கடை விரித்தான் kadai viriththAn |
---|
கடை விரித்தான் கந்தன்! (சுவாமி சிவானந்தா, பொன்னமராவதி) கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று கவலைப்பட்டுச் சொன்னவரே அதிகம். கடவுளை அடைய பல படிகள் உண்டு. இதில் கடைசிப் படி எதுவோ அதை விரித்துச் சொன்னேன், யாரும் கேட்பாரில்லை என்கிறார் வள்ளலார். இதே கடைசிப் படியைத்தான் அருணகிரிக்குக் கந்தன் மிக எளிதாக, மிக அருமையாக உபதேசித்தார். தொழுநோயின் கொடுமை தாங்க முடியாமல் கோபுர உச்சியிலிருந்து குதித்து உயிரைவிட முயன்றார் அருணகிரி. ஆனால் கருணைக்கடல் கந்தன் கைதாங்கி, "சும்மா இரு" என்று உபதேசித்து மறைந்தார். குரு வழி நின்றார். சும்மா இருந்தார். சுத்தமானார் அருணகிரி. சும்மா இருப்பது என்றால் என்ன? உலகில் துன்பங்களுக்கும் மறுபிறவிக்கும் காரணம் நமது எண்ணம், சொல், செயல்கள் ஆகும். நமது எண்ணம், சொல், செயல்களின் பதிவுகளே நமது விதியாகி அடுத்த பிறவியாகிறது. நல்லவை செய்தால் நன்மையும் தீயவை செய்தால் தீமையும் அனுபவிக்கிறோம். இதுவே நமது பழைய வினைப் பதிவுகளாகும். முதல் படி பாடல்கள் மந்திரங்களால் நமது எண்ணத்தை ஆண்டவனோடு இணத்து நமது மனித சக்தியை தெய்வ சக்தி ஆக்குதல். இரண்டாவது படி புருவ மத்தியில் உள்ள தெய்வத்துடன் 'நான்' எனும் நமது எண்ணத்தை இரண்டறக் கலக்கச் செய்து; எண்ணம், சொல், செயல் தூய்மையாக்கிப் பாவம் படராமல் பாதுகாப்பது. இறுதிப் படி தியானத்தின் இறுதிப் படிதான் எண்ணமற்ற நிலை. எண்ணமற்ற நிலையில் பதிவுகள் ஏதும் ஏற்பட வழியில்லை. எனவே விதியும் உண்டாக வழியில்லை. எண்ணமற்றுச் சும்மா இருக்கும் போது, 'நான்' எனும் ஆணவம் எழ இடமில்லை. இதுவே சொற்பதம் கடந்த உயரிய மெய்ஞ்ஞான நிலை. நிட்டைக்கு வழி வகுக்கும் நிலை. கலியுக வரதன் கந்தன் இதைத்தான், 'சும்மா இரு சொல்லற' என்றான். 16 வயதிற்குள் சிலை வணக்கத்தை முடித்து, பின் கடவுளை உள்ளத்தின் உள்ளே இருப்பதாக உணர்ந்து, பின் முப்பது வயதிற்குள் இறைவனை ஒளி வடிவில் நம் முன்னே கண்டு, இறுதியில் நாமே அந்தப் பிரமம் என்ற உண்மையைக் கண்டறியத்தான் இந்தப் பிறவியை நமக்குத் தந்து நமக்குள் அறிவாக நின்று ஆண்டவன் உணர்த்திக்கொண்டே இருக்கிறார். நமது விதி வழிவிட்டால் தானே! தைப்பிங் லாரூட் (மலேசியா), அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (சுக்கில தை 19ம் நாள், 1-2-1990) சிறப்பு மலரிலிருந்து தொகுக்கப்பட்டது. ஆலயப் பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். (திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி). |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |