"முருகனின் ஆயுதங்கள்" என்பது முருகப் பெருமானின் படைக் கலங்கள் என்று பொருளில் விளங்குவதாகும். சூரன் முதலிய அசுரர்களை வென்று வாகை சூட, கந்தப் பெருமான் கொண்ட பல்வேறு போர்க் கோலங்களில் அவரது கரங்களில் கொண்ட படைக் கலங்களே அயுதங்களாக அமைந்து உள்ளன. அப்பெருமானது கரங்களில் திகழும் அனைத்துமே ஆயுதங்கள் அல்ல. உதாரணமாக ஜபமாலை, கமண்டலம், கரும்பு, வில், மலரம்பு, தாமரை, நீலோத்பலம், பூரணகும்பம், சுருவம் முதலானவற்றை வெவ்வேறு வடிவங்களில் காரணகாரியம் கருதி அவரது கரங்களில் ஏந்தியுள்ளார். பன்னிரு கரமுடைய பெருமான் ஆதலால் மற்ற எந்தக் கடவுளருக்கும் இல்லாத வகையில் அதிகமான எண்ணிக்கையில் ஆயுதங்களை உடையவர் இவரே. முருகப் பெருமானது பல்வேறு வடிவங்களைப் பற்றி விவரிக்கும் குமாரதந்திரம், ஸ்ரீதத்வநிதி, தியான ரத்னாவளி முதலான சிற்ப நூல்களில் அவரது ஆயுதங்களைப் பற்றிய விவரங்களையும் அறிய முடிகிறது. தணிகைப் புராணத்தில் முருகனது வடிவங்களைப் பற்றியும், அகத்தியர் அருள்பெறு படலத்தில் ஆயுதங்களைப் பற்றியும் விவரம் அறிய முடிகிறது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்களில் முருகனது படைக் கலங்களைப் பற்றிய விவரங்கள் காணக் கிடக்கின்றன. இனி கந்தப் பெருமானது படைக் கலங்களைப் பற்றி விரிவாக நோக்குவோம். |
1. வேலாயுதம் முருகப் பெருமானிடம் அமைந்துள்ள வேலாயுதமே ஞானசக்தியாகும். வெல்லும் தன்மை உடையது, வேல். எல்லாவற்றையும் வெல்வது அறிவாற்றல். அறிவானது ஆழமும், அகலமும், கூர்மையும் உடையது. "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" ... என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகர். வேலின் வடிவமும் இத்தகையதே. முருகனின் ஞானவேலுக்கு 'சக்தி' என்ற பெயரும் உண்டு. "சக்திதான் வடிவேதென்னில் தடையிலா ஞானமாகும் என்பது சிவஞான சித்தியார்வாக்கு". | |
ஞானமே அஞ்ஞானத்தை வெல்ல வல்லது. ஆதலின் ஆணவம், கன்மம், மாயை எனும் மலங்களாகிய சூரபதுமன், சிங்கமுகன், தாருகன் என்னும் அசுரர்களை அழித்தொழித்து "ஞானமயம்" ஆகிய வேலே யாவருக்கும் நலம் புரிந்தது. வேல் வஞ்சர்க்கு வஞ்சனை செய்யும்; அடியவர்க்கு உதவும்; அது ஐந்தொழில் செய்யும் என்பதையெல்லாம் திருப்புகழில் காட்டுகிறார் அருணகிரியார். வேலாயுதத்தை "உடம்பிடித் தெய்வம்" என்று கந்தபுராணம் போற்றும். சக்தி வேலானது ஊறு கூரிய பகுதிகளையுடையதாகவும், தகட்டு வடிவிலும் அமைந்ததாகும் என்பர். இதனை நடுவில் பிடித்து ஏறிவது வழக்கம். |
2. கோழிக் கொடி முருகனுக்குக் கொடியாக விளங்குவது கோழி. கோழிக்கு சேவல் (குக்குடம்) என்றும் பெயர். சேவலாகிய கோழி ஒளியை விரும்புவது. எனவே அது அறியாமை என்னும் இருளைப் போக்கி மெய்யறிவாகிய ஒளியைப் பரப்பும் முருகனின் கொடியாக விளங்குவது பொருத்தமாகும். வைகறையில் கோழி கூவுதல் ஓங்கார மந்திரத்தை ஒளிவடிவில் உலகுக்கு உணர்த்துவது ஆகும். எனவே, கோழியை நாத தத்துவம் என்பர். நாதம் இல்லையேல் நாநிலமே இல்லை. சேவல் நம் உயிர்க்குக் காவல். சிவஞான வடிவாகவே சேவல் விளங்குகின்றது. முருகன் கோழிக் கொடியேந்தி நம்மை எல்லாம் சிவஞானப் பேரொளியில் துய்க்கச் செய்து அருளுகின்றார். திருச்செங்கோட்டில் முருகப் பெருமான் இடது கரத்தில் சேவலைப் பிடித்துள்ள அரிய அழகுக் கோலம் அருணகிரியார் மனத்தில் என்றும் நீங்காமல் அக்காட்சி வேண்டியே, "சென்றே இடங்கள் கந்தா எனும் போது செஞ்சேவல் கொண்டு வரவேணும்" ... என்று செங்கோட்டு வேலவனை வேண்டுவார். ( பாடல் 585, 'அன்பாக வந்து' - திருச்செங்கோடு ) | |
"குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே! குக்குடக் கொடி தரித்த பெருமாளே" ... என்பார் மற்றொரு திருப்புகழில் ( பாடல் 1295, 'நித்தம் உற்றுனை' - பொதுப்பாடல்கள் ). கோழி அக்னி தேவனின் அம்சமாகும். |
3. அங்குசம் இது யானையை அடக்கப் பயன்படுவது. இரும்பாற் செய்யப்பெற்ற வளைந்த மூக்கும், குத்தி அடக்கக் கூடிய ஒரு கூரிய நேரான பகுதியையும் உடையது. நீளமாக கழிகளில் செருகி இருப்பார்கள். திருமுருகாற்றுப்படையில் முருகப்பிரானது கரங்களில் ஒன்றில் "அங்குசம் கடாவ ஒருகை" என்று நக்கீரர் குறிப்பிடுவார். |
4. பாசம் பாசம் என்பது பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும். ஒரு கயிறு அல்லது இரண்டு மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும். |
5. வில் வள்ளிநாயகியை அடைய முருகன் எடுத்த வேடன் கோலத்தில் வில்லும் அம்பும் உண்டு. மூங்கில், சிலை என்னும் மரம் முதலான வளையக்கூடிய நார் மரத்தால் செய்யப்பெறுவது வில். இந்த வில்லானது இரு தலையிலும் தோல் அல்லது நார்க்கயிற்றால் கட்டப்பட்ட நாண் இருக்கும். வில்லை வளைத்து நாணை இறுகக்கட்டி அதன் நடுவில் அம்பை வைத்து விடுவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு வில்லின் வளையும் நாணின் உறுதியும் இழுத்துவிடுபவன் பலமும் இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அம்பின் வேகமும், அது தைக்கும் வன்மையும் அதிகரிக்கும். நுனியில் விஷம் தொய்த்து வைப்பதும் உண்டு. அம்பு நுனி பிறைமதி போன்ற அமைப்பிலும் இருக்கும். இதற்குப் பிறையம்பு என்று பெயர். |
6. அம்பு வில்லை வளைத்து எய்யப் பயன்படக் கூடியது அம்பு. நுனி கூரிய முள் போன்றது. நுனியை ஒரு கழியில் செருகியிருப்பார்கள். நுனி இரும்பால் ஆகியது. அதன் வால் பாகத்தில் கழுகின் இறகுகளையும் மற்ற பறவை இறகுகளையும் கட்டியிருப்பார்கள். பெரும்பாலும் கழுகு இறகே இதற்குப் பயன்படும். இறகு கட்டுவதால் காற்றை ஊடுருவி விரைந்து செல்லும். |
7. கத்தி பகைவரை அடிக்கவும் குத்தவும் பயன்படும் இந்த ஆயுதம் கைப்பிடியுடன் இருக்கும். |
8. கேடயம் கத்தியின் வெட்டையும், குத்தையும் தடுப்பதற்காகப் பயன்படுத்துவது பலகையாலும், வலுவுள்ள காட்டெருமை, கடமா நீர்யானை, காண்டா மிருகம் இவற்றின் தோலாலும் தயாரிப்பார்கள். பல வடிவங்களில் சதுரம், நீளச் சதுரம், வட்டம், முக்கோணம் என்ற அமைப்புகளில் காணப்படுவது. |
9. வாள் இதற்கு கட்டுவாங்கம் என்றும் பெயர். இது நீளமான கத்தியாகும். போரில் பகைவர்களை வெட்டப் பயன்படுவது. இதில் ஒரு முனையுடையதும் இரு முனையுடையதும் உண்டு. குத்துக் கத்தியாகக் கூரிய நுனியை உடையதாக இருக்கும். பழங்கால மன்னர்கள் இடுப்பில் செருகியிருப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர்கள். |
10. கோடாரி மரம் பிளக்கப் பயன்படும் கருவி போலப் பகைவரின் உடலைப் பிளக்க இது பயன்படும். இது இரும்பால் ஆகியது. வாய் கூர்மையாகவும் பின்புறம் கனமாகவும் இருக்கும். காம்பில் செருகப்பெற்று இருக்கும். 'பரசு' என்பதும் இதைப்போன்றே இருக்கும். ஆனால், வாய் சற்று வளைந்து கூரியதாக இருக்கும். இதுவும் காம்பில் செருகப்பெற்றிருக்கும். காங்கேய சுப்பிரமண்யர் என்ற வடிவில் 'பரசு' ஆயுதம் உள்ளதாகக் காட்டப்படுகிறது. |
11. சூலம் சிவபிரானுக்குரிய சிறப்பான படைக் கலம் சூலமாகும். இது மூன்று நுனிகளை உடையது. சுரை வரையிலும் எஃகு இரும்பால் செய்யப்பெற்று நீளமான மரக்கம்பில் செருகியிருப்பார்கள். |
12. கதை 'திகிரி' என்ற பெயரை உடைய 'கதை' என்றவுடன் பஞ்சபாண்டவர்களில் பீமனது ஞாபகம் வரும். அல்லது ஆஞ்சநேயரின் கரத்திலுள்ள கதையும் பிரபலமான ஒன்று. இதற்கு 'குண்டாந்தடி' என்ற பெயரும் உண்டு. பகைவர்களை அடித்து நொறுக்கப் பயன்படுத்துவது. கையை விட்டு அகலாதபடி காவலாக இருந்து உடையவரை பாதுகாக்கும் அருமையான ஆயுதம். |
13. சங்கம் (சங்கு) திருமாலுக்கு உரிய விசேஷ ஆயுதம். வெற்றியை அறிவிக்கும். பகைவர்களை இதன் ஒலியை கேட்டதுமே அடங்கி ஒடுங்கச் செய்யும். இதில் பல வடிவங்கள் உள்ளன. திருமாலின் சங்கம் 'பாஞ்ச சன்னியம்' என்று கூறப்படும். |
14. சக்கரம் இதுவும் விஷ்ணுவுக்குரிய விசேஷ ஆயுதம் ஆகும். இதன் அமைப்பு ஒன்று தேர் உருளை போன்றும் மற்றது வளையம் போன்றும் அமைந்திருக்கும். கும்பகோணம் அருகில் உள்ள அரிசிற்கரை புத்தூர் (அழகாபரத்தூர்) எனும் தேவாரம் பெற்ற திருத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
15. வஜ்ரம் முருகப் பெருமானுக்குரிய முக்கியப் படைக்கலமான இது ஆயிரம் நுனிகளை உடையது. உறுதியான பொருள் எதுவாயினும் அதனை உடைக்கும் வல்லமை உடையது. |
16. தண்டம் நீளமான கைத்தடி, மரத்தாலானது. 'கந்து' என்ற சொல்லுக்கு 'தண்டாயுதம் கொண்டவன்' என்ற பொருளுண்டு. கந்தசுவாமி வடிவத்தில் பழநியில் தண்டம் ஏந்திக் காட்சியளிக்கிறார். சுவாமிமலை சுவாமிநாதப் பெருமானும் கந்தசுவாமி வடிவமே. |
17. உளி (டங்கம்) மரத்தைச் செதுக்கப்பயன்படும் கருவி. முருகப்பெருமான் எக்காலத்திலும் மக்காத சூரன் என்னும் மரத்தைச் செதுக்கி மயிலும், சேவலுமாக மாற்றினான் அல்லவா? குமார தந்திரத்தில் குறிப்பிடப் பெறும் 'சரவணபவன்' என்ற வடிவத்தில் பன்னிரு கரங்களில் ஒன்றில் "உளி"யை வைத்துள்ளார். |
18. தோமரம் (உலக்கை) இந்த ஆயுதம் பகைவர்களைச் சாடப் பயன்படுவது. குமார தந்திரத்தில் குறிப்பிடப்பெறும் 'தாரகாரி' என்று வடிவத்தில் உலக்கையை ஒரு கரத்தில் பிடித்துள்ளார். (சூரபன்மனின் இளைய தம்பி தாரகாசுரனை வதைத்தவன் ஆதலால் முருகப் பெருமானுக்கு 'தாரகாரி' என்று பெயர்). |
19. கரும்புவில் இது கரும்பால் செய்யப் பெற்ற வில். இது சிறப்பாக மன்மதனுக்குரியது. பராசக்தி கையில் தரித்து உள்ள கரும்பானது குறிப்பிடத்தக்கது. யோகியாக இருக்கும் மற்றைய தெய்வங்களும் போகத்தை உண்டாக்க கரும்புவில் ஏந்தியிருப்பர். ஸ்ரீதத்வநிதியில் குறிப்பிடப் பெறும் 'சௌரபேய சுப்ரமண்ய'ரின் கரங்கள் ஒன்றில் கரும்புவில்லும் மற்றொன்றில் மலரம்பும் கொண்டதாகவும் காட்டுவர். |
20. மலரம்பு (வல்லி) இதற்கு புஷ்ப பாணம் என்றும் பெயர், தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் - என்று ஐந்து பூக்களால் ஆகிய பாணம். (இவற்றை மன்மதன் மக்களிடத்தில் காம நினைப்பூட்ட எய்வான்). |
