ஆறுமுகன் கொண்ட sixteen forms of |
---|
ஆறுமுகன் கொண்ட பதினாறு திருக்கோலங்கள் (ஜனார்த்தனன்) பழந்தமிழ் நூல்களின்படி இப்பூவுலகு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மலையும், மலையைச் சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம் என்றழைக்கப்படுகிறது. இக் குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக குன்றுதோறாடும் குமரன் என்று அவனை வழிபடுவது தமிழர் மரபு. இளந்தளிர்கள் நிறைந்த இயற்கை வளம் மிகுந்து நறுமணம் கமழும் மலைச்சாரலையும், இளமை - அழகு - மணம் என்று பொருள்படும் 'முருகு' என்ற சொல்லையும் வைத்து இத்தமிழ்க் கடவுளுக்கு 'முருகன்' என்ற பெயர் வந்தது. தாரகாசுரன் போன்ற அசுரர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் தம்மைக் காத்தருளும்படி ஈசனிடம் முறையிட, அக்னிதேவனை தூதுவனாக அனுப்பினர். இதையடுத்து உமையவளுடன் அந்தப்புரத்திலிருந்த பரமேஸ்வரனைக் காண புறாவடிவம் எடுத்துச் சென்ற அக்னிதேவனைப் பார்த்த ஈசன், தன்னிடமிருந்து தோன்றும் வீர்யத்தை அக்னிதேவனே தாங்கும் சக்தியுள்ளவன் எனக்கூறி, தன் நெற்றிக்கண்ணிலிருந்து வீர்யமாகிய தீப்பொறிகளை வெளியிட்டார். அக் கடும் தீப்பொறிகளைத் தாங்கிச் சென்ற அக்னிதேவன் அவற்றின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் கங்கையாற்றில் விட்டு விட்டான். தொடர்ந்து சிறிதுதூரம் சுமந்து சென்ற கங்கையும் அத் தீப்பொறிகளின் வெப்பத்தைத் தாங்கமுடியாமல், தருப்பைப்புல் வளர்ந்து நிறைந்த அலைகள் தாமரை மலராக வீசிய சரவணமடுவில் அப்பொறிகளை விட்டுவிட்டாள். தீப்பொறிகள் அங்கு ஒரு அழகிய குழந்தையாக மாறின! அச்சமயம் அங்கு நீராட வந்த ஆறு கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தையின் அழகைக் கண்டு வியந்து, இது தன் குழந்தை எனக்கூறி, ஒவ்வொருவரும் எடுத்தணைத்து பாலூட்ட முற்பட்டனர். உடனே அத் திருக்குழந்தை ஆறு குழந்தைகளாக மாறி, கார்திகை பெண்கள் ஒவ்வொருவரிடமும் தாய்ப்பால் அருந்தின. இதைக் கேள்வியுற்ற உமையவள் ஈசனுடன் சரவணப்பொய்கைக்கு வருகை தந்து, அழகிய அந்த ஆறு குழந்தைகளைக் கண்டு அதிசயித்து, அவர்களை ஒன்றாக கட்டியணைக்கவும், அந்த தெய்வீகக் குழந்தைகள் ஆறுமுகங்களும் பன்னிரு கைகளுமாக ஒரே குழந்தையாக மாறினர்! இவ்வாறு தோன்றிய ஆறுமுகப் பெருமான் தமிழ்க்கடவுள் முருகனாகத் திகழ்கிறார். ஸ்ரீபரமேசுவரனே முருகனாக இருப்பதாக தணிகைப்புராணம் கூறுகிறது. 'ஆறுமுகன் அவனும் யாமும் பேதம் அன்றாய்' ... என்று ஈசன் பிரமனிடம் கூறியதாக கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது, இவ்வாறு தோன்றிய ஆறுமுகன், வேலன் - கார்த்திகேயன் - சுப்பிரமணியன் - சரவணபவன் என்ற பல பெயர்களுடன் விளங்கி வருகிறார். ஆறுமுகனாகிய முருகக் கடவுளுக்குப் பல உருவங்கள் இருப்பதாக குமாரதந்திரம் முதலிய நூல்கள் கூறுகின்றன. ஆயினும், அவற்றில் தணிகைப்புராணத்தில் ஆறுமுகனது பதினாறு திரு உருவங்களே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. சுப்பிரமணிய ஸ்வாமி பதினெட்டாம் நூற்றாண்டில் திருகச்சியப்ப முனிவர் என்ற புலவர் பெருமான் இயற்றிய தமிழ் இலக்கியங்களில் சிறந்ததொன்றாகக் கருதப்படுவது தணிகைப்புராணம். திருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும் செந்தமிழ்க் கடவுளான முருகப்பெருமானது லீலைகளைச் சிறப்புற விளக்கும் இத் தணிகைப்புராணத்தில் கூறப்பட்டுள்ள ஆறுமுகனது பதினாறு திரு உருவங்களும், தமிழகத்து புனிதத்தலமான இராமேசுவரத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீசங்கரமத்திலுள்ள ஒரே தூணில் மூர்த்தங்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சோடச சுப்பிரமணியராக இருந்து அருள் புரிகின்றனர். அத் திரு உருவங்கள் ஸேனாதிபதி ஸ்வாமி, ஸ்கந்த ஸ்வாமி, கஜவாகன ஸ்வாமி, சுப்பிரமணிய ஸ்வாமி, கார்த்திகேய ஸ்வாமி, சரவணபவ ஸ்வாமி, ஷண்முக ஸ்வாமி, குமார ஸ்வாமி, ஸேநானி ஸ்வாமி, தாரகாரி ஸ்வாமி, வள்ளி கல்யாண சுந்தர ஸ்வாமி, பிரம்மசாஸ்த்ரு ஸ்வாமி, கிரெளஞ்ச பேதன ஸ்வாமி, பால ஸ்வாமி, சக்திதர ஸ்வாமி, சிகிவாகன ஸ்வாமி எனப்படும். ஸ்கந்த ஸ்வாமி முருகப்பெருமானது பெருமைகளைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் புதல்விகளான அமுதவல்லி, சுந்தரி என்ற கன்னிப் பெண்கள் முருகனை மணக்க விரும்பினர். அதையடுத்து ஆறுமுகனைக் குறித்து அவர்கள் தவமிருக்க, முருகப்பெருமான் அவர்களுக்குக் காட்சி தந்து, அமுதவல்லியை பிற்காலத்தில் தேவேந்திரன் மகள் தெய்வயானையாக வளர்ந்து வருகையில் அவளைத் தாம் மணம் புரிவதாகவும்; சுந்தரியை சிவமுனிவர் மகளாகத் தோன்றி, வேடர்குலத் தலைவன் நம்பிராசனது வளர்ப்பு மகள் வள்ளியாக வளர்ந்துவந்து தன்னை மணம் புரியலாம் என்று வரம் தந்து அருளினார். அவ்வாறே திருப்பரங்குன்றத்தில் பார்வதி பரமேசுவரர், திருமால் லக்ஷ்மி, பிரம்மன் சரஸ்வதி மற்றும் தேவர்கள் கண்டுகளிக்க தேவேந்திரனின் மகளான தெய்வயானை என தேவஸேனையை வானகங்கையின் நீரால் தாரைவார்த்து இந்திரன் கொடுக்க, அந்த இளம் நங்கையின் கரம்பற்றி திருமணம் புரிந்த குமரக்கடவுள் ஸேனாபதி என்ற பெயருடன் நின்றார். ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டு அமர்ந்த முருகப்பெருமான் தெய்வயானையை தன் துடைமீது இருத்தி, ஸேனாபதி ஸ்வாமியாக வீற்றிருந்த திருக்கோலத்தை இராமேசுவரத்து சோடச சுப்ரமணியர் தூணில் காணலாம். ஸேனாபதி ஸ்வாமி முருகனது வாகனம் பிணிமுகம் (யானை) என்று சில பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. அதையடுத்து ஆறுமுகன் கஜவாகன ஸ்வாமியாக நின்றார். ஈசனது பரப்பிரம்ம ஒளியே ஆறுமுகனாகியதால் அவருக்கு சுப்ரமணியர் என்று பெயர் வந்தது. கஜவாகன ஸ்வாமி ஈசனது வீர்யமாகத் தோன்றிய தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, பின்னர் உமையவள் அணைப்பில் ஆறுமுகனாக மாறியதால், அவருக்கு ஷண்முக ஸ்வாமி என்ற பெயரும் தோன்றியது. ஷண்முக ஸ்வாமி இளமையழகுடன் திகழ்ந்து நின்றதால் குமார ஸ்வாமியாக முருகன் நின்றார். குமார ஸ்வாமி கார்த்திகை பெண்களிடம் முலைப்பால் அருந்தியதால் கார்த்திகேயன் ஆகவும், கார்த்திகேய ஸ்வாமி சரவண மடுவையடைந்த ஈசனது வீர்ய தீப்பொறிகள் ஆறுமுகனாகியதால் சரவணபவன் என்றும் திருநாமமும் கொண்டான் முருகன். சரவணபவ ஸ்வாமி திருத்தணிகையிலே குமாரலிங்கமாக நின்று அருள்பாலிக்கும் குமரேசனாகிய சிவபெருமானை வழிபட்டு அரக்கர்களை அழிக்கும் ஞானசக்தியை முருகன் பெற்றதனால் சக்திதரன் என்ற பெயரும் அவரைச் சேர்ந்தது. பினனர் ஒருகாலத்தில் அகத்திய முனிவர் ஈசனை வணங்கி செந்தமிழ் மொழியை தனக்கு அறிவுரைத்து மெய்யறிவினை வழங்க வேண்டினார். அதைக்கண்ட சிவபெருமான் தணிகைப்பதியில் உள்ள குமாரதீர்த்தத்தில் நீராடி, இச்சை - ஞானம் - செய்கை என்ற மூன்று சக்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேல்படையை ஏந்தி நிற்கும் சக்திதரனாகிய முருகனைத் துதித்தால், தமிழ்மொழியில் இலக்கணங்களை அறியும் பெரும் பாக்கியம் அம் முனிவருக்கு கிட்டும் என்று கூறியருளியதாக தணிகைப்புராணம் கூறுகிறது. இராமேசுவரத்து தூணில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்திதர ஸ்வாமியினது மூர்த்தம் அம் மூன்றிலைகளைப் பொறித்த வேல் படையை தம் வலது கையில் தாங்கி நிற்கும் திருக்கோலத்தில் அமைந்துள்ளது. சக்திதர ஸ்வாமி திருக்கயிலையில் உமையவளுடன் ஈசன் வீற்றிருந்தபொழுது சிவகணங்களில் சிறந்தவனான சந்திரகாசன் என்பவன் வணங்கி, விரும்பி கேட்டதற்கிணங்கி, ஈசன் பிரணவத்தின் பொருளை அவனுக்கு உரைத்தருளினார். அச்சமயம் பார்வதி-பரமேசுவரர் நடுவே வீற்றிருந்த குழந்தை முருகன் தாமும பிரணவத்தின் பொருளை கேட்டு உணர்ந்தும் கேளாததுபோல் இருந்தார். பின்னர் ஒரு நாள் தனியாக கோயில் ஒன்றில் வீற்றிருந்த முருகனை பல தேவர்கள் வணங்கிச் செல்லவும், பிரம்மதேவன் மட்டும் குழந்தை என்று உதாசீனம் செய்து வணங்காமல் சென்றுவிட்டார். இதைக்கண்டு கோபம் கொண்ட முருகன் பிரும்மனது செருக்கை அடக்க, வீரபாகுவை அனுப்பி நான்முகனைப் பிடித்துவரச் செய்து, ஈசனையும் சிவகணங்களையும் அவர் படைத்தவர் அல்லர், பிரணவத்தின் பொருளை அறியாதவர் என்று கூறி, பிரமனைச் சிறையிலிட்டு, பின்னர் தான் திருவேங்கடமலை அடைந்து, கோயில் கொண்டு படைப்புத் தொழிலைத் தாமே மேற்கொண்டார். இச் செய்தியை தேவர்கள் மூலம் அறிந்த ஈசன் நந்திதேவரை அனுப்பி பிரமனை மீட்டு வந்து, தாமும் முருகவேளும் வேறிலன் என்று கூறி, ஆறுமுகனைக் குறித்து தணிகைமலையில் தவம் செய்யும்படி பணித்தார். பிரம்மனும் அவ்வாறே தவம் செய்து படைப்புத் தொழிலை மீண்டும் பெற்றதாகப் புராணக்கதை. இதையடுத்து முருகக்கடவுள் பிரம்மசாஸ்த்ரு ஸ்வாமி அல்லது பிரமசாந்த மூர்த்தியாக நின்றார். பிரம்மசாஸ்த்ரு ஸ்வாமி அதேசமயம், 'பிரணவத்தின் பொருளை அறிவாயா?' என்று கேட்ட ஈசனிடமும், முருகக்கடவுள் அதனை 'குரு - சிஷ்யன்' என்ற முறைப்படி ஓதவேண்டும் என்று கூற, ஈசன் சிஷ்யனாக அமர, முருகனாகிய பாலன் குருவாகி நின்று தன் தந்தைக்குப் பிரணவத்தின் பொருளை முறையோடு உணர்த்தியருளினார். இந்த ரூபத்தையே பால ஸ்வாமியாக இராமேசுவரத்தின் தூணில் காணலாம். பால ஸ்வாமி பல நூறு ஆண்டுகள் தவமிருந்து சகல வலிமையையும் பெற்ற, சோணிதபுரியிலிருந்த மாயாஜால அசுரன் தாரனது புதல்வன் தாரகாசுரன் - பிரம்மனைக் குறித்து தவமிருந்த தாரகன்தான் - ஈசனது வீர்யத்தினால் உருவாகும் புத்திரன் தேவர்படையின் சேனாதிபதியாக வந்து அம்பு எய்தி, அதனால்தான் தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். அவ்வாறே சேனாதிபதியாக வந்து போர்தொடுத்து சூரபத்மன், தாரகாசுரன் முதலான அரக்கர்களை வதம் செய்த முருகப் பெருமானது ஸேநானி ஸ்வாமி - தாரகாரி ஸ்வாமி என்ற வீர உருவங்கள் மூர்த்தங்களாக இராமேசுவரத்து தூணில் நின்றருள் புரிகின்றன. சில மந்திரங்களை உச்சரித்து மலைகளை உருவாக்கி, தன் வழியே செல்லும் பிரயாணிகளை திசைமாற்றி தவறான பாதையில் செலுத்தி துன்புறுத்திவந்த கிரவுஞ்சன் என்ற அரக்கன் அகஸ்திய முனிவரிடமும் தன் கைவரிசையைக் காட்டவும், மாமுனிவரது சாபத்திற்கு ஆளாகி, மலை உருவமாகி மாறி எல்லோரையும் துன்புறுத்தி, இறதியில் முருகக்கடவுளின் வேலுக்கு வதமானான் என்பது கந்தபுராணத்தின் கதை. இதையடுத்து கிரவுஞ்சபேதன ஸ்வாமியாகக் காட்சி தரும் முருகனது மூர்த்தம் இராமேசுவரத்து தூணில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிரவுஞ்சபேதன ஸ்வாமி சூரபத்மனை வதம் செய்தபொழுது அந்த அசுரனது உடல் இரண்டாகப் பிளக்கவே, அவன் இறவாவரம் பெற்றிருந்ததால், அவனுடைய உடலின் இரண்டு துண்டங்களும் மயிலாகவும் சேவலாகவும் மாறின. மயிலை முருகன் தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியின் சின்னமாகவும் ஏற்று அருள்புரிந்து சிகி வாகனன் (மயில் வாகனன்) என்ற பெயரைப் பெற்றான். சிகி வாகனன் சிவமுனி என்ற மாமுனிவராக இருந்த மகாவிஷ்ணு நிஷ்டையிலிருந்தபொழுது அந்த இடத்திற்கு அழகிய மான் ரூபத்தில் வந்த லட்சுமி, அம் முனிவரது காமப் பார்வையினால் கருவுற்று, வேடர்குலத் தலைவன் நம்பிராஜனது நிலத்திலிருந்த வள்ளிக்கிழங்கு தோண்டி எடுக்கப்பட்ட ஒரு குழியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றாள். இவ்வாறு திருமாலின் மகளான சுந்தரி, முருகன் அருளியபடி அப்பெண் குழந்தையைக் கண்டெடுத்த வேடர்குல தலைவன் நம்பிராஜனது வளர்ப்பு மகளாக வள்ளி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். வயது வந்தவுடன் வயலில் வள்ளி தினைப்புனம் காத்திருந்தபொழுது, அங்குவந்த முருகன் வள்ளியின் அழகைக் கண்டு மையல்கொண்டு, வேடன் - வேங்கைமரம் - வயோதிகன் ஆகிய பலவேடங்கள் பூண்டு பல லீலைகள் புரிந்து, இறுதியில் தன் மூத்தவன் யானைமுகத்தோனின் உதவியுடன் வள்ளியை மனம் கவர்ந்து, தேவர்கள் முன்னிலையில் வேடர் தலைவன் நம்பிராஜன் தாரைநீர் வார்க்க முருகன் வள்ளியை திருமனம் செய்தான். முருகனது இத் திருமண திருக்கோலம் இராமேசுவரத்து சோடச சுப்ரமணியர் தூணில் வள்ளிகல்யாணசுந்தர ஸ்வாமியின் மூர்த்தமாக இருந்து அருள்பாலிக்கிறது. வள்ளிகல்யாணசுந்தர ஸ்வாமி இவ்வாறு பதினாறு திருவுருவங்களுடன் அருள்பாலிக்கும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானை தமிழ்மக்கள், ஆண்டுதோறும் பல நாமங்களில், முக்கியமாக கந்தசஷ்டி திருநாளில் வழிபட்டு துதித்து புண்ணிய அருள் பெறுகின்றனர். முற்றும். தைப்பிங் லாரூட் (மலேசியா), அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (சுக்கில தை 19ம் நாள், 1-2-1990) சிறப்பு மலரிலிருந்து தொகுக்கப்பட்டது. ஆலயப் பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். (திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி). |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |
[fbk] [xhtml] . |