Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   11 - பானுகோபன் வதைப் படலம்   next padalamBanugOban vadhaip padalam

Ms Revathi Sankaran (7.10mb)
(1 - 69)



Ms Revathi Sankaran (7.48mb)
(70 - 140)



Ms Revathi Sankaran (7.22mb)
(141 - 209)




(ஐந்தாநாள் பானுகோபன் வதை நிகழ்ந்ததாகும்)

(எள்ளல் செய்தெனை)

எள்ளல் செய்தெனைப் பற்றியே சிறையகத் திட்ட
     கள்வன் இப்பகல் முடிந்திடும் அன்னது காண்பான்
          பொள்ளெ னப்படர் வேன்எனப் புந்திகொண் டவன்போல்
               ஒள்ள ழற்கதிர் வீசியே இரவிவந் துதித்தான். ......    1

(சுருதி நீங்கிய)

சுருதி நீங்கிய அவுணர்கோன் இத்திறந் துயரம்
     பெரிதும் எய்தியே இருந்துழிக் கண்டனர் பெயர்ந்து
          குருதி நோக்குடை ஒற்றரில் ஒருசிலர் குறுகிப்
               பரிதி தன்பகை அடிபணிந் தினையன பகர்வார். ......    2

(முன்ன மாயமா)

முன்ன மாயமாப் படைக்கலந் தூண்டியே மொய்ம்பு
     பன்னி ரண்டுளான் தூதனைப் படையொடும் படுத்துத்
          தொன்னெ டுங்கடல் இட்டனை இட்டதைச் சுரர்கள்
               அன்ன காலையே விளம்பினர் அறுமுகத் தவற்கே. ......    3

(வெங்கண் மால்கரி)

வெங்கண் மால்கரிக் கிளையவன் ஆங்கது வினவிச்
     செங்கை வேலினை ஆயிடை இருந்தனன் செலுத்த
          அங்க தொல்லையின் மூவிரு புணரிகள் அகன்று
               பொங்கு தூயநீர் அளக்கரின் நடுவுபுக் கதுவே. ......    4

(புக்க வேலையின்)

புக்க வேலையின் மாயமாப் பெரும்படை புறந்தந்
     தக்க ணந்தொலை வெய்திய தயர்வுயிர்த் தறிந்து
          தொக்க பாரிடர் யாவரும் வீரர்தந் தொகையும்
               மிக்க திண்டிறல் வாகுவும் எழுந்திவண் மீண்டார். ......    5

(ஆண்டவ் வெல்லைவந்)

ஆண்டவ் வெல்லைவந் திறுத்திடும் வேற்படை அருளி
     மீண்டு கந்தவேள் இருந்துழிப் போந்தது விரைவால்
          ஈண்டிம் மாநகர் சுற்றியே செறுநர்கள் இகலின்
               மூண்டு போர்செய்வான் புரிசையுட் புகுந்தனர் முரணால். ......    6

(அரண முற்றுளார்)

அரண முற்றுளார் இந்நகர் அலைத்தலும் அவற்றைத்
     தரணி காவலன் வினவியே தன்னயல் நின்ற
          இரணி யன்றனைக் கனல்முகத் தண்ணலை ஏனை
               முரணில் மக்களை அமைச்சனை விடுத்தனன் முறையால். ......    7

(ஆன காலையில் வந்துவந்)

ஆன காலையில் வந்துவந் தடுசமர் ஆற்றி
     மான வேற்படைப் பண்ணவன் தூதனால் மற்றை
          ஏனை யோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார்
               மீன மாய்க்கடல் புகுந்தனன் இரணியன் வெருவி. ......    8

(மன்னர் மன்னவன் இவை)

மன்னர் மன்னவன் இவையெலாம் வினவியே மனத்தில்
     உன்ன ருந்துயர் வேலைபுக் காற்றலா துழந்தான்
          இந்ந கர்ப்படை யாவையும் வறந்தன இன்னும்
               துன்ன லார்இவண் நின்றனர் என்றிவை சொற்றார். ......    9

(சொற்ற வாசகம்)

சொற்ற வாசகம் வினவலுஞ் சூரியன் பகைஞன்
     இற்ற வேகொலாம் நம்பெரும் வாழ்க்கையென் றிரங்கிச்
          செற்ற மோடுதுன் பெதிரெதிர் மலைந்திடச் செங்கேழ்ப்
               பொற்றை யன்னதன் இருக்கையை ஒருவினன் போந்தான். ......    10

(போந்து கோநகர்)

போந்து கோநகர் அணுகியே துன்பொடு புணர்ந்த
     வேந்தன் மாமலர் அடிகளை உச்சியின் மிலைச்சி
          ஆந்த ரங்கமாம் அளியொடு முந்துநின் றவுணர்
               ஏந்தல் இம்மொழி கேண்மியா நன்கென இசைப்பான். ......    11

(மாயை தந்ததொல்)

மாயை தந்ததொல் படையினால் செறுநரை மயக்கித்
     தூய நீர்க்கடல் இட்டனன் சுரரது புகல
          ஆய காலையில் வேல்விடுத் தவர்தமை மீட்ட
               சேயை வெல்வது கனவினும் இல்லையால் தெரியின். ......    12

(தெரிந்த மற்றுன)

தெரிந்த மற்றுனக் குரைப்பதென் முற்பகற் செவ்வேல்
     பொருந்து கைத்தலத் தாறுமா முகனொடு பொருது
          வருந்தி வன்படை ஆற்றலும் இழந்தனை வறிதாய்
               இரிந்து மற்றிவண் வருதலால் உய்ந்தனை எந்தாய். ......    13

(ஏற்ற தோர்சிலை)

ஏற்ற தோர்சிலை இழந்தனை மானமும் இன்றித்
     தோற்று வந்தனை தொல்வரத் தியற்கையும் தொலைந்தாய்
          சீற்ற முற்றிலன் முருகவேள் அவன்சினஞ் செய்யின்
               ஆற்று மோவெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும். ......    14

(ஆர ணன்தனை)

ஆர ணன்தனை உலகொடும் உண்டுமுன் னளித்த
     கார ணன்தனி ஆழியைக் களத்திடை அணிந்த
          தார கன்தனை நெடியமால் வரையொடு தடிந்த
               வீர வீரனை யாவரே வன்மையால் வெல்வார். ......    15

(புல்லி தாகிய விலங்கி)

புல்லி தாகிய விலங்கினைப் படுப்பவர் புதலுள்
     வல்லி யந்தனக் குண்டியாய் மாய்ந்திடுங் கதைபோல்
          எல்லை யில்பகல் அமரரை அலைத்திடும் யாமும்
               தொல்லை நாள்வலி சிந்தியே குமரனால் தொலைந்தோம். ......    16

(கோட லுஞ்சுனை)

கோட லுஞ்சுனைக் குவளையுங் குளவியுங் குரவும்
     ஏட லர்ந்திடு நீபமும் புனைந்திடும் இளையோன்
          பாட லந்திறல் உரைப்பதென் ஆங்கவன் பணித்த
               ஆட லம்புயத் தண்ணலை வெல்வதும் அரிதால். ......    17

(நெடிது பற்பகல்)

நெடிது பற்பகல் செல்லினும் நிரம்புவ தொன்றை
     இடைவி டாமலே முயன்றுபெற் றிடுகின்ற தியற்கை
          உடல்வ ருந்தியும் தங்களால் முடிவுறா ஒன்றை
               முடியு மீதெனக் கொள்வது கயவர்தம் முறையே. ......    18

(ஆற்றல் மைந்தரை)

ஆற்றல் மைந்தரை இழந்தனை நால்வகை அனிகத்
     தேற்றம் அற்றனை என்னுடன் ஒருவன்நீ இருந்தாய்
          மேற்றி கழ்ந்தநின் குலத்தினை வேரொடு வீட்டக்
               கூற்றம் வந்ததும் உணர்கிலை இகலைமேற் கொண்டாய். ......    19

(வெஞ்ச மஞ்செய)

வெஞ்ச மஞ்செய வல்லவர் கிடைத்திடின் மிகவும்
     நெஞ்ச கந்தளிர்ப் பெய்துவன் நேரலர் சமருக்
          கஞ்சி னேன்என்று கருதலை அரசநீ இன்னும்
               உஞ்சு வைகுதி யோவெனும் ஆசையால் உரைத்தேன். ......    20

(உறுதி ஒன்றினி)

உறுதி ஒன்றினி மொழிகுவன் பொன்னகர் உள்ளார்
     சிறைவி டுக்குதி நம்மிடைச் செற்றம தகற்றி
          அறுமு கத்தவன் வந்துழி மீண்டிடும் அதற்பின்
               இறுதி யில்பகல் நிலைக்குநின் பெருவளம் என்றான். ......    21

(வெம்பு தோல்கதிர்)

வெம்பு தோல்கதிர் வெகுண்டவன் உரைத்தசொல் வினவித்
     தும்பை யந்தொடை மிலைச்சிய மணிமுடி துளக்கி
          மொய்ம்பும் ஆகமுங் குலுங்கிட முறுவலித் துயிர்த்து
               நம்பி மந்திரச் சூழ்ச்சிநன் றாலென நவில்வான். ......    22

வேறு

(என்னிவை உரை)

என்னிவை உரைத்தாய் மைந்த இன்றியான் எளிய னாகிப்
     பொன்னுல குள்ள தேவர் புலம்புகொள் சிறையை நீக்கின்
          மன்னவர் மன்னன் என்றே யாரெனை மதிக்கற் பாலார்
               அன்னதும் அன்றி நீங்கா வசையுமொன் றடையு மாதோ. ......    23

(கூனொடு வெதிரே)

கூனொடு வெதிரே பங்கு குருடுபே ரூமை யானோர்
     ஊனம தடைந்த புன்மை யாக்கையோ டொழியும் அம்மா
          மானம தழிந்து தொல்லை வலியிழந் துலகில் வைகும்
               ஏனையர் வசையின் மாற்றம் எழுமையும் அகல்வ துண்டோ. ......    24

(தேவரும் மலர்மே)

தேவரும் மலர்மே லோனுஞ் செங்கண்மால் முதலா வுள்ள
     ஏவரும் ஆணை போற்ற இருந்தர சியற்றல் உற்றேன்
          மூவரின் முதலா முக்கண் மூர்த்திதன் வரங்கொண் டுள்ளேன்
               மேவலர் சிறையை இன்று விடுவனோ விறலி லார்போல். ......    25

(பேரெழில் இளமை)

பேரெழில் இளமை ஆற்றல் பெறலரும் வெறுக்கை வீரம்
     நேரறு சுற்றம் யாக்கை யாவையும் நிலைய வன்றே
          சீரெனப் பட்ட தன்றோ நிற்பது செறுநர் போரில்
               ஆருயிர் விடினும் வானோர் அருஞ்சிறை விடுவ துண்டோ. ......    26

(இறந்திட வரினும்)

இறந்திட வரினும் அல்லால் இடுக்கணொன் றுறினுந் தம்பால்
     பிறந்திடு மானந் தன்னை விடுவரோ பெரிய ரானோர்
          சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
               துறந்திடேன் பிடித்த கொள்கை சூரனென் றொருபேர் பெற்றேன். ......    27

(இன்னுமோர் ஊழி)

இன்னுமோர் ஊழி காலம் இருக்கினும் இறப்ப தல்லால்
     பின்னுமிங் கமர்வ துண்டோ பிறந்தவர் இறக்கை திண்ணம்
          மின்னெனும் வாழ்க்கை வேண்டி விண்ணவர்க் கஞ்சி இந்த
               மன்னுயிர் சுமக்கி லேன்யான் மாயவன் றனையும் வென்றேன். ......    28

(அஞ்சினை போலும்)

அஞ்சினை போலும் மைந்த அளியநின் இருக்கை போகித்
     துஞ்சுதி துஞ்ச லில்லா வரத்தினேன் தொலைவ தில்லை
          நெஞ்சிடை இரங்கி யாதும் நினையலை நேர லார்மேல்
               வெஞ்சமர் புரியப் போவேன் என்றனன் வெகுளி மேலான். ......    29

(இவ்வகை தாதை)

இவ்வகை தாதை கூற இரவிதன் பகைஞன் கேளா
     உய்வகை இல்லை போலும் உணர்ந்திலன் உரைத்த தொன்று
          மெய்வகை விதியை யாரே வென்றவர் வினையிற் கேற்ற
               செய்வகை செய்வேன் என்னாச் சிந்தைசெய் தினைய சொல்வான். ......    30

(அறிவொரு சிறிதும்)

அறிவொரு சிறிதும் இல்லேன் அடியனேன் மொழிந்த தீமை
     இறையதும் உள்ளங் கொள்ளா தெந்தைநீ பொறுத்தி கண்டாய்
          சிறியதோர் பருவப் பாலர் தீமொழி புகன்றா ரேனும்
               முறுவல்செய் திடுவ தன்றி முனிவரோ மூப்பின் மேலோர். ......    31

(அத்தநீ வெகுளல்)

அத்தநீ வெகுளல் நம்மூர் அலைத்திடுங் கணங்கள் தம்மை
     வித்தக வன்மை சான்ற விறற்புய னோடும் அட்டுன்
          சித்தமும் மகிழு மாறு செய்குவன் விடுத்தி யென்னாக்
               கைத்தலம் முகிழ்த்துத் தீயோன் கழலிணை பணிதல் செய்தான். ......    32

(பணிந்திடு கின்ற)

பணிந்திடு கின்ற காலைப் பதுமைதன் கேள்வன் செற்றந்
     தணிந்தனன் உவகை பெற்றான் தனயநின் உள்ளம் போர்மேல்
          துணிந்தது போலும் நன்றால் துன்னலார் தம்மை வெல்வான்
               அணிந்திடு தானை யோடும் அகலுதி ஐய என்றான். ......    33

(தொடையசை காமர்)

தொடையசை காமர் பொற்றோட் சூரிது புகல மைந்தன்
     விடையது பெற்று மீண்டு மேதகு துயரி னோடு
          கடிதுதன் கோயில் புக்குக் கடவுளர் பலருந் தந்த
               அடல்நெடும் படைக ளெல்லாம் ஆய்ந்தனன் எடுத்தான் அன்றே. ......    34

(மையுறு தடங்கண் மாதர்)

மையுறு தடங்கண் மாதர் வனமுலை திளைக்கு மார்பின்
     மெய்யுறை யொன்று வீக்கி விரல்மிசைப் புட்டில் சேர்த்திக்
          கையுற ஒருவில் லேந்திக் கைப்புடை கட்டி வாளி
               பெய்யுறும் ஆவ நாழி பின்னுற வீக்கி யாத்தான். ......    35

(சேமமா யுள்ள எண்)

சேமமா யுள்ள எண்ணில் படைகளுந் தேருஞ் சுற்றத்
     தாமநீள் கவிகை வேந்தன் தனிமகன் கடையிற் சென்று
          காமர்சூழ் கனக வையம் ஒன்றின்மேற் கடிது புக்கான்
               ஏமமால் வரையின் உம்பர் எழிலியே றணைந்த தேபோல். ......    36

(மற்றது காலை தன்னில் வாம்)

மற்றது காலை தன்னில் வாம்பரி நிரையுந் தேருங்
     கொற்றவெங் களிறும் வீரர் குழாங்களுங் குணிப்பில் வெள்ளஞ்
          சுற்றின இயங்கள் முற்றுந் துவைத்தன துவச கோடி
               செற்றின இரவி செல்லுந் தேயம தடைத்த அன்றே. ......    37

(தேரிடைப் புகுந்து)

தேரிடைப் புகுந்து நின்றோன் இப்பெருஞ் சேனை வெள்ளம்
     பாரிடைக் கொண்டு நின்ற புணரியிற் பாங்கர் சூழச்
          சூரிடைக் கொண்ட அன்புந் துயரமும் உளத்தை யுண்ணப்
               போருடைத் திசையை நோக்கிப் பொள்ளெனப் போதல் உற்றான். ......    38

வேறு

(மாவாழ் தெருவு)

மாவாழ் தெருவு பலகோடிகள் வல்லை நீங்கி
     மேவார் பொருத களத்தெல்லை விரைந்து நண்ணி
          மூவா யிரரும் பிறரும்முடி வான நோக்கி
               யாவா வெனவே இரங்கிக்கலுழ்ந் தல்லல் செய்வான். ......    39

(தாளாண்மை மிக்க)

தாளாண்மை மிக்க அசுரன்மகன் தாங்கல் செல்லா
     நீளா குலத்தின் அழிகின்றதன் நெஞ்சு தேற்றிக்
          கேளார் தொகைமேற் பெருஞ்சீற்றங் கிளர்ந்து செல்லச்
               சூளால் இனைய தொருவாசகஞ் சொல்லல் உற்றான். ......    40

(மாசாத்தர் அன்ன)

மாசாத்தர் அன்ன வயப்பூதரை மாய வாட்டித்
     தேசார்க்கும் வேலோற் கிளையோனைச் செகுத்தி டேனேல்
          காசாற் பொலியும் அகல்அல்குலின் காமம் வெஃகி
               வேசாக்கள் பின்செல் வறியானில் விளங்க யானே. ......    41

(என்னா ஒருசூள்)

என்னா ஒருசூள் இசையா அவனேக லோடும்
     அன்னான் வரவு தனைநோக்கி அவுணர் தங்கள்
          மன்னாகும் நின்ற மகனாகும் மலைவ தற்குப்
               பின்னார் வருவார் எனப்பூதர்கள் பேச லுற்றார். ......    42

(பேசுற்ற காலை)

பேசுற்ற காலை அவுணப்படை பேர்ந்து சென்றாங்
     காசற்ற பூதப் படைதம்மெதிர் ஆர்த்து நேரப்
          பூசற் பறைகள் இயம்புற்றன பூமி பொங்கி
               மாசற்ற வானைத் திசையோடு மறைந்த தன்றே. ......    43

(ஆர்த்தார் கிடைத்தார்)

ஆர்த்தார் கிடைத்தார் அடற்பூதர் அடுக்கல் மாரி
     தூர்த்தார் படைகள் சொரிந்தார் மரந்தூவ லுற்றார்
          பார்த்தார் அவுணர் எழுநாஞ்சில் பரசு தண்டஞ்
               சீர்த்தா கியவில் லுமிழ்வாளி செலுத்தி விட்டார். ......    44

வேறு

(பொங்கு வன்மை)

பொங்கு வன்மைகொள் பூதரும்
     வெங்கொ டுந்தொழில் வினையரும்
          இங்கிவ் வாறெதிர் ஏற்றிடா
               அங்கண் வெஞ்சமர் ஆற்றினார். ......    45

(அரிய ஒண்பகல்)

அரிய ஒண்பகல் அல்லொடே
     பொருது பார்மிசை புக்கபோல்
          இருதி றத்தரும் இகலியே
               விரவு பூசல் விளைத்தனர். ......    46

(உரங்கொள் பாரிடர்)

உரங்கொள் பாரிடர் உய்த்திடு
     மரங்கள் குன்றுகள் மாண்டிட
          நெருங்கி நேர்ந்த நிசாசரர்
               சரங்கள் கொண்டு தடிந்தனர். ......    47

(விற்கொள் அம்பினை)

விற்கொள் அம்பினை வேலினை
     எற்கொள் நாஞ்சில் எழுக்கதை
          வர்க்க மானதை வன்கணர்
               கற்க ளாற்றுகள் கண்டனர். ......    48

(சிவந்த பங்கிகொள்)

சிவந்த பங்கிகொள் சென்னிகள்
     நிவந்த மொய்ம்பு நிலத்துகக்
          கவிழ்ந்து ருண்டு களத்திடை
               அவிந்த பூதம் அனந்தமே. ......    49

(நெஞ்சம் மொய்ம்பும்)

நெஞ்சம் மொய்ம்பும் நெடும்பதஞ்
     செஞ்செ வித்தலை சிந்தியே
          எஞ்சு தானவர் எண்ணிலார்
               துஞ்சி னார்பழி துஞ்சவே. ......    50

(பாய்ந்த வாசிகள்)

பாய்ந்த வாசிகள் பாரிடங்
     காய்ந்த யானைகள் காசினி
          ஏய்ந்த தேர்களி யாவையும்
               மாய்ந்து பாரின் மறிந்தவே. ......    51

(சோரி தூங்கிய)

சோரி தூங்கிய தொல்பிணம்
     மேரு விண்ணை விழுங்கின
          காரி யூர்தி கருங்கொடி
               ஓரி கங்கம் உலாயவே. ......    52

(இந்த வாறிரு)

இந்த வாறிரு பாலரும்
     வந்து நேர்ந்து மலைந்திடப்
          புந்தி நோவறு பூதர்தம்
               முந்து தூசி முரிந்ததே. ......    53

(தாழும் ஒன்னலர்)

தாழும் ஒன்னலர் தாக்கலால்
     நீள்கொ டிப்படை நெக்கிடக்
          கூழை நின்றிடு கூளிகள்
               ஆழி யென்ன அடுத்தவே. ......    54

(புடைநி ரம்பிய)

புடைநி ரம்பிய பூதர்வந்
     திரைவி டாதெதிர் ஏற்றிடா
          அடலின் மேதகும் அவுணமாக்
               கடலை நின்று கலக்கினார். ......    55

(ஒடிந்த தேர்கள்)

ஒடிந்த தேர்கள் உலந்துபார்
     கிடந்த யானை கிளர்ந்தமா
          மடிந்த தானவர் மாப்படை
               தடிந்து லாயினர் சாரதர். ......    56

வேறு

(அதிரும் கழல்சேர்)

அதிரும் கழல்சேர் அவுணப் படைகள்
     முதிரும் குறளெற் றமுடிந் திடலும்
          எதிருஞ் சமரத் திடையெய் தியதோர்
               கதிரின் பகையங் கதுகண் டனனே. ......    57

(சிந்தாய் வருமி)

சிந்தாய் வருமிச் சிலசா ரதரே
     நந்தா னையெலாம் நலிகின் றனரோ
          அந்தா இனிதென் றடுதேர் கடவா
               வந்தான் விரைவால் இமையோர் மறுக. ......    58

(கடிதாய் வருகா)

கடிதாய் வருகா லொடுகா ரெழிலி
     படிமே லுறவே படர்கின் றதுபோல்
          கொடிதா கியவிற் குனியா முனியா
               வடிவா ளிகள்தூய் அவுணன் வரலும். ......    59

(வண்டார் தெரியல்)

வண்டார் தெரியல் வலியோன் வரவைத்
     தண்டா தமர்செய் திடுசா ரதர்கள்
          கண்டார் எதிரே கடிதே நடவா
               அண்டார் தொகைஅச் சுறஆர்த் தனரே. ......    60

(தருவுங் கதையு)

தருவுங் கதையுந் தருசூ லமுமால்
     வரையுங் கொழுவும் மழுவும் எழுவுஞ்
          சொரிகின் றனர்பல் வளனுந் தொலையா
               எரியின் மிசையே இடுமந் தணர்போல். ......    61

(தொடுகின் றகழல்)

தொடுகின் றகழல் தொகுசா ரதர்கள்
     விடுகின் றவெலாம் மிசைவந் திடலும்
          அடுகின் றசினத் தவுணன் தழலில்
               படுகின் றசரம் பலதூண் டினனே. ......    62

(பணிபட் டகனற்)

பணிபட் டகனற் படைதூண் டுதலும்
     திணிபட் டகணத் திறலோர் வரைகள்
          அணிபட் டதருக் குலமா தியெலாம்
               துணிபட் டனவே துகள்பட் டனவே. ......    63

(கல்லும் தருவும்)

கல்லும் தருவும் கதையும் பிறவும்
     சொல்லும் திறலும் துகள்பட் டிடலும்
          வெல்லும் தகுவன் மிகுசா ரதர்மேல்
               செல்லும் படிவெங் கணைசிந் தினனே. ......    64

(சிந்துற் றிடுசெங்)

சிந்துற் றிடுசெங் கனல்வெங் கணைகள்
     பொந்துற் றிடுகின் றபுயங் கமென
          வந்துற் றுடன்முற் றும்வருத் துதலால்
               நொந்துற் றனர்அற் றனர்நோன் மையெலாம். ......    65

(விடுகின் றகனற்)

விடுகின் றகனற் கணைவெந் திறலோர்
     உடலம் புழைசெய் திடவுற் றனரால்
          படரும் குறியோன் கதைபஃ றுளையா
               அடுதொல் கிரவுஞ் சமதா மெனவே. ......    66

(தெரிகுற் றகனற்)

தெரிகுற் றகனற் கணைசென் றுபுகப்
     பொருகொற் றமகற் றியபூ தர்மிசைப்
          பெருகுற் றதுசோ ரிபெருங் கருவிண்
               டுருகுற் றிடுசெம் பொழுகும் படிபோல். ......    67

(கதிரும் கனல்வெங்)

கதிரும் கனல்வெங் கணைசா ரதர்மெய்
     புதைகின் றுழிசெம் புனல்வந் தெழுவ
          உதிரம் பிறவுற் றிடுதீ யுறவால்
               எதிர்வந் தவைதன் னிடனுய்ப் பதுபோல். ......    68

(விடமெய்க் கணை)

விடமெய்க் கணைமா ரிகள்தம் மிசையே
     படவெய்த் தனர்சிந் தைபதைத் திடுவார்
          கடவுட் கதிரைக் கனலும் கொடியோற்
               குடைவுற் றனரால் உறுபூ தரெலாம். ......    69

வேறு

(நிலைய ழிந்து)

நிலைய ழிந்து நெடுங்கடல் பாரிடம்
     தொலைய முன்னம் தொலைந்திடு தானவர்
          வலிதெ ரிந்து வயம்புனை தானவர்
               தலைவன் முன்வந்து சார்ந்தனர் என்பவே. ......    70

(ஆய காலை அழிந்து)

ஆய காலை அழிந்துவெம் பூதர்கள்
     போய வாறும் புரையறு சூர்தரு
          சேய வன்திறல் செய்கையும் நோக்கினான்
               காயும் வெவ்வெரி கான்றிடு கண்ணினான். ......    71

(மலைக்கு லக்கொடி)

மலைக்கு லக்கொடி வாமத்தன் மைந்தராம்
     இலக்க வீரருள் ஏனைய மைந்தருள்
          தலைக்கண் நின்ற சயங்கெழு மொய்ம்பினான்
               விலக்கில் தேரொடும் வெய்தென ஏகினான். ......    72

(ஆதி தந்த அறு)

ஆதி தந்த அறுமுகத் தெம்பிரான்
     பாத முன்னிப் பரவிக் கடிதுபோய்
          மேத குங்கதிர் வெம்பகை தானையாம்
               ஓத முட்கக் குனித்தனன் ஓர்சிலை. ......    73

(காமர் மொய்ம்பினன்)

காமர் மொய்ம்பினன் கைத்தனுக் கோட்டலும்
     தாமு னிந்து தகுவர்தந் தானைகள்
          தோம ரங்கதை சூலம்வை வாளிவேல்
               நேமி யாதி நெருக்குற வீசினார். ......    74

(வீசு கின்ற வியன்படை)

வீசு கின்ற வியன்படை மாய்ந்துகத்
     தேசு லாவு திறலுடை மொய்ம்பினான்
          ஓசை கொண்டதன் சாபம் உமிழ்ந்தென
               ஆசு கங்கள் அளப்பில தூண்டினான். ......    75

(தூண்டும் வாளி)

தூண்டும் வாளி துணிபடச் செய்தலும்
     மாண்டு போயின மற்றவர் வெம்படை
          ஈண்டு தானவர் யாரும் மறைந்திட
               மீண்டும் வார்கணை வீசினன் வீரனே. ......    76

(கற்றை வார்சடைக் கண்)

கற்றை வார்சடைக் கண்ணுத லோன்சுதன்
     கொற்ற வில்லுமிழ் கூர்ங்கணை விட்டன
          பற்ற லார்மெய் படுதலும் அன்னவர்க்
               கிற்ற தாள்முடி தோள்புயம் யாவுமே. ......    77

(ஆர ழிந்தன ஆழி)

ஆர ழிந்தன ஆழி அழிந்தன
     தேர ழிந்தன திண்பரி கைமுகக்
          கார ழிந்த கடுந்தொழில் தானவர்
               போர ழிந்த புகுந்தன சோரியே. ......    78

(மற்ற வெல்லை)

மற்ற வெல்லை வலியநந் தானைகள்
     இற்ற வேகொல் இவன்சிலை யாலெனாச்
          செற்ற நீரொடு செங்கதிர் மாற்றலன்
               ஒற்று தேர்வல வற்கிவை ஓதுவான். ......    79

(அடுத்து நம்படை)

அடுத்து நம்படை அட்டவன் முன்னுற
     விடுத்தி தேரை வலவனை வெய்தென
          வடித்த விஞ்சையன் வன்மையின் அன்னதேர்
               நடத்தி யார்த்தனன் நாகர் நடுங்கவே. ......    80

(மாண்ட கொள்கை)

மாண்ட கொள்கை அவுணன் வலவன்முன்
     தூண்டு தேர்மிசைத் துண்ணென நண்ணியே
          பூண்ட தன்சிலை கோட்டிப் பொருஞ்சினம்
               மூண்டு மேலவன் முன்னிது கூறுவான். ......    81

(எஞ்ச லின்றிய)

எஞ்ச லின்றிய என்பெருந் தானைகள்
     துஞ்சும் வண்ணந் தொலைத்தனை நீயினி
          உஞ்சு போகரி துன்றனை அட்டிட
               வஞ்சி னங்கொடு வந்தனன் யானென்றான். ......    82

(என்ற லோடும் இருந்தி)

என்ற லோடும் இருந்திறன் மொய்ம்பினான்
     பொன்று வோரையும் போர்த்தொழில் செய்துபின்
          வென்று ளோரையும் விண்ணவர் காண்குவர்
               நின்று தாழ்க்கலை நேருதி போர்க்கென்றான். ......    83

(விளைத்த சீற்றத்து)

விளைத்த சீற்றத்து வெந்திறற் சூர்மகன்
     வளைத்த வில்லிடை வார்கணை ஆயிரந்
          தளைத்த பூந்தொடை வாகையன் தன்னுரந்
               துளைத்தி டும்படி பூட்டுபு தூண்டினான். ......    84

(ஆக மூழ்கி அடற்க)

ஆக மூழ்கி அடற்கணை போழ்ந்துபின்
     ஏக வென்றும் இளையவன் பின்னவன்
          சோக மோடுதன் தொல்சிலை வாங்கியே
               நாகர் போற்றிட நாணொலிக் கொண்டனன். ......    85

(நாணொ லிக்கொடு நஞ்)

நாணொ லிக்கொடு நஞ்சழல் கான்றெனத்
     தூணி யுற்ற சுடுசரம் ஆயிரம்
          வேணு வுய்த்து விரைவினில் தூண்டினான்
               ஏணு டைக்கொடி யோன்புயத் தெய்தவே. ......    86

(ஆயி ரங்கணை அம்பு)

ஆயி ரங்கணை அம்புயம் மூழ்கலும்
     நோயு ழந்துள நொந்து நொடிப்பினில்
          தீய வன்மகன் செஞ்சரம் நூற்றினால்
               தூய வன்வில் துணிபடுத் தானரோ. ......    87

(திண்டி றற்புயன்)

திண்டி றற்புயன் செஞ்சிலை இற்றிட
     அண்டர் அஞ்சினர் அன்னவன் ஓரயில்
          கொண்டு ருத்துக் கொடுந்தொழிற் சூர்மகன்
               முண்ட நெற்றியின் மொய்ம்புடன் வீசினான். ......    88

(வீசு வெம்படை)

வீசு வெம்படை வெய்யவற் சீறிய
     நீசன் மாண்டகு நெற்றியுட் சேறலும்
          மாசில் வான்மிசை வந்தெழு செக்கர்போல்
               ஆசில் செம்புனல் ஆறெனச் சென்றதே. ......    89

(சென்ற காலையில் தீயவன்)

சென்ற காலையில் தீயவன் ஓரிறை
     நின்று தேரின் நினைவில னாகியே
          பின்றை முன்னுணர் வெய்தப் பெருந்தகை
               ஒன்றொர் வெஞ்சிலை ஒல்லையில் வாங்கினான். ......    90

(வாங்கி வாயுவின்)

வாங்கி வாயுவின் மாப்படை தூண்டலும்
     ஆங்கவ் வெய்யனும் அப்படை யேவியே
          தாங்கி வன்மை தணித்தலுந் தாவிலோன்
               தீங்க னற்படை உய்த்தனன் சீறியே. ......    91

(மாரி யன்னகை)

மாரி யன்னகை மன்னவர் கோமகன்
     ஆர ழற்படை அவ்வழி தூண்டலும்
          வீர வாகு விடுத்திடு தீப்படை
               போரி யற்றிப் பொருக்கென மீண்டதே. ......    92

(சுடுக னற்படை)

சுடுக னற்படை போந்திடச் சூர்மகன்
     கடிது பின்னுங் கதிர்ப்படை தானெடா
          அடுதி அன்னவன் ஆவியை நீயெனா
               விடுத லோடும் விரைந்தது சென்றதே. ......    93

(விரைந்து சென்ற)

விரைந்து சென்றதை வீரமொய்ம் புள்ளவன்
     தெரிந்து சேணிடைச் செங்கதி ரோன்படை
          துரந்து நீக்கலுஞ் சூர்மகன் பங்கயத்
               திருந்த வன்படை ஏவினன் என்பவே. ......    94

(தேன்மு கத்துத்)

தேன்மு கத்துத் திருமல ரோன்படை
     வான்மு கத்து வருதலும் ஆங்கவன்
          ஊன்மு கப்படை ஒய்யெனத் தூண்டினான்
               நான்மு கத்தன் அடற்கண நாயகன். ......    95

(தூண்டு வேதன்)

தூண்டு வேதன் படைக்கலஞ் சூர்மகன்
     ஆண்டு தொட்ட படையை அகற்றியே
          மீண்டு வந்திட வெய்யவன் வீரன்மேல்
               நீண்ட மாயன் நெடும்படை வீசினான். ......    96

(வீசும் அப்படை)

வீசும் அப்படை தன்னை விலக்கினான்
     கேச வன்படை யால்கிளர் மொய்ம்புடை
          மாசில் கேள்வியன் மற்றது நோக்கியே
               நீசன் மாமகன் உள்ளம் நினைகுவான். ......    97

(தொட்ட தொட்ட)

தொட்ட தொட்ட படைகள் தொலைவுற
     விட்ட னன்படை மேலினி யாவையும்
          அட்டு நல்கும் அரன்படை தூண்டுறின்
               ஒட்ட லன்கரத் துண்டது கண்டதே. ......    98

(ஆத லாலியான்)

ஆத லாலியான் அப்படை தூண்டிடல்
     ஊதி யத்தை யுடைத்தன்று மாயையால்
          ஏதி லானை இனியடல் செய்வதே
               நீதி யென்று நினைந்தனன் நேரலன். ......    99

(விஞ்சை மாய)

விஞ்சை மாய வியன்முது மந்திரம்
     நெஞ்ச மீது நெறிப்பட எண்ணியே
          செஞ்சு டர்க்கதி ரைச்சிறை செய்திடு
               வஞ்ச மைந்தன் மறைந்தனன் தேரொடும். ......    100

(பாங்கு முன்னரும்)

பாங்கு முன்னரும் பின்னரும் பாய்கதிர்
     தூங்கு தேரொடு துன்னலன் ஏகுறா
          வீங்கும் ஆற்றல் விறலுடை மொய்ம்பன்மேல்
               வாங்கு விற்கணை மாரி வழங்கினான். ......    101

(சூறை யென்னத்)

சூறை யென்னத் திரிபவன் தூண்டிய
     மாறில் வாளிப டப்பட வள்ளல்மெய்
          ஊற தாகி உலப்பறு செம்புனல்
               ஆற தென்ன வழிக்கொண்ட தாலரோ. ......    102

(அண்டர் நோக்கி)

அண்டர் நோக்கி அழிந்தனர் பாரிடர்
     தண்ட மோடு தளர்ந்தனர் சார்பினோர்
          விண்டு விண்டு வெருவினர் அச்செயல்
               கண்டு வீரன் கனலெனச் சீறினான். ......    103

வேறு

(ஒன்றொரு மாயை)

ஒன்றொரு மாயை தன்னால் உய்ந்துமுன் வென்று போனான்
     இன்றும துன்னி னானோ இனியது முடிக்க அற்றோ
          நன்றிது நன்றி தம்மா நானிவன் தன்னை இன்னே
               கொன்றிடு கிற்பேன் என்னாக் குறித்தனன் குமரன் பின்னோன். ......    104

(ஈதுதன் புந்தி தேற்றி)

ஈதுதன் புந்தி தேற்றி ஈங்கிவன் சூழ்ச்சி மாய்ந்து
     போதரு கின்ற வாறு புரிகுவன் விரைவின் என்னாச்
          சேதனங் கொண்ட துப்பின் தெய்வதப் படையைப் போற்றி
               மேதகு வழிபா டாற்றி யவுணனைக் குறித்து விட்டான். ......    105

(பொருவருந் திறலோன்)

பொருவருந் திறலோன் விட்ட போதகப் படையே பானாள்
     இருளினை இரியல் செய்யும் இரவிபோற் சேற லோடும்
          விரைவொடு விஞ்சை மாயம் விளிந்தது வேந்தன் மைந்தன்
               ஒருபெருந் தேருந் தானு மாகியே உம்பர் நின்றான். ......    106

(தோன்றியே விண்ணி)

தோன்றியே விண்ணின் நின்ற சூர்மகன் தொலைவில் ஆற்றல்
     சான்றதன் மாயம் போன தன்மையுந் தடந்தோள் வீரன்
          ஆன்றநல் வலியும் நோக்கி அயர்ந்தனன் அயர்ந்து முன்னம்
               மான்றிடும் அமரர் யாரும் மனமகிழ் சிறந்து நின்றார். ......    107

(அவ்வழி வீர மொய்ம்)

அவ்வழி வீர மொய்ம்பன் அந்தர வழிக்கண் நின்ற
     மைவழி சிந்தை மைந்தன் மாண்பினை நோக்கி வஞ்ச
          வெவ்வழி இனிநீ போதி யானிவண் அடுவன் என்னாக்
               கைவழி வரிவில் வாங்கித் தேரொடுங் ககனஞ் சென்றான். ......    108

(விண்ணிடைப் புகுந்த)

விண்ணிடைப் புகுந்த வீரன் வெலற்கருஞ் சூரன் மைந்தன்
     கண்ணுற முன்பு நேர்ந்து கணைபல கோடி தூர்த்தான்
          நண்ணலன் அவனுஞ் சீறி நவின்றதோர் சாபம் வாங்கித்
               துண்ணென விசிக மாரி சொரிந்தனன் சுரர்கள் அஞ்ச. ......    109

(நீரொடு கனலும்)

நீரொடு கனலும் மாறாய் நெடுஞ்சினந் திருகி நின்று
     போரினை இழைப்ப தென்ன இருவரும் பொருது நின்றார்
          ஓரிறை அளவை தன்னில் ஒராயிர நூறு கோடி
               சாரிகை திரிந்த அம்மா அனையவர் தடம்பொற் றேர்கள். ......    110

(ஏற்றிகல் புரியும் வீரர்)

ஏற்றிகல் புரியும் வீரர் எதிரெதிர் துரக்கும் வாளி
     நாற்றிசை கொண்ட அண்டப் பித்திகை காறும் நண்ணி
          மேற்றிகழ் பரிதிப் புத்தேள் வியன்கதிர் வரவு தன்னை
               மாற்றியெவ் வுலகு ளோர்க்கு மலிதுயர் விளைத்த அன்றே. ......    111

(செற்றமொ டிவர்கள்)

செற்றமொ டிவர்கள் வீசுந் திருநெடுங் கணைகள் யாண்டும்
     முற்றிடு கின்ற காலத் துகுவன கவன மான்தேர்
          அற்றன புரவி மாலை அவிந்தன களிற்றின் ஈட்டம்
               இற்றன அவுணர் சென்னி இறுவன பூதர் யாக்கை. ......    112

(கிட்டுவ சேணிற்)

கிட்டுவ சேணிற் செல்வ கிளருவ கிடைத்துப் பின்னும்
     முட்டுவ ஒன்றை யொன்றை இடம்வலம் முறையிற் சூழ்ந்து
          வட்டணை புரிவ வானோர் மதிக்கவும் அரிய வல்லே
               எட்டுள திசையும் விண்ணுந் திரிவன இருவர் தேரும். ......    113

(இகழுவர் முனிவர்)

இகழுவர் முனிவர் வெஞ்சூள் இயம்புவர் வன்மை நோக்கிப்
     புகழுவர் உரப்பி வீரம் புகன்றெடுத் தழைப்பர் பூசல்
          மகிழுவர் நகைப்பர் வெற்றி வால்வளை முழக்கஞ் செய்து
               திகழுவர் கணையின் மாரி சிந்துவர் தெழித்துச் செல்வர். ......    114

(புரந்தனை அட்ட)

புரந்தனை அட்ட செல்வன் புதல்வனும் அவுணன் சேயும்
     விரைந்தெதிர் மலைந்த காலை முறைமுறை வெகுண்டு விட்ட
          வரந்தெறு பகழி மாரி அகிலமும் விரவிச் செல்லக்
               கரந்தனன் இரவி திங்கள் கலைகளுங் குறைந்த தன்றே. ......    115

வேறு

(காலொப்பன கூற்றொ)

காலொப்பன கூற்றொப்பன கனலொப்பன கடுவின்
     பாலொப்பன உருமொப்பன பணியார்புரம் பொடித்த
          கோலொப்பன கதிரொப்பன குன்றந்தனைக் கொன்ற
               வேலொப்பன இருவீரரும் விடலுற்றிடு விசிகம். ......    116

(வரைபுக்கன புயல்)

வரைபுக்கன புயல்புக்கன வான்புக்கன மறிதெண்
     டிரைபுக்கன கடல்புக்கன திசைபுக்கன திசைசூழ்
          தரைபுக்கன அண்டத்துழை தனிற்புக்கன பிலத்தின்
               நிரைபுக்கன இளையோனுடன் அவுணன்விடு நெடுங்கோல். ......    117

(திரிகின்றன இரு)

திரிகின்றன இருவோர்விடு தீவாளியும் அவைபட்
     டெரிகின்றன புயலின்குலம் இருநாற்றிசைக் கரியுங்
          கரிகின்றன புவிவிண்டன கடல்வற்றின உடுமீன்
               பொரிகின்றன உலகெங்கணும் புகைவிம்மிய தன்றே. ......    118

(பொடியோங்கிய திற)

பொடியோங்கிய திறன்மொய்ம்புடைப் புலவன்விடு சரத்தை
     வடியோங்கிய கணைமாரியின் அருக்கன்பகை மாற்றும்
          கொடியோன்மகன் விடுவாளியைக் குதைவெங்கணை மழையால்
               நெடியோன்தனித் துணையானவன் அறுத்தேயுடன் நீக்கும். ......    119

(போரிவ்வகை இரு)

போரிவ்வகை இருவீரரும் பொரலுற்றிடு பொழுதில்
     பாரின்றலை நின்றோர்களும் இமையோர்களும் பார்த்தார்
          ஆரிங்குளர் இவரேயென அமர்செய்தவர் அடுபோர்
               வீரந்தனில் எவரேயிவர்க் கிணையென்று வியந்தார். ......    120

(அவ்வேலையின் நூறா)

அவ்வேலையின் நூறாயிரம் அடுவெங்கணை அதனால்
     மைவேலையில் வருபானுவைத் தளைபூட்டிய மைந்தன்
          செவ்வேலவன் திருத்தூதுவன் தேரைப்பொடி படுத்தி
               எவ்வேலையும் வெருக்கொண்டிட இடியேறென ஆர்த்தான். ......    121

(ஆர்க்கின்றுழி விறல்)

ஆர்க்கின்றுழி விறல்மொய்ம்புடை அறிவன்சினந் திருகிச்
     சீர்க்கின்றவிண் மிசைநின்றுதன் சிலைகாலுற வாங்கிக்
          கூர்க்குங்கணை ஓராயிரங் கொளுவித்துரந் திட்டுக்
               கார்க்கின்றமெய் அவுணர்க்கிறை கடுந்தேர்துகள் கண்டான். ......    122

(வையந்துக ளாய்)

வையந்துக ளாய்இற்றிட வானத்திடை நின்ற
     வெய்யன்பெருஞ் சினஞ்செய்துவில் வீரன்தன துரத்தின்
          ஐயஞ்சுநஞ் சயில்வாளிபுக் கழுந்தும்படி தூண்டிச்
               சையந்தனைக் கடந்தேவளர் தடந்தோள்புடைத் தார்த்தான். ......    123

(உரத்திற்புகு நெடு)

உரத்திற்புகு நெடுவாளியின் உளநொந்திடும் உரவோன்
     கரத்திற்சிலை தனிலேழிரு கணைபூட்டினன் செலுத்தி
          வரத்திற்றனக் கிணையில்லதொர் மன்னன்மகன் தனது
               சிரத்திற்பொலி மகுடந்தனைச் சிந்தித்துகள் செய்தான். ......    124

(மாண்கொண்டிடு முடி)

மாண்கொண்டிடு முடிசிந்திட வறியானெனத் திகழும்
     ஏண்கொண்டிடு சூரன்மகன் ஏழேழ்கணை தூண்டித்
          தூண்கொண்டிடு திறல்மொய்ம்புடைத் தொல்லோன்உரம் பிணித்த
               நாண்கொண்டிடு கவசந்தனை நடுவேதுணித் திட்டான். ......    125

(ஆகம்படு நெடுஞ்சாலி)

ஆகம்படு நெடுஞ்சாலிகை அழிவெய்தலும் அழல்கால்
     நாகம்படு சடையோன்சுதன் நன்றீதென நகையாப்
          பாகம்படு பிறைபோலெழு பகுவாய்க்கணை செலுத்தி
               மேகம்படு மணிமேனியன் வில்லைத்துணி படுத்தான். ......    126

(வில்லொன்றிரு துணி)

வில்லொன்றிரு துணியாதலும் வெங்கூற்றினும் வெகுளா
     அல்லொன்றிய மனத்தீயவன் அயன்முன்கொடுத் துள்ள
          எல்லொன்றிய தனிவேலினை எடுத்தீங்கிவன் தன்னைக்
               கொல்லென்றுரைத் துரவோன்மிசை குறித்துச்செல விடுத்தான். ......    127

வேறு

(விடுத்த காலையின்)

விடுத்த காலையின் இத்திறந் தெரிந்திடும் விறலோன்
     அடற்பெ ருங்கணை ஆயிர கோடிகள் அதனைத்
          தடுத்தி டும்படி செலுத்தினன் அவையெலாந் தடிந்து
               வடித்த வேற்படை வான்வழிக் கொண்டுவந் ததுவே. ......    128

(வந்த காலையில்)

வந்த காலையில் அதன்வலி நோக்கியே வள்ளல்
     இந்து சேகரன் உதவிய நாந்தகம் எடுத்துக்
          கந்த வேளடி வழுத்தியே கருதலன் விடுத்த
               குந்த வெம்படை இருதுணி பட்டிடக் குறைத்தான். ......    129

(குறைத்த காலையில் அம)

குறைத்த காலையில் அமரர்கள் ஆடினர் கொடியோன்
     திறத்த ராகிய அவுணர்கள் ஏங்கியே திகைத்தார்
          அறத்தை யாற்றிடும் இளையவன் அங்கது நோக்கி
               எறித்த ருஞ்சுடர் வாளினை உறையகத் திட்டான். ......    130

(அள்ளி லைத்தனி)

அள்ளி லைத்தனி வேற்படை இறுதலும் அதனைக்
     கள்ள விஞ்சைகள் பயின்றிடு சூர்மகன் காணாத்
          தெள்ளி தம்மவோ என்படை வலியெனச் செப்பிப்
               பொள்ளெ னக்கர வாளமொன் றெடுத்தனன் பொருவான். ......    131

(கருமு கிற்புரை மேனி)

கருமு கிற்புரை மேனியன் கரத்தில்வாள் பற்றி
     விரவு மின்னுவின் கொடியென விதிர்த்துமுன் வீசி
          உருமி டிக்குலத் தாவலங் கொட்டியார்த் துருத்துச்
               செருமு யற்சியாற் சீரிளங் கோவின்முன் சென்றான். ......    132

(சென்ற காலையில் இளைய)

சென்ற காலையில் இளையவன் தன்பெருஞ் சிலைகால்
     ஒன்ற வாங்கியே பகழிபல் லாயிரம் உய்த்து
          வென்றி வாட்படை யானுரங் கிழித்திட விடர்செய்
               குன்றில் வீழ்தரும் அருவிபோல் வீழ்ந்தது குருதி. ......    133

(பரிதி மாற்றலன் மிசை)

பரிதி மாற்றலன் மிசைவரு பகழியும் பாரான்
     குருதி வீழ்வதும் உரம்பகிர் வுற்றதுங் குறியான்
          ஒருதன் மானமுந் தானுமா யோடினன் குறுகிச்
               சுருதி யன்னவன் சிலையினை வாளினால் துணித்தான். ......    134

(வில்லி றுத்திடு)

வில்லி றுத்திடு விறலினோன் மிசைபடக் கிளர்ந்து
     செல்லெ னத்தெழித் தொருதன்வாள் வீசினன் திரிய
          அல்ல லுற்றிடும் இமையவர் அங்கது நோக்கி
               இல்லை மற்றிவன் இறந்தபின் அமரென்ப தென்றார். ......    135

(அங்க வெல்லையில் வீர)

அங்க வெல்லையில் வீரவா குப்பெயர் அறிஞன்
     திங்கள் சூடிய உலகடுந் தாதையிற் சீறித்
          துங்க மிக்கதன் வாளுரீஇக் கறங்கெனச் சுற்றி
               எங்கண் ஏகுதி என்றுபோய் அவுணனை எதிர்த்தான். ......    136

(ஏற்றெ திர்ந்திடும்)

ஏற்றெ திர்ந்திடும் எல்லையின் இரவியம் பகைஞன்
     காற்றெ னச்சென்று நேர்ந்தனன் இருவருங் கலந்து
          சீற்ற நீர்மையால் வாளமர் உழந்தனர் செங்கட்
               கூற்றும் அங்கியுஞ் சமர்புரி கின்றகோட் பென்ன. ......    137

(மாறு மாறுசென்)

மாறு மாறுசென் றடிமுதல் உறுப்பினை வாளால்
     வேறு செய்திட எறிகுவர் அன்னது விலக்கி
          ஊறு செய்திற நாடுவர் இடைதெரிந் துறாமல்
               சூறை யாமெனச் சுற்றுவர் வட்டணை சூழ்வார். ......    138

(இன்ன தன்மையில் இருவ)

இன்ன தன்மையில் இருவரும் வாளமர் இயற்றி
     மன்னு காலையில் சூர்மகன் விஞ்சையின் வலியால்
          தன்னை நேரிலா இளையவன் தடக்கைவாள் அகற்றி
               அன்ன வன்திருத் தோள்மிசை எறிந்தனன் அன்றே. ......    139

(மாற்ற லன்கர)

மாற்ற லன்கர வாளினால் எறிதலும் வள்ளல்
     ஆற்றல் மொய்ம்பிடைக் குருதியா றிழிதர அதுகண்
          டேற்றம் எய்தினன் சூர்மகன் இவன்றனக் கிளையோன்
               தோற்றி டுங்கொலென் றிரங்கினர் வானவர் துளங்கி. ......    140

(அன்ன காலையில் இளைய)

அன்ன காலையில் இளையவன் அறுமுகத் தமலன்
     பொன்னின் சேவடி புந்தியில் உன்னியே புகழ்ந்து
          மின்னு வானதன் வாட்படை வீசியே விரைந்து
               துன்ன லன்வலத் தோளினை வலியொடு துணித்தான். ......    141

(துணித்த காலையில்)

துணித்த காலையில் வலதுகை தன்னொடு தொடர்ந்த
     பணித்த னிச்சுடர் வாளினை இடக்கையால் பறித்து
          மணித்த சும்புகொள் மொய்ம்புடை அவுணர்கோன் மற்றும்
               தணிப்ப ருஞ்சினந் தன்னொடு முயன்றனன் சமரே. ......    142

(தீய வன்றனி முயற்சி)

தீய வன்றனி முயற்சியை நோக்கியே திறலோன்
     தூய வாள்கொடே அன்னவன் இடக்கையைத் துணிப்ப
          மாயை தொல்படை விடுத்திடு வேனென மதித்தான்
               ஆய காலையில் அறிஞனும் அவன்தலை அறுத்தான். ......    143

(வாளில் அங்கவன்)

வாளில் அங்கவன் அடுதலுஞ் சென்னியும் வரைநேர்
     தோளும் யாக்கையும் வீழ்ந்தன சூரியன் பகைஞன்
          நாளு லந்தனன் அவனுயிர் வௌவியே நடுவன்
               ஆளி மொய்ம்பனை வழுத்தியே தென்புலத் தடைந்தான். ......    144

(சூரன் மாமகன் முடிந்த)

சூரன் மாமகன் முடிந்தது முனிவருஞ் சுரரும்
     ஆரும் நோக்கியே ஆடினர் பாடினர் ஆர்த்தார்
          வீர வீரன்நீ யாமென இளவலை வியந்து
               மாரி யாமென அவன்மிசை பொழிந்தனர் மலர்கள். ......    145

(நுவல ருந்திறல்)

நுவல ருந்திறல் சூர்மகன் பட்டது நோக்கி
     அவலம் எய்தியே அழிந்திடு பூதர்கள் ஆர்த்துத்
          தவல ருந்திறல் வீரனை வழுத்தினர் தனது
               கவலை நீங்கியே களித்தனன் செங்கதிர்க் கடவுள். ......    146

(அன்ன காலையில் வீரவா - 2)

அன்ன காலையில் வீரவா குப்பெயர் அறிஞன்
     தன்னு ளஞ்சிறந் தகலிரு விசும்பினைத் தணவா
          இந்நி லத்திடை வந்துதன் துணைவர்தம் மினத்தைத்
               துன்னி யாங்கவர் புகழ்ந்திட இனையன சொல்வான். ......    147

(ஆன தொல்பெரு)

ஆன தொல்பெரு மாயையால் நம்மைமுன் அலைத்த
     பானு கோபனை அட்டனம் பகர்ந்தசூ ளுறவு
          தானு முற்றிய தால்இனி எம்பிரான் தன்முன்
               சேனை தன்னொடு மேவுதுஞ் செல்லுதி ரென்றான். ......    148

(மிக்க வீரனித் தன்மை)

மிக்க வீரனித் தன்மையை உரைத்தலும் வினவி
     முக்கண் நாயகன் குமரவேள் இணையடி முன்னம்
          புக்கு நென்னலுந் தொழுதில நன்றுநீ புகன்றாய்
               தக்க தேயிது என்றனர் துணைவராந் தலைவர். ......    149

(ஆங்கவ் வெல்லை)

ஆங்கவ் வெல்லையின் நம்பிதன் இளைஞரும் அடுபோர்
     தாங்கு பூதருந் தானையந் தலைவரும் தழுவிப்
          பாங்கர் வந்திடப் பொருகளம் ஒருவியே படர்ந்து
               பூங்கி டங்குசூழ் பாசறை இருக்கையுட் புகுந்தான். ......    150

(சோதி நீடிய பாசறை)

சோதி நீடிய பாசறை புகுந்திடு தூயோன்
     பூதர் தம்மொடுந் துணைவர்கள் தம்மொடும் போந்து
          காத லாகியே அறுமுகத் தையனைக் கண்டு
               பாத பங்கயந் தன்னிடைப் பன்முறை பணிந்தான். ......    151

(பரிந்து பன்முறை)

பரிந்து பன்முறை வணங்கியே எழுதலும் பகவன்
     தெரிந்து நோக்கிநீ சூர்மக னோடுபோர் செய்து
          வருந்தி ஆங்கவற் செற்றனை ஆதலின் மகிழ்ந்தாம்
               விரைந்து கேண்மதி நல்குதும் வேண்டுவ தென்றான். ......    152

(என்று மூவிரு முக)

என்று மூவிரு முகமுடைப் பண்ணவன் இயம்ப
     நின்று போற்றிடும் இளையவன் எம்பிரான் நின்னை
          அன்றி யான்செய்த செயலிலை ஆயினும் அடியேற்
               கொன்று மற்றிவண் அருளிய வேண்டுமென் றுரைப்பான். ......    153

(கோல நீடிய நிதி)

கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்
     மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன்
          மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்
               சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன். ......    154

(அந்த நல்வரம்)

அந்த நல்வரம் முத்தியின் அரியதொன் றதனைச்
     சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியேன்
          உய்ந்தி டும்வகை அருள்செய வேண்டுமென் றுரைப்ப
               எந்தை கந்தவேள் உனக்கது புரிந்தனம் என்றான். ......    155

(உடைய தொல்விறல்)

உடைய தொல்விறல் வாகுவுக் கிவ்வரம் உதவிப்
     புடையி னில்தொழு துணைவர்க்கு நல்லருள் புரியா
          அடைய மற்றவர் இருக்கைகள் வைகுவான் அருளி
               விடைபு ரிந்தனன் யாவர்க்கு மேலதாம் விமலன். ......    156

(செங்க திர்ப்பகை அட்ட)

செங்க திர்ப்பகை அட்டவன் முதலிய திறலோர்
     புங்க வன்றனைத் தொழுதுதம் இருக்கையிற் போனார்
          இங்கு மற்றிது நின்றிட அவுணர்தம் இறைவற்
               கங்கண் உற்றிடு செய்கையை மேலினி அறைவாம். ......    157

வேறு

(ஈதிவர் புரிந்ததேல்)

ஈதிவர் புரிந்ததேல் இறைவன் தன்னையுங்
     காதுவர் என்பது கருத்துட் கொண்டெழா
          வாதுவர் கவனமா வழிக்கொண் டாலெனத்
               தூதுவர் ஓடினர் துளங்கு நெஞ்சினார். ......    158

(மதிதொடு கடிமதில்)

மதிதொடு கடிமதில் மகேந்தி ரப்புரத்
     ததிர்தரு முரசொலி யவிந்து துன்பினான்
          முதிர்வுறும் அழுகுரல் முழங்கும் வீதிபோய்க்
               கதுமென அரசவைக் களத்துள் ஏகினார். ......    159

(துன்னிய பெரும்புனல்)

துன்னிய பெரும்புனல் தூண்டு கண்ணினர்
     உன்னருந் துயரினர் உயிர்க்கு நாசியர்
          மன்னவன் இணையடி வணங்கி உன்மகன்
               முன்னுறு தூதனால் முடிவுற் றானென்றார். ......    160

(தாழ்ந்தவர் மொழி)

தாழ்ந்தவர் மொழிந்திடு தன்மை கேட்டலுஞ்
     சூழ்ந்திடு திருவுடைச் சூரன் என்பவன்
          ஆழ்ந்திடு துயர்க்கடல் அழுந்தி ஓவெனா
               வீழ்ந்தனன் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினான். ......    161

(நக்குறு சுடரென)

நக்குறு சுடரென நடுக்கம் உள்ளுற
     மிக்கெழு குருதிநீர் விழிகள் கான்றிடத்
          தொக்குடல் வியர்ப்பொடு துளக்கங் கொண்டிட
               அக்கணம் மயங்கினன் அறிவு சோர்ந்துளான். ......    162

(தளர்ந்துடல் வெதும்)

தளர்ந்துடல் வெதும்புறத் தன்கண் சோர்வுற
     உளந்திரி வுறஉயிர் ஊசல் ஆடிட
          விளிந்தவ ராமென வீழ்ந்து மான்றவன்
               தெளிந்தனன் இரங்கினன் இனைய செப்பினான். ......    163

வேறு

(மைந்தவோ என்றன்)

மைந்தவோ என்றன் மதகளிறோ வல்வினையேன்
     சிந்தையோ சிந்தை தெவிட்டாத தெள்ளமுதோ
          தந்தையோ தந்தைக்குத் தந்தையிலான் கொன்றனனோ
               எந்தையோ நின்னை இதற்கோ வளர்த்தனனே. ......    164

(வன்னச் சிறுவர்பலர்)

வன்னச் சிறுவர்பலர் மாய்ந்தார் அவர்மாய்ந்து
     முன்னைத் துணையென் றுளங்கொண் டிருந்தனனால்
          என்னைத் தனியேவைத் தெந்தையுமே குற்றனையேல்
               பின்னைத் தமியேன் பிழைக்கும் படிஉண்டோ. ......    165

(ஒன்னார் சிறையை)

ஒன்னார் சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனஞ்
     சொன்னாய் அதுவும்இகழ்ந் துன்னைத் தோற்றனனால்
          என்னாம் இனியதனை எண்ணுவதி யாவருக்குந்
               தன்னால் வராத வினையுளதோ தக்கோனே. ......    166

(நன்றீ தலசமர்க்கு)

நன்றீ தலசமர்க்கு நண்ணுவது நண்ணலர்மேல்
     என்றீர மாகஇசைத் தாயான் ஏகாமல்
          சென்றீ எனவே செலுத்தியுனைப் போக்கினனால்
               ஒன்றீங் குளதோ பிழையுன் மிசைஐயா. ......    167

(கைப்போது கொண்டு)

கைப்போது கொண்டு கடவுளர்க ளெல்லோரும்
     முப்போதும் வந்து முறையால் வழிபடுவார்
          ஒப்போதல் இல்லா உனதுமே லுள்ளபகை
               இப்போ துடன்நீங்கி யேமுற் றிருந்தாரோ. ......    168

(உன்னா ணைக்க)

உன்னா ணைக்கஞ்சி உறங்கா துழன்றிடுமால்
     இந்நாள் தனில்நீ இறந்தா யெனமகிழ்ந்து
          பன்னாகப் பாயல் படுத்திருவர் கால்வருடத்
               தொன்னாள் எனவே கவலையின்றித் துஞ்சானோ. ......    169

(நந்தா னவர்குலத்து)

நந்தா னவர்குலத்து நாயகமே நண்ணினர்க்கோர்
     சிந்தா மணியே திருவேயென் தெள்ளமுதே
          எந்தாய் தனியேபோய் எங்கிருந்தாய் அங்கேயான்
               வந்தாலும் உன்றன் மதுரமொழி கேட்பேனோ. ......    170

(சோராத சூழ்ச்சி)

சோராத சூழ்ச்சித் துணைவர்சிறார் எல்லாருஞ்
     சேரார் பொருதலைப்பச் சென்றொழிந்து போயினரால்
          ஆராய்ந் தெனதுதுயர் ஆற்றுவதற் காருமிலை
               வாராய் புதல்வா கடிதோடி வாராயே. ......    171

(நீடித் திகழ்கதிரால்)

நீடித் திகழ்கதிரால் தீண்டி நினதுசிறை
     வீடிச் சதுர்முகத்தோன் வேண்டிடநீ விட்டபின்னர்
          வாடித் தளர்ந்து வசைபடைத்த வெய்யவனார்
               ஓடிக் ககனத் துளமகிழ்ந்து செல்லாரோ. ......    172

(பற்றார் அடித்தொண்டு)

பற்றார் அடித்தொண்டு பேணிப் பரந்துழலும்
     ஒற்றா னவனோ உனைத்தான் அடவல்லான்
          அற்றார் தமதுடலுக் காவியாய்ச் சென்றிடவே
               கற்றா யேல்என்னை மறந்திடவுங் கற்றாயோ. ......    173

(மாகொற்ற மைந்தன்)

மாகொற்ற மைந்தன் மடிந்தான் எனக்கேட்டும்
     ஏகிற் றிலையால் இருக்கின்ற தின்னும்உயிர்
          வேகுற்ற துள்ளம் மிகுதுயரம் வந்தவழிச்
               சாகுற்ற தோர்வரமுஞ் சங்கரன்பாற் பெற்றிலனே. ......    174

(வெற்றி யுளமதலை)

வெற்றி யுளமதலை வீந்தால் விளியாமல்
     மற்றும் எனதுயிரும் வைகும் வலிதாகச்
          செற்றி டலும்ஆகா தென்செய்கேன் அழியாமல்
               பெற்ற வரமும் பிழையாய் முடிந்ததுவே. ......    175

(ஆவியே கண்ணே)

ஆவியே கண்ணே அரசே உனைச்சமருக்
     கேவியே இவ்வா றிரங்குதற்கோ இங்கிருந்தேன்
          கூவியே கொண்டுசெலுங் கூற்றுவன்ஒற் றோஅறியேன்
               பாவியேன் இந்தப் பதிபுகுந்த தூதுவனே. ......    176

(கூற்றோன் நகரில்)

கூற்றோன் நகரில் குறுகினையோ அன்னதன்றேல்
     வேற்றோர் இடந்தன்னில் மேவினையோ யானொன்றுந்
          தேற்றேன் தனியே தியங்குகின்றேன் இத்துயரம்
               ஆற்றேன் அரசேயென் னாருயிரே வாராயோ. ......    177

(என்னா இரங்கி)

என்னா இரங்கி இறைவன் வருந்துதலும்
     அன்னான் உழையில் அவுணர் சிலரோடித்
          துன்னார் களத்தில் துணிவுற்ற சீர்மதலை
               பொன்னார் உடலங் கொடுபுலம்பிப் போந்தனரால். ......    178

வேறு

(சேந்த குஞ்சிச் சில)

சேந்த குஞ்சிச் சிலதர்செஞ் ஞாயிறு
     பாய்ந்த அண்ணல் படிவ மிசைக்கொளா
          வேந்தன் முன்னுற உய்த்து விரைந்தவன்
               பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார். ......    179

(அண்டர் தம்மை)

அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே
     தண்ட கஞ்செய் தனிக்குடை மன்னவன்
          துண்ட மாகிய தோன்றல்தன் யாக்கையைக்
               கண்ட ரற்றிக் கலுழ்ந்து கலங்கினான். ......    180

(அற்ற மைந்தன்)

அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால்
     பற்று நல்லெழில் பார்த்திடுங் கண்களில்
          ஒற்றும் முத்தம் உதவும் உரனிலாப்
               புற்ற ராவில் உயிர்க்கும் புரளுமால். ......    181

(துஞ்ச லாகித் துணி)

துஞ்ச லாகித் துணிவுற்றுந் தெவ்வர்மேல்
     நெஞ்சு கொண்ட நெடுஞ்சினந் தீர்கிலை
          விஞ்சு மானமும் வீரமும் வன்மையும்
               எஞ்சு மேகொல் இனிஉன்னொ டென்னுமால். ......    182

(கையி லொன்றை)

கையி லொன்றைக் கதுமெனப் பற்றிடாச்
     செய்ய கட்படு செம்புனல் ஆட்டியே
          வெய்ய வற்கொடு விண்ணினுந் தந்தகை
               ஐய ஈதுகொ லோவென் றரற்றுமே. ......    183

(வாள ரம்படு வாளி)

வாள ரம்படு வாளிகள் மூழ்கலில்
     சாள ரங்க ளெனப்புழை தங்கிய
          தோளை மார்பினை நோக்கும் தொலைவிலா
               ஆளை நீயல தாருள ரேயெனும். ......    184

(பாறு லாய பறந்த)

பாறு லாய பறந்தலை தன்னிடை
     வேறு வேறது வாகநின் மெய்யினைக்
          கூறு செய்தவன் ஆவி குடித்தலால்
               ஆறு மோவென் னகத்துயர் என்றிடும். ......    185

(மூண்ட போர்த்தொழி)

மூண்ட போர்த்தொழில் முற்றிய என்மகன்
     ஈண்டு வந்ததொர் தூதுவன் எற்றிட
          மாண்டு ளானென் றுரைத்திடின் மற்றியான்
               ஆண்ட பேரர சாற்றல்நன் றேயெனும். ......    186

(சிரத்தை மார்பினை)

சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மைபோல்
     பொருத்தி நோக்கிப் புரளுமென் புந்தியை
          வருத்தும் ஆகுலம் மற்றது கண்டுநீ
               இருத்தி யோவுயி ரேயின்னும் என்றிடும். ......    187

(மருளும் அங்கை)

மருளும் அங்கை மறிக்கும் மதலையை
     அருளின் நோக்கி அழும்விழுஞ் சோர்வுறும்
          புரளும் வாயிற் புடைக்கும் புவியிடை
               உருளும் நீட வுயிர்க்கும் வியர்க்குமே. ......    188

(மன்னர் மன்னவன் மற்றி)

மன்னர் மன்னவன் மற்றிது பான்மையால்
     இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல்
          கன்னி மாநகர்க் காப்பினுள் வைகிய
               அன்னை கேட்டனள் ஆகுலம் எய்தினாள். ......    189

(நிலத்தில் வீழ்ந்து)

நிலத்தில் வீழ்ந்து சரிந்து நெடுமயிர்
     குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள்
          அலைத்த வுந்தியள் ஆற்றருந் துன்பினள்
               வலைத்த லைப்படு மஞ்ஞையின் ஏங்கினாள். ......    190

(அல்லல் கூர்ந்த)

அல்லல் கூர்ந்த அவுணன்றன் காதலி
     தொல்லை வைகிய சூழலை நீங்கியே
          இல்லை யாகிய என்மகற் காண்பனென்
               றொல்லை ஆவலித் தோடினள் ஏகினாள். ......    191

(மாவ லிக்கு மடங்க)

மாவ லிக்கு மடங்கலொப் பான்தனிக்
     காவ லிக்குத் துயர்வந்த கன்னிமீர்
          நாவ லிக்கண நண்ணுதிர் என்றுகூய்
               ஆவ லித்தனர் ஆயிழை மாரெலாம். ......    192

(வாங்கு பூநுதல்)

வாங்கு பூநுதல் மன்னவன் தேவிதன்
     பாங்கர் மங்கையர் பற்பல ருங்குழீஇக்
          கோங்க மன்ன முலைமுகங் கொட்டியே
               ஏங்கி யேதுயர் எய்தி இரங்கினார். ......    193

(இந்தி ரைக்கு நிகர்)

இந்தி ரைக்கு நிகர்வரும் ஏந்திழை
     அந்த மில்லதொ ராயிழை மாரொடு
          முந்தி யேகி முடிந்து துணிந்திடு
               மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள். ......    194

(மயங்கி னாள்பின்)

மயங்கி னாள்பின் மனந்தெளி வெய்தினாள்
     உயங்கி னாள்மிக ஓவென் றரற்றினாள்
          தியங்கி னாள்உரும் ஏறு திளைத்திடு
               புயங்க மென்னப் புரண்டு புலம்பினாள். ......    195

வேறு

(வெய்யோன் என்றூழ்)

வெய்யோன் என்றூழ் தீண்டுத லோடும் விண்ணிற்போய்க்
     கையோ டன்னாற் பற்றினை வந்தென் கண்முன்னம்
          மொய்யோ டன்று வெஞ்சிறை செய்த முருகாவோ
               ஐயோ கூற்றுக் கின்றிரை யாவ தறியேனே. ......    196

(பண்டே வானஞ்)

பண்டே வானஞ் செந்தழல் மூட்டிப் பகைமுற்றுங்
     கொண்டே சென்றாய் அப்பகல் உன்றன் கோலத்தைக்
          கண்டேன் இன்றே இக்கிடை தானுங் காண்பேனோ
               விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே. ......    197

(செந்தேன் மல்கும்)

செந்தேன் மல்கும் பூமகள் செங்கைக் கிளியொன்று
     முந்தே நின்னை வேண்டிட மொய்ம்பால் அதுவாங்கித்
          தந்தாய் நொந்தேற் கின்றொரு மாற்றந் தருகில்லாய்
               அந்தோ அந்தோ செய்வகை ஒன்றும் அறியேனே. ......    198

(பாபத் தாலோ விண்)

பாபத் தாலோ விண்ணவ ரானோர் பலர்கூறுஞ்
     சாபத் தாலோ யாரினும் மேலாந் தனிமூவர்
          கோபத் தாலோ எவ்வகை யாலோ குறியேன்யான்
               சோபத் தீயால் வாடினன் நின்னைத் தோற்றேனே. ......    199

(பொன்போல் மேனி)

பொன்போல் மேனிக் கந்தனை இவ்வூர் புகுவித்துக்
     கொன்போர் மூட்டி மைந்தரை எல்லாங் கொல்வித்துத்
          துன்போ டிந்நாள் நீயும் இறப்பச் சூழ்ந்தாரே
               என்போ லாக வானவர் மாதர் எல்லோரும். ......    200

(வான்றா வுற்ற வச்சி)

வான்றா வுற்ற வச்சிர மொய்ம்பன் வடவைத்தீக்
     கான்றா லிக்கும் வன்னி முகத்துக் கழல்வீரன்
          மூன்றா நூற்றுப் பத்தினர் யார்க்கும் முதல்வந்த
               தோன்றா லென்றே நின்னை இறைஞ்சிச் சூழ்ந்தாரோ. ......    201

(துன்றேர் பெற்ற மெய்)

துன்றேர் பெற்ற மெய்யொடு புந்தி துணிவாகச்
     சென்றே வானிற் புக்கனை நின்பாற் செலும்வண்ணம்
          ஒன்றே உள்ளந் தான்துணி யாதால் உலைவெய்தும்
               நன்றே நன்றே சிந்தையும் யானும் நண்பம்மா. ......    202

(கருந்தேன் மொய்த்த)

கருந்தேன் மொய்த்த வண்டென மின்னார் கட்கெல்லாம்
     விருந்தே யாகும் நின்னடை காணும் விதியற்றேன்
          மருந்தே அன்னாய் நின்னை இழந்தேன் மற்றிங்ஙன்
               இருந்தேன் அல்லேன் துஞ்சினன் அன்றோ இனியானே. ......    203

(நையா நிற்குந் தேவர்)

நையா நிற்குந் தேவர் தமக்கு நனிதுன்பஞ்
     செய்யா நிற்றல் நன்றல என்றேன் அதுதேரா
          தையா நின்னைத் தோற்றனன் மன்னன் அவனுந்தான்
               உய்வான் கொல்லோ தன்னுயிர் தானும் ஒழியாதே. ......    204

வேறு

(என்றிவை பன்னித்)

என்றிவை பன்னித் தேவி இரங்கினள் இரங்க லோடு
     நின்றிடு துணைவி மாரும் நீடுதொல் கிளைஞர் யாரும்
          கன்றொழி புனிற்றா என்னக் கதறினர் காமர் மூதூர்
               வென்றியை நீங்கி அந்நாள் விழுமநோய் மிக்க தன்றே. ......    205

(அன்னது காலை தன்னில்)

அன்னது காலை தன்னில் அவுணர்கோன் இரக்கம் நீங்கிப்
     பன்னருஞ் சிறப்பின் மிக்க பதுமையே முதலோர் தம்மைத்
          தொன்னிலை இருக்கை உய்த்துத் துண்ணெனச் சீற்றங் கொண்டு
               தன்னுழைத் தொழுது நின்ற தானவர்க் கிதனைச் சொல்வான். ......    206

(மாற்றலர் தொகையை)

மாற்றலர் தொகையை யெல்லாம் வல்லையில் இன்றே செற்றுச்
     சீற்றமாய்க் குருதி வீட்டித் தீமகம் ஒன்றை ஆற்றி
          ஈற்றுறு மைந்தன் தன்னை எழுப்புவன் இந்த மெய்யை
               வீற்றொரு சாரின் இட்டு விடாதுபோற் றிடுதி ரென்றான். ......    207

(அன்னது பலருங்)

அன்னது பலருங் கேளா அழகிதென் றெடுத்து மைந்தன்
     பொன்னுடல் ஒருசார் உய்த்துப் போற்றினர் போற்ற லோடும்
          மன்னவன் வெகுண்டு நந்தம் மாற்றலர் தொகையை யெல்லாம்
               என்னிளை யோனுக் கூணா அளிப்பனென் றெண்ணங் கொண்டான். ......    208

(தும்பையஞ் சுழியல்)

தும்பையஞ் சுழியல் வேய்ந்த சூர்முதல் இவ்வா றுன்னிச்
     செம்புன லொழுகு பைங்கண் தூதரில் சிலரை நோக்கி
          அம்புதி வடாது பாங்கர் ஆசுரத் தரசு செய்யும்
               எம்பியை வல்லை ஓடிக் கொணருதிர் ஈண்டை என்றான். ......    209

ஆகத் திருவிருத்தம் - 6812



previous padalam   11 - பானுகோபன் வதைப் படலம்   next padalamBanugOban vadhaip padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]