21. மணி பரநாதத்தை எழுப்பி ஆணவ இருள் அகன்று ஆன்மாக்கள் உய்ய இறைவன் திருக்கரத்தில் வைத்துள்ளார். இதுவும் ஒரு ஞானப்படை. "பாடின் படுமணி" இரட்ட ஒரு கை" ... என்கிறார் நக்கீரர். திருமுருகாற்றுப்படையில் சரவணபவன் திருவுருவத்தில் பன்னிரு கரங்களில் ஒன்றில் "மணி" யை ஏந்தியுள்ளார். |
22. ஜபமாலை இது ருத்ராக்ஷை மாலை. சிருஷ்டித் தொழிலுக்குரிய பிரமனுடையது. முருகப் பெருமான் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரமனைச் சிறையிட்டு அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கியபோது பிரமனுக்கு உரிய ஜபமாலையையும் கமண்டலத்தையும் கொண்டார். கந்தனுக்குரிய கவின்மிகு கோலங்களில் 'பிரம்மசாஸ்தா' (பிரமனைத் தண்டித்தவர்) என்ற கோலத்தில் இருகரங்களில் ஜபமாலையையும், கமண்டலத்தையும் ஏந்தி இருப்பார். |
23. கமண்டலம் இதற்கு 'கிண்டி' என்ற பெயரும் உண்டு. இது தண்ணீர் வைத்துள்ள கலம். இது ஒரு மரத்தின் காயால் ஆகியது. அந்தணர்கள் தங்கள் நாட்கடன்களைக் கழிப்பதற்காக இதனை எப்போதும் வைத்து இருப்பார்கள். பிரமனுக்கு உரியது. இதுவும் அட்சமாலையும் அயுதங்கள் அல்ல. இதனைக் கொண்டு இன்னாருடைய திருவுருவம் என்றும் அறிய முடியும். தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான திருக்கோயில்களில் முருகப் பெருமான் 'பிரம்மசாஸ்தா' திருக்கோலத்திலேயே காட்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |
24. தாமரை அழகும், இளமையும் கொண்ட வடிவிலே பால சுவாமியாகக் காட்சி அளிக்கும் முருகப்பிரான் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி இருப்பார். மலர்களில் சிறந்ததும், உயர்ந்ததும் தாமரை மலராகும். இச்சா சக்தியாகிய வள்ளி எம்பெருமாட்டி கையில் தாமரை மலர் ஏந்தியிருப்பாள். திருச்செந்தூர் சுப்ரமணியர் வலது கையில் தாமரை மலர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
25. சுருவம் இது யாகத்தீயில் நெய்யிடுவதற்குப் பயன்படுவது. "ஒரு முகம் அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே" ... என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவதற்கு ஏற்ப 'அக்னிஞாத சுப்ரமணியர்' என்ற கோலத்தில் தெய்வீக யாகாக்னியை வளர்ப்பதற்கு ஒரு கரத்தில் சுருவமும், மற்றொரு கரம் ஒன்றில் நெய் (ஆஜ்ய) பாத்திரமும் கொண்டுள்ளார். இவ்வடிவம் இரண்டு முகங்களும், எட்டு கரங்களும் கொண்டுள்ள ஒர் அபூர்வமான அமைப்பாகும். | |
'காங்கேய சுப்ரமணியர்' என்ற வடிவில் ஒரு கரத்தில் பூரண கும்பம் ஏந்திய அமைப்பிலுள்ளார். வேதாரண்யம் அருகிலுள்ள கோடிக்கரை என்ற தலத்திலுள்ள 'அமிர்த கரை சுப்ரமணியன்' என்ற கோலத்தில் ஒரு கரத்தில் அமிர்த கலசம் ஏந்தி உள்ளது ஒர் அற்புதமான வடிவமாகும். அப்பெருமானை வழிபட்டு அமுதக் கலசத்தில் உள்ள ஞானத் தேனமுதைப் பெறலாம். |
இதுவரை கந்தப் பெருமானின் பல்வேறு வடிவங்களில் காணப்படும் பல்வேறு விதமான படைக் கலங்கள் (ஆயுதங்களை) பற்றி அறிந்தோம். இதனைப் பல்வேறு தலங்களில் காட்சியளிக்கும் முருகப் பெருமானது அருட்கோலத்தில் தரிசித்து இன்புறலாம். |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |