Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

previous padalam   10 - சயந்தன் கனவுகாண் படலம்   next padalamsayandhan kanavukAN padalam

Ms Revathi Sankaran (2.92mb)




(விண்ணு ளார்களு)

விண்ணு ளார்களுஞ் சயந்தனும் வியன்மகேந் திரத்தின்
     உண்ணி லாம்பெருந் துயருடன் மாழ்கிய துணர்ந்தான்
          எண்ணி லாவுயிர் தோறுமுற் றின்னருள் புரியும்
               அண்ண லார்கும ரேசனாம் அறுமுகத் தமலன். ......    1

(வெஞ்சி றைத்தலை)

வெஞ்சி றைத்தலை மூழ்கியே அவுணரால் மெலிந்து
     நெஞ்ச ழிந்திடும் அவர்தமை அருள்வது நினைந்தான்
          தஞ்ச மின்றியே தனித்தயர் சிறுவரைத் தழுவி
               அஞ்ச லென்றுபோற் றிடவரும் ஈன்றயாய் அனையான். ......    2

(இனிய சீறடிக் குமர)

இனிய சீறடிக் குமரனிற் செந்திவந் திமையோர்
     வினைகொள் கம்பலை அகற்றுவான் இருந்திடும் விமலன்
          தனது ணர்ச்சியின் றாகியே அவசமாஞ் சயந்தன்
               கனவின் முன்னுற வந்தனன் அருள்புரி கருத்தால். ......    3

(வீறு கேதனம் வச்சி)

வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம்
     மாறி லாதவேல் அபயமே வலமிடம் வரதம்
          ஏறு பங்கயம் மணிமழுத் தண்டுவில் இசைந்த
               ஆறி ரண்டுகை அறுமுகங் கொண்டுவேள் அடைந்தான். ......    4

(தந்தை யில்லதோர்)

தந்தை யில்லதோர் பரமனைத் தாதையா வுடைய
     கந்தன் ஏகியே அனையதன் னுருவினைக் காட்ட
          இந்தி ரன்மகன் உளப்படும் யாக்கையுள் இருந்த
               முந்து கண்களாற் கண்டனன் தொழுதனன் மொழிவான். ......    5

(தொண்ட னேன்)

தொண்ட னேன்படும் இடுக்கணை நாடியே தொலைப்பான்
     கொண்ட பேரருள் நீர்மையிற் போந்தனை குறிக்கின்
          விண்டும் அல்லைஅப் பிரமனும் அல்லைமே லாகும்
               அண்டர் நாதனும் அல்லைநீ ஏவர்மற் றருளே. ......    6

(என்ற காலையில் அறுமுக)

என்ற காலையில் அறுமுகப் பண்ணவன் யாம்அக்
     கொன்றை வேணியின் மிலைச்சிய பரஞ்சுடர் குமரன்
          உன்றன் அல்லலும் இரக்கமும் மையலும் உணர்ந்து
               சென்ற னம்மெனக் கூறியே பின்னருஞ் செப்பும். ......    7

(நுந்தை தன்குறை)

நுந்தை தன்குறை நுங்குறை யாவையும் நுவன்று
     வந்து நந்தமை வேண்டலும் வரம்பில்சே னையொடும்
          இந்த ஞாலத்தின் எய்தியே கிரவுஞ்சம் என்னும்
               அந்த வெற்பையுந் தாரகன் தன்னையும் அட்டாம். ......    8

(அனைய வன்றனை)

அனைய வன்றனை அட்டபின் செந்திவந் தமர்ந்தாம்
     வனச மீமிசை இருந்திடு பிரமனும் மாலும்
          உனது தாதையும் அமரரும் நம்வயின் உறைந்தார்
               இனையல் வாழிகேள் நுங்கையும் மேருவின் இருந்தாள். ......    9

(வீர வாகுவாந் தூத)

வீர வாகுவாந் தூதனை யாமிவண் விடுத்தேஞ்
     சூரன் மைந்தன்அங் கொருவனைப் பலரொடுந் தொலையா
          நேரி லாதஇக் கடிநகர் அழித்து நீறாக்கிப்
               பாரின் மாலையின் மீண்டிடப் புரிதுமிப் பகலின். ......    10

(செல்லும் இப்பகல்)

செல்லும் இப்பகல் கழிந்தபின் நாளையே செந்தி
     மல்ல லம்பதி நீங்கிஇந் நகர்க்கயல் வைகிச்
          சொல்லும் ஐந்திரு வைகலின் அவுணர்தந் தொகையும்
               அல்லல் ஆற்றிய சூரனும் முடிந்திட அடுதும். ......    11

(அட்ட பின்னரே)

அட்ட பின்னரே நின்னைவா னவருடன் அவுணன்
     இட்ட வெஞ்சிறை நீக்கிநுந் திருவெலாம் ஈதும்
          விட்டி டிங்குன தாகுலம் என்றனன் வினைதீர்ந்
               துட்டெ ளிந்தவர் போதத்தின் உணர்வுமாய் உறைவோன். ......    12

(ஐயன் ஈங்கிவை)

ஐயன் ஈங்கிவை உரைத்தவை கேட்டலும் அகத்துள்
     மையல் மாசிருள் அகன்றன புகுந்தன மகிழ்ச்சி
          மெய்யு ரோமங்கள் சிலிர்த்தன உகுத்தன விழிநீர்
               சைய மேயென நிமிர்ந்தன சயந்தன தடந்தோள். ......    13

(பற்றி னால்வரும்)

பற்றி னால்வரும் அமிர்தினை எளிதுறப் படைத்துத்
     துற்று ளோரெனத் தண்ணெனத் தனதுமெய் சுருதி
          கற்ற கற்றன பாடினான் ஆடினான் களித்தான்
               மற்ற வன்பெறும் உவகையின் பெருமையார் வகுப்பார். ......    14

வேறு

(நிகழ்ந்திடு மறவி)

நிகழ்ந்திடு மறவியை நீங்கி இவ்வகை
     மகிழ்ந்திடும் இந்திரன் மதலை எம்பிரான்
          திகழ்ந்திடு பதமலர் சென்றி றைஞ்சியே
               புகழ்ந்தனன் இனையன புகல்வ தாயினான். ......    15

(நொய்யசீர் அடியரே)

நொய்யசீர் அடியரேம் நோவு மாற்றியே
     ஐயநீ வலிதுவந் தளித்தி யானுரை
          செய்வதும் உண்டுகொல் சிறிது நின்கணே
               கையடை புகுந்தனங் காத்தி யாலென்றான். ......    16

(சயந்தன்மற் றிவ்வகை)

சயந்தன்மற் றிவ்வகை சாற்ற யாரினும்
     உயர்ந்திடு பரஞ்சுடர் ஒருவன் கேட்குறா
          அயர்ந்தநுங் குறையற அளித்துந் திண்ணமென்
               றியைந்திட மேலுமொன் றிசைத்தல் மேயினான். ......    17

(இந்நகர் குறுகயாம்)

இந்நகர் குறுகயாம் ஏய தூதுவன்
     நின்னையுஞ் சுரரையும் நேர்ந்து கண்ணுறீஇ
          நன்னயங் கூறியே நடப்ப உய்க்குதும்
               அன்னதுங் காண்கென அருளிப் போயினான். ......    18

(படைப்புறா தயர்)

படைப்புறா தயர்ந்திடு பங்க யன்கனா
     அடுத்துனக் கருள்செய ஆறொ டைவரை
          விடுத்துமென் றேகிய விமலன் போலவே
               இடர்ப்படு சயந்தன்முன் இவைசொற் றேகினான். ......    19

(ஏகிய காலையின்)

ஏகிய காலையின் இறந்து முன்னரே
     போகிய புலமெலாம் பொறியில் தோன்றலும்
          ஆகிய கனவினை அகன்று பைப்பய
               நாகர்கோன் திருமகன் நனவின் நண்ணினான். ......    20

வேறு

(தந்தி நஞ்சந் தலை)

தந்தி நஞ்சந் தலைக்கொளச் சாய்ந்தவர்
     மந்தி ரத்தவர் வாய்மைவந் துற்றுழிச்
          சிந்தை மையலைத் தீர்ந்தெழு மாறுபோல்*1
               இந்தி ரன்தன் மதலை எழுந்தனன். ......    21

(நனவு தன்னிடை)

நனவு தன்னிடை நண்ணிய சீர்மகன்
     கனவின் எல்லையிற் கண்டன யாவையும்
          நினைவு தோன்றினன் நெஞ்சங் குளிர்ந்துநம்
               வினையெ லாமிவண் வீடிய வோவென்றான். ......    22

(கவலை தூங்கி)

கவலை தூங்கிக் கடுந்துயர் நீரதாய்
     அவல மாகிய ஆழியில் ஆழ்ந்துளான்
          சிவகு மாரன் திருவருள் உன்னியே
               உவகை யென்னும் ஒலிகடல் மூழ்கினான். ......    23

(அனைய காலை அயர்)

அனைய காலை அயர்ந்திடு வானுளோர்
     கனவு தோறுங் கடிதுசென் றிந்திரன்
          தனய னுக்குமுன் சாற்றிய வாறுசொற்
               றினைய லீரென ஏகினன் எம்பிரான். ......    24

(அம்மென் கொன்றை)

அம்மென் கொன்றை அணிமுடிக் கொண்டவன்
     செம்ம லேகலுந் தேவர்க னாவொரீஇ
          விம்மி தத்தின் விழித்தெழுந் தேயிரீஇத்
               தம்மி லோர்ந்து தவமகிழ் வெய்தினார். ......    25

(சில்லை வெம்மொழி)

சில்லை வெம்மொழித் தீயவர் கேட்பரேல்
     அல்லல் செய்வரென் றஞ்சிக் கனாத்திறம்
          மல்லன் மைந்தன் மருங்குறு வார்சிலர்
               மெல்ல அங்கவன் கேட்க விளம்பினார். ......    26

வேறு

(அண்டர்கள் மொழி)

அண்டர்கள் மொழிதரும் அற்பு தத்தையுட்
     கொண்டனன் அங்கவை குமரன் றான்முனங்
          கண்டது போன்றிடக் களித்துப் பாரெலாம்
               உண்டவ னாமென உடலம் விம்மினான். ......    27

(அறுமுக முடையதோர்)

அறுமுக முடையதோர் ஆதி நாயகன்
     இறைதரும் உலகெலாம் நீங்கல் இன்றியே
          உறைவதுங் கருணைசெய் திறனும் உன்னியே
               மறைமுறை அவனடி வழுத்தி வைகினான். ......    28

ஆகத் திருவிருத்தம் - 4157




*1. மந்திரத்தவர் ... தீர்ந்தெழுமாறுபோல் - மந்திரம் அறிந்தவர்களது சத்தியம் வந்து பொருந்திய உடனே விஷ மயக்கம் நீங்கி எழுந்தன்மை போல. வந்துற்றுழி - கேட்டவுடனே எனினுமாம்.



previous padalam   10 - சயந்தன் கனவுகாண் படலம்   next padalamsayandhan kanavukAN padalam

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]