முருகன் ஒரு விளக்கம் |
---|
முருகன் ஒரு விளக்கம் (திரு. மா. குமரகுரு) விடியற்காலையில் பொன்னிறக் கதிரொளி வீசிக்கொண்டு, நீல நிறக் கடலின் மேல் தங்கக் கதிர்படிய கதிரவன் புறப்படுங் காட்சி, ஆறுமுகக் கடவுள் நீல மயில் மீதில் வேலேந்தி, மற்றப் படைகளேந்தி அஞ்சலெனப் பகர்ந்து கொண்டு வருவதுபோல் இருக்கின்றது. ஆதிகாலந்தொட்டே தமிழ்நாட்டில் முருகன் வழிபாடு இருந்தது. பழந் தமிழர்கள் இறைவனை இயற்கை அழகு எல்லாவற்றிலும் கண்டனர். இறைவனை அழகன் என்ற அர்த்தமுள்ள சொல்லாலே அழைத்தார்கள். முருகன் என்றால் அழகன் என்றே பொருள். விரிவாகச் சொன்னால் முருகன் என்றால் அழகு, இனிமை, இளமை, தெய்வத் தன்மை, மணம், மகிழ்ச்சி .. என்ற ஆறு தன்மைகளும் ஒருங்கேயுடையவன் என்பதாகும். முருகன் உயர்வானவன். ஆகவே அவனுக்கு உயர்ந்த இடங்களிலே வீடு அமைத்தார்கள். குறிஞ்சிக்கிழான் என்றுங் கூறுவர். பஞ்ச பூதங்களிலும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் பரம் பொருளாகையால் அவனுக்கு ஆறு முகங்களை உருவகித்து, ஆறுமுகன் என்றுங் கூறுவர். முருகன் ஆறறிவு படைத்த மனிதன் வணங்குதற்குரிய தெய்வம் என்றுங்கொள்ளலாம். கொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதை விளக்கும் சொருபமே முருகன். முருகன் ஞான சொருபம். வள்ளி இச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கிரியா சக்தி (செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கி உள்ளது. இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்து சமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதை வள்ளித் திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித் திருமணம் வள்ளியாகிய சீவன், பேரின்பமாகிய சிவத்துடன் கலப்பதை விளக்குகிறது. முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப் பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்கவேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய .. இறைவனே. இதையே திருவள்ளுவர், கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் ... என்கிறார். முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது. தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காத பொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன். முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம், மலம், மாயை .. எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாக வாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான். கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே. முருகனின் சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப் பெற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை .. முதலிய பாடல்களில் சிலவற்றையாவது பாராயணம் செய்தல் நலந்தரும். ஆறுதலை முருகன் ஆறுதலைத் தருவான். |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |