Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   9 - மூவாயிரர் வதைப் படலம்   next padalammUvAyirar vadhaip padalam

Ms Revathi Sankaran (9.19mb)




(நாலாநாட் பகலே மூவாயிரவர் வதை நிகழ்ந்ததாகும்)

(ஆயதோர் காலைமூ)

ஆயதோர் காலைமூ வாயிர ரத்தொகை
     மேயின மைந்தர்கள் வினவி ஈதெலாம்
          மாயிரு விசும்பினை அளாவு மன்னவன்
               கோயிலை யடைந்தனர் குழுவொ டேகினார். ......    1

(துன்னுறு பழியெனு)

துன்னுறு பழியெனும் சூறை எற்றிட
     இன்னலந் தெண்டிரை எறிய வைகிய
          மன்னியல் நோக்கியே வணக்கம் செய்தெழீஇ
               முன்னர்நின் றினையன மொழிதல் மேயினார். ......    2

(உரமிகும் இலக்க)

உரமிகும் இலக்கரும் ஒழிந்த எண்மரும்
     பெருவிறல் மொய்ம்பனும் பிறரும் உற்றுழி
          எரிமுக னொருவனை ஏவி னாய்அவன்
               செருவினை அவரொடு செய்ய வல்லனோ. ......    3

(வலியவர் தம்மை)

வலியவர் தம்மையும் வரம்பின் மிக்குறின்
     மெலியவ ராயினும் வென்று போவரால்
          உலகினில் வழக்கமீ துணர்ந்தி லாய்கொலோ
               கலைபயில் கற்புடைக் காவல் மன்னனே. ......    4

(ஒட்டலர் குழுவினு)

ஒட்டலர் குழுவினுள் ஒரும கன்றனை
     விட்டனை மேல்வரும் வினையம் ஓர்ந்திலை
          அட்டுறு தாரினாய் அமரில் அங்கவன்
               பட்டனன் என்றிடிற் பரிதற் பாலையோ. ......    5

(தீமுகன் ஒருவனு)

தீமுகன் ஒருவனுக் கிரங்கித் தேம்பலை
     யாமுளம் இரணியன் இன்னும் உற்றுளன்
          தாமரை மகிழ்நனைத் தளைப டுத்திய
               கோமகன் உளன்ஒரு குறையுண் டாகுமோ. ......    6

(நண்ணல ராயினோர்)

நண்ணல ராயினோர் நலிந்து செற்றிடக்
     கண்ணகல் தேர்பரி களிறு தானவர்
          எண்ணில மாய்ந்தவென் றிறையும் ஆகுலம்
               பண்ணலை ஐயஅப் பரிசு கேட்டிநீ. ......    7

(ஏழெனுங் கடல்)

ஏழெனுங் கடல்வறந் திடினும் நின்னடி
     சூழ்தரு படைக்கொரு தொலைவும் இல்லையால்
          ஊழியும் அழிகுறா ஒருவ நீயிவண்
               பீழையின் உறுவதும் பெருமைப் பாலதோ. ......    8

(நின்றுவா னள)

நின்றுவா னளவெலாம் நிவந்த மேருவாங்
     குன்றினோர் தினைத்துணை குறைந்த தன்னதால்
          துன்றுநந் தானையுள் துன்ன லார்பொர
               இன்றுகா றாகவே இறந்த சேனையே. ......    9

(சிறந்திடு தலைமை)

சிறந்திடு தலைமையுந் திறலும் ஆக்கமும்
     மறந்தனை யாகியே வலிய னாகுநீ
          இறந்தவர் தமைநினைந் திரங்கற் பாலையோ
               புறந்தரு கின்றதோ ரமரர் போலவே. ......    10

(அண்டர்தம் முதல்)

அண்டர்தம் முதல்வனை அயனை மாயனைச்
     சண்டனைப் பவனனைத் தழலை யாரையும்
          விண்டொடர் செலவினில் விரைந்து பற்றியே
               கொண்டணை கின்றனம் குறிப்ப தாகுமேல். ......    11

(விண்ணினை அலை)

விண்ணினை அலைக்கவும் மேரு வெற்பொடு
     மண்ணினை மறிக்கவும் வடவை மாற்றவும்
          எண்ணினை என்னினும் யாங்கள் எந்தைநின்
               உண்ணினை வின்படி முடித்தும் ஒல்லையில். ......    12

(பன்னுவ தென்பல)

பன்னுவ தென்பல பணித்தி யாங்கள்போய்
     முன்னுறு பூதரை முரண்கொள் வீரரைப்
          பின்னுறு கந்தனைப் பிறரை ஈண்டொரு
               கன்னலின் வென்றுநின் கழல்கள் காண்டுமால். ......    13

(என்றிவை புகறலும்)

என்றிவை புகறலும் இடுக்கண் நீங்கியே
     நன்றிது மைந்தர்காள் நடமின் போர்க்கென
          வன்றிறல் முதல்வனை வணங்கிக் கைதொழா
               நின்றவர் ஏவரும் நீங்கி னாரரோ. ......    14

வேறு

(வன்னச் சிலைகொண்)

வன்னச் சிலைகொண் டனர்வான் கவசந்
     துன்னுற் றிடுவித் தனர்தூ ணியினை
          வென்னிற் செறிவித் தனர்வெவ் விரலிற்
               பொன்னுற் றிடுபுட் டில்புனைந் தனரால். ......    15

(சீர்புக் குறுகைப் படை)

சீர்புக் குறுகைப் படைசெங் கைகொளாத்
     தார்புக் கமர்தும் பைதனைத் தரியா
          மார்புக் கலமாக் கலன்வர்க் கமிடாத்
               தேர்புக் கனர்வந் தனசே னைகளே. ......    16

(சங்கங் கள்முழங் கின)

சங்கங் கள்முழங் கினதண் ணுமைகோ
     டெங்கெங் குமியம் பினவெண் படகந்
          துங்கங் கெழுபே ரிதுவைத் தனவால்
               அங்கங் குருமுற் றனவா மெனவே. ......    17

(அவுணப் படையெ)

அவுணப் படையெண் ணிலஆற் றல்மிகுங்
     கவளக் கரிஎண் ணிலகா மருசீர்
          இவுளித் தொகைஎண் ணிலவீட் டமுறா
               உவணுற் றிடுதே ரும்உலப் பிலவே. ......    18

(முழங்குற் றனபல்)

முழங்குற் றனபல் லியமும் மதமாத்
     தழங்குற் றனதேர் ஒலிதந் தனவால்
          அழுங்குற் றனவாம் பரியாங் கவைகள்
               விழுங்குற் றனபா ரொடுவிண் ணினையே. ......    19

(நீடுற் றிடுதேர்)

நீடுற் றிடுதேர் களின்நீள் துவசம்
     ஆடுற் றனதா ரில்அளித் தொகுதி
          பாடுற் றனவெங் கொடிபா றுமிசை
               கூடுற் றனகூ ளிகுனித் தனவே. ......    20

(தொகையா னை)

தொகையா னைகடம் மொடுசூழ் கரியின்
     தகையா யினதா னவர்தம் முருவஞ்
          சிகையா ரழலா யினசென் னியெழும்
               புகையா னதுவான் எழுபூ ழியதே. ......    21

(இப்பான் மையதா)

இப்பான் மையதா கியெழுந் துபடை
     அப்பால் விரவுற் றுழிஅன் னதுகண்
          டொப்பா ருமில்சூ ரன்உகந் தருள்கூர்
               மெய்ப்பா லகர்சென் றனர்வெய் தெனவே. ......    22

(மூவா யிரர்தா னை)

மூவா யிரர்தா னைகள்முந் துசெல
     ஏவா மெனவெம் மைகொடே குதலுந்
          தேவா னவர்கண் டனர்சிந் தைவெரீஇ
               யாவா வெனஅஞ் சியழுங் கினரே. ......    23

(அக்கா லையின்)

அக்கா லையின்மூ வகையா யிரரும்
     மெய்க்கார் புவிசென் றுவிரைந் தனபோல்
          தொக்கா டல்புரிந் திடுதொல் நிலமேற்
               புக்கார் அதுகண் டனர்பூ தர்களே. ......    24

(எதிர்கின் றனர்)

எதிர்கின் றனர்பூ தர்களேற் றனரால்
     முதிர்கின் றசினங் கெழுமொய் யவுணர்
          அதிர்கின் றனபே ரிகள்அண் டமெலாம்
               பிதிர்கின் றனநே மிபிளந் ததுவே. ......    25

(வாள்கொண் டெறி)

வாள்கொண் டெறிகின் றனர்வல் லெழுவுத்
     தோள்கொண் டிடுவெங் கதைதூண் டினரால்
          தாள்கொண் டசிலைக் கணைதாஞ் சொரிவார்
               நீள்கொண் டலையன் னநிசா சரரே. ......    26

(சூலப் படைவிட் ட)

சூலப் படைவிட் டனர்தொல் பரிதிக்
     கோலப் படைவிட் டனர்குந் தமுடன்
          ஆலப் படைவிட் டனர்ஆ டுகுறட்
               சாலப் படைநின் றுதளர்ந் திடவே. ......    27

(அடுகுற் றிடுசூ ல)

அடுகுற் றிடுசூ லமடற் கதைகள்
     தொடுகுற் றனர்நே மிகள்தூண் டிடுவார்
          விடுகுற் றனர்வெற் பினைவெவ் வசுரர்
               படுகுற் றனர்ஆர்த் தனர்பா ரிடரே. ......    28

(வீழ்கின் றனபட் டிடு)

வீழ்கின் றனபட் டிடும்வீ ரருடல்
     தாழ்கின் றனசெம் புனல்சாய்ந் தனவால்
          ஆழ்கின் றனவே லையில்அங் கதன்வாய்
               மூழ்கின் றனபேய் கொடிமொய்த் தனவே. ......    29

(மறக்குஞ் சரமா யின)

மறக்குஞ் சரமா யினவாம் பரிதேர்
     சிறக்கின் றனபட் டனதீ அவுணர்
          துறக்கின் றனர்ஆ விதொலைந் திடுவார்
               இறக்கின் றகணங்களுமெண் ணிலவே. ......    30

வேறு

(காணாவது மூவாயிரர்)

காணாவது மூவாயிரர் கனல்வெஞ்சினந் திருகிக்
     கோணாகம தெனவேயடுங் கொடும்பூதரைக் குறுகி
          நீணாகம தெனவிண்டொட நிமிர்வெஞ்சிலை குனியா
               வேணார்குணத் தொலிகொண்டனர் இதுகொல்லுரு மெனவே. ......    31

(வாங்குற்றிடு சிலை)

வாங்குற்றிடு சிலைதன்னிடை வல்லேசர மாரி
     தூங்குற்றிடு புயலாமெனச் சொரிந்தார்சொரிந் திடலும்
          ஏங்குற்றன பூதப்படை இரிகின்றன அதுகண்
               டாங்குற்றிடு கணவீரர்கள் அவுணர்க்கெதிர் புகுந்தார். ......    32

(தண்டத்தவர் தடந்தே)

தண்டத்தவர் தடந்தேரினைத் தகர்ப்பார்சிலர் தருவின்
     துண்டத்தவர் பரிமான்தொகை தொலைப்பார்சிலர் பாகன்
          கண்டத்தலை உருளும்படி யுதைப்பார்சிலர் கரத்தால்
               அண்டத்தினில் அவர்தேரெடுத் தெறிவார்சிலர் அம்மா. ......    33

(எழுக்கொண்டவர் தட)

எழுக்கொண்டவர் தடமார்பினில் எறிவார்சிலர் எரிவாய்
     மழுக்கொண்டவர் சிலையிற்றிட எறிவார்சிலர் வரையின்
          குழுக்கொண்டவர் அனிகந்தனைக் கொல்வார்சிலர் வார்வில்
               பழுக்கொண்டிடு கவடாமெனப் பறிப்பார்சிலர் முறிப்பார். ......    34

(தாவாதுயர் கணவீரர்)

தாவாதுயர் கணவீரர்கள் சமர்இவ்வகை புரிய
     மூவாயிர ரெனுமைந்தர்கள் முனியாச்சிலை குனியா
          ஓவாதுக முடிவெல்லையில் உருமுச்செறி வனபோல்
               தீவாயுமிழ் கனல்வாளிகள் சொரிகின்றனர் தெரிந்தே. ......    35

(நேர்புற்றமர் புரிகின்ற)

நேர்புற்றமர் புரிகின்றவர் நெடுந்தீவடிக் கணைகள்
     மார்புற்றிடத் தடந்தோளெனும் வரையுற்றிட முகத்தின்
          சார்புற்றிடக் கரமுற்றிடத் தாளுற்றிடச் செந்நீர்
               சோர்புற்றிடத் தளர்ந்தேமனந் துயருற்றிட நின்றார். ......    36

(கலக்கித்தட மலர்)

கலக்கித்தட மலர்சிந்திடு களிறாமென அடல்செய்
     விலக்கற்கரு மூவாயிரர் வில்லாண்மையும் வல்லார்
          அலக்கட்படு கணவீரர்கள் அழிகின்றது நோக்கி
               இலக்கத்தரி லோராயிரர் எரியாமெனச் செயிர்த்தார். ......    37

(குன்றேயென மிசை)

குன்றேயென மிசைபோகிய கொற்றப்புயத் தவன்முன்
     சென்றேதொழு திப்போரினைச் சிறியேங்களுக் கருண்மோ
          என்றேயுரைத் தனர்வேண்டலும் இளையோன்அதற் கிசையா
               நன்றேயமர் செயநீவிர்கள் நடமின்னென அகன்றார். ......    38

(விசயன்சயன் இடப)

விசயன்சயன் இடபன்கர வீரன்அதி கோரன்
     அசலன்அதி குணன்வாமனன் அனந்தன்அக ளங்கன்
          வசையில்புகழ் அனகன்சத வலிமாருதன் வருணன்
               சசிகண்டகன் முதலாயிரர் சமரின்றலை புகுந்தார். ......    39

(முந்துற்றிடும் அவர்)

முந்துற்றிடும் அவர்யாவரும் மூவாயிரர் எதிர்போய்க்
     கந்தக்கட வுளைஅன்பொடு கருத்திற்றொழு தேத்தி
          மைந்துற்றிடு தங்கார்முகம் வளையாவடி வாளி
               அந்தத்தினின் முகிலாமென அவர்மேற்சொரிந் தார்த்தார். ......    40

(ஆர்க்கின்றதொர் பொழு)

ஆர்க்கின்றதொர் பொழுதத்தினில் அவர்வில்வலி தன்னை
     மூர்க்கன்தரு மறமைந்தர்கள் மூவாயிரர் காணாக்
          கூர்க்கின்றதொர் நெடுவாளிகள் குணிப்பில்லன பூட்டிச்
               சூர்க்கொண்டல்கள் தம்மோடமர் புரிந்தாலெனச் சொரிந்தார். ......    41

(மூவாயிரர் விடும்வாளி)

மூவாயிரர் விடும்வாளிகள் முடுகிக்கடி தேகித்
     தாவாவிற லோர்ஆயிரர் தம்வாளியை அடுமால்
          மேவார்புகழ் விறல்மைந்தர்கள் வெவ்வாளிகள் அவுணர்
               ஏவானவை துணியும்படி எதிர்சிந்திடும் விரைவில். ......    42

(இவ்வாறமர் புரிகின்று)

இவ்வாறமர் புரிகின்றுழி இலக்கத்தவர் தேரைத்
     தெவ்வாகிய மூவாயிரர் சிதைவித்தனர் சரத்தால்
          அவ்வாறுதெ ரிந்தேயெமர் அவுணன்தரு மைந்தர்
               கைவார்சிலை யொடுதேரினை அழித்தார்கணை தூண்டி. ......    43

(இலக்கத்தவர் எதிர்)

இலக்கத்தவர் எதிர்கின்றவர் ஏமப்படு தேரைச்
     சிலைக்கட்படு நெடுவெங்கணை சிந்திச்சிதை வித்தே
          நிலக்கட்பட மூவாயிரர் தொகைதன்னையும் நிறுவி
               மலைக்கட்படும் அரிபோற்புடை வருதேரிடைப் புகுந்தார். ......    44

(சிலைபோய்க்கட விச்)

சிலைபோய்க்கட விச்சென்றிடு தேர்போயடல் செய்யும்
     கொலைபோயனி கம்போயுளங் கொள்ளும்பெரு மிதத்தின்
          நிலைபோய்வெகு ளுற்றேபுவி நின்றோர்தமைப் பிணித்த
               வலைபோகிய மானேயென வளைத்தார்வய மைந்தர். ......    45

வேறு

(பொலம்படு தேரொடு)

பொலம்படு தேரொடு பொன்ற வன்மைபோய்த்
     தலம்படும் அவுணர்கள் தளர்தல் மேயினார்
          இலம்படை வந்துழி ஈதல் சான்றவர்
               குலம்படு துயரொடு குறையும் தன்மைபோல். ......    46

(பறித்தனர் வரைகளை)

பறித்தனர் வரைகளைப் பழும ரம்பல
     முறித்தனர் வியர்ப்புறு மொய்ம்பர் தம்மிசைச்
          செறித்தனர் அண்டமும் திசையும் ஞாலமும்
               மறைத்தனர் அமரரும் மருட்கை எய்தினார். ......    47

(தெவ்வரை யாகிய)

தெவ்வரை யாகிய சிறார்கள் தொன்மரங்
     கைவரை வீசலுங் கணைகள் தூண்டியே
          இவ்வரை யெனுங்கணத் திறுத்து வீட்டினார்
               ஐவரை வென்றிகொள் அனிக வீரரே. ......    48

(அட்டடல் கொண்டிடு)

அட்டடல் கொண்டிடும் அவுணர் இவ்வகை
     விட்டன கிரியெலாங் கணையின் வீட்டியே
          நெட்டழற் பகழிகள் நிறத்தின் மூழ்குறத்
               தொட்டனர் உறுப்பெலாந் துளைத்தல் மேயினார். ......    49

(துளைத்திடு கின்று)

துளைத்திடு கின்றுழிச் சோரி சாய்ந்திட
     விளைத்தனர் ஒருசிலர் இரிந்திட் டார்சிலர்
          களைத்தனர் ஒருசிலர் கனன்று நின்றுபோர்
               விளைத்தனர் ஒருசிலர் பிறங்கல் வீசுவார். ......    50

(தேவரை வென்றுளார்)

தேவரை வென்றுளார் சிலவர் மால்வரைக்
     காவலர் தேரினைக் கரங்க ளாலெடா
          மேவரும் புணரியுள் வீசி யார்த்தனர்
               ஓவென அமரர்கள் புலம்பி யோடவே. ......    51

(நீசர்கள் ஒருசிலர்)

நீசர்கள் ஒருசிலர் நேமி சென்றிட
     வீசிய தேரினும் விரைவின் நீங்குறாக்
          காசினிப் பாலராய்க் கார்மு கம்வளைஇ
               ஆசுக மழைசொரிந் தார்த்துப் பொங்கினார். ......    52

(மீண்டிடு பொருநர்)

மீண்டிடு பொருநர்கள் விசிக மாமழை
     தூண்டிட அவுணர்கள் தொகையிற் பற்பலர்
          காண்டலும் வடவையின் கணத்திற் சீறியே
               ஆண்டெதிர் புகுந்தனர் அசனி ஆர்ப்பினார். ......    53

(மறத்தொடு மருத்தி)

மறத்தொடு மருத்தின மரங்கொள் கொம்பரை
     இறுத்திடு தன்மைபோல் எந்தை பின்வரு
          திறத்தவர் சிலைகளைச் செங்கை வன்மையாற்
               பறித்தனர் முறித்தனர் படியில் வீசினார். ......    54

(பற்றலர் கொடுமரம்)

பற்றலர் கொடுமரம் பறித்துச் சிந்துழிச்
     செற்றமொ டெம்பிரான் சேனை வீரர்கள்
          மற்றவ ரும்பதை பதைப்ப மாண்கையால்
               எற்றினர் அனையரும் இடியிற் றாக்கினார். ......    55

(பரவிய உவரியும்)

பரவிய உவரியும் பாலின் வேலையுந்
     திரைகளை எதிரெதிர் சிதறி யார்த்தெழீஇப்
          பொருதிற மேயெனப் பொருவில் மற்றொழில்
               இருதிற வயவரும் மிகலி ஆற்றினார். ......    56

(கொடுந்தொழி லாரொ)

கொடுந்தொழி லாரொடு கொற்ற வீரர்கள்
     அடைந்தனர் இவ்வகை யாண்மைப் போரினைத்
          தொடர்ந்துநின் றியற்றியே தொல்லை வன்மைபோய்
               உடைந்தனர் விசயன்அங் கொருவன் அன்றியே. ......    57

(இசையுறு தமரெலாம்)

இசையுறு தமரெலாம் இரிந்து போதலும்
     விசயனே யெனப்படும் வீரன் சீறியே
          வசையுறும் அவுணர்கோன் மகாரைக் கூற்றுவன்
               திசையுறு நகரிடைச் செலுத்து வேனென்றான். ......    58

(வேணியின் மதியுடை)

வேணியின் மதியுடை விமலன் நல்கிய
     வேணுறு வரிசிலை ஈறி லாதது
          தூணியி னிடையுறத் துன்னிற் றன்னதைப்
               பாணியில் எடுத்தனன் சமரில் பாணியான். ......    59

(கரதலத் தெடுத்திடு)

கரதலத் தெடுத்திடு கார்மு கந்தனை
     விரைவொடு கோட்டியே விசயன் என்பவன்
          ஒருதனி மாருதத் தோடிச் சூழ்வுறாச்
               சரமழை பொழிந்தனன் அவுணர் தங்கள்மேல். ......    60

(கரங்களை அறுத்த)

கரங்களை அறுத்தனன் கழல்கள் ஈர்ந்தனன்
     உரங்களை அறுத்தனன் உயர்திண் டோளொடு
          சிரங்களை அறுத்தனன் சிலரைக் கானிடை
               மரங்களை அறுத்திடும் வண்ண மென்னவே. ......    61

(அற்றன உறுப்பெலாம்)

அற்றன உறுப்பெலாம் அணுகித் தம்மில்வந்
     துற்றன கூடிய வுணர்வும் ஆவியும்
          மற்றவர் எழுந்தனர் வாகை வீரன்மேல்
               பொற்றைக ளாயின பொழிந்து போர்செய்தார். ......    62

(தலையொடு கரங்களு)

தலையொடு கரங்களும் தாளுந் தோள்களும்
     மெலிவொடு துணிந்தவர் மீட்டுங் கூடினார்
          அலர்தரு பங்கயத் தண்ணல் தன்னிடை
               வலிதவர் பெற்றிடு வரத்தின் தன்மையால். ......    63

(கண்டமும் மொய்ம்)

கண்டமும் மொய்ம்பருங் கழலும் வாளியால்
     துண்டம தாயினர் தொக்கு மேயினார்
          சண்டவெங் கால்பொரத் தணந்து சிந்திய
               தெண்டிரை நெடும்புனல் மீட்டும் சேர்தல்போல். ......    64

(பன்னரும் திறலி)

பன்னரும் திறலினான் பகழி பாய்தொறும்
     மன்னவன் மைந்தர்கள் மாண்டு தோன்றுவார்
          மின்னது வந்துழி விளிந்து வெவ்விருள்
               தொன்னிலை எய்தியே தொடர்ந்து தோன்றல்போல். ......    65

(கையொடு சென்னி)

கையொடு சென்னியும் கழலும் மார்பமும்
     கொய்யுமுன் தொன்மைபோல் கூட மைந்தர்கள்
          ஒய்யென எழுந்தனர் உலகில் தேர்வுறில்
               செய்யுறு தவத்தினும் சிறப்புண் டாங்கொலோ. ......    66

(கண்டனன் விசய)

கண்டனன் விசயனாங் காளை ஆவிபோய்த்
     துண்டம தாகியே துஞ்சி னார்எழீஇ
          மண்டமர் புரிவது மனத்தின் விம்மிதம்
               கொண்டனன் பொருதிறல் குறைந்து நின்றனன். ......    67

(அகத்திடை விம்மிதம்)

அகத்திடை விம்மிதம் அடைந்து நின்றுளான்
     திகைத்தனன் வரங்கொல்இச் செய்கை என்றனன்
          புகைத்தென உயிர்த்தனன் பொங்கு கின்றனன்
               நகைத்தனன் இவர்செயல் நன்று நன்றெனா. ......    68

(தொட்டிடு பகழியால்)

தொட்டிடு பகழியால் துணிந்து போரிடைப்
     பட்டவர் எழுந்தனர் பகழி பின்னரும்
          விட்டிடின் ஆவதென் மேவ லார்தமை
               அட்டிடல் இன்றெனக் கரிது போலுமால். ......    69

(அன்னவர் தமையடல்)

அன்னவர் தமையடல் அரிய தாமெனில்
     ஒன்னலர் படையொடும் ஒன்றிச் சுற்றியே
          பன்னெடு நாளமர் பயின்று நிற்பினும்
               என்னுயிர் கொள்வது மெளிதன் றாலரோ. ......    70

(வென்றிலன் இவர்)

வென்றிலன் இவர்தமை வென்றி லேன்எனில்
     சென்றெதிர் மாற்றலர் செருவில் வன்மைபோய்ப்
          பொன்றுதல் பெற்றிலன் பொதுவ னோர்மகன்
               கொன்றிடும் உலவையின் கொள்கை யாயினேன். ......    71

(பற்றலர் தங்களை)

பற்றலர் தங்களைப் படுப்பன் யானெனா
     வெற்றிகொள் வானென விளம்பி வந்தயான்
          செற்றில னாகியே சிலையுங் கையுமாய்க்
               கொற்றவ னோடுபோய்க் கூட லாகுமோ. ......    72

(மாற்றலர் வரத்தினர்)

மாற்றலர் வரத்தினர் மாயப் பான்மையர்
     ஆற்றவும் வலியரென் றறைந்து மீள்வனேல்
          தோற்றனன் என்றெமர் துறப்பர் அன்றியும்
               போற்றலர் விடுவர்கொல் புறந்தந் தேகவும். ......    73

(பித்தரின் மயங்கிலன்)

பித்தரின் மயங்கிலன் உணர்வும் பெற்றுளேன்
     எய்த்திலன் வலியொடும் இன்னும் நின்றனன்
          வைத்திலன் புகழினை வசையொன் றெய்துவேன்
               செத்திலன் இருந்தனன் செயலற் றேனென்றான். ......    74

(விண்டினை மாறு)

விண்டினை மாறுகொள் விசயன் இவ்வகை
     அண்டரும் துன்புகொண் டகத்தி லுன்னுழி
          உண்டொரு செய்கையான் உய்யு மாறெனக்
               கண்டனன் துயர்க்கடல் கடக்கும் பெற்றியான். ......    75

(ஆறுமா முகப்பிரான்)

ஆறுமா முகப்பிரான் அன்றி இவ்விடை
     வேறொரு துணையிலை மெய்மை ஈதெனத்
          தேறினன் அவனடி சிந்தை செய்தனன்
               மாறிழி அருவிநீர் வழியும் கண்ணினான். ......    76

(அண்ணலங் குமரனை அக)

அண்ணலங் குமரனை அகத்துட் கொண்டுழி
     எண்ணிய எண்ணியாங் கெவர்க்கும் நல்குவோன்
          விண்ணிடை ஒல்லையின் விசய னென்பவன்
               கண்ணிடைத் தோன்றியே கழறல் மேயினான். ......    77

வேறு

(கேளிது விசய ஒன்)

கேளிது விசய ஒன்னார் கிளையினை முடிப்பான் உன்னித்
     தாளொடு முடியுங் கையும் தடிந்தனை தடிந்த தெல்லாம்
          மீளவும் தோன்றிற் றன்றே மேவலர் பெற்ற தோராய்
               நீளமர் வயமின் றாகி நின்றனை தளரேல் நெஞ்சம். ......    78

(ஏற்றபல் படைகள்)

ஏற்றபல் படைகள் தம்மால் இவர்தமைப் பன்னாள் நின்று
     வீற்றுவீற் றடுவை யேனும் விளிகிலர் ஒருங்கு வல்லே
          ஆற்றல்சேர் படையொன் றுய்க்கின் அனைவரும் முடிவர் ஈது
               நாற்றலை யுடையோன் தொன்னாள் நல்கிய வரம தென்றான். ......    79

(என்றிவை உரைத்து வள்ளல்)

என்றிவை உரைத்து வள்ளல் இம்பரை அளித்தோன் சென்னி
     ஒன்றினை வாங்கி ஏனோர் உளமயல் அகற்றும் எந்தை
          வென்றிகொள் படையை நல்கி விசயனுக் களித்து மேவார்
               பொன்றிட இதனை இன்னே விடுகெனப் புகன்று போனான். ......    80

(தேர்ந்தனன் முருகன்)

தேர்ந்தனன் முருகன் வாய்மை சிறந்தனன் மகிழ்ச்சி உள்ளங்
     கூர்ந்தனன் ஞமலி யூர்தி கொற்றவெம் படையை வாங்கி
          ஆர்ந்தநல் லன்பில் பூசை ஆற்றினன் அதனை யெல்லாம்
               ஓர்ந்தனன் அவுணர் தம்முள் ஒருவன் உன்மத்தன் என்போன். ......    81

(ஈண்டிவன் நமர்கள்)

ஈண்டிவன் நமர்கள் எல்லாம் இசைவரப் படைய தொன்றால்
     மாண்டிட அடுவான் போலும் மற்றதன் முன்னர் மாயம்
          பூண்டிடு படையால் இன்னோற் கிறுதியைப் புரிவ னென்னா
               ஆண்டுதன் னுளத்தில் உன்னி அவுணனப் படையை விட்டான். ......    82

(மாயவள் படையை)

மாயவள் படையை முன்னம் விடுதலும் வள்ளல் நோக்கித்
     தீயுமிழ் கின்ற காரி திண்படை செலுத்தச் சென்று
          பாயிருள் பரந்து நேரும் படையினைத் தடிந்து முப்பால்
               ஆயிரர் தமையுஞ் சுற்றிஅடல் செய்து மீண்ட தன்றே. ......    83

(ஒருகணப் பொழுதி)

ஒருகணப் பொழுதின் முன்னர் ஒராயிர முப்பா லோருஞ்
     செருநிலத் தவிந்தா ரன்ன செய்கையை விசயன் காணா
          முருகனைப் பரவி நின்றான் முழுமதி தன்னைக் கண்ட
               பொருதிரைப் புணரி யென்ன ஆர்த்தனர் பூத ரெல்லாம். ......    84

(ஏமுறும் அவுணர்)

ஏமுறும் அவுணர் தானை இறந்திடா தெஞ்சிற் றெல்லாம்
     காமரு திசைகள் முற்றும் கதுமென விரிந்து போன
          மாமலர் பொழிந்தார் விண்ணோர் மற்றிவை அனைத்தும் நாடிக்
               கோமகன் முன்பு சென்றார் குரைகழல் அவுணர் தூதர். ......    85

(வெய்யவன் பகைவன்)

வெய்யவன் பகைவன் தாதை வியன்கழல் பணிந்து தூதர்
     ஐயநின் மைந்தர் முப்பா லாயிரர் தம்மை யெல்லாம்
          ஒய்யென இலக்கர் தம்முள் ஒருவனே முடித்தான் ஈது
               பொய்யல சரத மென்னப் பொருக்கெனப் புலம்பி வீழ்ந்தான். ......    86

(வீழ்ந்தனன் பதை)

வீழ்ந்தனன் பதைத்துச் சோர்ந்து வெய்துயிர்த் தசைந்து விம்மிப்
     போழ்ந்திட நிலத்தைக் கையாற் புடைத்தனன் புரண்டு வெற்பில்
          தாழ்ந்திடு மருவி யென்ன இழிபுனல் தாரை பொங்கச்
               சூழ்ந்தவர் அரற்ற மன்னன் துன்பமேல் துன்பம் வைத்தான். ......    87

(அன்னதோ ரெல்லை)

அன்னதோ ரெல்லை மைந்தர் அனைவரும் முடிந்த தோரா
     மன்னவன் இசைமை நீங்கி மாயிருந் தவிசில் தப்பி
          இன்னலின் மறிந்த தென்ன இரவியங் கடவுள் மேல்பால்
               பொன்னெடுங் கிரியின் எய்தி ஒளியிலன் புணரி வீழ்ந்தான். ......    88

ஆகத் திருவிருத்தம் - 6523



previous padalam   9 - மூவாயிரர் வதைப் படலம்   next padalammUvAyirar vadhaip padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]