கந்த சஷ்டி விழாக்காணும் Kandha Sashti Festival |
---|
கந்த சஷ்டி விழாக்காணும் குமார வயலூர் திருக்கோயில் (நவம்பர் 14, 1999 தினமலர் சிறப்பு மலரிலிருந்து) குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக போற்றி வணங்கப்படுபவர் குறிஞ்சி நிலக் கடவுளான முருகப்பெருமான். சிவ பரம்பொருளில் தொன்மை வடிவம் ஆறுமுக வடிவம். ஐந்து திருமுகங்கள் முறையே, 1. ஈசானம் 2. தற்புருடம் 3. அகோரம் 4. வாம தேவம் 5. சத்போஜாதம் ... ஆகியனவாகும். இவை முறையே: 1. ஆகாயம் 2. கிழக்கு 3. மேற்கு 4. தெற்கு 5. வடக்கு ... என்ற ஐந்து திசைகளைக் குறிக்கின்றன. இவற்றுடன், 6. அதோ ... முகம் கீழ்நோக்கி, ஆறுமுகமாகி, சிவமுகமாகி தனிப்பெருங்கருணை புரிகிறது. இதனை, ஐந்து முகத்தோட அதோ முகமும் தந்து திருமுகங்கள் ஆறாகி ... என கந்தர் கலிவெண்பா இயம்புகிறது (வரிகள் 38..40). ஆறாவது முகமான அதோ முகம் இதுவரை இரண்டு முறை மட்டுமே வெளிப்பட்டு உள்ளது. முதல்முறையாக திருப்பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தை விழுங்கி உலகைக் காத்தது. இரண்டாவது முறையாக சூரபதுமனை அழிக்க முருகப்பெருமானாக வெளிப்பட்டது. எந்த ஒரு செயலிலும், அல்லது வினையிலும், நல்லவைகள் தோன்றுவதைப்போல் சில தீமைகளும் ஏற்படும். சூரபதுமன் என்ற அரக்கன் இறைவனிடம் கடும் தவம் புரிந்து அரிய வரங்களை பெற்றார். அதன் மூலம் தேவர்களை கொன்றதுடன், தனக்கு நிகரான எதிரியே மூவுலகிலும் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தார். சூரபதுமனின் அட்டகாசங்களை தாங்க முடியாத தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். உடன் சிவபெருமான், முருகப் பெருமானை சிருஷ்டித்தார். முருகப் பெருமானுக்கும் சூரபதுமனுக்கும் நடந்த போரில் முருகக் கடவுள் தனது ஞான வேலால் சூரபதுமனை இரண்டாகப் பிளந்து, தேவர்களைக் காத்தருளினார். சூரபதுமன் தனது ஆணவத்தால் அழிந்ததை வரம் பல பெற்று தவம் இருந்த நல்லுயிர், ஆணவ மலத்தினுள் வீழ்ந்து துன்புறுவதை தடுக்கும் பொருட்டு திருப்புகழில்: அரவு புனைதரு புனி தரும் வழிபட மழலை மொழி கேட்டு தௌi தர ஒளி திகழ் அறிவையறிவது பொருளென அருளிய பெருமாளே. ... (திருவருணை திருப்புகழ்) என முருகக் கடவுளை அருணகிரிநாதர் வியக்கிறார். சூரபதுமனை வதம் செய்த முருகக் கடவுள், அவனை இரண்டாகப் பிளந்து, ஒரு பாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் குமரவேள் கொண்டு அருளினார். இந்த நிகழ்வுகளே அனைத்து சுப்பிரமணிய ஸ்தலங்களிலும், கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை இப்பெருவிழா, குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சைவத்திற்கு நால்வரும், வைணவத்திற்கு பன்னிருவரும், பாடல்களை இயற்றியுள்ளனர். என்றாலும் கௌமாரத்திற்கு தனித்து நின்று சந்தக்கவி பாடிய அருணகிரிநாதர், திருப்புகழ் பாட, முருகக் கடவுள் அருள் பாலித்த இடமே அப்போது அக்னிஸ்வரமாக அமைக்கப்பட்ட வயலூர் பதியாகும். ஆதி குமார வயலூர் என அழைக்கப்படும் வயலூர்பதி, எல்லா முருகன் கோயில்களிலும் தொன்மையானதாகும். இது முருகக் கடவுள் சூரபதுமனுக்கு பெருவாழ்வு தந்து மயில் வாகனமாக ஆக்கிக் கொள்வதற்கு முன்பே தொன்றிய கோயிலாகவும் போற்றப்படுகிறது. அனைத்து முருகன் ஸதலங்களிலும் மயில் வாகனம் தெற்கு முகமாக அமைந்திருக்கும் ஆனால் வயலூரில் மட்டும் வடக்கு முகம் நோக்கி அமைந்துள்ளது எனவும் தல வரலாறு தெரிவிக்கிறது. வயலூரில் சித்தர்கள் தங்கி வழிபட்டனர் என்று கூறப்படுகிறது. இதற்குச் சான்றாக சித்தர் தோப்பு என்ற இடம் இன்னும் இப்பகுதியில் உள்ளது. உறையூரை ஆண்ட கேசரிவர்மன் ராஜேந்திர சோழதேவன், முதலாம் ராஜராஜ சோழன் முதலிய மன்னர்கள் வயலூர் முருகன் கோயிலுக்கு, நிலம் பொன் கொடுத்தும், விளக்கு எரிக்கும் நெய், திருப்பதினம் பாடுபவர் ஆகியோர்கட்கு மான்யமும் வழங்கியதுடன், அச்செய்திகள் குறித்து கல்வெட்டுகளிலும் பதித்துள்ளனர். இத்திருக்கோயில் ஆயிரம் ஆண்டு வரலாற்றுப் பதிவைக்கொண்ட தொன்மையான கோயிலாகும். அருணகிரிநாதர், வயலூர் முருகப் பெருமானைப் பாடிச் சிறப்பு பெற்றார். திருமுருக கிருபானந்த வாரியாரும், வயலூர் முருகன் புகழ் பாடியே சொற்பொழிவை துவக்குவார். ஆறுதல் அளிக்கும் ஆறுமுகனின் விரதங்கள் மூன்று. அவை, 1. வெள்ளிக்கிழமை விரதம் 2. கார்த்திகை விரதம் 3. சஷ்டி விரதம். ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி நாட்களில், அதிகாலையில் நீராடி தூய்மையான ஆடை அணிந்து, வயலூர் வள்ளலாம் எம்பெருமான் முருகப் பெருமானை மனதாலும், நினைவாலும் நினைந்துருகி வேண்டினால், கேட்ட வரம் கிடைக்கும் என்பது உறுதி. வயலூரில் முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி, அம்மை, அப்பரை வழிபட்டார். அருணகிரிநாதருக்கு காட்சி தந்து திருப்புகழ் பாடும் ஆற்றலை வழங்கினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் தமிழ்க் கடவுளை வழிபட்டு போற்றி செய்தால், இம்மை மறுமைப் பேறு எளிதில் கிட்டும் என்பதில் ஐயமில்லையே! பக்தியும், ஞானமும் பரவிடும் மார்க்கம் எத்தனையோ வகையிருக்கினும் இகத்தில் முக்தி தந்து அனுதினம் முழுப்பலன் நல்கச் சத்தியமாவது சரவண பவவே! (மலேசியா வாசுதேவன் பாடிய பாட்டிலிருந்து) ஆலய பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |