| ஆலயத்தைப் பற்றி About the temple
கோயிலின் சுருக்கமான வரலாறு (முத்தமிழ்ச் செய்ல்வர் ரெ. இராமசாமி, அலோர்ஸ்டார்)
கோயிலின் தோற்றம்
அலோர்ஸ்டார், ஜாலான் புத்ரா, எண் 2ஏ, என்ற இடத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப் பரப்பில், அலோர்ஸ்டார் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் பிராமதீச ஆண்டில் - 1913ல் தோன்றியது.
அந்நாளில் 1903-ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் தமிழகத்திலிருந்து தகைசார்ந்த மலேசிய நாட்டுக்கு வருகை தந்த தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், கடாரம் என்னும் கவின் மிகுந்தகிட்டா மாநிலத் தலைநகரான அலோர்ஸ்டாரில், ஜாலான் புத்ரா எண் 2ஏ, என்ற நகர்மைய இடத்தில் 1913-ஆம் ஆண்டில் மேன்மை மிக்க அறிவின் சின்னமான வடிவேலை நிறுவி சிறுகோயிலாக அமைத்து அதனை அருள்மிகு தண்டாயுதபாணியாகப் பரிவுடன் பரவி வந்தார்கள். பின்னால் அதே இடத்தில் 1916-ஆம் ஆண்டில் புதிதாகச் சற்று பெரிய திருக்கோயில் கட்டி, அதில் விநாயகர், தண்டாயுதபாணி, மயில், பலிபீடம் ஆகியவற்றை அழகுக் கற்சிலைகளாக நிறுவி, இடும்பனை வேலாக அமைத்து, நடராசப் பெருமானைப் படமாக வைத்து முதல் மங்கலத் திருக்குட நீராட்டுச் செய்து அன்று முதல் சிறப்பாக வழிபாடு செய்து வந்தார்கள்.
முதல் மங்கலத் திருக்குட நீராட்டை முதல் உலக மகா யுத்தம் நிகழும் முன்பு தற்செயலாக நிகழ்த்தத் திட்டமிட்டு, தமிழகத்திலிருந்து அருள்மிகு தண்டாயுதபாணியின் கருங்கற்சிலை செய்து இங்கு வரவழைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பெற்றது. அதன்படிசெய்யப்பெற்ற அந்தக் கருங்கற் சிலை சென்னையிலிருந்து கப்பலில் ஏற்றப்பெற்று இங்கு வந்து சேருவதற்குள் மேற்படி உலக மகாயுத்தம் மூண்டதால், அந்தக் கப்பல் ஏடன் வழியாக இலண்டன் நகர் சென்று சேர்ந்து, அங்கு அச்சிலை இறக்கிவைக்கப்பெற்று சில ஆண்டுகள் அங்கு தங்கிய பின்பு, உலக மகாயுத்தம் முடிந்து சமாதானம் ஆன பிறகு அது மற்றொரு கப்பல் வழியே வந்து பின்பு அலோர்ஸ்டார் வந்து சேர்ந்ததாம். அதன் பிறகுதான் அந்தத் தண்டாயுதபாணி சிலையைப் புதிதாகக் கட்டிய கோயிலில் நிறுவி முதல் திருக்குட நீராட்டு நடைபெற்றது. இச்செய்தி அறிந்தவர்கள் அலோர்ஸ்டார் தண்டாயுதபாணியை இலண்டன் மாநகர் சென்று வந்த தண்டாயுதபாணி என்று பெருமையாகப் பேசுவார்கள்.
அன்று கட்டிய அந்தத் திருக்கோயில் பற்பல ஆண்டுகளுக்குப் பின்னால் சற்று அகலமான நிலையில் அதே இடத்தில் வேறு பெரிய கோயில் கட்டத் திட்டமிட்டு அற்புதமான அழகுச் சிலைகள் அமைந்த விமானத்துடன் கூடிய புதிய திருக்கோயில் கட்டப்பெற்று அதில் கோயில் கொண்டருளும் அருள்மிகு ஆனைமுகப் பெருமானுக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கும் சென்ற பிங்கள ஆண்டு பங்குனித் திங்கள் 2-ஆம் நாள் (15-3-1978) இரண்டாவது மங்கலப் பெருந்திருக்குட நீராட்டு நிகழ்ந்தது.
புதிய கோயிலின் அமைப்பு
புதிய திருக்கோயில் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது, கோயில் உள்பட அதில் அமைந்துள்ள மகா மண்டபம் இடையில் தூண்கள் நின்று விளங்குவது ஒரு தனிச்சிறப்பாகும். அந்த மகாமண்டபத்தின் கிழக்குப் பாகத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் கொண்டுள்ள கருவறையும், கருவறையின் முன்பு சுவாமிக்கு வலப்பக்கமாக ஆனைமுகப் பெருமான் அமர்ந்துள்ள அறை (அர்த்த மண்டபம்) அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் வலப்பக்க நடுவில் நடராசப் பெருமானின் திருவுருவப்படம் வைக்கப்பெற்றுள்ளது. சுவாமிக்கு நேரே சற்று தொலைவில் மயிலும், அதன் பின்பு பலிபீடமும் கற்சிலைகளாக அமைந்துள்ள்ன. அவற்றை அடுத்து அதே மேடையில் இடும்பனாகிய வேல் நிறுவப்பட்டுள்ளது. மகா மண்டபத்தைச் சுற்றித் திருவுலாச் சுற்றுப் பத்தி உள்ளது. சுற்றுலாப் பத்தியைச் சுற்றியுள்ள இடத்தில், அதாவது மகா மண்டபத்தின் இடப் பக்கத்தில் மடப்பள்ளியும், சாமான்கள் வைக்கும் அறைகள் இரண்டும், அதை அடுத்துப் படைப்புணவுகள் சாப்பிடும் இடமும்,கிழக்குப் பக்கத்தில் பாதுகாப்பு அறையும், திருமண மண்டபமும், வலப்பக்கத்தில் அர்ச்சகர் அறையும், அலுவலக அறைகள் இரண்டும் அமைந்துள்ளன. அந்த வலப்பக்கத்தை அடுத்துச் சிறப்பு நாள் சமையல் அறையும், நந்தவனமும் உள்ளன. கோயில் மகா மண்டபத்துக்கு வட மேற்கேயுள்ள அரசமரத்தடியில்பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. அதனை அடுத்து இரதக் கொட்டகை உள்ளது.
சிறப்பு நாட்களும் திருக்கார்த்திகை வழிபாடும்
ஆண்டுதோறும் அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகைச் சோம வாரங்கள்,திருக்கார்த்திகை, கந்தர் சஷ்டி, திருவாதிரைத் திருக்காட்சி, மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி, தைப் பொங்கல், தைப்பூசம், மாசி மாகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், திங்கள், வெள்ளிக்கிழமைகள் ஆகிய நாட்களில் சுவாமிக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இவற்றில் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் முதலிய சிறப்பு நாட்களில் மகேசுவர பூசை என்னும் சிவ வழிபாடு நடத்திப் பொது மக்களுக்கு அன்னம் வழங்கப்பெறும். திருக்கார்த்திகை அன்று பகல் மேற்படி சிவ வழிபாடு (மகேசுவர பூசை) நடத்தி மக்களுக்கு அன்னம் வழங்குவதோடு திருக்கோயிலுக்குள்ளேயே அன்று இரவு சுவாமி புறப்பாடு நிகழும். அதாவது அன்று இரவு ஆனைமுகப் பெருமானும், மயிலில் அமர்ந்துள்ள முருகப் பெருமானும், பல்வகை அணிகலன்களாலும் மலர்மாலைகளாலும் அழகு செய்யப்பெற்று, வெள்ளித் தோளுக்கினியானில் எழுந்தருளி மங்கல நாதசுவர இசை முழங்க, இறையன்பர்கள் புடை சூழ உள் கோயில் திருவுலாச் சுற்று பத்தியில் உலா வந்து சுவாமியின் திருமுன்னால் அமைந்துள்ள சொர்க்கப்பனைக் கொளுத்தியதும் அருள்மிகு முருகப் பெருமானின் திருப்புகழ் துதிகளைப்பாடி, அவனது வீரப்பெருமைகளை வீரமாகப்பேசும் கட்டியம் கூறிய பிறகு அவர்கள் இருவரும் தமது இருக்கைக்கு வந்து சேருவார்கள்.
மாசி மக விழாவுக்கு மகமை எழுதுதல்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு முக்கியப் பெருந் திருநாளாக விளங்கும் மாசி மக விழாவுக்கு முதல் ஏற்பாடாகத் தை மாதத்தில் தைப்பூசத்திற்கு முன்னதாகவே ஒரு நல்ல நாள் இரவு கோவில் உறுப்பினர்களாகவுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோயில் திருமண மண்டபத்தில் ஒன்று கூடி அவரவர்கள் தொழில் செய்யும் கடை அல்லது நிறுவனத்துக்குள்ள கடை முதல் இருப்பு இலாபம் மேம்பணம் ஆகியவற்றை அடிப்படையாகவைத்து ரிங்கிட் ஆயிரத்துக்கு ரிங்கிட் முக்கால் வீதம் மகமை (அறக்கொடை) எழுதுவார்கள். அந்த மகமைப் பணத்தை கொண்டு விழா நடத்தும் (நடப்பு) அறங்காவலரிடம் அன்றே கொடுத்துவிடுவார்கள்.
மாசி மகத் திருநாள்
திருக்கோயிலின் ஆண்டுத் திருநாளான மாசி மகத் திருநாளுக்கு முதல் நாள் அருள்மிகு ஆனைமுகப் பெருமானுக்கும், அருள்தரு தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு நீராட்டுச் செய்வதோடு, 108 சங்கு நீராட்டு வழிபாடு ஆகியவை நிகழும். மாசி மகத்தன்று காலை சிறப்பு நீராட்டு, சிறப்பு வழிபாடுகளுடன் மாபெரும் மாகேசுவர பூசை என்னும் சிவ வழிபாடு நடத்தி அன்று பகல் பொழுது மக்களுக்குப் பேரளவில் அன்னம் வழங்கப்படும். கோலாகலமாகக் கொண்டாடப்பெறும் மாசி மகத் திருநாளன்று காலை முதல் பகல் வரை, அருள்மிகு தண்டாயுதபாணிக்கு வேண்டுதல் செய்து கொண்டோர் பல்வகைக் காவடிகள் ஏந்திவந்து பக்திப் பாடல்கள் பாடி அவர்களது காணிக்கைகளைச் செலுத்துவார்கள். அன்று இரவு எழுந்தருளச்செய்யும் சுவாமிகளாகிய ஆனைமுகப் பெருமானையும், அழகு மயிலில் மேல் அமர்ந்துள்ள முருகப் பெருமானையும் அணிகலன்களாலும் மலர் மாலைகளிலும் அழகு செய்து, அப்படியே அழகிய வெள்ளி ரதம் போன்ற கேடயத்தில் எழுந்தருளச்செய்து, மின் விளக்கு ஒளி அழகுடன் மங்கல நாதசுவர இன்னிசை முழங்க, இறையன்பர்கள் நிறையாகச் சூழ்ந்துவர நகரின் முக்கிய திருவீதிகளில் வலம் வந்து அப்பால் ஜாலான் புத்ரா திருக்கோயிலுக்கு திரும்பி வந்த சேரும். திருக்கோயிலிலிருந்து சுவாமி முதலில் வெள்ளி இரதத்துக்குப் புறப்படும் போது, சுவாமி திருவுலா வந்து திருக்கோயிலுக்குத் திரும்பி வந்து சேரும் போதும் சுவாமியின் புகழ்களைக் கூறும் பாடலைப்பாடி வீர கட்டியம் கூறப்படும். சுவாமி வெள்ளி இரதத்துக்கு எழுந்தருளும் முன்பு நகரத்தார்களது சிறப்பு அழைப்பின் பேரில் மேன்மை மிக்க கிட்டா மாநில மன்னர், அரசியார், இளவரசர், இளவரசியார், மந்திரி ஆகியோர் திருக்கோயிலுக்குச் சிறப்பு வருகை தந்து சுவாமியின் அழகைக் கண்டு செல்வார்கள். அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
நாள் வழிபாடும் சமயத் தொண்டும்
திருக்கோயிலில் நாள்தோரும் காலை, உச்சிவேளை, மாலை, இரவு (அரை யாமம்) ஆகிய நான்குகால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுதம் அதிகாலையில் சுவாமிக்குத் திருப்பள்ளி எழுச்சி வழிபாடு நடைபெற்று வருகிறது. அப்போது திரளான இறையன்பர்கள் வந்து முறையாக மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சித் திருப்பாடல்களைப் பாராயணம் செய்து வழிபடுவார்கள்.
திருக்கோயிலில் தலைமைப் பண்டாரம், அடுத்தாள் பண்டாரம், தோப்புக்காரன், காவலாளி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
அலோர்ஸ்டாருக்கு அவ்வப்போது வருகை தரும் தமிழ் அறிஞர்களைக் கொண்டு கோயிலில் சமய இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்தப் பெறுகின்றன.
கோயில் வருமானங்கள்
திருக்கோயிலைச் சேர்ந்த வீடுகள் போன்ற அசையாச் சொத்துக்களின் வழி வாடகை வருமானமும், அலோர்ஸ்டார் வாழ் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால் ஆண்டு தோறும் திருக்கோயிலுக்குத் தந்துவருகின்ற அறக்கொடை போன்ற வருமானங்களும் உள்ளன. பொது மக்கள் வழி உண்டியல் வருமானமும் உண்டு.
அறங்காவலர் வாரிய அமைப்பு
மேற்கண்ட புதிய கோயில் கட்டும் முன்பு, கோயிலைக் கொண்டு நடத்தல், கோயில் சொத்துக்களைப் பராமரித்தல் போன்ற செயல்களை ஏற்று நடத்த 1-8-1974ல் "அலோர் ஸ்டார் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர்கள் வாரியம்" அமைக்கப்பெற்று அரும்பணிகளை ஆற்றி வருகிறது. அதில் இங்குள்ள கிட்டங்கி உரிமையாளர்களில் 7 பேர்கள் மட்டும் பொறுப்பும் உரிமையும் உடைய அறங்காவலர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். அறங்காவலர்கள் பேரவை கூடி திருவுளச் சீட்டு வழி முடிவு செய்து வரிசைப்படி அவர்களில் ஒருவர் ஒராண்டு காலத்துக்கு - தமிழ் ஆண்டு காலத்துக்கு - கோயிலை கொண்டு நடத்தும் நடப்பு அறங்காவலராகப் பணியாற்றி வருகிறார்.
அறங்காவலர் வாரியக் கூட்டங்கள்
திருக்கோயில் சம்பந்தப்பட்ட சிறு செயல்கள் அறங்காவலர் வாரியம் கூடி முடிவெடுத்து அதன்படியே நடைபெறுகின்றன. பெரிய செயல்கள், சொத்து சம்பந்தமான செயல்கள் ஆகியவை அறங்காவலர் பேரவை கூடி விவாதிக்கப்பெற்று அதில் செய்கின்ற முடிவுப்படி நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட இருவகையான கூட்டங்களுக்கும் வருகை தந்தோரில் வயதில் மூத்தவரே தலைமை தாங்கிக் கூட்டத்தை நடத்துவது வழக்கம். அதில் கூட்ட நிகழ்ச்சி நிரலில் கண்ட விபரங்கள் வரிசையாக உறுப்பினர்கள் விவாதிக்கப்பெற்று, இறுதியில் ஏகமனதாக ஒரு முடிவு செய்து அதைக் கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுதி, அதை அமுலாக்க உறுதி செய்யும் வகையில் அதன் இறுதியில் பேரவைக் கூட்டத் தலைவர் கையெழுத்திடுவார். அதன்பிறகு பேரவைக் கூட்டம் நிறைவுபெரும்.
பாடல்பெற்ற திருக்கோயில்
அருட்பேறு நிறைந்த அலோர் ஸ்டார் ஆண்டவன் தண்டாயுதபாணி மீது பலர் பாமாலை பாடிச் சூடிச் சிறப்பித்துள்ளனர். ஏற்கனவே இங்கு வருகை தந்த தமிழகம் திருவையாறு அறுபத்து மூவர் மடத்து அதிபர் அமரர் சுவாமி சித. நாராயணசாமி அவர்கள் அருள்மிகு தண்டாயுதபானி பேரில் 5 பாடல்கள் கொண்ட பஞ்சகம் பாடினார்கள். அதை அடுத்து சிவன் திருக்கோயிலுக்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய தேவக்கோட்டை பாலகவி வே. இராமனாதன் செட்டியார் என்ற தத்புருட தேசிகர் அவர்கள் தண்டாயுதபாணி மீது 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடினார்கள். பின்பு இங்கு திருக்கோயிலுக்கு வருகை தந்த உரையாற்றிய கவியாரசு கண்ணதாசன் அவர்கள் தண்டாயுதபாணி மீது இரண்டு விருத்தங்கள் மட்டும் பாடினார்கள். அப்பால் அலோர் ஸ்டார் வாழ் முத்தமிழ்ச்செல்வர், கம்பநாடகப்புலவர் திரு. ரெ. இராமசாமி அவர்கள் அருள்தரு தண்டாயுதபாணி பேரில் 20 பாடல்கள் அடங்கிய "அலோர் ஸ்டார் அருள்மிகு தண்டாயுதபாணி இருபா இருபது அந்தாதி" என்ற கவிதையைப் பாடி அதனை - திருக்கோயிலுக்கு இரண்டாவது மங்கலப் பெருந்திருக்குட நீராட்டு நிகழ்த்த அன்று அதை நூலாக வெளியிட்டுள்ளார்கள்.
|