை கட்டுவதிலும் திறமைவாய்ந்தவராகத் திகழ்கிறார்.
அரும்பாடுபட்டு ஆலயத்தைக் கட்டி இன்று கும்பாபிஷேகம் நடக்க எல்லா வகையான ஒத்துழைப்பையும் தந்த ஏல்லாத் தரப்பினருக்கும் எனது உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொண்டு பெந்தா, ஸ்ரீ பத்துமலை ஆண்டவனை வணங்கி வாழ்த்துகிறேன்.
நன்றி! நன்றி! நன்றி!
ந. செல்வராஜ் ஏ.எம்.என்., பி.பி.என். பெந்தா, ஸ்ரீ பத்துமலை ஆண்டவர் ஆலயச் செயலாளர். 28-8-1981 |